மந்திரிகள் செயலும் செல்வாக்கும்
“நவசக்தி” டிசம்பர் 10-ந் தேதி தலையங்கத்தில் மந்திரிமாருக்கு சிபார்சு பேசும் தோரணையில் வழக்கம் போல் வெண்டைக்காய் சட்டினி மாதிரி வழவழ வென்று தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் 2 கலம் எழுதி கடைசியில் மந்திரிகளுக்கு தேசபக்தர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
அவ்வேண்டுகோளில் மந்திரிமார் பதவி ஏற்ற காலம் முன் போல் அல்ல வென்றும் இப்போது ஒருவித மாகாண சுய ஆட்சி கிடைத்துள்ளது என்றும், “அதை திறம்பட நடத்தி பூரண சுயாட்சி பெற முயலுதல் வேண்டும்” என்றும் எழுதி இருக்கிறது.
மற்றும் மந்திரிகள் பதவி ஏற்று ஆட்சியை வயப்படுத்தி “அரையாண்டுகளுக்குள் பலவித திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்கள்” என்று எழுதிவிட்டு அங்ஙனம் நிகழ்த்திய திருவிளையாடல்களை குறிப்பிடும் முறையில்,
- அரசியல் கைதிகள் விடுதலை.
- தொழிலாளர்கள் குறை களைதல்.
- கள்ளரக்கனை வீழ்த்தல்.
- கதருக்கு ஆக்கந்தேடல்.
- நீலன் சிலையகற்றல்.
முதலியன நிகழ்த்தி உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறது.
மற்றும் குறைகளை எடுத்துச்சொல்லும் முறையில் (இதை காங்கரசார் குறை எழுதியதாக கருதாமல் இருக்க வேண்டும் என்கின்ற பயங்காளித்தனத்தின் மீது) “இப்போது விவசாயிகள் கடன் மசோதா பற்றி எங்கு பார்த்தாலும் ஒரு பெருங் கூக்குரல் கிளம்பி இருக்கிறது.
வெளி வந்துள்ள மசோதாவில் சில குறைபாடுகள் இருக்கலாம். அம்மசோதாவை இன்னும் சிறிது உரமாக செப்பம் செய்திருக்கலாம். என்னமோ ஒரு வழியில் செப்பம் செய்யப்பட்டிருக்கிறது. கடன் மசோதாவின் பொது நோக்கம் என்ன? ஏழைமக்களின் துயர் தீர வேண்டுமென்பது மசோதாவில் ஏழை மக்களின் பெருந்துயர் தீரப்போவதில்லை” என்று பச்சையாக எழுதி இருக்கிறது.
ஆகவே இதிலிருந்தாவது கடன் மசோதாவை குறைகூறுகிறவர்கள் எல்லாம் பார்ப்பன விரோதிகள் என்றோ காங்கரஸ் விரோதிகள் என்றோ மந்திரிகள் விரோதிகள் என்றோ சொல்லிவிட முடியாது என்பது ஒருபுறமிருக்க முதலியார் அவர்கள் காங்கரஸ் மந்திரிகள் சாதித்ததாக சொல்லும் காங்கரஸ் மந்திரிகள் “திருவிளையாடல்”களின் யோக்கியதையை சற்று கவனிப்போம்.
- அரசியல் கைதிகள் விடுதலை மந்திரிமாருக்கு பெருமை அளிக்க இடமில்லை. ஏனெனில் அரசியல் கைதிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலோ அல்லது “இனிமேல் அப்படி (அரசாங்கத்துக்கு விரோதமான எதையும்) செய்வதில்லை” என்றாலோ கைதிகளுக்கு தானாக விடுதலை கிடைத்துவிடும். அப்படித்தான் முன்பும் காந்தியார் நிபந்தனை கொடுத்து பல அரசியல் கைதிகளை விடுவித்திருக்கிறார். ஆகவே அதில் யாரும் கிப்பாத்து எடுத்துக்கொள்ள முடியாது.
- தொழிலாளர் குறைகள் ஒன்றும் களையப்பட்டு விடவில்லை. தொழிலாளருக்கு போலீஸ் அடி கிடைத்தது பற்றி தோழர் முதலியார் அவர்களே ஓலமிட்டிருக்கிறார். தொழிலாளர் மத்தியஸ்தம் பயன்படவில்லை என்பதுபற்றி தொழிலாளர்களே தினமும் கூக்குரலிடுகிறார்கள்.
- கள் “அரக்கனும்” வீழ்ந்து விடவில்லை. சேலத்தில் இருந்து கோயமுத்தூருக்கும் வடஆற்காடு தென்னாற்காட்டுக்கும் அனுப்பப்பட்டிருக் கிறான். அங்கு கள்ளரக்கன் முன்னைய விட பதின்மடங்கு கொட்டம் அடிக்கிறான். கள்ளரக்கனால் இந்த ஜில்லாக்கள் துன்பப்படுகின்றன. சேலம் கள்ளரக்கனை கோயமுத்தூருக்கு அழைத்துக்கொண்டதால் கோயமுத்தூர் வரிப்பணம் சேலத்தில் செலவாகிறது. தினமும் சேலத்தில் பல கேசுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆகவே “அரக்கன்” மாய்ந்து விடவில்லை. இந்த கள்ளரக்கனை ஒழித்த நாடகம் ஒரு அரசியல் பித்தலாட்டம் ஆகுமே ஒழிய பலனளித்ததாகாது. அன்றியும் மற்ற ஜில்லாக்களில் கள்ளரக்கனை ஓட்ட முடியாது என்று பிரதம மந்திரியும் ஜெயில் மந்திரியும் பல இடங்களில் விளக்கி விட்டார்கள்.
சேலத்துக் கள்ளரக்கன் கோயமுத்தூருக்கு ஓடும் போது கல்வி “தேவியை” அடித்துக்கொண்டும் சுகாதார “தேவியை” இழுத்துக்கொண்டும் ஓடிவிட்டான் – இது பட்ஜெட்டில் தெரியப்போகிறது.
- கதருக்கு தேடிய ஆக்கம் பொதுமக்கள் பணம் ஒன்றுக்கு மூன்றாக துணி வாங்குவதில் செலவாவதல்லாமல் ஒன்றுக்கு 3 பங்கு பஞ்சும் பாழாகி பொது ஜனங்கள் வரிப்பணத்தில் வருஷம் 1-க்கு 200000 கதர் நஷ்டத்துக்குக் கொடுக்கப்பட்டு பாழாக்கப்படுகிறது.
இந்த இரண்டு லக்ஷ ரூபாயை இப்படி பாழாக்குவதற்கு பதில் இத்தொகையில் வருஷம் ஒரு மில் வைத்தால் 10 வருஷத்தில் தினம் 10000 பேருக்கு தினம் 4 அணா 8 அணா 12 அணா கூலி கொடுத்து லாபமும் 100-க்கு 12 ரூபாய் வீதம் வட்டி பெறக்கூடிய நிலைமை அடையலாம்.
ஆகவே கதரின் பேரால் செலவிடும் மூலப்பொருள் ஊக்கம் , அறிவு, அழகு, நயமும், நாணையமும் எல்லாம் பாழாகிறது. கதருக்கு ஆக பாடுபடும் பெண்களுக்கு தினம் ஒரு அணா வரும்படிக்கு கூட மார்க்கம் இல்லாமல் இருக்கிறது.
- இனி நீலன் சிலை அகற்றிய யோக்கியதையை பார்ப்போம்.
நீலன் சிலை போக்குவரத்து ஜனங்கள், வண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றிக்கு இடையூறாய் இருப்பதாய் சென்னை கார்ப்பரேஷன் தீர்மானித்ததே ஒழிய நீலன் சிலை இந்தியர்களின் சுயமரியாதைக்கு கேடு என்று சொல்லவில்லை. சர்க்காரார் இதை ஏற்று போக்குவரத்து சவுகரியத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க அனுமதித்திருக் கிறார்கள். இதை பிரதம மந்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது அவரது விசாகபட்டணம் பேச்சில்
“ஐ தீடிடூடூ டுஞுஞுணீ டிt தீடிtட ச்டூடூ ணூஞுண்ணீஞுஞிt ச்ணஞீ டணிணணிதணூ”
“நான் நீலன் சிலையை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் காப்பாற்றி வைப்பேன்”
என்று சொல்லி இருக்கிறார்.
ஆகவே இந்த நிலையில் நீலன் சிலையை அகற்றியதில் சிப்பாய்தன மென்ன இருக்கிறது?
நிற்க காங்கரஸ்காரர்கள் நாணயமாகவோ அயோக்கியத்தனமாகவோ “புது அரசியல் சட்டம் பயனற்றது. ஆதலால் அதை உடைப்பதற்கு ஆக பதவி ஏற்றோம்” என்று சொல்லுகிறார்கள்.
ஆனால் நமது தோழர் வழ வழா முதலியார் இன்று “ஒரு வித மாகாண சுயாட்சி கிடைத்துள்ளது அதை திறம்பட நடத்தி பூரண சுயாட்சி பெற முயலுதல் வேண்டும். அக்குறிகொண்டே மந்திரிமார் கடனாற்றி வருகிறார்கள்” என்று எழுதுகிறார். (இவை யாவும் 10.12.37 நவசக்தி தலையங்கத்தில் உள்ளவையாகும்) ஆகவே காங்கரசுக்காரரின் நாணயமும் அவர்கள் காரியத்தை மக்கள் ஆதரிப்பதும் அவர்களுக்குள் இருந்து வரும் ஒற்றுமையும் எப்படிப்பட்டது என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!
குடி அரசு – தலையங்கம் – 12.12.1937