காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”
காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”. அவர்யார் என்றால் மகான் ஜகதீச சந்திரபோஸ். விஞ்ஞானமே மக்களின் விரோதி என்றும் அது மாத்திரமல்ல கடவுளின் விரோதி என்றும் கருதுவதும் சொல்லுவதும் காந்தியார் மாத்திரமல்ல உண்மையில் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் வேத நம்பிக்கைக்காரர்கள் என்பவர்களுக்கு தர்மகர்த்தாக்களான பலரது அபிப்பிராயமாகும். 19, 20வது நூற்றாண்டில்தான் விஞ்ஞான நிபுணர்கள் உயிருடன் இருக்க கடவுளும் மதமும் கடவுள் மதபக்தர்களும் இடம் கொடுப்பவர்கள் ஆனார்கள். இதற்கு முன்பெல்லாம் கொளுத்தப்படுவார்கள் – சித்திரவதை செய்யப்படுவார்கள். இது இப்படி இருக்க, விஞ்ஞான நிபுணர்கள் இந்தியர்களில் ஒருவர்கூட சமீபகாலம் வரை இல்லை என்கின்ற பெயர் ஏற்பட உதவி செய்தவர்களும் இந்த இந்திய கடவுள் மதவாதிகளே யாவார்கள். ஏனெனில் விஞ்ஞான சக்தியை மக்கள் மதித்தால் அதில் நிபுணர்கள் தோன்ற முன் வருவார்கள். அப்படிக்கில்லாமல் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் படும் பாடுபடும்படி ஏற்பட்டால் யார் தான் முன்வரக்கூடும்?
ஏதோ மேல்நாட்டின் சகவாசத்தாலும், ஐரோப்பிய ஆட்சி நன்மையாலும் விஞ்ஞானம் ஒரு அளவுக்கு ஆவது இந்தியாவில் மதிக்கும்படியான நிலை ஏற்பட்டு கைராட்டினம், பனை ஓலை, கருப்பட்டிப்பானை, கட்டை வண்டி, உரல், உலக்கை முதலாகிய காந்தியாரின் விஞ்ஞான ஆயுதங்களை சமாளித்துக் கொண்டு எப்படியோ ஒரு விஞ்ஞான நிபுணர் அதுவும் உலகம் மெச்சக்கூடிய விஞ்ஞான நிபுணர் ஜகதீச சந்திரபோஸ் இந்தியாவில் தோன்றி “இந்திய மண்ணுக்கும், இந்திய தண்ணீருக்கும் கூட அறிவுச் செடி பகுத்தறிவுச் செடி முளைக்கிறதுண்டு” என்பதை நிலைநிறுத்திவிட்டு போய்விட்டார்.
இந்தியாவில் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு பணக்காரன் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளன் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு முட்டாள் ஆகிய இந்த 3 காரியம்தான் இதுவரை இந்தியாவைப் பற்றி உலகம் மதிப்பிட முடிந்திருக்கிறது. அதில் ஒருவர் போய்விட்டார் என்பது இந்திய பெருமைக்குப் பங்கம் என்பதோடு உலக விஞ்ஞான முற்போக்கு – அல்லது இந்தியாவின் முற்போக்குக்கு துரதிஷ்டம் என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 05.12.1937