மனுதர்ம ஆட்சி தாண்டவம் கள் ஒழிப்பு சூழ்ச்சி கல்வி நாசத்துக்கே

 

காங்கரஸ் அரசியல் சுதந்தரத்துக்கு ஆக பாடுபடுகிறது என்று பேர் வைத்துக்கொண்டு பார்ப்பன ஆதிக்க மனு ஆட்சியை புதுப்பிக்க பாடுபடுகின்றது என்பதை பல பிரத்தியக்ஷ அனுபவ ஆதாரங்களுடன் எத்தனையோ தடவை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். அப்படி இருந்தும் பார்ப்பனரல்லாத மக்களில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ காங்கரசை அரசியல் சபை என்றும் அது அரசியல் விடுதலைக்கு பாடுபடுகிறது என்றும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பாமர மக்களில் பலரும் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள். காங்கரசின் சூழ்ச்சியைப்பற்றி இந்தியா முழுவதிலும் கிளர்ச்சி நடந்து வருகிற இந்தக்காலத்திலேயே காங்கரசின் பேரால் எவ்வளவு தைரியமாக மேலும் மேலும் சூழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பதை பொது ஜனங்கள் அறிய வேண்டும் என்பதற்கு ஆகவே மேலும் சில புதிய சூழ்ச்சிக்கொடுமைகளை எடுத்துக் காட்டுகின்றோம்.

காங்கரஸ் பார்ப்பன சூழ்ச்சியின் முக்கிய கருத்து நாம் மேலே குறிப்பிட்டது போல் வருணாச்சிரம மனு ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அதற்கு – முக்கியமாக செய்யப்பட வேண்டிய அஸ்திவாரமான காரியம் பார்ப்பனரல்லா மக்களுக்கு கல்வி இல்லாமலும் கையில் பணம் சேருவதற்கு மார்க்கமில்லாமல் நிரந்தர ஏழைகளாய் இருக்கும்படி செய்து விடுவது என்பதும் தான் மனுகூறி இருக்கும் யோசனைகளில் எல்லாம் அதாவது தர்ம சாஸ்திர விதிகளில் எல்லாம் முக்கியமான விதியாகும்.

அதாவது சூத்திரன் படிக்கக்கூடாது என்னும் விதியும் சூத்திரனுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது என்னும் விதியும் சூத்திரனிடம் பணம் இருக்கக் கூடாது என்னும் விதியும் மனுதர்மத்தில் உள்ளது என்பது யாவரும் அறிந்ததேயாகும்.

அதற்கு ஏற்கனவே காந்தியார் தன்னால் கூடிய அளவு ராட்டினப் பிரசாரம் செய்து பார்த்து விட்டார். ராட்டினத்தை அந்நிய நாட்டுக்கு பணம் போவதைத் தடுக்கும் சாக்கிலும் வெள்ளையர் ஆட்சியை விரட்டும் சாக்கிலும் குடிசைத்தொழிலை ஆதரிக்கும் சாக்கிலும் தனக்கு வேண்டியதை தானே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற சாக்கிலும் விதவைகளுக்கு விமோசனம் என்னும் சாக்கிலும் புருஷனால் கொடுமைப் படுத்தப்பட்டு துரத்தி விடப்பட்ட பெண்ணுக்கு புருஷன் ஞாபகம் வந்தால் அதை தீர்த்துக்கொள்ளும் சாக்கிலும் மனதுக்கு சாந்தியளிக்கும் சாக்கிலும் மற்றும் காங்கரசுக்கு கட்டுப்பட்டு தனக்கு சதா ஜே போடுவதற்கு சில நிரந்தரக் கூலிகளை கையில் வைத்துக்கொண்டிருக்கும் எண்ணத்திலும் காங்கரசுக்குள் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவன் இருக்கக் கூடாது என்கின்ற எண்ணத்திலும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகளையும் சாக்குகளையும் சுயநலங்களையும் மனதில் வைத்து எத்தனையோ லக்ஷ ரூபாயையும் பாழாக்கி இதுவரை கதர் பிரசாரம் செய்து வந்தும் இன்று வரை கதர் கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று என்னும் பழமொழிக்கு இலக்காகவே இருந்து வருகிறது. வேஷத்துக்கு அல்லாமல் உண்மைக்கு அணிய வேண்டிய ஆடை அல்லாததாகவே இருந்து வருகிறது. ஓட்டு வேட்டைக்கும் காங்கரஸ் ஓட்டு பிரசாரத்துக்கும் தவிர வேறு காரியத்துக்கு தேவையில்லாத சாதனமாகவே கதர் ஆகிவிட்டது. மற்றபடி கதரினால் இந்திய மக்களை பார்ப்பனரல்லாதாரை என்றும் தரித்திரர்களாக வைத்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் வாயிலும், கதரினால் யந்திரங்களை அடியோடு அழித்து மக்களை மிருகங்களாக வைத்து என்றென்றும் பார்ப்பனருக்கு அடிமையாக வைத்திருக்கலாம் என்கின்ற சூழ்ச்சியின் வாயிலும் நன்றாக ஒரு படி நொய்மண் கொட்டி கூறு குத்தியாகிவிட்டது.

கதரின் யோக்கியதை இப்படி இருக்க மனு ஆட்சியின் மற்றொரு ஐட்டமாகிய பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின் வாயில் மண்ணைக் கொட்டும் சூழ்ச்சி வேலை துவக்கப்பட்டு விட்டது. அதை ஒருவாறு காங்கரஸ் தீவிரமாய் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் முடிவில் இதிலும் தோழர் காந்தியாருடையவும் அவருடைய துர்மந்திரி தோழர் கனம் ஆச்சாரியாருடையவும் சூழ்ச்சியின் வாயில் தான் மண் விழப்போகிறதே ஒழிய அவர்களது எண்ணம் பலிக்கப்போவதில்லை என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் பலவித தொல்லைகளுக்கு நமது மக்கள் ஆளாக வேண்டிவரும் என்றாலும் முடிவில் வெற்றி பார்ப்பனரல்லாதாருடைய தாகவே இருக்கப் போகிறது என்பதோடு இவ்விஷயத்தில் கனம் ஆச்சாரியாரும், காந்தியாரும் வெற்றியடையப் போவதில்லை என்பது உறுதி.

கல்வி விஷயத்தில் காந்தியாரும், காங்கரசும் செய்யும் சூழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் கவனிப்போம்.

  1. மதுவிலக்கு சாக்கு.
  2. ஹிந்தி நுழைப்பு.
  3. கல்வித் திட்டம்.
  4. இப்போது அமுலில் இருந்துவரும் இலவச கட்டாயக் கல்வி முறை ஒழிப்பு.

இந்த 4 காரியங்களால் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியை ஒழிக்க திட்டம் போட்டிருக்கிறார்கள். அவைகளை கீழே விளக்குகிறோம்.

மதுவிலக்கு சாக்கு என்பது என்னவெனில்,

“நாட்டில் பூரண மதுவிலக்கு அமுலில் கொண்டுவர முயற்சிப்பதால் அதனால் இப்போது வந்து கொண்டிருந்த வரும்படி குறைந்து விட்டதால் வரவு செலவை சரிக்கட்ட, கல்விச் செலவை குறைக்க வேண்டியதாய் விட்டது” என்று மந்திரிகள் இப்போது செல்லுமிடங்களிலெல்லாம் சொல்லி வருகிறார்கள். இதைப்பற்றி மந்திரிகள் வாக்கு மூலங்களை அப்படியே எடுத்து போட்டு “குடி அரசு” “விடுதலை” பத்திரிகைகளில் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம்.

அடுத்த சூழ்ச்சியான ஹிந்தி கட்டாயமாக புகுத்தும் விஷயத்தைப் பற்றியும் தென்னாடு முழுவதும் தமிழ் மக்கள் காங்கிரசில் உள்ள 100-க்கு 99 பாகம் மக்கள் உள்பட ஹிந்தியை எதிர்த்தும் அது தமிழைக் கொலை செய்வதென்றும் மக்கள் கல்வி அறிவை பாழ்படுத்துவது என்றும் மக்களை படிக்க முடியாமல் செய்வதென்றும் அது வருணாச்சிரம மனு ஆட்சியை கட்டாயத்தில் புகுத்துவது என்றும் எவ்வளவோ பெரிய கிளர்ச்சி செய்யப்பட்டுவந்தும் இவைகள் அத்தனையையும் லட்சியம் செய்யாமல் திருட்டுத்தனமாக நுழைக்க முயற்சிப்பதையும் இந்த 2, 3 மாதகாலமாக மக்கள் தாமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

மூன்றாவது சூழ்ச்சியான காந்தியாரின் கல்வித்திட்டம் என்பதைப் பற்றியும் “விடுதலை” “குடி அரசு” பத்திரிகைகளில் விளக்கப்பட்டிருப்பதோடு பார்ப்பனர்கள் பலரே இந்த சூழ்ச்சி தங்களையும் பாதித்து விடுமோ என்று பயந்து கண்டித்து இருப்பது “இந்து” “சுதேசமித்திரன்” பத்திரிகை மூலமாக காணலாம்.

நான்காவது சூழ்ச்சியாக இப்போது கட்டாய இலவசக் கல்வி கூடாது என்பதும் இதற்கு காரணம் இப்போது பொருளாதார நிலை சரியாய் இல்லை என்று சொல்லுவதுமாகும்.

கட்டாய இலவசக் கல்வியானது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்தில் பனகாலரசர் ஆட்சியில் சர். பாத்ரோ அவர்களால் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டு வரப்பட்டதாகும். இதற்கென்று புதியவரிகளும் விதித்து வசூலிக்கப்பட்டு நடந்துவரும் காரியமாகும். இந்த கட்டாய ஆரம்பக்கல்வி திட்டம் ஜஸ்டிஸ் மந்திரிகள் ஏற்பாடு செய்யும்போதே பார்ப்பனர்கள் ஒரு மூச்சு ஒன்று சேர்ந்து தங்களால் கூடுமான அளவெல்லாம் தொல்லை கொடுத்துப் பார்த்துவிட்டார்கள். அப்போது ஏற்பட்ட பார்ப்பனத் தடைகளையும் அவர்களது தொல்லைகளையும் லôயம் செய்யாமலேயே கட்டாய இலவசக் கல்வி முறை பார்ப்பனரல்லாத மந்திரிகளால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. அதன் பயனாக இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதாரின் கல்வி நிலையானது அன்று முதல் இன்று வரை விருத்தியாகிக் கொண்டே வந்திருக்கிறது. ஏறக்குறைய பார்ப்பனரல்லாதாருள் அநேக வகுப்புகளில் 100க்கு 50 வீதம் பிள்ளைகள் இப்போது அதிகமாகப் படித்திருக்கிறார்கள். மேல் வகுப்புகளில் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் மொத்தத்தில் முன் இருந்ததைவிட 100க்கு 100 வீதமும் சில வகுப்புகளில் 200 வீதமும் உயர்தர கல்வி பெற்று இருக்கிறார்கள். அதனால் உத்தியோகம், வக்கீல், டாக்டர் மற்ற தனிப்பட்ட விஷய நிபுணத்துவம் ஆகிய காரியங்களில் முன் எடுத்துக்காட்டியது போல் 100க்கு 100, 200 சில விஷயங்களில் 100-க்கு 300 வீதம் மக்கள் பொதுக்கல்வி விர்த்தியடைந்து பார்ப்பனரல்லாதார் பல உத்தியோகங்களிலும் பல தொழில்களிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் இவ்வித விருத்திகளும் இத்தனை அதிக எண்ணிக்கை விகிதங்களும் நேரே பார்ப்பன சமூகத்தையே தாக்கி அவர்கள் நிலையை சற்று தாழச்செய்து விட்டது. இதற்குக் காரணம் சகல துறையிலும் பார்ப்பனரல்லாதார் படிக்கவும் போட்டி போடவும் படிக்க முடியாத ஏழை ஜனங்களுக்கும், படிப்பில் கவலையில்லாத பாமர ஜனங்களுக்கும் கட்டாய இலவசக்கல்வி முறையால் படித்துத் தீர வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டதேயாகும் என்பதை பார்ப்பனரல்லாதார் சமூகத்தை காட்டிக் கொடுத்து அதற்கு துரோகம் செய்துவிட்டு இன்று பார்ப்பனர்களுக்குப் பின்னால் கொடி தூக்கி கோவிந்தா போடும் காங்கரஸ் பார்ப்பனரல்லாதாரே ஒப்புக்கொள்ளுவார்கள்.

ஆதலால் இன்று பார்ப்பனர் முன் போல் பாடுபடாமல் அரசியல், பொருளாதாரம், மத இயல், சமூக இயல் ஆகியவைகளில் ஆதிக்கம் பெற்று மக்களை சுரண்டி கொள்ளையடித்து போக போக்கியமனுபவிக்க வேண்டுமானால் மற்ற மக்களை தற்குறிகளாக வைத்திருந்தாலொழிய முடியாது என்கின்ற மனு வாக்கியத்தை உணர்ந்தே இன்று ஏற்கனவே இருந்து வந்த கட்டாயக் கல்வி முறையை ஒழித்து விட்டு ஒவ்வொரு பார்ப்பனரல்லாதானும் என்றென்றும் கைத்தொழில் செய்தே ஜீவனம் செய்யும் மார்க்கத்தை கல்வித் திட்டமாகச் செய்து அதையும் கட்டாயமாய் செய்தே தீரவேண்டுமென்று செய்யப்போகிறார்கள். இதற்கு பெயர் கட்டாய அடிமைத் தொழில் கற்பிப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஒரு விஷயம் பொது ஜனங்கள் கவனத்துக்கு கொண்டு வரவேண்டியதாகும் அதாவது தருமபுரி ஜில்லா போர்டார் தங்கள் எல்லைக்குள் இருக்கும் கிராமாந்திர ஜனங்களுக்கு கட்டாயக் கல்வி புகட்ட வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு அதற்காக தங்கள் கையிருப்பு பணத்தில் 13500 ஒதுக்கி வைத்து வேலைசெய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதை நமது கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியின் அரசாங்கம் கூடாது என்று தடுத்து விட்டது. தருமபுரி ஜில்லா போர்டார் சர்க்காருக்கு கல்விச் செலவுக்கு 13500 ரூ. ஒதுக்கிவைத்து வரவு செலவு பட்ஜட்டும் சரிகட்டிக் காட்டி இருக்கிறார்கள். அப்படி இருக்க தோழர் ஆச்சாரியார் சர்க்கார்,

“தற்கால செல்வ நிலையில் கட்டாய இலவசக்கல்வி தேவை இல்லை” என்று உத்திரவு பிறப்பிக்க காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி ஜனங்களை வேண்டுகிறோம். கல்விக்கு இல்லாத செல்வம் வேறு எதற்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

சேலம் ஜில்லா அதாவது ஒரு ஜில்லாவில் ஆரம்பித்த மதுவிலக்கு நாடகத்தாலேயே இந்தக் கதி ஏற்படுமானால் மற்ற ஜில்லாவிலும் இந்நாடகம் ஆரம்பித்து விட்டால் கற்ற கல்வியையும் மறந்துவிடவேண்டும் என்று உத்திரவு போடுவார்களா? மாட்டார்களா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். உலகில் கண்ணைக்குத்திக் கொண்டு எந்த அறிவிலியாவது சித்திரம் வாங்குவானா? என்று கேட்கிறோம்.

ஆனால் நமது அய்யங்கார் ஜாதி ஆச்சாரியார் – கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் கல்வியை ஒழித்து விட்டு கள்ளை “நிறுத்த”ப் பார்க்கிறார்.

கள்ளை நிறுத்துகிற சிப்பாய்கள் கல்விக்கு – மக்கள் அறிவுக்கு கேடில்லாதபடி திட்டமும் வரவு செலவு சரி கட்டுதலும் ஏற்பாடு செய்துகொண்டு இந்த நாடகமாடுவார்களானால் தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். அப்படிக்கில்லாமல் கல்வியை ஒழிப்பதற்கு சாதனமாக – சூழ்ச்சி ஆயுதமாக கள் “நிறுத்த” நாடகம் ஆடுவதை யார் தான் சகிக்கக்கூடும்? எனவே இன்றைய காங்கரஸ் ஆதிக்கம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு என்றும் முக்கியமாக வர்ணாச்சிரம புனருத்தாரணத்துக்கு என்றும் வருணாச்சிரம தத்துவப்படி பார்ப்பனரல்லாத மக்கள் கல்வியை பாழாக்க மக்களை குருடர்களாகவும் மிருகங்களாகவும் செய்யப்படும் சூழ்ச்சி ஆட்சி என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 19.12.1937

You may also like...