ஜஸ்டிஸ் கொள்கையை அசைக்க முடியாது காங்கிரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடல் பேச்சொன்று செய்கை யொன்றா?

 

தலைவரவர்களே! தோழர்களே!

இன்று நீங்கள் ஒரு அதிசயத்தைப் பார்க்கிறீர்கள். என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியாராலும், கனம் ராஜகோபாலாச்சாரியாராலும் அவர்களது கூலிகளாலும் ஐநூறு கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்ட தாகச் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது கிறிஸ்து நாதர் உயிர்த் தெழுந்த கதைபோல் உயிர்த்தெழுந்து இன்று உங்கள் முன்னால் நிற்கிறது. நிற்கிறது மாத்திரமல்லாமல் அக்கட்சி புதைக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டபின் புதைக்குழியிலிருந்து கொண்டே செய்த அற்புதங்களைப் பற்றியும் பேசப்போகிறது.

~subhead

எனது சொந்தக் கட்சி சுயமரியாதையே

~shend

அதாவது நான் தோல்வி அடைந்து முறியடிக்கப்பட்ட ஒரு கட்சி என்பதைச் சேர்ந்தவன் என்றும் கொன்று புதைக்கப்பட்டு அடியோடு ஒழிக்கப் பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிற கட்சியை சேர்ந்தவன் என்றும் சொல்லிக்கொள்ள சிறிதும் வெட்கப்படவில்லை. எனக்கு சொந்தக் கட்சி சுயமரியாதைக் கட்சியேயாகும். சு.ம. இயக்கத்தின் நன்மைக்காக என்று ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்திருக்கிறவன் என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் நன்மை “தீமை” என்பனவற்றின் எவ்வித பொறுப்புகளிலிருந்தும் நான் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.

தோழர் காந்தியார் காங்கிரசுக்கு ஏக தலைவர் மாத்திரமல்லாமல் சர்வாதிகாரி என்றும் சொல்லப்படுகிறவர். காங்கிரஸ்காரர்களும் காந்திக்கு பூசை செய்துவிட்டுத்தான் தங்கள் காரியத்தை துவக்குகிறார்கள். ஆனாலும் காங்கரசு நடவடிக்கையின் தன்மையும் காங்கரசில் உள்ள ஆட்களின் யோக்கியதையும் ஆகிய பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள காந்தியார் தன்னை காங்கரஸ்காரன் அல்லவென்றும் தான் அதில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இல்லை என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்ளுகிறார்.

~subhead

சுயமரியாதையும் ஜஸ்டிஸúம்

~shend

தோழர் ஆச்சாரியார் அவர்களும் தாங்கமுடியாததும் பதில் சொல்ல முடியாததுமான அவமானமும், இழிவும் ஏற்படும் போது தனக்கும் காங்கிரஸ் நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு பயனடைய சந்தர்ப்பங் கிடைத்தபோது மாத்திரமே, தானாகவே வந்து நுழைந்து கொள்கிறார். ஆனால் நாங்கள் சுயமரியாதைக் காரர்கள் எந்த சமயத்திலும் தப்பித்துக்கொண்டு ஓட ஆசைப்படுவதில்லை. எங்கள் கொள்கை வெற்றி பெறும் வரை ஒரு அளவுக்காவது நாங்களும் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று சொல்லிக்கொள்ள சிறிதும் அஞ்சமாட்டோம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்பவர்கள் “புறமுதுகிட்டு ஓடிவிட்டார்கள்” என்றாலும் நாங்கள் ஓடமாட்டோம். சுயமரியாதைக்காரர்களுக்கும் ஜஸ்டிஸ் காரர்களுக்கு வேறு பல உள் திட்டங்களில் சில பேதமிருக்கலாம். ஆனால் பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் விரோதிகள் என்பதிலோ அவைகளை ஒழிப்பதிலோ மற்றும் பார்ப்பனீயமும் பார்ப்பன ஆதிக்கமும் தமது கட்சிக்கு ஆயுதமாகக் கொண்டிருக்கும் காங்கிரசை அழிப்பது – ஒழிப்பது என்பதிலோ ஒரே திட்டத்தைக் கொண்டவர்களாவோம்.

சுயமரியாதைக் கட்சிக்கு அரசியல் பிரதானமல்ல

சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும் திட்டங்களின் வெற்றிக்கும் கேடு செய்யவே காங்கரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறவரை அக்காங்கரசை ஒழிக்கும் அளவுக்கு சுயமரியாதை இயக்கம் அரசியலைப் பற்றிப் பேசவும் அரசியலைப் பிரதானமாய் கொண்ட ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவும் கடமைப் பட்டிருக்கிறது. ஆதலால்தான் இன்று நாங்கள் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கவலையற்றோ – தைரியமற்றோ எதிரிக்கு ஆளாகியோ அயர்ந்து போயோ கட்சிக்கு துரோகம் செய்து கொண்டோ இருக்கிறார்கள் என்றாலும் நாங்கள் அதை லôயம் செய்யாமல் அக்கட்சிக்கு உழைக்கின்றோம். அக்கட்சி மறுபடியும் வெகு சீக்கிரத்தில் தனது உச்சஸ்தான நிலைக்கு வரப்போகிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

~subhead

ஜஸ்டிஸ் திட்டத்தை அசைக்க முடியாது

~shend

உண்மையிலேயே நான் உங்கள் எல்லோரையும் சிறிது யோசித்துப் பார்க்கும்படி சில விஷயத்தைப்பற்றி பேசுகிறேன். அதாவது தோழர் காந்தியும், கனம் ஆச்சாரியும், சத்தியமூர்த்தியும் ஜஸ்டிஸ் கட்சியை கொன்று நசுக்கிவிட்டதாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையோ திட்டத்தையோ நாட்டில் செலாவணி ஆகாமல் இருக்கக் கூடிய அளவுக்கு ஒரு சிறிது கூட அசைத்துவிட முடியாது. இதுவரை யாரும் அசைத்துவிடவும் இல்லை. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையும், திட்டமும் மந்திரிவேலை பெறுவதும் சம்பளம் பெறுவதும் மாத்திரந்தான் என்று காங்கிரஸ்காரர்கள் கருதி அக்கட்சியோடு மந்திரி பதவிக்கும் சம்பளத்துக்குமே போராடவோ அல்லது அவர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டு விரட்டி அடிக்கவோ முயற்சி செய்திருந்தால் அம்முயற்சி வெற்றி பெற்றது என்றும் அந்த காரியத்தில் ஜஸ்டிஸ் தோல்வியுற்றதும் என்றும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஏன்? நானும் கூட அப்படித்தான். அதாவது பார்ப்பனர்களும், காங்கிரசும் பதவிக்கும், சம்பளத்துக்கும் தான் பாடுபட்டு ஒரு அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லியே வருகிறேன்.

~subhead

ஜஸ்டிஸ் கொள்கையைக் குறைகூற முடியுமா?

~shend

ஆனால் பொது ஜனங்கள் அந்தப்படி நினைப்பதற்கில்லாமல் பார்ப்பனர்கள் செய்திருக்கிறார்கள். மற்றென்னவென்றால் “ஜஸ்டிஸ்காரர்கள் பொது ஜன நன்மைக்கு விரோதமாக சர்க்காருக்கு அனுகூலமாக தேசத்தைக் காட்டிக் கொடுத்து பதவி பெற்று மக்களுக்கு கெடுதி செய்து வருகிறார்கள்” என்றும் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லவென்றும் தங்கள் கொள்கைக்கும், ஜஸ்டிஸ் கொள்கைக்கும் மலையும் மடுவும் போல மாறுபட்ட வித்தியாசமென்றும் சொல்லி ஜஸ்டிஸ் கட்சி மீது குற்றங்கூறி மக்களை ஏய்த்து வருகிறார்கள். இந்த பித்தலாட்டத்தை வெளியாக்கவே இப்போது நான் ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் பேச நிற்கிறேன்.

~subhead

யார் சர்க்கார் அடிமைகள்?

~shend

ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கும் காங்கிரஸ் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களை கேட்கிறேன். காங்கரஸ் கொள்கையானது பொய், பித்தலாட்டம், நாணையக்குறைவு, நம்பிக்கைத் துரோகம், காலித்தனம் என்கின்ற சில குணங்கள் கொண்டதாய் இருப்பதைத்தவிர வேறு ஜஸ்டிசுக்கு மாறுபட்ட கொள்கை என்ன? ஜஸ்டிஸ் கட்சிக்கு அப்படிப்பட்ட கொள்கை இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் அக்கொள்கையைக் கைக்கொண்டால் அவைகளை ஜீரணிக்கச் செய்ய அவர்களால் சாத்தியப்படாது. ஆகவே இந்தக் குறைபாட்டைத் தவிர மற்றபடி ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளை பற்றிய குறை இன்னது என்று சொல்ல யாராவது முன்வரட்டும் என்று அறைகூவியழைக்கின்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியை காங்கரசுக்காரர்கள் ராஜவிசுவாசக் கட்சி என்றும் சர்க்காரோடு ஒத்துழைக்கும் கட்சி என்றும் சொன்னார்கள். இதானது காங்கரசுக்காரர்களுக்கு அரசியலில் மதிப்பும் பதவிகளும் போய் பொதுஜனங்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு “சீ இந்தப்பழம் புளிக்கும்” என்ற முறையில் இந்தப்படி சொல்லி மக்களை ஏமாற்றி வந்தார்கள். மக்கள் ஏமாந்ததால் காங்கரசுக்காரர்களுக்கு இடம் கிடைத்தவுடன் பதவி பெற்று இப்போது என்றுமில்லாத ராஜவிசுவாசமும் சரணாகதி துதியும் பாடி இரண்டு கையிலும் கும்பிடுபோடுகிறார்கள். நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் (வாக்குறுதி) கொடுத்து பதவி பெற்று அடிமை வாழ்க்கை வாழுகிறார்கள்.

“சர்க்காரே நாங்கள்; நாங்களே சர்க்கார், சர்க்காரை யாரும் குறைகூறாதீர்கள்” என்று சர்க்காருக்கு வாயில் காப்போராய் இருக்கிறார்கள். கவர்னர்களுக்கு கட்டியம் கூறுகிறார்கள். “சர்க்காரை வையாதீர்கள் சட்டத்தை மீறாதீர்கள்” என்று சர்க்காருக்கு ஆக சிபார்சு பேசுகிறார்கள். “வெள்ளைக்கார அதிகாரிகளை நமக்கு சமமாய் கருதாதீர்கள், அவர்கள் நமக்கு மேம்பட்டவர்கள்” என்று பூஜிக்கிறார்கள். “கவர்னர்கள் மகா நல்லவர்கள்” என்கிறார்கள். இவையும் இவை போன்றனவும் காங்கரஸ்காரர்களால் வெளிப்படையாய் சொல்லப்படுபவை. இனி ரகசியத்தில் இன்னமும் எவ்வளவு தூரம் காரியங்கள் நடக்கின்றன என்பது பேசவே வாய்கூசக்கூடிய சேதிகளாகும்.

~subhead

காங்கரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடலே

~shend

நமது காங்கரஸ்காரர்கள் ஆட்சி செலுத்தும் யோக்கியதையே அது ஒரு மைனர் திருவிளையாடல் போலவே இருக்கிறது. அதாவது பதவிக்கு வந்து வராததற்கு முன்பே நாட்டை அடகு வைத்து பலகோடி ரூபாய்கள் கடன் வாங்கிவிட்டார்கள். வரி விஷயங்களில் புதிய வரி போடுவதில் கவலை கொண்டு தேடித்திரிகிறார்களே அல்லாமல் வரி குறைக்க நினைக்கவே முடியவில்லை. ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் என்பவர்கள் குறைத்து வைத்து வரவு செலவு சரிக் கட்டிவிட்டுப் போன வரியைக்கூட அமலுக்கு கொண்டுவர வகை தெரியாமல் விழிக்கின்றார்கள். சர்க்கார் நிர்வாகச் செலவைக் குறைக்கும் விஷயத்தில் என்றாலோ அது “குருட்டுக் கோமுட்டி கடைத் திருட்டு” என்பது போல் டெஜன் கணக்காய் மந்திரிகளும் டெஜன் கணக்காய் காரியதரிசிகளும் டெஜன் கணக்காய் கார்களும் குரோஸ் கணக்கான சம்பள மெம்பர்களும் சம்பளங்களும் மாதம் 1-க்கு மந்திரி ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பிரயாணப் படிகளும் மற்றும் வீட்டு வாடகைகளும் கார் அலவன்சுகளும் புதிய உத்தியோகங்களும் மழை காலத்தில் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் பறப்பது போல் பொது ஜனங்களின் வரிப்பணங்கள் பொக்கிஷத்திலிருந்து பறக்கின்றன.

பெயருக்குத்தான் காங்கரஸ் மந்திரிகள் சம்பளம் குறைத்துக் கொண்டார்கள் என்று சொல்லுகிறார்களே தவிர காரியத்தில் மந்திரிகள் சம்பளத்திலும் நிர்வாக செலவுகளிலும் முன் ரூபாய்க்கு பதினாறு அணாவாக இருந்தது 192 காசாக மாறிவிட்டது.

~subhead

மதுவிலக்குப் புரளி

~shend

வரிகுறைப்பும் செலவு குறைப்பும் இந்த லக்ஷணத்தில் இருக்கிறது மாத்திரமல்லாமல் காங்கரஸ் மந்திரிகளின் நிர்வாக லக்ஷணமோ சொல்லவே வேண்டியதில்லை. சிறிதும் முன்யோசனையும் அரசியல் ஞானமும் இல்லாமல் மதுவிலக்கென்று ஆத்திரப்பட்டு ஒரு ஜில்லாவில் அமலுக்கு கொண்டு வந்து மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். மற்ற ஜில்லாக்களின் கதி என்ன என்பது பற்றியும் அவற்றின் வரவு செலவை எப்படி சரிக்கட்டுவது என்பது பற்றியும் யோசிக்காமல் தான் தோன்றித்தனமாய் காரியம் செய்கிறார்கள். இந்தக் காரியங்களினால் காங்கரஸ் ஆட்சி ஒன்று சீக்கிரத்தில் இன்சால் வெண்டாகப் போகிறது அல்லது ஆட்சியைவிட்டு ஓடிப்போய் தலைமறைவாய் மறைந்து கொள்ளப்போகிறது என்பது உறுதி.

~subhead

சம்பளக் குறைப்பும் ஹிந்திப் புரளியும்

~shend

தவிரவும் சம்பளம் குறைப்பதற்கு மந்திரிகள் முதல் முதல் கிராமாதிகாரிகள் தலையில் கையை வைக்கப் போகிறார்களாம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் இருந்திருந்து கிராமாதிகாரிகள் தலையில் கையை வைக்கப் போகிறார்கள். மாதம் 1000, 2000, 3000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கும் வெள்ளைக்காரர்களிடம் வால்காட்ட இவர்களுக்கு சக்தி இல்லை. அவர்களை மெல்லிய புஷ்பச் செடி என்று சொல்லிவிட்டு 15ரூ. சம்பளத்துக்கு எவ்வளவோ பொறுப்பாளியாகவும், அஸ்திவாரமாகவும் இருக்கும் ஆசாமிகள் தலையில் கை வைத்தால் அது யோக்கியமான காரியமாகுமா? இந்த காரியமானது ஊர் குடியானவர்களை சூறையாட சில நபர்களுக்கு லைசென்சு கொடுத்ததுபோல்தான் முடியும்.

மற்றும் கல்வி விஷயத்தில் பிள்ளைகள் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று செய்யப்போகிறார்களாம். இதுவும் ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டது போலவே முடியப்போகிறது.

~subhead

பேச்சொன்று செய்கையொன்றா?

~shend

ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் விளையாட்டுப் பிள்ளைகள் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் ஜில்லா போர்டுகளைப் பிரித்ததானது நிர்வாக சவுகரியத்துக்கு ஆக என்பது யாவரும் அறிந்ததேயாகும். தாலூகா போர்டுகளை எடுக்கும் போதே அவர்கள் இதைச் சொல்லி இருந்தார்கள். அப்படி இருந்தும் “ஜஸ்டிஸ் மந்திரிகள் கட்சி நலத்துக்கு ஆக ஜில்லா போர்டுகளைப் பிரிக்கிறார்கள்” என்று காங்கரஸ்காரர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போது காங்கரஸ்காரர்கள் தங்கள் கட்சி நலத்துக்கு ஆகவே ஒன்று சேர்க்கும் வேலையை வெளிப்படையாய் செய்கிறார்கள். ஒன்று சேர்ப்பதில் காங்கரஸ் மந்திரிகள் அனுசரிக்கும் கொள்கை என்ன என்று யாராவது சொல்லக்கூடுமா? நாமினேஷன் கூடாது என்று சொன்னவர்கள் மந்திரி பதவிக்கே நாமினேஷன்காரர்களை நியமிக்கிறார்கள். பதவிகளுக்கு தகுதி என்பது பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பது தான் யோக்கியதாம்சமாய் போய்விட்டது. ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற காங்கரஸ்காரர்கள் மற்றவர்கள் ஆட்சியை லஞ்ச ஆட்சி என்றும் கண்டிராக்ட் ஆட்சி என்றும் சொன்னார்கள். ஆனால் காங்கரஸ்காரர்களின் ஒரு வருஷ ஆட்சிக்குள் காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்கினதும் காண்டிராக்டில் சம்பாதித்ததும் வெட்ட வெளிச்சமாய் காங்கரஸ்காரர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது.

ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதக் கட்சி என்று சொன்ன காங்கரசுக்காரர்கள் தங்கள் வாயாலேயே “காங்கரசில் வகுப்பு வாதம் வகுப்புவாதம்” என்று கூப்பாடு போட்டு அழுகின்றார்கள்.

~subhead

காங்கரஸ் நாணயம் சந்தி சிரிக்கிறதே!

~shend

காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுக்கமும் சந்தி சிரிக்கிறது. மந்திரிகளுக்குள் ஏகோபித்த அபிப்பிராயமில்லாமல் ஆளுக்காள் முரணாகப் பேசுவதும் அடிக்கடி அவற்றிற்குத் தத்துவார்த்தங்களும் வியாக்கியானங்களும் செய்வதுமான யோக்கியதை ஏற்பட்டுவிட்டது.

வாக்கு சுதந்தரம் எழுத்துச் சுதந்தரம் என்பது வெறும் ஹம்பக்காய் விட்டது. மூடப்பழக்கவழக்கங்களைப் பற்றி எழுதுகிற “பகுத்தறிவு” என்ற மாதப் பத்திரிக்கைக்குக் கூட 1000 ரூ. ஜாமீன் வாங்கியதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அச்சாபீசுக்கும் 1000ரூ. ஜாமீன் வாங்கியதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டங்களில் பேசுவதையும் காங்கரஸ்காரர் காலிகள் வந்து காலித்தனம் செய்கிறார்கள்.

காந்திக்கு விரோதமான கூட்டங்களிலும் காந்தி செய்கையை கண்டிக்கிற கூட்டங்களிலும் காந்திக்கு ஜே என்று கூப்பாடு போட்டு விஷயங்களை மற்றவர்கள் அறிவதற்கில்லாமல் காலித்தனம் செய்வதென்றால் காங்கரசுக்கு யோக்கியமோ, மானமோ, அறிவோ இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? இதுதானா காங்கரசின் பேச்சு சுதந்தரம் என்ற கேட்கிறேன்.

பேச்சு சுதந்தரம் இல்லாத ஆட்சி என்று காங்கரஸ்காரர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த ஜஸ்டிஸ் ஆட்சி காலத்தில் கனம் ஆச்சாரியார் போன்ற பொறுப்புள்ள ஆள்கள் கூட மந்திரிகளையும் மாஜி கவர்னர்களையும் கழுதைக்கு சமானமானவர்கள் என்றும் துடப்பக்கட்டை விளக்குமாறு, செருப்பு என்றும் குடிகாரன் வெறிகாரன் போல உளறவும் கூப்பாடு போடவும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேச்சு சுதந்தரம் பெற்று விட்டதாக சர்க்காருக்கே துதி பாடும் இந்தக்காலத்தில் காங்கரஸ் காலிகளின் அயோக்கியத் தனத்தை நீங்கள் நேரிலேயே பார்க்கிறீர்கள் அல்லவா?

~subhead

சூது, வஞ்சகம், சுயநலம் தாண்டவம்

~shend

தோழர் கனம் ஆச்சாரியாரும் மூர்த்தியும் சொன்னதை பல வகையில் தக்க ஆதாரத்தோடு வட்டியுடன் திருப்பிக்கொடுக்க எங்களால் முடியும். ஆனால் எங்களுக்கு மானமும், மரியாதையும் குறுக்கிடுகின்றது. கனம் ஆச்சாரியார் ஜாதிக்கோ அதில்லை.

அனாவசியமாய் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களை ஒத்திப் போட்டுவிட்டார்கள். இது கட்சி நலத்துக்கும் பார்ப்பன ஜாதிக்கு அதிக ஓட்டு செய்து கொள்ளுவதற்கும் செய்யப்பட்ட சூழ்ச்சியேயாகும். இன்று பார்ப்பனருக்கு மாத்திரம் அடல்ட் பிரான்சைஸ் என்று சொல்லத்தக்க சர்வஜன ஓட்டுரிமை செய்து கொண்டார்கள்.

மற்றவர்களுக்கு அந்தப்படி ஆகும்படி சிறிதும் கவலைப் படவில்லை. எப்படி எனில் படித்தவர்களுக்கு ஓட்டு என்றதில் எல்லாப் பார்ப்பனரும் பார்ப்பனப் பெண்களும் ஓட்டர்களாகிவிட்டார்கள். மற்ற ஜாதியில் 100க்கு 10, 15 கூட ஓட்டராக முடியவில்லை. இந்த சூழ்ச்சியை என்ன என்று சொல்லுவது? எனவே பார்ப்பன ஆட்சி தொட்டதெல்லாம் சூதும் வஞ்சகமும் சுயநலமுமாகவே இருக்கிறது.

~subhead

நம்மவர்கள் கதி அதோ கதிதான்

~shend

மதுவிலக்கு சூழ்ச்சியும் ஹிந்திக் கொடுமையும் நம் மக்கள் கல்வியை நாசமாக்கி விடப்போகிறது. மதுவிலக்கு வெற்றி பெற வேண்டுமென்பதே நமது ஆசை. ஆனால் அது வெறும் சூழ்ச்சித் திறமானதால் அது வெற்றி பெறுவது குதிரைக் கொம்புதான். அதுவெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அதனால் பண வருவாய் குறையும் என்பது நிச்சயம். அந்தக் குறைவு கல்வியையும் போக்குவரவு ரோட்டு பாலம் முதலிய சாதனங்களையும் தான் பாதிக்கும். ஏனெனில் மற்ற விஷயங்களில் செலவைக் குறைக்க கைவைக்க முடியாது. இப்பொழுதே பார்ப்பனர் மாத்திரம் 100க்கு 100 பேரும் படித்திருக்கின்றனர். மற்ற வகுப்பார் 100க்கு 2,3,5,6 பேர்கள்தான் படித்திருக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் படிப்புக்கு செலவுக்குப் பணம் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் செய்யும் தொழிலில் இருந்து சம்பாதித்து சரிகட்ட வேண்டுமாம். ஆகவே பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படிப்பதா? உபாத்தியார்கள் பிழைக்க சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தொழில் செய்வதா என்று பாருங்கள். பார்ப்பனர்கள் எப்படியும் படித்துவிடுவார்கள், படித்தும் விட்டார்கள். நமது கதிதான் அதோகதி.

~subhead

இன்றைய அரசியல் நிலை

~shend

மற்றும் இப்படிப்பட்ட மதுவிலக்காவது எல்லா ஜில்லாக்களிலும் அனுஷ்டிக்கப்படுமா? என்று பாருங்கள். வருஷம் ஒரு ஜில்லா வீதம் பார்த்தாலே எல்லா ஜில்லாவும் முடிய இன்னம் 25 வருஷம் பிடிக்கும். இதற்கு சரிக்கட்ட 6 கோடி ரூபாய்க்கு வேறு புதிய வரிபோடவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் பட்டாளத்தில் ஒரு காசு குறைக்க முடியாது. குறைத்தோமேயானால் நமது சுயராஜ்யம் இட்டாலி ஆட்சியோ, ஜர்மன் ஆட்சியோ என்பதாகத்தான் ஆகிவிடும். முசோலினியாவது, ஹிட்லராவது நமது சக்கரவர்த்தியாகி விடுவார்கள். அல்லது புதுச்சேரி, கோவா போல் ஐரோப்பிய அரசர்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நாடாக ஆனாலும் ஆகிவிடும். மற்றும் இன்றைய ஞானமற்ற சூழ்ச்சி மதுவிலக்குக்கு ஆக அனாவசியமாய் மதுவிலக்கு இல்லாத ஜில்லா வாசிகள் பணம் மதுவிலக்கு ஜில்லாவுக்கு வீணில் செலவழிக்க வேண்டியதுதான் கண்டபலன். கள்ளை நிறுத்த என்று ஜஸ்டிஸ் கட்சியார் செய்த முயற்சியை பாழாக்கிவிட்டார்கள். அது நடந்திருந்தால், இப்போது ஒரு அளவுக்கு மதுவிலக்கு யோக்கியமான முறையில் காரியத்தில் அமலுக்கு வந்திருக்கும். வீணாய் பொறுப்பற்ற காலி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு பார்ப்பனர்கள் அரசியல் மூலம் நம் மக்களுக்கு தொல்லை கொடுப்பதுதான் இன்றைய அரசியல் நிலை தற்கால நிலை என்று சொல்லவேண்டும்.

குறிப்பு: 07.11.1937 ஆம் நாள் சேலம் சென்டரல் திரையரங்கில் சேலம் மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாடு, 08.11.1937 ஆம் நாள் இராசீபுரத்தில் நடைபெற்ற இராசீபுரம் வட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாடு மற்றும் பொன்னம்மாபேட்டை, நாமக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் இவைகளில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடி அரசு – சொற்பொழிவு – 14.11.1937

You may also like...