சட்டசபை நாடகம்

 

சரணாகதி மந்திரிகளின் சட்டசபை நாடகம் ஒன்று முடிந்து விட்டது. நடந்தது என்ன என்று பார்ப்போமானால், தேசியக் கொடி சட்டசபை மண்டபத்தில் பறக்க விடப்படவில்லை.

காங்கரஸ் கொடியை தேசியக் கொடி என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவர்னர் நிராகரித்து விட்டதைப்பற்றி காங்கரஸ்காரர்கள் மூச்சுப் பேச்சு காட்டவில்லை. ஆனால் வேறு என்ன காரியம் செய்தார்கள் என்றால் சட்ட சபையில் வந்தேமாதரப் பாட்டு பாடினார்கள். ஏன் சர்க்காரிடம் காங்கரஸ் ஜபம் சாயவில்லை? சரணாகதி அடைந்து ஏற்ற மந்திரி பதவி ஆனதால் சர்க்கார் சம்மந்தமான காரியங்களில் வால்தனம் காட்டினால் பிரிட்டிஷ் கத்தரிக் கோல் வாலைக் கத்திரித்துவிடும் ஆதலால் சர்க்காரிடம் வாலை அடக்கிக் கொண்டு மற்ற “சகோதர” மக்களிடம் மாத்திரம் வாலைக் காட்ட முடிந்தது.

வந்தேமாதரம்

வந்தேமாதரப் பாட்டானது வகுப்பு துவேஷமும் வகுப்புக் குரோதமும் வகுப்புப் போருமான பிரார்த்தனைப்பாட்டு. உதாரணமாக ஆரியர் வேதம் எப்படி “கருப்பர்களைக்” கொல்லவேண்டும், “கருப்பர்களை” அழிக்கவேண்டும், “கருப்பர்களை” பட்டினி போட்டு வதைக்க வேண்டும், “கருப்பர்களை” எங்களுக்கு அடிமையாக்கித் தரவேண்டும், “கருப்பர்கள்” நெய்விட்டு சாப்பிடுகிறார்களே, “கருப்பர்கள்” எங்களை மதிப்பதில்லையே, “கருப்பர்கள்” மீது இடி விழும்படி செய்ய மாட்டாயா? என்பது ஆக ஆரியக் கடவுள்களை பிரார்த்திப்பதை முக்கிய பாகமாக கொண்டிருக்கிறதோ அது போலவே தான் இந்துக்கள் வங்காளத்தில் முஸ்லீம்களை அழிப்பதற்காக பிரார்த்தனை செய்யும் பாட்டாகும்.

இந்தப் பாட்டானது, தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் வகுப்பு வாரி உரிமை கேட்டவுடன் பார்ப்பனர்கள் எப்படி பார்ப்பனரல்லாதாரை அசுரர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் ராக்ஷதர்கள் என்றும் வைது விஷமப்பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாத மக்கள் மீது பாமர மக்களுக்கு துவேஷமும் குரோதமும் உண்டாகும்படி “தேசிய” பிரார்த்தனை செய்து தொல்லைப் படுத்துகிறார்களோ அது போல் வங்காள முஸ்லீம்கள் தங்கள் சமூகத்துக்கு வகுப்புவாரி உரிமை கேட்ட காலத்தில் வங்காள பாமர மக்களை முஸ்லீம்களுக்கு விரோதமாக்கி தொல்லையும் துன்பமும் விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட பிரார்த்தனைப் பாட்டு என்பது பல ஆதாரங் களாலும் அப்பாட்டின் பிறப்பு வளர்ப்பினாலும் கருத்தினாலும் நன்றாய் விளங்கும். இந்த முடிவை இதுவரை எந்தக் காங்கரஸ் வாதியும், காங்கரஸ் தலைவரும் மறுக்கவே இல்லை. தற்கால எல்லா இந்திய காங்கரஸ் தலைவரான ஜவஹர்லால் அவர்களும் வந்தேமாதரப் பாட்டானது தேசீயப் பாட்டாகாது என்று சொல்லிவிட்டார்.

இப்பாட்டை சட்ட சபையில் அரசியல் மன்றங்களில் பாடுவதினால் முஸ்லீம்களுக்கு ஆத்திரமும், மனவேதனையும் உண்டாவதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அங்குள்ள பார்ப்பனரல்லாத உண்மைத் தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வராததுதான் நமக்கு ஆச்சரியமாய் இருந்தது.

~subhead

பொய் விளம்பரம்

~shend

இந்நிலையில் சட்டசபையில் ஒரு முஸ்லீம் அப்பாட்டின் கருத்தை விளக்கி அது தமது சுயமரியாதைக்கும் மார்க்கத் தத்துவத்துக்கும் விரோதமாய் இருக்கிறது என்று சொன்ன பாவத்துக்குக் காங்கரஸ் பார்ப்பனர்கள் அம்முஸ்லீம் M.ஃ.அ.யை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டளை யிட்டுவிட்டார்கள். கடைசியாகக் காரியம் மிஞ்சிவிடுமென்று தெரிந்தபிறகே மன்னிப்பைக் கட்டாயப்படுத்தாமல் தன் குறையைத் தெரிவித்துக் கொண்டதை வாப்பஸ் வாங்கிக் கொள்ள கட்டாயப்படுத்தி விட்டு பத்திரிக்கைகளில் அந்த முஸ்லீம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக விளம்பரப்படுத்தி விட்டார்கள். இதைப்பற்றி சென்றவாரமும் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வளவு ஏற்பட்டபிறகும் மறுபடியும் சட்ட சபையில் அப்பாட்டுப் பாடப்பட்டிருக்கிறது. இது முஸ்லீம்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதையும் முஸ்லீம்கள் மார்க்கத்துக்கு ஆக உயிர் வாழுகின்றோம் என்று சொல்லுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதையும் ஒருபுறம் காட்டினாலும் பார்ப்பனர்களின் அஹம்பாவமும், ஆணவமும் எவ்வளவு என்பதையும் காட்டுவதாகும்.

~subhead

ஸ்தல ஸ்தாபன சட்டம்

~shend

இனி அடுத்தாப்போல் அவர்களது நாடகம் ஸ்தல ஸ்தாபன சட்ட திட்டங்களில் கைவைக்கப்பட்டதாகும்.

முனிசிபாலிட்டிகளின் தேர்தல்கள் இம்மாதத்திற்குள் நடந்திருக்க வேண்டியவைகளை நிறுத்திக் கொண்டார்கள். அதன் காரணம் காங்கரஸ் காரர்கள் மந்திரி பதவி வகித்த 30 நாள்களில் அவர்களது யோக்கியதை இன்னது என்று மக்களுக்கு விளங்கி பொது மக்கள் அவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டதால் இப்போது தேர்தல் நடந்தால் காங்கரசுக்கு வெற்றி கிடைக்கமாட்டாது என்று கருதி தங்கள் வெற்றிக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொள்ளும் பொருட்டு தங்கள் இஷ்டப்படி ஓட்டர்களை உண்டாக்கிக் கொள்ள தந்திரம் செய்யவே தேர்தலை ஒத்திப்போட்டுக் கொண்டார்கள். மற்றும் ஜில்லா போர்டு விஷயங்களிலும் தங்களுக்கு அனுகூலமில்லாத ஜில்லா போர்டுகளை அழித்துவிடவும் அழிக்க முடியாத ஜில்லா போர்டு ஏதாவது இருந்தால் அதில் எதிரிக்குள்ள மெஜாரிட்டி பலத்தை குறைக்க நாமிநேஷன்களை எடுத்துவிடவுமான சூழ்ச்சி செய்திருக் கிறார்கள். ஜில்லா போர்டுகளையும் முனிசிபாலிட்டிகளையும் அடியோடு எடுத்துவிட்டு சர்க்காரார் நேர் நிர்வாகத்தில் வைத்துக் கொள்ளுவதில் நமக்கு சிறிதும் ஆக்ஷேபணை இல்லை. ஏனெனில் நம் பாமர மக்களுக்கு அரசியல் ஞானம் சரியானபடி புகுத்தப்படவில்லை.

நாம் ஜனநாயகம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று நாயகமாகவும் பித்தலாட்ட நாயகமாகவும் இருந்து வருகிறது. ஆதலால் ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டி என்பவைகளின் நிர்வாகம், நடத்தை, தேர்தல் என்பவைகள் மனிதன் அயோக்கியத்தனமும், சுயநலமும், பொய்யும், பித்தலாட்டமும், திருட்டும், பழிவாங்கும் தன்மையும் கற்றுக்கொள்ளும் இடம் என்றும் ஏன்? கட்டாய பாடமாகக் கற்றுக்கொடுக்கும் இடம் என்றும் வன்மையாய் அழுத்திக் கூறுவோம். அப்படிப்பட்ட ஸ்தாபனங்களை எடுத்து விடுவதில் நமக்கு கவலையில்லை என்பதோடு மகிழ்ச்சியும் அடைவோம். அந்தப்படிக்கு எடுத்துவிடாமல் அந்த ஸ்தாபனங்களை ஒரு கட்சியாரிடம் இருப்பதைப் பிடுங்கி மற்றொரு கட்சியாரிடம் ஒப்புவிப்பதற்கு என்று இம்மாதிரியான இழிவான காரியம் செய்வது எப்படி யோக்கியப் பொறுப்பான காரியமாகும்?

ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் கட்சி நலத்துக்கு செய்யும் அக்கிரமமான காரியம் என்றும் கூப்பாடு போட்ட இப்பார்ப்பனர்கள் தாங்கள் பதவி அடைந்த உடன் இம்மாதிரியான காரியம் செய்ய வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியார் கட்சி பலத்துக்கு ஆக என்று அனாவசியமாக எவ்வித நாமினேஷனும் செய்யவில்லை. தாலூகாபோர்டுகளை எடுக்கும் போதே ஜில்லா போர்டுகளைப் பிரிப்பதன் மூலம் நிர்வாகம் சுலபமாக்கிக் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜில்லாபோர்டு சட்டம் செய்யும்பொழுதே சிறுபான்மை – பிற்பட்ட முதலாகிய சகல வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படிக் கொடுபடுவதற்கும் ஒரு விகிதம் குறித்திருக்கிறார்கள். அதனாலேயே தான் ஜஸ்டிஸ் கட்சியார் ஜில்லாபோர்டுகளைப் பிரித்ததும் பிரித்த போர்டுகளில் பிரதிநிதித்துவமில்லாத வகுப்புகளுக்கு மாத்திரம் நாமினேஷன் (நியமனங்கள்) கொடுக்கப்பட்டதுமாகும். அந்தப்படி பிரித்ததிலும், நாமி னேஷன்கள் கொடுக்கப்பட்டதிலும் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு விரோதமாக காரியங்கள் ஏதாவது இருந்தால் அவற்றைக் குஷாலாக மாற்றலாம். அம்மாற்றத்தை குறை கூற நாம் முன்வரவில்லை. அப்படிக்கில்லாமல் ஜஸ்டிஸ் கட்சியார் செய்ததை மாற்றவேண்டும் என்றும் அக்கட்சியார் வசம் இருக்கும் ஸ்தாபனங்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்றும் அவர்கள் கொடுத்த நியமனங்களை அழித்துவிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கருதி இம்மாதிரி மூர்க்கத்தனமும் முரட்டுத் தனமுமான காரியங்களைச் செய்வதென்றால் அது கொடுங்கோல் ஆட்சி யாகாதா என்று கேள்க்கின்றோம்.

ஸ்தல ஸ்தாபன சுயாட்சி சுயராஜ்ஜியத்தின் முதல் படி என்று சொல்லப் படுகிற நிலையில் ஏற்பட்டதாகும். சுயராஜ்யத்தின் முதல் படியையே தாங்களே பொது ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கரஸ்காரர்கள் நடத்தும் யோக்கியதை இவ்வண்ணமிருக்குமானால் இனி இதே காங்கரஸ் காரர்கள் பூரண சுயராஜ்ஜியமடைந்து நிர்வகிப்பார்களேயானால் அது எப்படி இருக்கும் என்பதை சற்று உருவகப்படுத்திப் பார்க்கும்படி பொது ஜனங்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

~subhead

மதுவிலக்கு

~shend

அடுத்தாற் போல் மதுவிலக்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஜில்லாவில் பூரண மது விலக்கு பரீட்சை செய்யப்படுகிறது.

மதுபானக்கெடுதல் ஒழிய வேண்டும் என்பதில் நாம் யாரையும் விட சிறிதும் பிற்பட்டிருக்கவில்லை. அதற்கு ஆக எவ்விதத் தியாகம் செய்யவும் பயப்படவில்லை. ஆனால் மதுபானக் கெடுதல்களை ஒழிக்கும் முயற்சி நாணையமானதாக – யோக்கியமானதாக – உண்மையானதாக இருக்க வேண்டும்.

இன்று காங்கரஸ்காரர்கள் செய்யும் மதுவிலக்கு முயற்சியில் நாணையமோ யோக்கியமோ உண்மையோ சிறிதும் கிடையாது என்பதோடு இது வெற்றி பெறுவதும் அசாத்தியமேயாகும் என்கிறோம்.

காங்கரஸ்காரர்களே மதுபானத்தை ஒரு நாளில் ஒழிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஒரே நாளில் அதாவது செப்டம்பர் “ஒண்ணாந் தேதியில் ஒழிக்கப்பட்டிருக்கிறது”. இது எப்படி அனுபவத்திற்கு ஏற்ற காரியம் என்பது நமக்கு விளங்கவில்லை. நாம் இப்பொழுது ஒன்று கூறுகின்றோம். ஒவ்வொருவரும் அதை முடிந்து வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

அதாவது சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள், குடிப் பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையில் உள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய் விடுவார்கள் அல்லது அந்த ஜில்லா எல்லைக்கு குடி வந்து விடுகிறார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் “புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு” அடிக்கடி யாத்திரைப் புறப்பட்டு பொருளாதாரத்தில் நசித்துப் போவார்கள்.

மனிதர்களுடைய மனோதத்துவம் (கண்தூஞிடணிடூணிஞ்தூ) உணர்ந்தவர்கள் யாரும் இம்மாதிரி முட்டாள்தனமான காரியத்தைச் செய்யத் துணியவே மாட்டார்கள்.

பணக்காரக் குடிகாரனானாலும் சரி, தொழிலாளி குடிகாரனானாலும் சரி குடிப்பது என்பது சரியாகவோ, தப்பாகவோ மதத்திலும், சமூகத்திலும், தொழிலிலும் அனுமதிக்கப்பட்டுத் தாராளமாய் இடம் கொடுக்கப்பட்டு நித்தியனுபவத்தில் பழகி அனுபவித்து வரும் காரியமாகிவிட்டது. அதுகளை கவனியாமல் நாம் இன்று அதைத் திடீரென்று தடுக்கின்றோம். குடி தடுக்கப்பட வேண்டியது என்பது குடியை வெறுப்பவர்களுடைய இன்றைய உணர்ச்சி. இவ்வுணர்ச்சி ஞாயமாகவும் இருக்கலாம் அல்லது அது சம்மந்தமான அனுபவ ஞானமில்லாமலும் இருக்கலாம்.

குடி மனிதனுக்குள் ஒரு இன்பத்தையும், சாந்தியையும், ஒரு விதமான கெளரவத்தையும் குறிக்கொண்டு புகுத்தப்பட்ட காரியமாகும். இதற்கு பார்ப்பன மத ஆதாரங்களே போதிய ருஜúவாகும்.

கடவுள்கள், ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், பெண்கள், பதிவிரதா பெண்கள், சாதாரண பெண்கள், ராமன், கிருஷ்ணன் முதலிய தெய்வீக அவதாரங்கள் கற்பிக்கப்பட்டவர்கள் வரை மதுவருந்தி இருக்கிறார்கள். பிதுர்க்களை திருப்திப்படுத்தவும்- மகிழ்விக்கவும் கூட மது அவசியமாக்கப் பட்டிருக்கிறது. இவைகள் தப்பிதம் என்று சொல்லப்பட்டாலும், அல்லது பொய் என்று சொல்லப்பட்டாலும் பொதுவாக மது அருந்துவதையே குற்றம் என்று சொல்லி விட முடியாது. கெடுதி உண்டாகும் படியானதும் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.

மதுபான விஷயமாய் வெள்ளையர்களுக்கு அளிக்கும் சலுகை இந்தியர் களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.

மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும் அறிவுக்கேடு ஏற்படு வதும் செயற்கையாலேயே ஒழிய இயற்கையால் அல்ல என்று சொல்லுவோம்.

அதாவது ஒரு சின்னப் படி கள்ளு கால் அணாவிற்கு கிடைக்கும் படியானதை சர்க்கார் அதன் அவசியத்தையும் மக்களின் அறிவீனத்தையும் உணர்ந்து அதன் மூலம் பெரும் பொருள் தேடுவதற்கு ஆக தாங்களே அந்த வியாபாரத்தை நடத்தி விருத்தி செய்து அந்த கால் அணா கள்ளை 4 அணாவுக்கு விற்கும்படி செய்துவிட்டார்கள். அதனால் தான் கள்ளினால் பொருளாதாரக் கேடு ஏற்பட்டது என்பதுடன், அதற்கு ஏற்பட்ட சர்க்கார் ஏஜண்டுகள் தங்கள் அதிக விற்பனையையும் அதிக லாபத்தையும் உத்தேசித்து கள்ளினால் மக்களுக்கு அறிவு கெடும்படியும், அவ்வறிவுக்கேட்டினால் பலவித கஷ்டநஷ்டமடையும் படியும் செய்து விட்டார்கள்.

இதற்கு குடி காரணமென்று சொல்லிவிட முடியாது என்பதோடு அதைத் தங்களுக்குள்ளாகவே ஏகபோகமாய் நிர்வாகத்தில் வைத்துக் கொண்ட அரசாங்கமே காரணம் என்றும் சொல்லலாம். இதன் உண்மையை உணரவேண்டுமானால் மது வியாபார விஷயமாய் சர்க்காரின் 50, 60 வருஷத்துக் கணக்கைப் புரட்டிப் பார்த்தால் விளங்கும்.

இன்று தொழில்களில் இரு வகை தொழில் இருந்து வருகிறது.

அதாவது சரீர பலத்தைக் கொண்டு செய்யும் கஷ்டமானதும் இடை விடாமல் செய்வதுமான தொழில் ஒன்று.

சரீர பலம் உபயோகிக்காமலும் கஷ்டம் இல்லாமலும் செய்யும் தொழில் மற்றொன்று.

~subhead

காந்தி வாக்கு

~shend

சரீர பலத்தை சதா உபயோகித்துக் கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக 100க்கு 90 பேர்கள் கள் குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார் வாக்கே ஆதாரமாகும். அதாவது

1931-ம் வருஷம் ஜúன் மாதம் 12ந் தேதி தோழர்கள் காந்தியார், பட்டேல், முஸ்லீம் காந்தியாகிய அப்துல் கபூர்கான் ஆகியவர்கள் பரோடா சமஸ்தானத்துக்குச் சென்றிருக்கையில் மதுவிலக்கு விஷயமாய் அவர்களது வரவேற்பில் எழுந்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் போது காந்தியார் கூறியதாவது:-

“கதரில்லாமல் வெறும் மதுவிலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது.

கள்ளு, சாராயக் கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலையல்ல.

கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழுது இருப்பது போலவே திருட்டுத்தனமாய் கட்குடியும் சாராயக் குடியும் நடந்து கொண்டுதானிருக்கும்.

குடி வழக்கம் நிற்கவேண்டுமென்றால் குடிகாரர்களுக்கு இலகுவான கைத் தொழில் கற்றுக்கொடுத்தால்தான் நிறுத்த முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விடமாட்டார்கள்.

பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்குத் தங்களது களைப்பையும், ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாயிருக்கிறது.

நான் தென்னாப்பிரிக்காவிலிருந்த பொழுதும், வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கு வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக்கொடுத்து வந்திருக்கிறேன்.

அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலி களுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கிவந்து பிரியமாகக் கொடுத்திருக்கிறேன்.

மிருகங்களைப் போல் வேலைசெய்யும் உழைப்பாளி களுக்கு மதுபானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது.

என்று கூறியிருக்கிறார். இந்தவிதமான நிர்பந்தத்தையும் அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில் நிறுத்தி விடுகிறேன் என்பது எப்படி அறிவுடமையும் அனுபவ ஞான முடமையுமாகும் என்று கேட்கின்றோம்.

“பிச்சைக்காரன் கைக்கு ராஜ்ஜியம் போனால் மச்சானுக்கு மந்திரி வேலை கொடுப்பான்” என்பது போல் முன்பின் நிர்வாக அனுபவ மில்லாமலும், கட்டுப்பாட்டிலும் ஒழுங்கிலும் நாணையத்திலும் ஒரு சிறிதும் அனுபவம் பெறாமலும், திடீரென்று பட்டத்துக்கு வந்தவுடன் நிர்வாகம் நடத்துவது என்றால் இம்மாதிரி முட்டாள் தனமான காரியங்கள் தான் முன்னால் நிற்குமே ஒழிய புத்திசாலித்தனமானதும் காரிய சாத்தியமானதுமான காரியங்கள் மறைந்து தான் போகும். கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லா கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டு மென்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்துக்குக் காரணமாகும்.

~subhead

வரவுசெலவு திட்டம்

~shend

காங்கரஸ் மதுவிலக்கு திட்டத்தினால் ஒரு ஜில்லாவுக்கு 25 லக்ஷம் வீதம் 24 ஜில்லாவுக்கு சுமார் 6 கோடி ரூபாய் நஷ்ட மேற்படும். இதற்கு எவ்வித முன் யோசனையும் பரிகாரமும் செய்ய மார்க்கமும் இல்லாமல் திடீரென்று செய்து விட்டால் நல்ல நிர்வாகம் எப்படி நடத்த முடியும்? பொறுப்பில்லாமல் “ராணுவச் செலவைக் குறைப்பது” என்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமான பேச்சாகும். இன்று உலகமே ராணுவச்செலவை அதிகப்படுத்திக் கொண்டு போகின்றதை பார்க்கிறோம். யுத்த கோஷங்கள் காது செவிடு படுகின்றது. காரண காரியமில்லாமல் கை வலுத்தவன் இளைத்தவனை அழுத்துகிறான். 4 கோடி ஜன சமூகமுள்ள ஜப்பான் 40 கோடி ஜன சமூகமுள்ள சீனாவை ஆட்டி வைக்கிறது. சீனாவுக்குள்ள யோக்கியதை கூட இந்தியாவுக்கு இல்லை. சென்னை துறைமுகத்துக்கு ஒரு எம்டன் கப்பல் வந்து ஒரு வெடிகுண்டு வீசினால் தோழர்கள் காந்தியும், ஜவஹர்லாலும், ராஜகோபாலாச்சாரியும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கொரு ராட்டினத்தை தோளில் வைத்துக்கொண்டு எதிரில் போய் நின்று வந்தே மாதரப் பாட்டு பாடினால் குண்டு சமுத்திரத்தில் விழுந்து விடுமா? அல்லது குண்டு சரணாகதி அடைந்து விடுமா? கப்பல் எறிந்து விடுமா? என்று கேட்கிறோம். காந்தியாருக்கு பட்டினி கிடக்கத் தெரியும். துளசிதாஸ் இராமாயணத்துக்கும் கீதைக்கும் தத்துவார்த்தம் தெரியும். சத்தியாக்கிரகத்துக்கு பாஷ்யம் செய்வதை தனக்கே ரிஜிஸ்டர் செய்து கொண்டு புது புது பாஷியம் செய்யக்கூடும். அவ்வளவு தானே ஒழிய அரசியல் காரியத்தில் அவர் எப்படி அனுபோகமுடையவராவார்? அது போலவே தோழர் ஆச்சாரியாருக்கு வக்கீல் தொழில் நன்றாகத் தெரியும். ஜட்ஜúக்களை ஏமாற்ற சக்தி உண்டு. பார்ப்பனீயத்தை நிலை நிறுத்த சூழ்ச்சி செய்யத் தெரியும். இவ்வளவு தானே ஒழிய இவருக்கு அரசியல் ஞானமேது? இவர்கள் சாதித்ததென்ன? உதாரணமாக இவர்கள் அரசியல் கிளர்ச்சியில் எடுத்துக்கொண்ட காரியங்கள் ஏதாவது இதுவரை அனுபவ சாத்தியமாயிற்றென்றோ வெற்றி பெற்ற தென்றோ யாராவது சொல்ல முடியுமா? வர்ணாச்சிரம தர்மத்தில் நம்பிக்கையுள்ள இவர் அரசியலுக்கு ஏற்ற வர்ணத்திலோ அரசியல் நடத்திய சந்ததியிலோ பிறந்தவராவாரா? எனவே இவர்கள் எப்படியோ அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் மக்களுக்கு நன்மையான எந்தக் காரியமும் செய்வார்கள் என்று யாரும் எதிர்ப்பார்க்க முடியவில்லை.

வரி விஷயத்திலும் இனியும் புதுப்புது வரிகள் போடுவது தான் இவர்களது நோக்கமாக இருக்கப் போகிறதே தவிர என்ன நன்மை செய்யலாம் என்பது இவர்களுக்குத் தோன்றப் போவதில்லை.

தாங்களாகவே சீக்கிரம் விட்டு விட்டு ஓடிப்போக வேண்டும் என்கின்ற நிலை சமீபத்தில் இவர்களுக்கு ஏற்படப்போவது திண்ணம். அதற்குள் செய்யும் ஒரு ஜில்லா மதுவிலக்காவது தங்களுக்கு என்றென்றும் சொல்லிக் கொள்ள உதவும் என்று கருதுகிறவர்கள் போல நடந்து கொள்ளுகிறார்கள். மந்திரத்தில் மாங்காய் விழப்போவதில்லை.

விஷயம் நீண்டு விட்டதால் மற்றொரு முறை விளக்கப்படும்.

குடி அரசு – தலையங்கம் – 03.10.1937

You may also like...