பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்
தோழர் ஈ.வெ. ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள், உண்மை நண்பர்கள் ஆகியவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிரிகளே தவிர, தங்கள் செல்வம், உழைப்பு, ஊக்கம் உணர்ச்சி ஆகியவை களைப் பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தி பார்ப்பனீயத்தை ஒழித்து அதன் மூலம் மக்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே ஒழிய இன்று தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரிடமும் விரோதமோ குரோதமோ கொண்டு எந்த தனிப்பட்ட பார்ப்பனரின் எவ்வித காரியத்திலும் பிரவேசித்து எவ்வித இடையூறோ இடஞ்சலோ செய்ததில்லை. மற்றும் அநேக பார்ப்பனர்களுக்கு தனிப்பட்ட முறையில் உத்தியோக முதலிய சிபார்சுகளும் செய்து சராசரி சமூக வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட இயற்கையின் பரஸ்பர உதவி முதலிய காரியங்கள் வகுப்பு உணர்ச்சி இல்லாமல் மனித உணர்ச்சி கொண்டு கூடுமான அளவு உதவியே வருகிறார்கள். தனிப்பட்ட மனிதர்களிடத்தில் காட்டும் மரியாதை, அன்பு முதலிய காரியங்களில் சிறிதும் பிறழாமல் எப்பொழுதும் போலவே நடந்து வருகிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் இவ்விஷயத்தில் எவ்வளவு கேவலமாய் குரோத புத்தியுடன் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை பொது ஜனங்களுக்கு அறியச் செய்து மற்றவர்களையும் ஜாக்கிரதையாய் இருக்கும்படி செய்வதற்கு ஆகவே எடுத்துக்காட்டாக இரண்டொரு காரியத்தையாவது எடுத்துக்காட்ட வேண்டியது அவசரமாகிறது.
கொள்கை விஷயத்தில் நம் பிரசாரத்துக்கு இடையூறு செய்வதையும், நம் பத்திரிகைகளுக்கு தொல்லை விளைவிப்பதையும், சம்மந்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கூட்டங்களிலும், ரயிலிலும், தபாலாபீசிலும், அரசாங்க நிர்வாகத்திலும் உள்ளவர்கள் நடந்து கொள்வதைப்பற்றியும் நாம் கவலைப்பட்டு வருத்தப்படவோ அல்லது அப்படிப்பட்டவர்கள் யார்மீதும் தனிப்பட்ட முறையில் ஆவலாதியோ மேலதிகாரிகளுக்கு பிராதோ சந்தர்ப்பம் கிடைத்தபோது தனிப்பட்ட மனிதன் மீது குறையோ ஆகியவை செய்யுங் காரியங்களில் இக்குடும்பம் அல்லது தனி நபர்கள் யாரும் பிரவேசிப்பதில்லை.
இதை நாம் ஒரு பெருமையின் குணமாகச் சொல்லவில்லை. மனித சுபாவமான சாதாரண குணத்தில் இருந்து மாறவில்லை என்று மாத்திரம் சொல்லுகிறோம். தனிப்பட்டவர்கள் இடம் பேசும்போதும் தனிப்பட்டவர் களைப்பற்றிப் பேசும் போதும் கூடுமானவரை மனிதத் தன்மையோடே நடந்துகொள்ளுகிறோம். இந்த சமயத்தில் ஒரு சிறு சம்பவத்தை குறிப்பிடுகிறோம். ஒரு சமயத்தில் தோழர்கள் ஈ.வெ. ராமசாமியும் கண்ணப்பர் அவர்களும், ரயிலில் மதுரைக்கு பிரயாணம் செய்யும்போது கண்ணப்பர் 2-வது வகுப்பிலும் ராமசாமி 3-வது வகுப்பிலும் பிரயாணம் செய்து கொண்டு போனார்கள். அப்போது திண்டுக்கல் ஸ்டேஷனில் தோழர் கண்ணப்பர் இறங்கி தோழர் ராமசாமி இருந்த 3-வது வகுப்பு வண்டிக்கு வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒரு சு.ம. திருமணத்தில் நடந்த சொற்பொழிவைப் பற்றிப் பேசும் போது அருகில் இருந்த பார்ப்பனர் ஒருவர் “இந்த மாதிரி பேசி இருந்தால் அங்கிருந்த ஜனங்கள் உங்களை சும்மா விட்டு விட்டார்களா” என்று கேட்டார்? உடனே கண்ணப்பர் “பேசியதில் என்ன தப்பு?” என்றார். பார்ப்பனர் வைதீக முறையில் ஆத்திரம் கொண்டு சில கடும் பதங்களை உபயோகித்தார். தோழர் கண்ணப்பர் கூடக் கூட அது போலவே பதில் சொல்ல ஆரம்பித்தார். தோழர் ராமசாமி தோழர் கண்ணப்பர் மீது கோபித்து “அவர் அவரது வைதீக உணர்ச்சியில் பேசுகிறார். நீங்கள் சமாதானம் சொல்லாமல் கூடக் கூட கோபித்துக் கொண்டால் சமாதானம் சொல்லக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறீர்களே” என்று கண்டித்து அடக்கினார்.
இதற்கு அந்தப் பார்ப்பனர் “அவர்களுக்கெல்லாம் சமாதானம் உங்களால் சொல்ல முடியாதையா! இவர்கள் அந்த ராமசாமி நாயக்கனுடைய சீடன்கள்; அவன் புத்திதானே இவர்களுக்கும் இருக்கும்” என்று சொன்னார்.
உடனே தோழர் ஈ.வெ.ரா. தோழர் கண்ணப்பரை ஜாடை காட்டி அடக்கி விட்டார். வண்டி கொடைக்கானலுக்கு வந்த உடன் தோழர் கண்ணப்பர் 2-வது வகுப்பு வண்டிக்கு போய் விட்டார். உடனே தோழர் ஈ.வெ.ரா எழுந்து ரயில் கக்கூசு அறைக்குள் சென்றார். அப்போது வெளியில் இருந்த ஒருவர் அந்த பார்ப்பனரைப் பார்த்து “இப்போ இங்கிருந்தாரே அவர் யார் தெரியுமா?” என்ற கேட்டார். அதற்கு அந்தப் பார்ப்பனர் “அவர் யாரோ ஒரு கிழவர்; சூத்திரராகத் தான் தெரிகிறது. ஆனாலும் மகா பெரிய மனுஷர் போலிருக்கிறது” என்றார். உடனே மற்றவர் “அவர்தான் ராமசாமி நாயக்கர்” என்று சொல்லி விட்டார். தோழர் ராமசாமி கக்கூஸ் அறையிலிருந்து வெளியில் வந்த உடன் அந்தப் பார்ப்பனர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிக்க வேண்டும் என்று ஆரம்பித்து “பத்திரிகையில் வரும் விஷயங்களையும் பிராமணர்கள் சொல்லிக் கொள்வதையும் கேட்டு நான் அந்தப்படி நினைத்து விட்டேன். இன்று ஒரு பெரிய சுதினமாகும். பெரியவாளை சந்தித்தது எனது பாக்கியம்……………..” என்று வெகு நேரம் பேசிவிட்டு தன் பெயர் ஓ.சுப்ரமணிய அய்யரென்றும் காரைக்குடியில் இன்சூரன்ஸ் ஏஜண்டாய் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டு வெட்கமடைந்த தன்மையிலேயே மதுரை வரையில் வந்து இறங்கி விட்டார்.
இதை எடுத்துக் காட்டுவதற்கு காரணம் தனிப்பட்ட எந்த பார்ப் பனரிடமும் மரியாதைக் குறைவாய் பேசுகிற வழக்கம் ஈ.வெ.ரா.விடம் கிடையாது. அப்படி நடந்து வந்தும் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? என்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு இழிவான தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்? என்றும் பொது ஜனங்கள் உணர ஆசைப்படுகிறோம்.
என்னவெனில் மஞ்சுளாபாய் அம்மாள் என்கின்ற ஒரு பெண் ஒரு விதவையாய் இருந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய் விளம்பரம் செய்யப்பட்டு திருச்சி புரோகித மறுப்புச் சங்கத்தின் ஆதரவில் ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள ஜானோஜிராவ் என்கின்ற ஒரு போஸ்டல் இலாகா சிப்பந்திக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டது. அதோடு அத்திருமணத்தை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுமிருக்கிறது. அந்த ஜானோஜிராவ் என்பவர் குடிகாரர். போஸ்டல் இலாகாவில் நாணையக் குறைவாய் நடந்ததற்கு ஆக முன் ஒரு தடவை வேலை போய் மறுபடியும் இயக்க சம்மந்தமான பலரின் சிபார்சின்மீது போஸ்ட்மேனாய் இருந்தவர். குடிப்பழக்கமுள்ளவர். இவை ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் தான் ஒரு போஸ்டாபீசு கிளர்க்கு என்று சொல்லி கலியாணம் செய்து கொண்டவர். அப்படியிருந்தும் கல்யாணத்துக்கு பிறகு மறுபடியும் பல சிபார்சால் குமாஸ்தா பதவி அடைந்தார். இந்த நிலையில் கல்யாணத்துக்கு முன் எதிர்பாராத பலவித கஷ்டங்களுடன் மஞ்சுளாபாய் அம்மாள் அவருடன் கடசியாக உலவக்கோட்டில் வாழ்ந்து வருகையில் அவர் தோழர் மஞ்சுளாபாயை ஒரு சுயமரியாதை மகாநாட்டுக்கு அனுப்பிவிட்டு தபாலாபீசில் ஒரு ரிஜிஸ்டர் கடிதத்தை கைப்பற்றி உடைத்து அதிலுள்ள 20 ரூ. நோட்டை எடுத்துக் கொண்டு பழயபடி ஒட்டி வைத்து விட்டார். இந்த இருபது ரூபாய் நோட்டை 2, 3 நாளில் நன்றாகக் குடித்துப் புரண்டு செலவு செய்து விட்டார். ஆபீசில் இது அறிந்து அதிகாரிகள் இவரை சஸ்பெண்ட் செய்து கேஸ் எடுத்து ரிமாண்டில் வைத்து 10 மாதம் வரை காலம் தள்ளி கடைசியாகக் குற்றவாளி எனத் தீர்மானித்து ரிமாண்டில் இருந்த நாள்களை தண்டனைக்குப் பரிகாரமாகக் குறித்து ஒரு வருஷ நல்ல நடவடிக்கை ஜாமீனின் பேரில் விடுதலை செய்து வேலையிலிருந்தும் டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்.
ஜெயிலிலிருந்து வெளி வந்த பிறகு பெண்ஜாதியை வைத்து வாழ முடியாமலும் பெண்ஜாதிக்கு ஜீவனத்துக்கு வழி செய்யாமலும் தன்னிச்சையாய்த் திரிந்து கொண்டும் சாப்பாட்டுக்கு வகை செய்யாமல் மனைவியை ஓட்டல் வைத்து சம்பாதித்துப் போடும்படி கட்டாயப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் வந்தார். அந்தம்மாள் இவர் தொல்லைக்குப் பயந்து இயக்க சம்பந்தமான பல தோழர்கள் வீட்டிலும் மதுரையில் தாயார் வீட்டிலுமாகக் காலம் கழித்து வந்தார். அந்தம்மாள் செல்லுமிடங்களிலும் இயக்க விஷயமாய் அழைக்கப்பட்ட இடங்களிலும் சென்று தொல்லை விளைவித்து வந்ததால் அந்தம்மாள் பயந்து சட்டப்படி தோழர் ஜானோஜிராவ் இடமிருந்து விலகிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் அந்தம்மாள் ஒரு நாள் ஈரோட்டுக்கு வந்திருக் கையில் அன்று தோழர் ஜானோஜிராவும் ஈரோட்டுக்கு வந்து தெருவில் போகும் போது கடைத் தெருவில் அந்தம்மாளை அவமானமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது காங்கரஸ்காரத் தோழர்கள் இரண்டொருவர் அவரைப் பார்ப்பனர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் இவரை தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியவர்களுக்கு விரோதமாக எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள விட்டுவிட்டார்கள். உடனே நான்கு பார்ப்பன வக்கீல்கள் ஒன்று கூடி ஈ.வெ.ரா., ஈ.வெ.கி. ஆகியவர்கள் மீது பிராது தயார் செய்து டிப்டி கலெக்டரிடம் அழைத்துக்கொண்டு போய் கொடுத்து மஞ்சுளாபாயம்மாளை அவர்கள் வீட்டில் சட்ட விரோதமாய் அடைத்து வைத்திருப்பதாயும் சோதனை வாரண்டு கொடுக்க வேண்டு மென்றும் கோரினார்கள்.
இந்தபடி எழுதிக்கொடுத்த பிராதில் அந்தம்மாளை என்ன நோக்கத்துடன் என்ன காரியத்துக்கு ஆக பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று காரணம் காட்டியிருப்பதில் “மஞ்சுளாபாயை விவசாரித்தனத்தில் ஈடுபடுத்தி மற்றவர் களுக்கு அனுமதிக்கவிட்டு லாபம் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபடுத்தி அடைத்து வைத்து இருக்கிறார்கள்” என்றும் “ஒழுக்கமற்ற காரியத்துக்கு ராமசாமி கிருஷ்ணசாமி மற்ற தோழர்களும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்” என்றும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் தோழர் செளந்திரபாண்டியன் அவர்கள் பெயரையும் மற்றும் சிலர் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த வழக்கை நடத்த 4 பார்ப்பன வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள். இரண்டு பேர் வக்காலத்து போட்டு எழுந்து, எழுந்து பேசினார்கள். வேறு இரண்டு வக்கீல்கள் தோழர் ஜானோஜிராவுக்கு இன்ன இன்ன மாதிரி சொல்லும்படி விசாரணையின் போதே பாடம் கற்பித்தார்கள். கடசியாக “இவைகளுக்கு சாட்சிகள் உண்டா” என்று டிப்டி கலெக்டர் கேட்ட பொழுது “நாளை கூட்டிக் கொண்டு வருகிறோம்” என்று சொல்லி வாய்தா கேட்டுக் கொண்டு வந்தவர்கள் மறுநாள் ஒரு வக்கீலும் கோர்ட்டுக்கு வராமல் தோழர் ஜானோஜிராவை மாத்திரம் அனுப்பி விட்டார்கள். மறுநாள் ஜானோஜிராவ் குடிகார பாஷையில் இந்த நான்கு வக்கீல்களையும் கண்டபடி வைது கொண்டு கோர்ட்டுக்கு வந்து “சாட்சிகள் இல்லை” என்று சொல்லி அழுக ஆரம்பித்து பிராதை வாபீஸ் வாங்கிக்கொள்வதாகச் சொல்லி விட்டார். பிராதைத் தள்ளி விட்டதாகச் சொல்லி பிரதிவாதிகளைப் போகும்படி சொல்லி விட்டார்.
எனவே பார்ப்பனத் தொல்லை எந்த அளவுக்குத் துணிகின்றது என்பதையும் இந்தக் கூட்டம் வேறு எந்தக் காரியத்தைத்தான் செய்யப் படுவார்களா என்பதையும் பொது மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டு மென்றே இதை எழுதுகிறோம். பார்ப்பனர்களின் வக்கீல் பதவிகளே இவ்வளவு அயோக்கியத்தனமான காரியங்களுக்குப் பயன்படும் போது அந்த டிப்டி கலெக்டர் பதவியில் ஒரு பார்ப்பனர் இருந்திருந்தால் அப்பதவி எப்படிப்பட்ட காரியங்களுக்கு உதவி இருக்க முடியும் என்பதைப் பற்றி எழுத வேண்டியதே இல்லை.
இதே பார்ப்பன வக்கீல்கள் கூட்டம்தான் ஈரோடு முனிசிபாலிட்டி ஓட்டர் லிஸ்ட் தயார் செய்த போது ரிவைசிங் அத்தாரட்டியிடம் வந்து தோழர்கள் ஈ.வெ.ரா., ஈ.வெ.கி. அவர்கள் வீடுகளில் குடி இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் உபாத்தியாயினி பெண்களையும் பற்றி அவர்கள் ஓட்டர்களுக்கு லாயக்கில்லை என்று விண்ணப்பம் போடும் போது “இவர்கள் “குடி அரசு” ஆபீசில் பியூன்கள்” என்றும் எழுதிக் கொடுத்தார்கள். அதற்கு சாட்சி கேட்கும் போதும் இதே மாதிரிதான் விண்ணப்பதாரனை சந்தியில் விட்டு விட்டு ஓடிப்போய்விட்டார்கள். அதாவது நாளை கொண்டு வருகிறோம் என்று சொல்லி மறுநாள் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டார்கள். இப்பொழுது ஈரோடு ஓட்டர் லிஸ்டில் ஒழுங்கீனமாய் இருக்கிறது என்று மஞ்சள் பெட்டி ஓட்டர்களை ஓட்டராக்கப் போகிறார்களாம். இன்னமும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும். ஈ.வெ.ரா., ஈ.வெ.கி., செல்வம், மதிப்பு எது வேண்டுமானாலும் பாழாகட்டும். ஆனால் இவர்களது உயிருள்ள வரை பார்ப்பனீயத்தை வெட்டிப்புதைக்கத் தொண்டு செய்வதை எப்படித் தடுக்க முடியும். மந்திரி வேலை கொடுத்து ஏமாற்றலாம் என்று முயற்சித்த தலைவர் எண்ணத்திலேயே இடி விழுந்து விட்டதென்றால் வேறு எந்த காரியத்தால்தான் இவர்கள் எண்ணம் ஈடேற முடியும்? ஆகவே பொதுமக்கள் இவர்களது யோக்கியதையை உணர்ந்து ஜாக்கிரதையாய் இருக்கட்டும் என்றே இவற்றை இன்று குறிப்பிடுகிறோம். மற்றபடி எந்த தனிப்பட்ட நபரிடமும் வகுப்பிடமும் உண்மையிலேயே குரோதமில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 12.09.1937