வகுப்பு வாதமும்  “ஆனந்த விகட”னும்

எங்கும் வகுப்பு வாதம்

ஒரு ஆட்டு இடையனை அவன் எஜமான் தனது ஆடுகள் பட்டியை விட்டு வெளியே போவதை எண்ணி விட்டு எண்ணின கணக்கை வந்து சொல்லும்படி உத்திரவு செய்தான். அந்த இடையன் அதேமாதிரி பட்டியின் கடவைத் திறந்து ஆடுகளை வெளியில் விரட்டி ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினான். எண்ணுகையில் “முதல் முதலில் ஒன்று, அப்புறம் ஒன்று, மறுபடியும் ஒன்று, அதற்குள் குறுக்கே பாய்ந்து ஒன்று, தாண்டிக் குதித்து ஒன்று, மத்தியில் முட்டிக்கொண்டு போனது ஒன்று, அப்புறம் எல்லாம் புலுபுலு” என்று எஜமானிடம் வந்து கணக்கு சொன்னான். அதுபோல் “ஜாதி மத வகுப்புபேதமில்லாமல் பரிசுத்த வருணாச்சிரமதர்ம ராமராஜ்ய ஆட்சி” நடந்துவந்த இந்தியாவில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை தெற்கு வடக்காகவும் பம்பாய் சிந்து முதல் வங்காளம் பர்மா வரை கிழக்கு மேற்காகவும் இந்தியா முழுவதிலும் இன்று புலு புலு என்று வகுப்பு வாதம் தாண்டவமாடுகின்றது.

~subhead

உரிமை கேட்பது வகுப்பு வாதமா?

~shend

நாமறிய முதல் முதலில் 1900-த்தில் வங்காளத்தில் முஸ்லீம்கள் தங்கள் உரிமையை கேட்க ஆரம்பித்த உடன் அதற்கு வகுப்புவாதம் என்று பெயரிட்டு அதை ஒழிப்பதற்கு வங்காளிகள் உள்ளுக்குள்ளாக எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தும் அடக்கமுடியாமல் போனதால் அரசியலில் கிளர்ச்சி செய்து ஆதிக்கம் பெற்று முஸ்லீம்களை அடக்கி விடலாம் எனக் கருதி அந்தரங்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெளி வேஷத்தில் ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராகவும் கிளர்ச்சிசெய்து ஒரு அளவு வெற்றிபெற்றார்கள். என்றாலும் அது முஸ்லீம்கள் கோரியதை (வகுப்புவாதத்தை) ஒரு அளவாவது அடையும்படி செய்துவிட்டது.

அந்தக் கிளர்ச்சியின் வேகம் பஞ்சாப்பில் சீக்கியர், முஸ்லீம் என்கின்ற வகுப்புவாதத்தை உண்டாக்கிக் குறைவு உள்ள சமூகத்துக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொடுத்து அதன் பிறகு தென்கோடியில் சென்னை மாகாணத்திலும் மேல் கோடியில் பம்பாய் மாகாணத்திலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு வாதம் கிளம்பி ஒரு அளவு பரிகாரம் அமுலுழுக்கு வந்தேவிட்டது. அதன் பிறகு கிழக்குக் கோடியில் பர்மா மாகாணத்தில் பர்மியர் அந்நியர் என்கின்ற வகுப்புவாதம் ஏற்பட்டு பர்மாகாரருக்கு நிரந்தரப் பரிகாரம் ஏற்பட்டு விட்டது. (இன்று சிலோனிலும் இந்தியன், லங்கையன் என்கின்ற வகுப்பு வாதம் நடக்கிறது. வெளிநாட்டிலும் கருப்பன், வெள்ளையன், ஜர்மனியன் என்கின்ற வகுப்பு வாதம் நடக்கின்றது) ஆகவே இந்தியாவின் நாலு புறத்திலும் மாத்திரம் அல்லாமல் நடுவில் மத்திய மாகாணம் ஐக்கிய மாகாணம் முதலியவைகளிலும் வகுப்புகளின் பேரால் வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமாகவே இருந்துவருகின்றன.

இந்த வகுப்பு வாதங்கள் கண்டிப்பாக சமுதாயம், கல்வி, பொருள், அரசு ஆகிய துறையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மற்ற வகுப்புகளைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து அடக்கி ஒடுக்கி முன் கூறப்பட்ட துறைகளில் முன்னணியில் நின்று உயர் நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கும் மக்களுக்குமே நடந்து வருகின்றதே ஒழிய சம நிலையில் நிற்கும் இரு வகுப்புகளுக்குள் இம்மாதிரி வகுப்புவாதம் தோன்றுவதே இல்லை.

இப்படிப்பட்ட வகுப்பு வாதம் தோன்றின பொழுதெல்லாம் வகுப்பு வாதத்துக்கு காரணம் மேலே கூறிய சமூகம், கல்வி, பொருள், அரசு முதலியவைகளில் பிற்பட்டு தாழ்ந்து கிடக்கும் சமூகங்களிலிருந்தே முதலில் குறையாகக் கிளம்பி அப்புறம் கூப்பாடாக மாறி கிளர்ச்சிகள் நடக்கும்போது மேல் நிலையில் உள்ளவர்கள் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைக்க வேண்டி ஏற்பட்டு விட்டதாலும் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யவேண்டி ஏற்பட்டால் அது பெரிதும் ஏன்? முழுவதும் மேல் நிலையில் முற்போக்கில் போய்க்கொண்டிருப்பவர்களையே பாதிக்கிறதா யிருப்பதாலும் அதற்குத் தகுந்த பரிகாரம் செய்ய மனமற்றவர்களாகி திண்டாடித் தெருவில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால் வேறு சமாதானம் இல்லாமல் தேச பக்தி என்கின்ற அயோக்கியத்தனமான – அற்பத்தனமான – இழிவான போக்கிரித்தனமான தந்திரத்தைக் கையாட வேண்டியதாய் விட்டது. இத்தந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்தவர்கள் வங்காளத்துக்காரர்களேயாகும்.

~subhead

காங்கரஸ் ஏற்பட்டதால்தான் வகுப்பு வாதம் உண்டாயிற்று

~shend

உத்தியோக வேட்டைக்காக வென்று வெளிப்படையாக காங்கரஸ் என்பதாக ஒன்று ஏற்பட்ட பிறகே உத்தியோகத்தில் பங்கு என்கின்ற வகுப்பு வாதம் உத்தியோகம் அடைய முடியாமல் செய்யப்பட்டவர்களால் ஏற்பட வேண்டியதாயிற்று. அம்மாதிரி வகுப்புவாத மேற்பட்ட பிறகே அப்பங்கு கொடுக்க இஷ்டமில்லாமல் மோசம் செய்யக் கருதிய அயோக்கியர்களால் தேசபக்தி அரசியல் என்பதான இழிகுணமான சூழ்ச்சிகள் செய்யவேண்டியதாயிற்று என்பதை அனுபவ வாயிலாகவே காங்கரஸ் சரித்திரத்திலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

காங்கரஸ் ஆரம்பத்தில் தேசம் என்கின்ற பேச்சோ தேசாபிமானம் என்கின்ற பேச்சோ சுயராஜ்யம் என்பதான புரோகிதப் பித்தலாட்டப் பேச்சோ சிறிதும் கிடையாது.

உத்தியோக வேட்டைக்கும் ராஜபக்திக்கும்தான் காங்கரஸ் ஏற்பட்டது

காங்கரஸ் ராஜபக்திக்கும் அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி ராஜபக்திக்கும் ஆகவே ஏற்பட்டது. பிறகு அதன் கூலியாகிய உத்தியோகத்தை கெஞ்சிக் கேட்கும் வேலையை செய்து வந்தது. அதுவும் ஒரு கூட்டத்தாருக்கே, ஒரு வகுப்பாருக்கே கிடைக்கும்படியான காரியத்தைச் செய்து வந்ததால் முஸ்லீம்கள் தங்களுக்குள்ள பங்கு கிடைக்கவேண்டுமென்று கேட்க வேண்டியவர்களானார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதற்கு ஆக முயற்சி செய்யும்வரை தேசபக்தி, தேசாபிமானம், வந்தே மாதரம், சுயராஜ்யம் என்கின்றதான ஏதாவது ஒரு வார்த்தை இருந்ததா என்பதாக யோசித்துப் பார்த்தால் இத்தேசபக்தி புரட்டுகள் ஏற்பட்டதற்கு காரணம் விளங்கி விடும். உண்மையிலேயே ஆரம்பத்தில் தேசம் என்றால் பிரிட்டிஷ் தேசம் என்பது தான் காங்கரசில் இருந்து வந்தது. இந்தியாவைப்பற்றி அதில் பேச்சில்லையா என்று யாராவது கேட்பதாயிருந்தால் ஆம் இருந்தது என்று சொல்வதோடு எப்படி இருந்தது என்று சொல்லுகிறோம் என்றால் “இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பில் – ஆதரவில் என்றென்றும் உலகம் உள்ள அளவும் இந்தியா இருக்க வேண்டியது” என்கின்ற பிரார்த்தனையில் இருந்தது. ராஜாவைப்பற்றி ஏதாவது பேச்சு இருந்ததா என்றால் இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட பேச்சு இருந்தது என்றால் “பிரிட்டிஷ் அரசர் இந்தியாவுக்கு சக்கரவர்த்தி என்றும்” “அவர் வம்சமே பாரம்பரியமாய் இந்தியாவை எப்போதும் ஆண்டு கொண்டிருக்க வேண்டும் என்றும்” “அவர் கடவுள் அம்சம்” என்றும் “குறிப்பாக விஷ்ணுவின் அவதாரம்” என்றும் அர்ச்சிக்கப்பட்டு வந்தது.

~subhead

ஆதியில் சுயராஜ்ய பேச்சு கிடையாது

~shend

சுயராஜ்யம் என்கின்ற பேச்சு ஏதாவது இருந்ததா என்றால் அக்காலத்தில் இப்படி ஒரு வார்த்தையே பழக்கத்தில் இருந்தது கிடையாது என்பதோடு எந்த அகராதியிலாவது இருந்ததாகக்கூட நாம் அறிந்ததில்லை. அறிந்தவர்களையும் கண்டதில்லை. ஆனால் அதற்கு பதிலாக காங்கரசில் ராஜ்ய பாரம் சம்மந்தமாக வேறு என்ன இருந்தது என்று கேட்கப்படு மானால் ஒன்று இருந்தது நமது ஞாபகத்துக்கு உறுதியாய் தெரிகிறது. அது என்னவென்றால்

“இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி கடவுளால் அனுப்பப்பட்டது” என்றும் “இந்தியர்களுக்கு தர்மகர்த்தாக்களாக இருக்கும்படி இந்தியாவை கடவுள் இங்கிலீஷ்காரர் வசம் ஒப்புவித்திருக்கிறது என்பது உண்மையான விஷயம்” என்றும், “இங்கிலீஷ்காரர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னும் அதற்கு வெகு காலத்துக்கு முன்னும் இருந்த வந்த கொடுங்கோலாட்சி (ராமராஜ்ய ஆட்சி ப-ர்) யை ஒழித்து சுதந்திர சமத்துவ உணர்ச்சியை உண்டாக்கவே பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்திருக்கிறதாகும்” என்றும் “காங்கரசின் அஸ்திவாரமே ராஜபக்தி” என்றும் “காங்கரசின் கொள்கையே ராஜவிசுவாசம்” என்றும் “அது இந்தியா என்றென்றும் பிரிட்டிஷார் ஆதிக்கம் விட்டுப் போகாமல் இருப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட பத்திரமான ஸ்தாபனம் என்பதை பிரிட்டிஷார் உணர வேண்டும்” என்றும் “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போகக்கூடாது” என்றும் காங்கரஸ் மகாசபையின் அவ்வப்போதைய தலைவர்களான காலம் சென்ற பானர்ஜி, நெளரோஜி, சங்கர் நாயர், ஆர்.சி.டட் முதலியவர்களும் இன்றுள்ள பண்டிதர் மாளவியா விஜயராக வாச்சாரியார் முதலியவர்களும் முறையே சொன்ன வார்த்தைகள் தான். (இவை காங்கரஸ் சரித்திரம் என்னும் புஸ்தகத்தில் உள்ள படி காங்கரசில் ஆட்சியைப்பற்றி குறிப்பிட்ட வார்த்தைகளாகும்.)

~subhead

காங்கரஸ் சமூகத்துக்கே தவிர தேசத்துக்கு அல்ல

~shend

இந்த நிலையில் உள்ள காங்கரசுக்கு பெயர் ஆதியில் இவற்றை உத்தேசித்தே இந்திய சமூக சம்மந்தமான கூட்டம் என்று தான் பெயரிடப் பட்டதே தவிர காங்கரஸ் ஏற்பட்ட காலத்தில் தேசத்தைபற்றிய உணர்ச்சியே யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. அன்றியும் உத்தியோக கோரிக் கையைப் பற்றித்தான் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர ஆட்சி சுதந்திரத்தைப் பற்றியோ, அதிகார சுதந்தரத்தைப் பற்றியோ வெள்ளைக் காரர் ஆட்சியைப் பற்றியோ குறிப்பிட்டு எப்போதும் பேசப்பட்டிருக்கவே இல்லை.

இன்று காங்கரஸ்காரர்கள் தங்கள் (காங்கரஸ்) கொள்கை அரசியல் சம்பந்தமானதே ஒழிய – தேசபக்தி சம்மந்தமானதே ஒழிய உத்தியோக சம்மந்தமானதோ ராஜபக்தி சம்மந்தமானதோ அல்ல என்று யாராவது சொல்ல வருவார்களானால் அவர்கள் அரசியல் என்பது அயோக்கியத்தனம் என்றும் தேசபக்தி என்பது அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்றும் பொருள் சொன்ன தீர்க்கதரிசிகளின் வாக்கைக் காப்பாற்றி மெய்ப்பித்தவர்கள் ஆவார்கள்.

~subhead

இங்கிலீஷ் ஆட்சியால்தான் ஒற்றுமை

~shend

இந்தியாவில் வேறெங்குமில்லாத பல மதம், பல வகுப்பு ஒன்றுக் கொன்று மாறான பலவித லட்சியமுள்ள பல சமூகங்கள் இருக்கின்றன. அதனாலேயே இங்கிலீஷ் ஆட்சிக்கு முன் இந்தியா ஆரம்பமுதலே 56 தேசங்களாகப் பிரிக்கப்பட்டு சதா கலகமும் கொள்ளையும், சமூக அட்டூழியங்களும் இருந்து வந்திருக்கின்றன.

ஆகவே அப்படிப்பட்ட நாடு “இன்று இங்கிலீஷ்காரரால் ஒன்று சேர்க்கப் பட்டு சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டு மக்களுக்கு சமத்துவமும், சுதந்திரமும் உண்டாகும்படி ஆட்சி புரியப்படுகிறது.”

இது நமது வாக்கல்ல, காங்கரஸ் தலைவர்களின் தலைமைப் பிரசங்கத்தில் உள்ள வாக்கு என்றும் கூறுவோம்.

~subhead

“விகடன்” குறும்பு

~shend

உண்மை இப்படியிருக்க, சுயநலக்காரராகவும் பாடுபட்டு உழைக்க சோம்பேறித்தனம் கொண்ட மடையர்களாகவும் நெஞ்சில் சிறிதும் ஈவிரக்கமின்றி மக்களைப் பிரித்து சின்னாபின்னப்படுத்தி ஊரார் உழைப்பில் உயர் பதவியில் இருந்து வாழ ஆசைப்பட்ட கொடியர்களான பார்ப்பனர்களால் பழைய தங்கள் சுயநலத்துக்காக கொடுங்கோன்மையான பழைய நிலைக்குக் கொண்டு போகும் ராமராஜ்யத்துக்கு ஆளாக்க முயற்சிக்கும் முயற்சியை எவனாவது தடுத்தால் அவன் இன்று வகுப்பு வாதியாகவும் தேசத் துரோகியாகவும ஆக்கப்பட்டுவிடுகிறான்.

அதாவது இவ்வாரத்து, “ஆனந்தவிகடன்” என்னும் ஒரு பார்ப்பனீயப் பிரசாரப் பத்திரிகை தங்கள் சூழ்ச்சிகளையும் அயோக்கியத்தனங்களையும் இழிதன்மையான வஞ்சகங்களையும் வெளிப்படுத்துகிறவர்களை பொறாமைக் காரர்கள் என்றும் சோம்பேறிகள் என்றும் முட்டாள்கள் என்றும் பொருத்தி ஒரு கதை எழுதி உவமானப்படுத்தி கடைசியாக யோக்கியதையும் தகுதியு மற்றவர்களே வகுப்புவாதம் பேசுவார்கள் என்று கண்டித்து இருக்கிறது.

~subhead

“விகட”னுக்கு பதில்

~shend

அதற்கு பதில் எழுதவே இச்சமாதானம் எழுதத் துணிந்தோம். “ஆனந்த விகடன்” எழுதும் முறையிலேயே நாமும் எழுதுகிறோம்.

~subhead

உச்சிக் குடுமியும் பூணூலும் வகுப்புவாதமல்லவா?

~shend

தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு தகுதியும் யோக்கியதையும் நேரான கண் பார்வையும் இருந்தால் உச்சிக் குடுமியும் பூணூலும் கருப்பு கண்ணாடியும் எதற்கு? மூன்றும் அவருடைய பித்தலாட்டத்தையும் வஞ்சகத் தையும் குரோத புத்தியையும் தானே காட்டுகின்றன. இதுபோலவே ஒவ்வொரு “தேசீயத் தலைவர்கள்” யோக்கியதையையும் எடுத்துக்கொள்ளட்டும். வகுப்பு வாதம் காட்டி அதனால் மக்களை ஏமாற்றி முன்னுக்கு வராத ஒரு யோக்கியமான தலைவனை “ஆனந்தவிகடன்” காட்டட்டுமே பார்க்கலாம். “ஆனந்தவிகட”னின் அயோக்கியத்தனத்தையும் பழங்கால நிலைக்கு ஆசைப்படும் அற்ப பெண்கள் போல் ஜாடைபேசும் இழிகுணத்தையும் மக்களுக்கு எப்பொழுது தான் எடுத்துக் காட்டுவது? “ஆனந்த விகட”னின் அயோக்கியத்தனமான கதையை கீழே எழுதி பிறகு அதிலுள்ள அற்பத்தனத்தை விளக்குவோம். இது முஸ்லீம்களுக்கு மாத்திரம் அன்று. பொதுவாக உரிமைக் கேட்கும் எல்லோரையும் மனதில் வைத்து கோழைத்தனமாக ஜாடை காட்டி எழுதப்பட்டது என்று கருதியே அதை விளக்குகிறோம்.

~subhead

“விகடன்” கதை

~shend

குப்பன் என்று ஒருவன் இருந்தானாம். அவன் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கிய சாமானை மூட்டை கட்டி தலையில் எடுத்துக் கொண்டு நடந்தானாம். அவனுடன் கூட நடந்து வந்த சுப்பன் என்பவன் சோம்பேறியானதால் வெறுங் கையுடன் நடந்து வந்தானாம். அப்போது அனாவசியமாக குப்பன் மீது கோபித்துக் கொண்டு குறை கூறினானாம். அது போல் இருக்கிறதாம் முஸ்லீம்கள் நடந்துகொள்வது என்று சொல்லிவிட்டு,

வகுப்புவாதம் பேசுகிறவர்கள் சுயநலக்காரர்கள் என்றும் காங்கரசுக்கு விரோதமாக பேசுவதற்கு காரணமில்லாதவர்கள் வகுப்பு பேச்சை கிளப்பி விடுகிறார்கள் என்றும் சென்னை சட்டசபையில் உள்ள அநேக முஸ்லீம்கள் இப்படிப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. இதை யாராவது எந்த முஸ்லீமாவது எந்த பார்ப்பனரல்லாதவராவது ஒப்புக்கொள்ள கூடுமா என்று கேட்கிறோம்.

~subhead

குப்பன் கதை போலவா?

~shend

குப்பன் பாடுபட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய சாமான் மூட்டைபோலா இன்றுள்ள மந்திரிகள் தலையில் உள்ள பதவி மூட்டை? என்று கேட்கிறோம். மக்களை ஏமாற்றி வஞ்சித்து விஷமப் பிரசாரமும், குரோதப் பிரசாரமும் செய்து உள்ளொன்று வைத்து புறம் பொன்று பேசி தாங்கள் எப்படியோ கைக்கொண்டு விட்டு வகுப்பு ஆதிக்கத்தால் மக்களை மயக்கி அயோக்கியத்தனமான பொய்யான கற்பனையான புராணக் கதைகளையும் முட்டாள் நம்பிக்கைகளையும் மக்களுக்குள் புகுத்தி முட்டாள்களாக்கி – அவர்களிடம் இருந்து ஏமாற்றி வாங்கின மூட்டையா அல்லது யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்த மூட்டையா என்று கேட்கிறோம். அப்படியில்லையானால் யார் யார் எந்த வகையில் பாடுபட்டு உழைத்தார்கள் என்பதையாவது ஆண்மையும் யோக்கியமும் இருக்குமானால் “ஆனந்தவிகடன்” எடுத்து காட்டட்டுமே என்கிறோம்.

~subhead

வந்தேமாதரப் பாட்டு

~shend

தமிழனுக்கு பிறந்த – தமிழ் பாஷை அறிந்த – தமிழ் மக்கள் உள்ள தமிழர்கள் சட்ட சபையில் வங்காள பாஷையில் 100க்கு 93லு பேருக்கு புரியாத ஒரு பாட்டை தேசீயப்பாட்டு என்றும் தாய் நாட்டு வணக்கப் பாட்டு என்றும் யாரோ பார்ப்பனப்பெண் பாடுவதும் அதை மற்ற தமிழ் மக்களும் முஸ்லீம்களும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் எழுந்து நின்று தலைவணங்கி செவி சாய்த்து பிரார்த்தனை வேஷத்தில் நிற்க வேண்டும் என்றும் ஒரு மனிதன் சொல்லுவானானால் அவன் மனிதத்தன்மை புத்தியில் சொல்லுகிறானா அல்லது ஆயுதமும் கூட்ட பலமும் இல்லாத பிரயாணி களை இருட்டில் வழிமறித்து வழிப்பறிக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் காரனது கொடும் புத்தியைக் கொண்டு சொல்லுகிறானா என்று இப்போதும் நாம் “ஆனந்தவிகட”னைக் கேட்கின்றோம். அந்த வந்தேமாதரப் பாட்டு எந்த பாஷைப்பாட்டு? என்றும் என்ன அருத்தம் என்றும் இப்பொழுதாவது எத்தனை சட்டசபை மெம்பர்களுக்குத் தெரியும்? என்று கேட்கிறோம்.

ஆளுக்கு மாதம் 75 ரூபாய் கொடுத்து மெஜாரிட்டியாக ஆட்களை சேர்த்து வைத்துக் கொண்டதினாலேயே அம்மெஜாரிட்டியார் மற்றவர்களுக்கு தர்மகர்த்தாவாக ஆகிவிடுவார்களா என்று கேட்கின்றோம். அப்படியானால் இவர்களை விட கூளாங்காலன் கூட்ட – ஜம்புலிங்கம் கூட்ட ஆட்சி இன்றைய மெஜாரிட்டி பல ஆட்சியைவிட யோக்கியமான ஆட்சி செய்யக்கூடியது என்று சொல்லுவோம்.

பார்ப்பனரின் பல கடவுள்கள் பெயர்கள் பலதடவை அப்பாடலில் வருகின்றன. முஸ்லீம்கள் ஒரே கடவுளை வணங்குவதாக சொல்லிக் கொள்ளுபவர்கள் பார்ப்பனக் கடவுள்களை பின்னப்படுத்தினால் மோட்சம் என்று கூட சிலர் கருதுபவர்கள். அப்படியே சிலர் செய்தவர்கள். அது தெரிந்தும் முஸ்லீம்களும் கூட இருந்து இந்திய கடவுள்களுக்கு பிரார்த்தனை செய்துதான் ஆகவேண்டுமென்பது ஆணவமா அல்லவா என்று கேட்கின்றோம்.

~subhead

கிலாபத்துக்கு கூலியா?

~shend

மேலும் “விகடன்” கிலாபத்து கிளர்ச்சியின் போது இப்பாடல்களுக்கு தலை வணங்கின முஸ்லீம்களுக்கு இப்பொழுது மாத்திரம் ஆத்திரம் வரக் காரணமென்ன என்பது ஆக கிண்டல் செய்கின்றது.

அந்தக் காலத்தில் இந்துக்களும் அல்லா அல்லா என்று கூப்பாடு போட்டார்கள். அவை தெருக்களில் சட்டப்படி கட்டுப்பட்டிராத இடங்களில் நடந்தனவாகும்.

சட்டசபை சட்டப்படி கட்டுப்பட்ட பொது இடமாகும். ஆகவே அந்த இடத்தில் நடந்த காரியங்களை “ஆனந்தவிகட”னே இந்த இடத்தில் நடக்க சம்மதிக்குமா? என்று கேட்கின்றோம். அப்படித்தான் இருந்தாலும் கிலாபத்துக்குக் கூலி இந்துக் கடவுள்களை வணங்கவேண்டியதா என்று கேட்கின்றோம்.

இந்துக்களுக்கு பன்றியும் பன்றி மாமிசமும் மதத்திலே ஒப்புக் கொள்ளப்பட்டவை. “சுவாமிக்கும்” “பிதுர்களுக்கும்” படைக்கக்கூடியது. “கடவுளே” அந்த ரூபமாய் வந்திருக்கிறது. அதை நாம் ஊரில் ஒரு முஸ்லீம் வீட்டுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு வளர்த்தலாம்; சாப்பிடலாம்.

ஆனால் சட்டசபையில் விருந்து வைத்துக்கொண்டால் முஸ்லீம்கள் ஒப்பவேண்டுமா? ஒப்பாவிட்டால் ஊருக்குள் உன் வீட்டுக்கு பக்கத்தில் கட்டி இருந்தேனே, சாப்பிட்டேனே என்று சொல்லலாமா என்று “ஆனந்த விகட”னைக் கேட்கின்றோம். இதுபோலவே முஸ்லீம்கள் நம் வீட்டுக்கு பக்கத்தில் செய்யும் காரியங்களை எல்லாம் சட்ட சபையில் செய்ய “ஆனந்த விகடன்” சம்மதிக்குமா? என்று கேட்கின்றோம்.

~subhead

விகடன் தலைக்கொழுப்புக்கு காரணம்

~shend

தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பது போல் “ஆனந்தவிகட”னுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் இப்படியே அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட சொரணையற்ற தமிழர் பலர் அதற்கு ஈனத்தனமாய் அடிமைப்பட்டு கிடப்பதும் அதை ஆதரிப்பதும் அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே “ஆனந்தவிகட”னின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாய் இருந்து வருகிறது.

~subhead

காங்கரசை எதிர்க்க ஆதாரமில்லையா?

~shend

காங்கரசுக்கு எதிர்ப்பாய் பேச ஆதாரமில்லாதவர்களே வகுப்பு வாதம் பேசுகிறார்கள் என்பதாக கிண்டல் செய்கிறது.

காங்கரசின் எந்த நடவடிக்கைக்கு எதிர்த்துப் பேச காரணமில்லை என்று “ஆனந்தவிகடன்” கருதுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

கள் விருந்தில் கலந்துகொண்டு கள்ளுக்கடை எடுத்துக்கொண்டு கள்ளும் குடித்துக் கொண்டு இருக்கிறவர்களைக் கொண்ட காங்கரசின் மதுவிலக்கை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? நாமினேஷனில் மந்திரியாகி நாமினேஷனை வெறுத்துத் தள்ளிய காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? “எனக்கும் காங்கரசுக்கும் சம்மந்தமில்லை; நான் நாலணா மெம்பர்கூட இல்லை” என்கிறவரை சர்வாதிகாரியாய்க் கொண்ட காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா?

“காங்கரஸ் நடவடிக்கைக்கும் எனக்கும் இனிமேல் சம்மந்தமில்லை” என்று சொல்லி ஓடிப்போய் யாரும் அழைக்காமல் வந்து புகுந்து அதிகாரம் செய்யும் ஆசாமி தலைமையில் மந்திரிசபை இருக்கும் காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? “காங்கரசு ஒழிந்தாலொழிய, கதர் ஒழிந்தாலொழிய, காந்தி ஒழிந்தாலொழிய நாட்டுக்கு விடுதலை இல்லை” என்றவரை மந்திரியாகக் கொண்ட காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? காங்கரசின் பேரால் மந்திரியாகி காங்கரசின் எதிர் ஸ்தாபனத்தை தஞ்ச மடைந்து காங்கரசுக்கு விரோதம் செய்தவரை சரணாகதி அடைந்து மந்திரியாக்கிய காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா?

மற்றும் காங்கரசின் எந்த கொள்கையை எதிர்த்துப் பேச ஆதாரமில்லை என்று கேட்கின்றோம். ஆண்மை இருந்தால் “ஆனந்த விகட”னல்ல, அவர்கள் பாட்டன் குரங்கு மூஞ்சியும், உச்சிக்குடுமியும் கொண்ட “விகடன்” தான் சொல்லட்டுமே பார்ப்போம். அரசியலை உடைக்கிறார்களே அந்த யோக்கியர்களைக் கொண்ட காங்கரசையா? அல்லது உறுதி மொழி வெளிப்படையாய் தராத பக்ஷம் பதவி ஏற்பதில்லை என்று சொன்ன யோக்கியர்களைக் கொண்ட காங்கரசையா? “பதவி ஏற்றால் பிரிட்டிஷுக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்ததாகும்” என்றும் “என் உயிருள்ள வரை பதவி ஏற்பதை எதிர்த்துத்தான் தீருவேன்” என்றும் சொல்லிவிட்டு சமயம் வந்த உடன் தங்கைக்கு மந்திரிபதவி சம்பாதித்துக்கொண்டு “மந்திரிகள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவர்களை யாரும் குறை கூறக்கூடாது” என்று ÿ முகம் விடும் நாணையமானவரை தலைவராகக் கொண்ட காங்கரசையா?

“சி.ஐ.டி. யை ஒழிப்பேன். அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பேன், பேச்சு சுதந்தரம் எழுத்து சுதந்தரம் கொடுப்பேன்” என்று ஓட்டுவாங்கி அதற்கு நேர்விரோதமாய் நடக்காவிட்டால் அரசாங்கம் நடக்காது என்ற சொல்லு பவரை மந்திரியாகக் கொண்ட காங்கரசையா? எந்த காங்கரசை எதிர்த்துப் பேச நமக்கு வாயில்லை என்று “ஆனந்த விகட”னைக் கடாவுகிறோம்.

தவிர தியாகிகள் கொண்ட சட்டசபை என்கிறது “விகடன்.” இன்று சட்ட சபையில் மந்திரி சபையில் ஒரு தியாகியை “ஆனந்த விகடன்” பேர் சொல்லுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறோம்.

பொய்சொல்லி பித்தலாட்டம் பேசி ஏமாற்றி அதிகாரம் பெறுகிறவன் ஒருவன் ஒரு கண்ணைகொடுத்து பதவி பெற்றிருந்தாலும் அவன் தியாகியாவானா வியாபாரி ஆவானா என்று கேட்கின்றோம். இப்படி இல்லாத ஆள் ஒருவரை இந்தியா பூராவிலும் உள்ள மந்திரிகளில் ஒருவரை யாராவது காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம். நாம் வேண்டுமானால் அதிலுள்ள நாணையமற்றவர்களை அயோக்கியர்களை வஞ்சகர்களை வண்டி வண்டியாய் காட்டுகிறோம். சொந்த நடவடிக்கையைக் குறிக்கொண்டல்ல. காங்கரசு முறையிலேயே காட்டுகிறோம். (அதுவும் வேண்டுமானால் வாக்கின் வாக்கினாய் காட்டுவோம். ஆனால் அது இங்கு பேச்சல்ல; சரியல்ல)

சுயநலத்துக்காக வகுப்பு வாதம் என்கின்றது “விகடன்”. என்ன சுயநலம் என்று எடுத்துச்சொல்ல ஆண்மையுண்டா? என்று கேட்கிறோம். சுயநலம் இருந்தால் இன்று கட்டாயம் வகுப்பு வாதத்தில் தலைசிறந்தவர்கள் சிலர் மந்திரியாய் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களது டிரைவர்களைக் கூட மந்திரியாக்கி இருக்கக்கூடும்.

ஆகவே விஷமக் கதையாலும் பொருத்தமற்ற வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டியாலும் தேசத்துக்கு துரோகம் என்கின்ற பூச்சாண்டியாலும் சுயநலம் என்கின்ற பூச்சாண்டியாலும் வகுப்பு உணர்ச்சியை அடக்கி விட முயற்சிப்பதாலும் ஜாடை பேசுவதாலும் புராணப் பிரசாரப் பித்தலாட்டம் செய்வதாலும் ஒரு நாளும் வகுப்பு உணர்ச்சியை ஒழித்துவிடவோ அதன் வெற்றியை தடைப்படுத்தவோ அல்லது காங்கரஸ் சீக்கிரம் கவிழ்ந்து விடப் போவதை நிறுத்துவிடவோ கண்டிப்பாய் முடியாது என்று எச்சரிக்கை செய்கிறோம்.

மற்றும் “விகடன்” “அரசியலில் வகுப்பு வாதத்துக்கே இடமில்லாமல் ராஜாஜி செய்து விட்டதால் வகுப்புவாதிகளுக்கு இடமில்லாமல் போய் விட்டது” என்று போக்கிரித்தனமான கேலிக்கூத்து அடிக்கிறது. பைத்தியம் பிடித்து நிர்வாணமாகத் திரிந்த மனிதன் உலக்கையை எடுத்து கோவணமாய் கட்டிக்கொள்ள முன்வந்து விட்டதால் அம்மனிதனுக்கு பைத்தியம் தெளிந்து போய் விட்டதல்லவா என்று சொல்லுகிற சிகாமணியைப் போல் இருக்கிறது “விகடனின்” இந்தக் கூற்று. ஏன் என்றால் பெரிதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் வேலை கிடைக்கவும் எப்போதும் பார்ப்பான் சாமியாகவும் பூதேவனாகவும் இருக்கவும் புராணங்களை ஹிந்தியில் குழந்தைகள் படித்தாக வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டதால் இனி “ராஜாஜியை” யார்தான் வகுப்புவாதி என்று சொல்லமுடியும்? பார்ப்பனவாதி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். “விகடன்” அகராதிப்படி பார்ப்பன வகுப்பு நலம் மாத்திரம் கோரி எப்படிப்பட்ட அக்கிரமமான கொலை பாதகமான காரியம் செய்தாலும் அவர்கள் வகுப்புவாதி அல்ல வென்றும் எல்லா வகுப்புக்கும் சரிசமமான, நீதி வழங்க வேண்டுமென்று மாத்திரம் சொல்லுகிறவர்கள் பச்சை வகுப்பு வாதிகள் என்றும் இருக்கிறதாகத் தெரிகிறது. ஆகவே “விகட”னே இனி உன் பித்தலாட்டத்துக்கும் புனை சுருட்டுக்கும் புராண பிரசார ஏமாற்றலுக்கும் இடமில்லாமல் செய்கிறோம் என்று சொல்லுவதைத் தவிர வேறு பதில் சொல்ல வேண்டியதில்லை சொன்னாலும் உனக்கு மானம் வராது.

குடி அரசு – தலையங்கம் – 10.10.1937

You may also like...