“தேசீய கீத”ப் புரளி
ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது. முஸ்லீம் சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு முன் இருந்து வந்த இந்திய நிலைமையப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன் மஹேந்திரன் என்பான் ஒருவனைச் சந்தித்துத் தனது புரட்சிப் படையில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறான். பவாநந்தன் வந்தே மாதர கீதம் பாடியபோது மஹேந்திரன் மதிமயங்கி அந்த கீதத்தை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறான். மஹேந்திரன் வேண்டிக் கொண்டபடியே பவாநந்தன் மீண்டும் பாடி தாய் நாட்டை முஸ்லீம் ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறுகிறான். “ஸ்டேட்ஸ்மன்” பத்திரிகையில் ஒரு முஸ்லீம் நிருபர் எழுதிய கட்டுரை ஒன்றில் “ஆனந்த மடத்தி”லிருந்து பல மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஆட்சியை ஒழிக்க முயல்வது புத்திசாலித்தனமாகுமா என்று மஹேந்திரன் கேட்டபோது “நமது மதம் போச்சு, நமது வர்ணாச்சிரம தர்மம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்கும் கூட ஆபத்து நேரிட்டிருக்கிறது. இந்த முஸ்லீம்களை ஓட்டா விட்டால் ஹிந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது” என்றெல்லாம் பவாநந்தன் கூறி மஹேந்திரனை தன் வழி இழுக்க முயல்கிறான். “நீ ஒண்டியாக முஸ்லீம்களை ஓட்டி விடுவாயா?” என்று மஹேந்திரன் கேட்டபோது வந்தேமாதர கீதத்திலுள்ள சில வரிகளை பவாநந்தன் பாடுகிறான். “ஏழுகோடி தொண்டைகள் முழங்கும் போது, 14 கோடிக் கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது பாரதமாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதே அந்த வரிகளின் பொருள். அதற்கு பதிலாக மஹேந்திரன் முஸ்லீம்கள் வீரப் பிரதாபங்களையும் படை பலத்தையும் எடுத்துக் காட்டுகிறான். பவாநந்தன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “முஸ்லீம்கள் எல்லாம் பயங்காளிகள், கோழைகள். பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது கூட ஆங்கிலேயன் போர்க்களத்தி லிருந்து ஓட மாட்டான். வியர்வை வடியத் தொடங்கும்போது முஸ்லீம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒரு வெடிகுண்டு விழுந்தால் போதும். முஸ்லீம்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்” என பவாநந்தன் கூறி மஹேந்திரனை உற்சாகப்படுத்துகிறான். தனது புரட்சிப்படையில் சேர்ந்து முஸ்லீம்களை எதிர்த்து தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தைப்பற்றி பவாநந்தன் எவ்வளவோ கூறியும் மஹேந்திரன் மசியவில்லை. மறுநாள் காலையில் பவாநந்தன் மஹேந்திரனை ஆனந்தமட ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறான். அந்த ஆலயத்தில் ஒரு விஷ்ணுவின் விக்கிரகத்தையும் அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் விக்கிரகத்தையும் மஹேந்திரன் பார்த்து அந்தத் தேவியார் யார் என்று கேட்கிறான். “ஹோ! அவள்தான் நம் மாதா. நாமெல்லாம் அவளது குழந்தைகள்” எனப் பூசாரி விடையளிக்கிறான். அப்பால் ஆலயத்தின் வேறொரு பகுதிக்கு மஹேந்திரனை பூசாரி அழைத்துக்கொண்டு போய் “ஜெகத்தாத்ரி” தேவி தேஜோமயமாய் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறான். “ஆதியிலே நமது பாரதமாதா இம்மாதிரியே இருந்தாள்” என பூசாரி மஹேந்திரனுக்குக் கூறி மீண்டும் வேறொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். அங்கே நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு கருங்காளி விக்கிரகத்தை பூசாரி மஹேந்திரனுக்குக் காட்டி “இப்போது பாரத மாதா இருக்கும் கோலம் இது” எனக் கூறுகிறான். அப்பால் வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் பத்துக் கரங்களுடைய துர்க்கா தேவியின் விக்கிரகத்தைக் காட்டி “நமது சத்துருக்களான முஸ்லீம்கள் ஒழிக்கப்பட்ட பின் நமது பாரத மாதா இவ்வாறே இருப்பாள்” என மஹேந்திரனிடம் கூறுகிறான். மீண்டும் பூசாரி, லôமி, ஸரஸ்வதி தேவிகள் விக்கிரகங்களை மஹேந்திரனுக்குக் காட்டி “பத்துக் கரங்களுடைய துர்க்கையே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லôமி தேவியே! கல்வித் தெய்வமான ஸரஸ்வதியே! போற்றி! போற்றி!” எனப் பாடி பூசாரி ஆனந்தத் தாண்டவமாடுகிறான். கடைசியில் மஹேந்திரன் தேசபக்தனாகி புரட்சிப் பிரதிக்ஞை செய்து கொள்கிறான்.
புரட்சிப் படையில் ஆட்சேர்க்கும் முறையைப்பற்றி “ஆனந்தமட” நாவலிலிருந்து சில மேற்கோள்களை அந்த முஸ்லீம் நிருபர் எடுத்துக் காட்டியிருக்கிறார். “தாய் நாட்டை மீட்கும் வரை உற்றார் பெற்றார் உறவினரைத் துறந்து சநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக புரட்சிப் படையில் சேரும் ஒவ்வொருவனும் சபதம் செய்து கொள்வானாம். புரட்சிப் படையில் சேர்ந்த பிறகு ஒவ்வொருவனும் ஒவ்வொரு கிராமத்துக்கு அனுப்பப்படுவானாம். கிராமங்களில் புரட்சிக்காரர் செய்யும் அட்டூழியங்களை விளக்கி “ஆனந்த மடத்”தில் கூறப்பட்டிருப்பதாவது,
“புரட்சிக்காரன் ஒவ்வொருவனும் கிராமங்களுக்குச் சென்று ஹிந்துக் களைச் சந்தித்து “சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா! எனக் கூறி 20 அல்லது 25 பேரைச் சேர்த்துக்கொண்டு முஸ்லீம் கிராமங்களுக்குச் சென்று முஸ்லீம் குடிசைகளை தீக்கிரையாக்குவார்களாம். உடனே முஸ்லீம்கள் நானா பக்கங்களிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்களாம். உடனே முஸ்லீம்கள் சொத்துக்களையெல்லாம் புரட்சிக்காரர் சூறையாடு வார்களாம். அவ்வாறு கொள்ளையடித்த பொருள்களை விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக வழங்குவார்களாம். கொள்ளைப் பொருள்களில் பங்கு கொண்ட கிராம வாசிகள் மகிழ்ச்சியடைந்து புரட்சிப் படையில் தாமும் சேர்ந்து கொண்டதாக விஷ்ணு பேரில் ஆணையிட்டுக் கொடுப்பார்களாம். ஆநந்தமடம் மூன்றாம் பகுதி எட்டாவது அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றிப் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. “திடீரென ஒரு முழக்கம் கேட்டது. சிலர் முஸ்லீம்களைக் கொல்! கொல்! என ஆர்ப்பரித்தார்கள். சிலர் வந்தே மாதர கீதம் பாடினார்கள். சிலர் “சகோதரர்களோ! மசூதிகளையெல்லாம் தரைமட்டமாக்கி அந்த இடத்திலே ராதாமாதவ ராலயத்தைக் கட்டும் நாள் என்று வரும்” என்று கர்ஜித்தார்கள். இடையிலே பலர் வந்தேமாதர கீத கோஷம் செய்தார்கள்.
“வந்தேமாதர” கீதத்தின் தோற்றத்தையும் நோக்கத்தையும், விளக்கிக் கூறி விட்டு அந்த முஸ்லீம் நிருபர் மேலும் எழுதியிருப்பதாவது:-
“விக்ரக வணக்கத்தை ஆதரிப்பதும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பக் கூடியதுமான வந்தேமாதர கீதத்தை இந்திய முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வார்களா என ஹிந்துக்களையும் பாரபட்சமற்ற ஐரோப்பியர் களையும் நான் கேட்கிறேன். இந்நிலையில் எல்லாருக்கும் பொதுவெனக் கூறிக்கொள்ளும் காங்கரஸ் எல்லாரும் வந்தே மாதர கீதம் பாடுமாறு கட்டாயப் படுத்துவது நீதியாகுமா?
உண்மையான தேசீய கீதம் தேசமக்கள் உள்ளத்தில் தேசபக்தியை உண்டு பண்ணக் கூடியதாக இருக்க வேண்டும். “வந்தேமாதர கீதம்” முஸ்லீம்கள் உள்ளத்தில் தேச பக்தியை எழுப்புமா?
தாய்நாட்டின் பெருமையை விளக்கக் கூடிய தேசீய கீதத்தை முஸ்லீம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அந்த கீதம் மத துவேஷத்தையோ, வகுப்பு துவேஷத்தையோ மூட்டக் கூடியதாயிருக்கக் கூடாது.”
இந்த அபிப்பிராயத்தை நாமும் ஆதரிக்கிறோம். ஒரிஸா அசம்பிளியிலும் தேசீயக் கீதத் தகராறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஒரிஸா அசம்பிளியில் தேசீய கீதம் பாடிய போது சில உத்தியோகஸ்தர்கள் எழுந்து நிற்கவில்லையாம். காங்கரஸ்கட்சி மெம்பர்கள் அதை ஆட்சேபித்து அசம்பிளித் தலைவரிடம் முறையிட்டார்களாம். தலைவரும் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்தவரே. தலைவர் பிரஸ்தாப விஷயத்தைப்பற்றித் தீர்ப்புக் கூறுகையில் “உத்தியோகஸ்தர்கள் சட்டசபை மெம்பர்கள் அல்லவென்றும் சட்டசபை மண்டபத்தில் பிரசன்னமா யிருப்பவர்கள் இன்னின்ன மாதிரி நடந்து கொள்ளவேண்டு மென்று கட்டளையிடத் தமக்கு அதிகாரமிருந்தாலும் பிரஸ்தாப விஷயத்தில் தாம் எதுவும் செய்யப்போவதில்லையென்றும் தேசீய கீதம் பாடும்போது உட்கார்ந் திருப்பதும் எழுந்து நிற்பதும் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததென்றும் எனினும் உத்தியோகஸ்தர்கள் உட்கார்ந்திருந்தது வருந்தத்தக்கதென்றும் அந்தத் தகராறை அத்துடன் விட்டு விடுவதே நல்லதென்றும் பிரஸ்தாபித்தாராம். சட்ட சபைகளில் வந்தே மாதர கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்க வில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யாமல் காங்கரஸ்காரர் வந்தேமாதர கீதத்தையும் மூவர்ணக் கொடியையும் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று பிடிவாதம் செய்தால் தேசீய கீதத்தின் மானமும் தேசீயக் கொடியின் கெளரவமும் அழிவது நிச்சயமென்று எச்சரிக்கை செய்கிறோம்.
– “விடுதலை”
குடி அரசு – மறுபிரசுரம் – 12.09.1937