கடன் வாய்தா மசோதா
சென்னை மாகாணத்தைப் பொன்னுலகமாக்கப் போகும் சரணாகதி முதன் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு செய்துவிட்டார். அதற்கு எத்தனையோ பேர் எத்தனையோவித ஆட்சேபனைகள் கூறியும் ஒப்புக்கொள்ள முடியாதென்று ஆச்சாரியார் பிடிவாதமாக மறுத்தார். அடுத்தாப்போல் விவசாயிகள் கடன் வாய்தா மசோதா வரப்போவதாக பெரிய விளம்பரம் செய்யப்பட்டது. மசோதா நகலும் சர்க்கார் கஜெட்டில் பிரசுமாயிற்று.
அது ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யாதென்றும் பணக்கார மிராசுதார்களுக்கே உதவி செய்யுமென்றும் கடன் வாயிதா மசோதா சட்டமாகிறதாயிருந்தால் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியதாயிருக்க வேண்டுமென்றும் நாம் எழுதியிருந்தோம். ஆனால் தென்னாட்டிலுள்ள பார்ப்பன வக்கீல்கள் எல்லாம் கடன் வாய்தா மசோதாவை எதிர்க்கிறார்கள். அந்த மசோதா சட்டமானால் வழக்குகள் ஒழிந்துவிடுமாம். கோர்ட்டுகள் மூடப்பட்டுவிடுமாம். கோர்ட்கள் மூடப்பட்டால் வக்கீல்களுக்கு பிழைப்பேது? வக்கீல்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள் காங்கரஸ் பக்தர்கள். தேர்தல் காலங்களில் காங்கரஸ் சார்பாக பிரசாரம் செய்யக்கூடியவர்கள்; சீர்திருத்தங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறவர்கள். ஆகவே அவர்களுடைய எதிர்ப்பை ஆச்சாரியார் லôயம் செய்யும்படி நேர்ந்து கடன் வாய்தா மசோதாவை ஒத்திப் போடுவதாக ஆச்சாரியார் அசம்பிளியிலே தெரிவித்தார். ஒத்திப்போடுவது எவ்வளவு காலத்துக்கு என்ற கேள்வி பிறந்தபோது மாதக் கணக்கில் இல்லை, வாரக்கணக்கில்தான் என்று ஆச்சாரியார் வாக்குறுதியுமளித்தார். அந்த வாக்குறுதிப்படி இம்மாதம் 19-ந் தேதி அசம்பிளி கூடப் போவதாகவும் கடன் வாய்தா மசோதா அந்தக் கூட்டத்தில் சட்டமாகப் போகிறதாகவும் பத்திரிக்கைகளில் முன் ஒரு செய்தி வெளிவந்தது. இம்மாதம் அசம்பிளி கூடப்போவதில்லையென்று இப்பொழுது ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. அது இன்றுவரை மறுக்கப்படவுமில்லை. ஆகவே இம்மாதம் அசம்பிளி கூடாதென்றும் கடன் வாய்தா மசோதா சட்டமாகாதென்றும் ஊகிக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் ஏழைக் கடனாளிகளைக் கடன் கொடுத்தவர்கள் கிட்டிபோட்டு நெருக்குகிறார்கள். கடன் வாய்தா சட்டமாகு முன்னமேயே கடன்களை வசூல்செய்துவிட கடன் கொடுத்தவர்கள் கட்டுப்பாடான முயற்சிகள் செய்கிறார்கள். வக்கீல்களுக்குப் புத்தி கிடையாது என்று ஆச்சாரியார் ஒரு பக்கம் திட்டிக்கொண்டே கடன் வாய்தா மசோதாவைக் கைநழுவ விட்டு விடுவாரோ என்று பாமர ஜனங்கள் சந்தேகப்படுகிறார்கள். எது எப்படியானாலும் சரி, அக்ரகார மந்திரி சபை காலத்திலே பார்ப்பனர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய காரியங்கள் நடைபெறாதென்பதுதான் நமது கருத்து.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 07.11.1937