நரிமன் கதி

பம்பாய் வீரர் தோழர் நரிமனை படேல் – காந்தி கம்பெனியார் உயிரோடு சமாதி வைத்து விட்டார்கள். எதற்காக? 1934 வருட எலக்ஷனில் அவர் காங்கரசுக்கு துரோகம் செய்ததாய் சாட்டப்பட்ட ஒரு குற்றத்துக்காக. ஆனால் 1934 தேர்தலில் காங்கரசுக்கு துரோகம் செய்த நரிமன் அதே வருஷத்தில் பம்பாயில் நடைபெற்ற காங்கரஸ் மகாநாட்டுக்கு வரவேற்புக் கழகத் தலைவராக இருந்திருக்கிறார். அப்பால் பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், பார்லிமெண்டரி கமிட்டிக்குத் தலைவராகவும், பம்பாய் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்ற வருஷம் நடைபெற்ற மாகாண அசம்பிளித் தேர்தலில் பம்பாய் நகரத் தொகுதிக்கு காங்கரஸ் அபேட்சகராக நிறுத்தப்பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 1934 தேர்தல் துரோகம் இந்தப் பதவிகளையெல்லாம் தோழர் நரிமன் பெறுவதற்குக் குறுக்கே நிற்கவில்லை.

1937-ல் காங்கரஸ் கட்சித் தலைவராகி பம்பாய் மாகாண மந்திரி ஆக தோழர் நரிமனுக்குத் தருணம் கிடைத்த போதுதான் அவரது 1934 – வருஷ துரோகம் அகில இந்திய பார்லிமெண்டரி போர்டு தலைவர் சர்தார் படேலுக்கு ஞாபகம் வந்ததாம்! இதைவிட ஆச்சரியம் வேறுண்டா! நரிமன் ஒழிக்கப்படுவதற்கு உண்மைக்காரணம் என்ன? அவர் சுதந்தர புருஷர். படேலுக்கு ஆமாம் சாமி போட விரும்பாதவர். ஆகவே அவரை மூலையில் உட்கார்த்தி விட்டார்கள். சுதந்தரர்களுக்கு பம்பாயில் மட்டுமல்ல; சென்னையிலும் இடமில்லை. தோழர் சேலம் பாரிஸ்டர் ராமசாமி தண்டனையடையக் காரணம் என்ன? அவரது சுதந்தர புத்திதானே காரணம். அதனால்தான் பலர் ஆச்சாரியார் கூறுவதற் கெல்லாம் ததாஸ்து கூறிக்கொண்டும் காங்கரஸ் ஊழல்களையெல்லாம் சகித்துக்கொண்டும், பார்த்துக்கொண்டும் பொம்மைமாதிரி இருக்கிறார்கள்.

குடி அரசு – கட்டுரை – 07.11.1937

You may also like...