என்ன செய்யப் போகிறீர்கள்?
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் இடையறாது பாடுபட்டு வரும் “விடுதலை” தினசரியை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
தேசத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பார்ப்பனர் செய்து வரும் சூழ்ச்சியையும், அக்கிரமங்களையும் அச்சமின்றி வெளியாக்கி வரும் “விடுதலை”யை ஆதரிக்கப்போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப்போகிறீர்கள்?
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லீம்களை அடிமையாக்கச் செய்யும் காங்கரஸ்காரர்களின் சூழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி வரும் “விடுதலை”யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
தீண்டாமையை ஒழிக்கப் போகிறோம் என்று கூறி தீண்டாதார் முன்னேற்றத்தை தடுக்க செய்யும் அக்கிரமங்களை அஞ்சாது வெளியாக்கும் “விடுதலை”யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
பார்ப்பனரல்லாத முஸ்லீம், ஆதிதிராவிட தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மற்றவர்களைப் போல் அரசியலில் முன்னேற்றமடைய வேண்டுமானால் உங்களுக்காகப் பாடுபடும் “விடுதலை”யை ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள். அதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். “விடுதலை” வீழ்ச்சியுறுமானால் நீங்கள் வீழ்ச்சியுறுவீர்கள். ஆகையால் உடனே “விடுதலை”க்கு சந்தாதாரராகச் சேருங்கள்.
சந்தா விகிதம்
தபால் மூலம் முன் பணமாக மாதம் ஒன்றுக்கு 0-11-0
6 மாதத்திற்கு 4-0-0 ஒரு வருடத்திற்கு 7-8-0
விலாசம்:- மானேஜர், “விடுதலை” ஈரோடு.
குடி அரசு – வேண்டுகோள் – 14.11.1937
~cstart
ஈரோடு அர்பன் பாங்கு
1937-38-வது வருஷத்திய முதல் மகாநாடு
~cmatter
ஈரோடு அர்பன் பாங்கியின் 1937-38-வது வருஷத்திய முதல் மகாநாடு சென்ற அக்டோபர் மாதம் 30-ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 9-30 மணிக்கு þ பாங்கு மாடியில் பாங்கியின் அக்கிராசனாதிபதி தோழர் எம். சிக்கய்யா அவர்கள் தலைமையில் கூடிற்று. அநேக மெம்பர்கள் விஜயம் செய்திருந்தார்கள். þ கூட்டத்தில் போர்டாரால் தயாரிக்கப்பட்ட 37-38 வருஷத்திய ஆடிட் ரிப்போர்ட்டும் நிர்வாக அறிக்கையும் படித்து ரிக்கார்டு செய்யப்பட்டதுடன் þ வருஷத்திய நிகரலாபம் ரூ. 7150ம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
நமது ஜில்லாவிலுள்ள எல்லா ஐக்கிய பாங்குகளைப் போலவே இந்தப் பாங்கியும் மெம்பர்களுக்கு 6% வீதம் டிவிடெண்டு பட்வாடா செய்திருக்கின்றது. இப்பாங்கானது ஆரம்பித்து சுமார் 27 வருடங்கள் ஆகின்றது. þ பாங்கியின் வெள்ளி விழாவும் கூடிய சீக்கிரம் நடக்கப்போவதாக அறிகிறோம்.
இந்த பாங்கியின் நிலைமையானது சில வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது மிகவும் வளர்ச்சி பெற்றும், மேம்பட்டும் இருக்கிறதென்பதற்கு þ பாங்கியின் இவ்வருஷத்திய நிர்வாக அறிக்கையே போதிய சான்றாகும். இன்று இந்த பாங்கானது 1566 மெம்பர்களுடனும் ரூ. 77734 செல்லான பங்குத் தொகையுடனும் ரூ.351691 டிபாசிட்டுத் தொகையுடனும், ரூ.247432 மெம்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் தொகையுடனும், ரூ.42936 க்ஷேம நிதியுடனும் இருந்து வருகிறதென்பது யாவருமறிந்ததே. þ பாங்கியின் நிர்வாகமானது இந்த ஜில்லாவிலுள்ள பாங்கிகளுக்கெல்லாம் முதன்மையாக விளங்குவதுடன் மாகாண பாங்கியில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் ஸ்தானமும் பெற்றிருக்கிறது.
டிபாசிட் தொகைகளுக்கு வட்டி விகிதம் ரூ. 1-முதல் 3-வரை குறைக்கப்பட்டிருந்தும் சுமார் 3லீ லக்ஷம் ரூபாய்க்கு மேல் பொது ஜனங்களுடையதும், மெம்பர்களுடையதும் டிபாசிட் தொகை இருந்து வருகிறதென்றால் þ பாங்கின்பேரில் பொது ஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் இருந்து வருகிறதென்பது, நாம் சொல்லாமலே விளங்குகின்றது. தவணை தவறிய கடன் தொகையானது சுமார் ரூ.62 ஆயிரத்திலிருந்து தற்போது சுமார் ரூ. 30 ஆயிரத்திற்கு (பாதிக்குமேல்) குறைந்திருப்பதற்கு காரணம் þ பாங்கி நிர்வாகஸ்தர்களின் உழைப்பும் அக்கரையுமேயாகும். தவணை தவறிய கடன்தொகையின் விகிதத்தை கவனித்தால் நிலுவை நின்ற கடன் தொகையில் 100-க்கு 12-விகிதமே (12%) ஆகிறது. இவ்விஷயத்திலும் இந்த பாங்கானது நமது ஜில்லாவிலுள்ள இதர ஐக்கிய பாங்குகளுக்கெல்லாம் முதன்மை பெற்றிருக்கிறதென்றே சொல்லலாம்.
மெம்பர்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அநேக சவுகரியங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. உதாரணமாக மெம்பரல்லாதவர்களும் நகைக்கடன் வங்கும் நோக்கத்துடன் “ஆ” வகுப்பு பங்குதாரர்களென ஒரு வகுப்பு ஏற்படுத்தி அதற்காக (குறைந்த கட்டணமாக) 0-4-0 பங்குத்தொகை செலுத்தியவுடன் கடன் பெறலாம். þ செலுத்திய பங்குத்தொகையும் கடன் தீர்ந்த உடன் வாபீஸ் செய்து விடுகிறார்கள். தங்கத்தைப் பொறுத்த மட்டில் மதிப்பிடப்படும் தொகையில் ரூ. 100-க்கு 60 வரைதான் கடன் கொடுக்கலாமென்றிருந்ததை தற்போதைய நிர்வாகஸ்தர்களின் முயற்சியினால் ரூ.100-க்கு 80 வரை கொடுக்கலாமென்று ஏற்பாடாயிருப்பதானது மெம்பர்களுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடியதே. நமது ஊரிலுள்ள இதர எந்த பாங்கியிலும் நகைக்கடன் விஷயமாய் இவ்வளவு சவுகரியங்கள் இல்லையென்றே நிச்சயமாய்ச் சொல்லலாம். தவிர மெம்பர்களுக்கு கேஷ் கிரடிட் கணக்கு ஏற்படுத்தி நபர் ஜாமீன் பேரிலோ ஸ்தாவர சொத்து ஆதாரத்தின் பேரிலோ ரூ.500 வரை கடன் கொடுக்கப்பட்டு வந்ததை தற்போது ரூ.1000-ம் ஆக உயர்த்தப்பட்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இதனால் அநேக வியாபாரிகளுக்கு அதிக பயனளிக்குமென்பதில் சந்தேகமில்லை. எவ்வகைக் கடனுக்கும் அபராத வட்டி என்பதை அறவே நீக்கப்பட்டிருக்கிறது. அடமானக் கடன்களுக்கு முன்பு இருந்த 5 வருஷக் கெடுவை இப்போது 7 வருஷமாக உயர்த்தப்பட்டிருப்பதானது அடமானத்தின் பேரில் கடன் வாங்குபவர்களுக்கு திருப்பிச்செலுத்தும் சக்தி எவ்வளவு சவுகரியமாயிருக்கிறதென்பது அனுபவத்தில் கண்டவர்களுக்கே தெரியும். முன்பு ரூ.100-க்கு வருஷம் 1-க்கு ரூ 10-15-0 வீதம் வட்டி வாங்கப்பட்டு வந்ததை நிறுத்தி தற்போது அடமானம், டிபாசிட் கடன்களின் பேரில் வட்டி ரூ.100-க்கு வருஷம் 1-க்கு ரூ 7-13-0 (மாதம் 1-க்கு 0-10-5 ஆகவும் ஜாமீன் கடன்களின் பேரில் வட்டி ரூ.100-க்கு வருஷம் 1-க்கு ரூ. 8-12-0 (மாதம் 1-க்கு 100-க்கு 0-11-8) ஆகவும் குறைக்கப் பட்டிருக்கிறதாக தெரிகிறது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதின் காரணமே முன் வருஷங்களில் கொடுத்து வந்த டிவிடெண்டுகளைக் காட்டிலும், தற்போது சற்று குறைத்துக்கொடுக்க காரணமேற்பட்டிருக்கலாம். ஐக்கியமுறைக் கொள்கைப்படி ஐக்கிய சங்கங்களில் கடன் பெறும் சவுகரியத்திற்காகவே முக்கியமாக மெம்பர்கள் சேர்க்கப்படுகிறார்களாதலால் மெஜாரிட்டியான கடன் வாங்கும் ஏழை மெம்பர்களிடமிருந்து குறைந்த வட்டி வசூலித்து சற்று குறைந்த டிவிடெண்டு கொடுப்பதானது கடன் பெற்றுள்ள ஒவ்வொரு மெம்பருக்கும் மிகவும் லாபகரமானதே என்பது ஐக்கிய முறை அறிந்த நேயர்களுக்கு நன்றாய்த் தெரியும். டிவிடெண்டு குறைவானது கடன் ஒன்றும் பெறாமல் டிவிடெண்டு தொகையை மட்டும் எதிர்பார்த்து பங்குத் தொகை செலுத்தியிருக்கும் ஒரு சில மெம்பர்களுக்கே சிறிது அதிருப்தியை அளிக்கக்கூடும். ஆனால் அது ஐக்கியக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதே.
நிற்க, மெம்பரல்லாத டிபாசிட்டுதாரர்கள் அவர்கள் செலுத்தியிருக்கும் டிபாசிட்டுத் தொகைகளின் பேரில் கடன் வாங்க முடியாமலிருந்த குறையை நீக்கி தற்போது மெம்பரல்லாத டிபாசிட்டுதார்களும் அவர்கள் டிபாசிட்டுகளின் செக்யூரிட்டியின் பேரில் ரூ. 100-க்கு 90 வரை கடன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சரக்குகளின்பேரில் கடன் கொடுக்க வேண்டிய முயற்சிகள் செய்து வருவதாயும் தெரிகிறது.
இந்த பாங்கியில் இவ்வளவு சவுகரியங்கள் இதுவரை ஏற்பட்டதே இல்லையென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. தற்போதைய நிர்வாகஸ்தர்கள் மெம்பர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் கூடுமான வரையில் எல்லா விதத்திலும் மிகுந்த சவுகரியங்கள் செய்து வைக்க வேண்டுமென்ற கொள்கையின் பேரிலேயே உழைத்து வருவதுடன், பொது ஸ்தாபனமாகிய இந்த பாங்கியில் எவ்விதக் கட்சி பேதமோ, சுயநலமோ இன்றி நிர்வாக விஷயத்தில் மிகுந்த கவலையுடன், தொடர்ந்து வேலை செய்து வருகிறார்களென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது?
தோழர் எம். சிக்கய்யா அவர்கள் அக்கிராசனாதிபதியும், தோழர் வி.வி.சி.வி. பெரியசாமி முதலியாரவர்கள் உப அக்கிராசனாதிபதியும், ஒரு பெண் டைரக்டர் உள்பட மற்றும் 9 டைரக்டர்களும் þ பாங்கியின் நிர்வாகஸ்தர்களாவார்கள். இந்த மாகாண கோஆப்பரேடிவ் இலாகாவிற்கே ஈரோடு அர்பன் பாங்கியில்தான் ஒரு பெண் டைரக்டர் முதன் முதலில் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிற தென்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 14.11.1937