அய்யர் அய்யங்கார் சம்பாஷணை
– சித்திரபுத்திரன்
ராமானுஜம் அய்யங்கார்:- டேய் சுப்பராயா! ஏண்டா ஆச்சாரியாரை சும்மா எப்போது பார்த்தாலும் வைத வண்ணமாய் இருக்கிறாய்?
சுப்பராய அய்யர்:- அடபோடா ராமானுஜம்! ஆச்சாரியார் மந்திரியாய் வந்தால் என்னமோ சாதித்துப்போடுவார் என்று கருதி நாங்கள் எல்லாம் என்னபாடு பட்டோம். எங்கள் பொம்மனாட்டிகளை எல்லாம் கூட எலக்ஷன் பிரசாரத்துக்கும் போலிங்டேஷனுக்கும் அழைச்சுண்டு போனோம். கடசியா எல்லாம் குட்டிச்சுவராக்கி விட்டாரே.
ரா:- என்னடா குட்டிச்சுவரு?
சு:- என்ன குட்டிச்சுவரா? வந்து வராததுக்கு முன்னே இந்த ஆச்சாரியாரை என்ன அவசரம் கொண்டுபோரது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற மாதிரி ஹிந்தி எழவைக் கொண்டுவந்து குறுக்கே போட்டு நாட்டைப் பாழ்படுத்திவிட்டாரே! எங்கே பார்த்தாலும் பழையபடியே “பார்ப்பான் சூழ்ச்சி, பார்ப்பான் சூழ்ச்சி” என்ற சப்தம் காதைத் தொளைக்கிறதே.
ரா:- போடா, அதற்கெல்லாமா பயப்படுவது? சமயம் கிடைத்த போது நன்னா அழுந்த சாதிச்சிட வேண்டாமா? ஹிந்தி என்றால் கிள்ளுக் கீரைன்னா நினைச்சூட்டே? அதை ஒருவன் 3 வருஷம் படிச்சுட்டா அப்புறம் தூக்கு மேடைக்குப் போனாலும் பிராமணாளை துவேஷிக்கவே மாட்டான் தெரியுமா? ஹிந்தின்னா பிராமண பக்தி – பிராமண விஸ்வாசம் என்றல்லவா அருத்தம்?
சு:- இன்னம் மூன்று வருஷம் பொறுத்து பிராமண பக்தியும் விஸ்வாசமும் வர்ரத்துக்கு முன்னே இப்போ பிராமணாளைக் கண்டா பழயபடி வெறுப்பாயிட்டதாடா. எத்தனை பாடுபட்டு எத்தனை கொடி தூக்கி எத்தனை வந்தேமாதரக் கூப்பாடு போட்டு பிராமண துவேஷத்தை மறக்கடித்தோம்.
ரா:- அதைப்பற்றி கவலைப்படாதே. அதெல்லாம் ஆச்சாரியார் பார்த்துக்குவார்.
சு:- பார்த்து நாசமாச்சிது; வேறே காரியம் செய்ய வேண்டியதெல்லாம் கெட்டுப்போச்சுதே இதனாலே.
ரா:- என்னடா கெட்டுப் போச்சுது? மகா வேறே காரியம்?
சு:- என்னடா தெரியாத மாதிரி கேக்கறே?
ரா:- என்ன சொல்லேன்?
சு:- இந்த நாசமாய்ப்போன கம்யூனல் ஜீஓவை எடுத்துத் தொலச் சுடுவான்னல்லவா நம்பினோம். அதை ஒன்றும் தொடுவதில்லை என்று சொல்லிட்டாரே?
ரா:- அட போடா அசடே அசடே. ஆச்சாரியார் சங்கதி உனக்கென்னடா தெரியும்? அவர் காலால் போட்ட முடிச்சை நீ கையாலும் வாயாலும் கூட அவிழ்க்க முடியாது?
சு:- அப்படீன்னா?
ரா:- அப்படீன்னாவா சொல்லரேன் கேள். கம்யுனல் ஜீஓவை கையில் தொடமாட்டார். ஆனால் அதை யாரும் தொடாமலே சாகும்படி செய்வார். தெரியுமா?
சு:- எப்படி செய்வார்?
ரா:- எப்படியா? கள்ளை நிறுத்தரேன்னு சொல்லி எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிற நான் பிராமின்களையெல்லாம் துலச்சூடுவார். ஹிந்தி என்று சொல்லி எல்லா பிராமினுக்கும் வேலை குடுத்தூடுவார். இனி சுலபத்தில் நான்பிராமின் படிக்கிறாப்பலே செய்ய மாட்டார். வாயிலே நுழையாத ஹிந்தியை உருப்போட்டுண்டு வாயும் விரலுமா சூத்திரப் பய்யன்கள் திண்டாட வேண்டியதுதான்; ஜில்லா போர்ட் முனிசிபாலிட்டிகளை கையைத் திமிரி பிடுங்குற மாதிரி அந்தப் பயல்களிடமிருந்து பிடுங்கி நம்மவன் இடமோ அல்லது நம்மிட உண்மையான சிஷ்யர்களிடமோ ஒப்புவித்து விடுவார். அப்போ நாம் அடித்த கொட்டம்தான். கூடுமானவரை பிராமண ஐ.சி.எஸ்.களையும் பிராமண ஜில்லா அதிகாரிகளையும் ரப்பீடுவார். அப்பரம் என்னடா செய்ய செய்யணும்?
சு:- இதெல்லாம் செய்துடலாம் தான், ஆனால் பப்ளிக்சர்வீஸ் கமிஷன் இருக்கே அதை வெச்சிண்டிட்டு என்னடா முடியும்?
ரா:- அதற்கும் பிராம்மணர்களையே போட்டூடுவார் அல்லது சிதம்பரநாத முதலி, முத்துரங்க முதலி போன்ற ஆள்களைப் போட்டு தன் சம்பள பில்லுக்குகூட ஆச்சாரியாரை கேட்டு கையெழுத்து போடற மாதிரியும் போட்டபிறகும் ஆச்சாரியாரைக் கேட்டு பணத்தை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிற மாதிரியுமான ஆள்களை வச்சூடுவார்.
சு:- எந்த மாதிரி ஆளை வச்சாலும் கணக்குபடிதானே உத்தியோகம் கொடுப்பா?
ரா:- அதெல்லாம் உனக்கென்னடா தெரியும்? வடமன்புத்தி வட்டத்திலே மாதிரி. அதிலுள்ள ரகசியம் உனக்கு என்ன தெரியும்? உத்தியோகத்துக்கு யோக்கியதை தீர்மானிக்கும் போது நான் பிராமின் 100க்கு 10 பேர் கூட தகுதியான ஆள் கிடைக்காமல் செய்துடுவார்?
சு:- எப்படி செய்வார்?
ரா:- அட கேனமே அதுதான் ஹிந்தீங்கிறது. தெரியுமா? ஹிந்தி படித்தவன்தான் உத்தியோகத்துக்கு லாயக்கு தெரியுமா? அது மாத்திரம் படித்தாலும் போதாது; காசி, காஷ்மீரம், பஞ்சாப், பங்காளம் போய் பார்த்துவிட்டு வரவேணும்ண்ணும் சொல்லி இருக்காரே உனக்கு அது புரியவில்லையா?
சு:- புரிஞ்சது; நம்மடவாமாத்திரம் காசிக்கும் காஷ்மீருக்கும் போய்ட்டு வரமுடியுமா?
ரா:- ஏன் போக முடியாது? நமக்குத்தான் ரயிலில் டிக்கட் இல்லையே; சென்னை மாகாணம் தாண்டறவரை பிராம்மணாள் தான் ரயிலில் வேலையில் இருக்கா. அதற்கு அப்புறம் “அம் பம்மன் ஹே” (நான் ஒரு பிராமணர்) என்று சொல்லிவிட்டால் “நமஸ்கார் மகராஜ்” என்று சொல்லி விட்டுடுவான். நான்பிராமின்களுக்கு பணமும் கிடையாது, புத்தியும் கிடையாது. பழயபடி அவன்கள் வேலையை அவன்கள் பார்க்க வேண்டியதுதான்.
சு:- என்ன இருந்தாலும் இந்த ஹிந்தி, மதுவிலக்கு அது இரண்டும் நமக்கு இப்பொழுது தொல்லை தாண்டா.
ரா:- மதுவிலக்கில் என்னடா தொல்லை?
சு:- சூத்திரா தானே குடிக்கின்றான்கள். நமக்கென்ன கவலை?
ரா:- உனக்கிருக்கிற புத்தி ஆச்சாரியாருக்கில்லை யாக்கும். குடியினால் சில சூத்திரா கெட்டுப்போனாலும் எத்தனை சூத்திரன்கள் படித்து விடுகிறான்கள் அது தெரியுமா? “படித்த சூத்திரனால் பிராமணனுக்கு ஆபத்து ஆனதினால் சூத்திரனை படிக்க விடக்கூடாது”ண்ணு மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறதே அது உனக்கு தெரியாதா?
சு:- அதற்கும் குடி நிறுத்துவதற்கு என்னப்பா சம்மந்தம்?
ரா:- சொல்ரேன் கேள்; சவமே கேள். நம்மிடவாள் அரசாங்கத்தில் ஆதிக்கம் வைத்திருந்தபோது பிராமனாள் மாத்திரம், படிக்கும் படியும் மற்றவர்கள் படிக்க முடியாதபடியும் எவ்வளவோ தந்திரம் செய்து வச்சிருந்தா. இந்த பாழாய்ப் போன ஜஸ்டிஸ் கட்சி வந்த உடன் படிப்பு விஷயத்தில் 2 பங்கு 3 பங்கு ஜனங்கள் படிக்கும்படி ஆக்கீட்டா; அத்தனைக்கும் செலவுக்கு பணம் இந்த கள்ளு இலாக்கா தான் கொடுத்திண்டு வந்திட்டது. இப்போ படிப்பைக் குறைக்க வேணுமானா பணவருவாயைக் குறைத்தால் படிப்பு தானாகவே குறைந்துவிடும். அதற்காகத்தான் படிப்புக்கு உண்டான பண வருவாயில் கைவச்சுட்டார் நம்ம ஆச்சாரியார். கள்ளு வேணு மானாலும் தெரியாமல் திருட்டுத்தனமா குடிச்சுடுவார்கள். படிப்புக்கு இனிமேல் சீரங்கத்துக்கு போக வேண்டியதுதான். தெரிஞ்சதா? இந்த இரண்டும் தான் முதல் முதல் நம்மிடவாள் செய்ய வேண்டிய காரியம். அதைதான் ஆரம்பிச்சுட்டார் ஆச்சாரியார்.
சு:- என்னமோப்பா? சொல்லரே. கள்ளுநிறுத்துற தந்திரமாவது எனக்கு புரியாது. ஹிந்தி தொல்லை நான்பிராமின்களை மறுபடியும் ஒன்று சேர்த்திவிடும்போல் இருக்கிறது. எத்தனையோ பாடுபட்டு இந்த நிலைக்கு வந்தோம். மறுபடியும் கஷ்டம் வருமென்னு தோன்றது.
ரா:- ஒன்னும் பயப்படாதே; நான்பிராமின்கள் ஒன்று சேர மாட்டான்கள். அதிலும் “பண்டிதர்கள் புத்தி பவனவாயில்” என்கின்ற மாதிரி அவர்கள் தொட்டது தொலங்காது. எதிலாவது சண்டை போட்டுக்கொண்டு மறுபடியும் அவனவன் வேலை பார்க்கப் போய்விடுவான்கள். இப்போதே பல பண்டிதர்கள் வெளியில ஹிந்தி மறுப்புக்கூட்டத்தில் பிரசங்கம் பண்ணிவிட்டு வீட்டில் ஹிந்தி படிக்கிறான்க.
சு:- பண்டிதர்கள் மாத்திரமல்ல, பணக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சம் உறுமாரன்களே உனக்கு தெரியலையா?
ரா:- உறுமி என்னத்தெச் செய்துடுவான்கள்? அவன்களுக்கு போக்கிடம் சொல்லு பார்ப்போம். ராமலிங்க செட்டி என்னனமோ முறுக்கினார். ஆச்சாரியார் கோயமுத்தூர் போனதும் ஆஞ்சனேயராயிட்டார். சுப்பராயன் தலை எழுத்து ஆச்சாரியார் கையில், தேவரும் ஆச்சாரியாரை தொங்கிக் கொண்டிருக்கிறார். ஜில்லா போர்டு சங்கதி தெரியாதா? இப்படித்தான் ஒவ்வொருவருடைய விஷயமுமாகும். நீ அவசரப் பட்டு அசட்டுத்தனமாக ஒன்றையும் பேசாதே நான் போறேன்.
குடி அரசு – உரையாடல் – 07.11.1937