Category: பொன்மொழிகள்

இந்தியாவை ‘பாரத தேசம்’ என்றும் இந்திய அரசியலை இராம ராஜ்ஜியம் என்றும் காங்கிரஸ்காரர்கள் (ஆரிய-பார்ப்பனர்) சொல்லும் காரணம் என்ன? இவற்றிலிருக்கும் உண்மை என்ன? என்பவை சிந்திக்கப்படத்தக்கவையாகும். நிலப்பரப்புக்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் காட்ட வேண்டுமானால், பூகோளத்திலிருந்து கையாளப்பட வேண்டும். அதுபோலவே, பண்டைய அரசியலுக்கு  எடுத்துக்காட்டும் ஆதாரமும் காட்டப்பட வேண்டுமானால், சரித்திரத்தில் இருந்து கையாளப்பட வேண்டும்.

பெரியார், விடுதலை – 12.6.1933

உண்மையாக இந்த நாட்டை ஆண்ட அரசர்கள், உண்மை சரித்திரப்படி எத்தனையோ பேர்கள் இருக்கும் போது – ஆளாததும் அறிவுக்கும், உண்மைக்கும், உரிமைக்கும் மாறுபாடானதுமான ஒரு பெயரை மக்கள் அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறோம்.  அதிலும் இந்தப் பெயர்களை, போலித் தன்மைகளை வைத்துக் கொண்ட அதன் மூலம் உண்மையான, சரித்திர ஆதாரமான பெயரைக் கொண்டு ஒரு நாட்டை அதாவது திராவிட நாட்டை திராவிட நாடு என்றழைத்து, அது உரிமைபெற வேண்டுமென்று  முயற்சிப்பவர்கள் கூட்டத்தில் புகுந்து கொண்டு, அக்கூட்டத்தில் குழப்பம், காலித்தனம் விளைவிக்க, ‘பாரத நாட்டுக்கு ஜே’ பாரத மாதாவுக்கு  ஜே! என்று கூப்பாடு போடுவது எந்த விதத்தில் யோக்கியமும், மானமும், உண்மையுமான காரியமாகும் என்று கேட்கிறோம்

பெரியார், விடுதலை 12.06.1946

பெரியார் முழக்கம் 14092023

“பிறப்பும் இறப்பும் இயற்கையே; மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும்? இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்குப் பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால், எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா?

அவனைக் கேட்டால் கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும்; அதற்கு ஏன் கல்வி புகட்ட வேண்டும் என்ற இலட்சியத்தைக் கூற முடியாது. ஏதோ தம் பிள்ளை படிக்க வேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்க வேண்டும் என்றே தெரியாது… இவ்விதமே எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன.

வாழ்க்கை என்ற ஏணிப்படியில் கால் வைக்கும்போது நாம் எங்கே ஏறுகிறோம்; கடைசியாக எங்கே போவோம் என அறியக்கூடவில்லை. நாம் ஏறி முடிந்தால் போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டே போக வேண்டும்; அதைப் பிடித்தவுடன் அதற்கு மேல் என்ன தெரிகிறதோ, அதைப் பிடிக்க வேண்டும் என்று எல்லையே இல்லாமல் இலட்சியமற்ற முறையிலேயே காலத்தைக் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிவடைந்து இறந்து போகிறோம். இப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் ஒருவிதப் பலனும் கிடையாது.”                                                           – பெரியார்

பெரியார் முழக்கம் 07012021 இதழ்

 

*ஆதிக்கத்தின் எதிரி பெரியார்*

ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்த தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி

 

சுயமரியாதையே –

நமது ‘குடியுரிமை’

ஜாதி மறுப்பே – நமக்கான ‘பதிவேடு’

– திராவிடர் விடுதலைக் கழகம்

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதன் முதலாக கணிப்பொறி வந்தபோது தனது 86ஆம் வயதில் கிண்டிக்குச் சென்று அது குறித்த விவரங்களைக் கேட்டு அறிந்தார் பெரியார்.

அன்றைய சென்னை மாநிலத்தில், மாணவர்கள் முன்னின்று நடத்திய மொழிப் போர் உச்சத்தில் இருந்த 1965ஆம் ஆண்டு, அதே ஆண்டில் நடந்த இன்னும் ஓர் அரிய நிகழ்வு பிற்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது எனப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந் திருந்த அடிப்படைப் பொறியியல் ஆய்வு மையத் துக்கு ஓர் புதுமையான கருவி வந்து இறங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. இந்தியாவில் முதன் முதலில் கணினியின் பயன்பாடு தொடங்கப்பட்டது, வடக்கே கான்பூர் ஐஐடியிலும் தெற்கே கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான். அக்கணினி மையத்தின் இயக்குநராக வா.செ.குழந்தைசாமி, போர்ட்ரான் முதலான கணினி நிரல்மொழிகளைப் பயிற்றுவித்து வந்தார். ஐபிஎம் 1620 வகை கணினியில் தகவலை ‘பஞ்ச் கார்ட்’ எனப்படும் துளை யிடப்பட்ட அட்டைகள் மூலம்தான் உள்ளீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டருக்குத் தமிழில் என்ன?

பல பேராசிரியர்களே கணினியைக் கண்டிராத அந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கியமான தலைவர் ஒருவர், கிண்டிக்கு வந்த கணினியைக் காண வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவருக்கு அப்போது வயது 86. படியேற முடியாது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து மாடிக்குத் தூக்கிச் சென்றனர். கணினி பற்றி தனக்குச் சொல்லப்பட்ட விளக்கங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்ட அவர், ‘இந்த அட்டையிலிருந்து தகவலெல் லாம் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?’ என்று கூடுதல் வினா எழுப்பி விளக்கமும் பெற்றுக் கொண்டார்.

நடுவில், தன்னுடன் வந்திருந்தவரிடம் கம்ப்யூட்டருக்குத் தமிழில் என்ன என்று கேட்டார். அவர் பதில் சொல்லத் தயங்கியபோது, தனக்கு மிகவும் பிடித்த வசைச் சொல் ஒன்றைப் பயன்படுத்திவிட்டுச் சொன்னார் அந்தத் தலைவர்

“நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று. தன்னுடைய தள்ளாத வயதில் அந்தப் புதுமையான கருவியைக் காண கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அன்று வருகை புரிந்தவர், பெரியார் ஈ.வெ.ராமசாமி.

தமிழரிடையே அறிவியல் மனப்பான்மை வளரவும் தமிழ் மொழி நவீனமடையவும் உரிமையுடன் பல விமர்சனங்களை முன்வைத்த பெரியார் – தமிழ் மொழியைக் காக்க உணர்ச்சிமிகு எழுச்சிகள் பரவிக்கொண்டிருந்த காலத்திலும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கிக் கவனம் குவித்தது குறிப்பிடத்தக்கது. தனக்கே உரிய தர்க்க நியாயக் கேள்விகளின் அடிப்படையிலேயே புதுமைக் கருவியின் செயல்பாட்டைக் கேட்டறி வதோடு, இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடாத தமிழினத்தை உரிமையுடன் குட்டுவதும் கணினித் தமிழ் கலைச்சொல்லாக்கத் தேவையை உணர்த்திச் செல்வதும் கவனிக்கத்தக்கது.

கூடவே, இந்நிகழ்வு எழுப்பும் துணைக் கேள்விகள் சிலவும் கவனிக்கத்தக்கவை. தமிழருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்துக்குமான உறவு, அதற்கான சூழலைத் தமிழ்ச் சமூகமும் தமிழ் மொழியும் தொடர்ந்து உருவாக்கித் தர இயலுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தமிழரின் அறிவியல் தொழில்நுட்ப உறவு

வரலாற்றின் தொடக்க காலத்தில் தமிழரின் அறிவியல் சிந்தனை ஒப்பீட்டளவில் சிறந்து விளங்கியது. பழந்தமிழரின் நீண்ட கடற்பயணங்கள், அவர்களது வானியல் அறிவுக்கும், கட்டுமானத் தொழில்நுட்பத்துக்கும் சாட்சியாகின்றன. துறைமுக நகர நிர்வாக ஒழுங்கு, வணிக நேர்மை, பழந்தமிழரின் நீர் மேலாண்மை, காலத்தை வென்று நிற்கும் இடைக்காலக் கற்றளிக் கோயில்கள் போன்றவை இன்றைய நவீன அளவீடுகளின்படியும் மாபெரும் சாதனை முயற்சிகளே. வரலாற்றின் தொடக்க காலத்தில் தமிழகம் கண்ட எழுச்சியும் இடைக்கால வளர்ச்சியும் பிற்காலத்தில் சுணங்கியதற்குக் காரணமான சமூகப் பண்பாட்டுக் காரணிகள் ஆழமான ஆய்வுக்குரியவை.

இந்திய விடுதலைக்குப் பின், தொழில்நுட்பத்தைச் சிறப்புறப் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. புதிய அணைகள், சாலைகள், மின்மயமாக்கல் மற்றும் பல்வேறு தொழில்களின் வளர்ச்சி என முன்னேற்றம் கைவசமானது. 1984-க்குப் பின் நடத்தப்பெற்ற வெளிப்படையான பொறியியல் மாணவர் சேர்க்கை, கடைக்கோடித் தமிழ் மாணவரின் தொழில்நுட்பக் கனவுகளை நனவாக்கியது. படிப்பை முடித்து வெளிவந்த மாணவர் பலருக்குப் புத்தாயிரமாண்டு புதிர் எனப்படும் ‘ஒய்2கே’ சிக்கல் வெளிநாட்டுப் பணிவாய்ப்பினைப் பெருமளவில் பெற்றுத் தந்தது. தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமங்களிலிருந்தும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பலர் திரை கடலோடித் திரவியம் தேடப் புறப்பட்டார்கள். தாது வருடப் பஞ்சத்தின்போது (1876) கூட்டம் கூட்டமாய் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி இலங்கை, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று தோட்டப் பயிர்களை வளர்த்த அதேநேரம், தத்தம் தொப்புள் கொடி உறவுகளை இழந்தவர்கள் ஏராளம். ஆனால், இம்முறை பெருமை மிகு தொழில்நுட்பப் பணியாளர்களாகத் தமிழக இளைஞர்கள் வான்வழிப் பயணம் மேற்கொண்டு வளம் கண்டனர்.

தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம்

தொழில்நுட்பப் பயன்பாட்டை நுகர்வதில் தமிழர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தகுந்தது. எனினும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிட என்ன செய்திடல் வேண்டும் என்ற கேள்வி உடன் எழுகிறது.

எந்த ஒரு நிகழ்வையும் உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, தர்க்க நியாய வழியே அறிவுபூர்வ மாகவும் அணுகுதல் முதற்படி. ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என மாணவர் கேள்வி கேட்டுப் பழகுவதை அனுமதிக்கும் வகுப்பறை, அதை அங்கீ கரிக்கும் கல்விச்சூழல், தொழில்நுட்பக் கனவுகள் நிறைவேறிடத் தேவையான கடுமையான உழைப்பு, தொழில்முனையும் திறனைப் பாதுகாத்துப் பயன்படுத்திடும் தகவமைப்பு, வெற்றி தோல்வி என்பவை முயற்சியின் இரு சமபக்கங்களே என்ற புரிதல் என இந்தப் பயணத்தைக் கவனத்துடன் செதுக்கிட வேண்டும்.

தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் தொழில் நுட்பத்தைக் கையாளும் முறையில்தான் அடங்கி யிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு மிரண்டுவிடாமல், அதேசமயம் தொழில் நுட்பச் சாதனங்களுக்கு அடிமையாகியும் விடாமல், தொழில்நுட்பத்தை ஓர் வலிமை மிக்க ஆயுதமாக மாற்றி, அவற்றை லாவகமாகப் பயன்படுத்தும் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்வதில் இருக்கிறது தமிழ்ச் சமூகத்தின் வெற்றி.

(த. உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையர் – ‘தமிழ் இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரை. ஜூலை 3, 2019)

பெரியார் முழக்கம் 11072019 இதழ்

பெரிய வன்முறை எல்லாம் செய்ய வேண்டாம்.தமிழ் வாழ்க என்று சொன்னாலே போதும் இராஜாஜி ஆட்சி கைது செய்துவிடும். அவர்களுக்கு தமிழ் வாழ்க என்பதே வன்முறையான வார்த்தை தான்!

– 1938 இல் பெரியார் சொன்னது .

#தமிழ்_வாழ்க

பெரியாருக்கு சிலையும் மாலையும் ஏன்?

பெரியாரே சொல்கிறார் :

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை – கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும்.

கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்.
இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல.

ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான்.

இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்.

பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதன் உண்மை கருத்து என்னவென்றால், அரசியலுக்கு அல்ல. பொருளியலியலுக்காக அல்ல. அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல.

இன்று தமிழ்மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கண்டிருக்கும் பார்ப்பனீய மதஉணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி பார்ப்பனீயத்துக்குத் தமிழ் மக்களை புராணகாலம்போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்கேயாகும். 

#பெரியார்

குடியரசு 15/5/1938

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ்  ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்’ ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்!

நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

தலையில் சுமந்த செருப்பை

காலில் மிதித்த தலைவர்

செருப்புக்குத்

தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு

ஈசன் படியளந்த

இதிகாசக் காலத்தில்

ராமன் செருப்புகளே

ராஜ்ஜியத்தை ஆண்டன.

அரியாசனத்திலிருந்து

ஆட்சி செய்தன

செருப்புகள்.

ராஜராஜனுக்குப் பின்

ராஜேந்திரன் வந்ததுபோல்

அப்பன் செருப்புக்குப் பின்

மகன் செருப்பு…

ராம செருப்புக்கு

வாரிசுச் செருப்புகள் வந்தன.

பேட்டா செருப்புகள் போல

வேதச் செருப்புகள் – மத

வாதச் செருப்புகள் – பல

வருணச் செருப்புகள்.

மறுபாதிச் செருப்புகள்

மனுநீதிச் செருப்புகள்…

தமிழ்நாட்டில்,

ஓராயிரம் ஆண்டு

ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போல் வந்தது

ஓர் வார்ச் செருப்பு!

ஆரஞ்சு பச்சை

அதன் நடுவே வெள்ளையென்று

வண்ணம் கொண்ட

வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு!

அது,

வெள்ளைச் செருப்பின்

வாரிசுச் செருப்பு!

ராமச் செருப்பும்,

வெள்ளைச் செருப்பும்

தில்லிச் செருப்பும்

தமிழனின்

காலைக் கடிக்கும்

கள்ளச் செருப்பே!

எந்தச் செருப்பு

எங்களுக்குப் பொருந்தும் என்று

தமிழர்

நொந்து கிடந்த

நோய்க் காலத்தில்,

வந்த வைத்தியனே

ஈ.வெ. ராமசாமி.

…….       ………    ………..

கடலூர் பணிமுடித்து

மணலூர் புறப்பட்டது

கருத்துச் சூரியன்

ஆளிழுக்கும் ரிக்ஷாவில்

அமர்ந்து,

தொடர்வண்டி நிலையம்

விரைந்தார்.

அப்போது –

வண்டியிலே, அவர்

காலுக்குப் பக்கத்தில்

தொப்பென்று வந்து

விழுந்தது ஒரு செருப்பு!

செத்த எலிபோல

வைதீகமே வந்து

வீழ்ந்தது போல

அதற்குள் வண்டி

முன்னேறிற்று கொஞ்சதூரம்

நிறுத்துப்பா மீண்டும்

பின்னாலே போ என்றார்

இழுக்கும் தோழனிடம் ஈ.வெ.ரா.

அப்படியே வண்டி பின்னோக்கிச் சென்றது.

தெருவின் புருவம்போல

மரங்கள் நின்றன, தெருவோரம்

மரங்களுக்குப் பின்னால் பார்த்து

மனிதர்த் தலைவர் சொன்னார்.

‘யாரப்பா அங்கே

ஒற்றைச் செருப்பை எறிந்தாய்?

ஒன்றைக் கொண்டு என்ன செய்ய?

நெஞ்சில் உரம் இருந்தால்

மீதி இருப்பதையும் போட்டுவிடு

மிதித்து நடக்க உதவும்.

எங்கே, எறி உன்

இரண்டாம் செருப்பை…’

புற்றுக்குள் பாம்புகள்

புகுந்து மறைவது போல

ராமன் வாரிசு

நகர்ந்து மறைந்தான்…

தமிழர், தலையில் சுமந்த

செருப்பை,

முதல் முதலாகக்

காலில்போட்டு மிதித்தது,

பெரியார் ஒருவரே!

– பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன் அண்மையில் மரண மடைந்தார். ‘நந்தன்’இதழில் அவர் படைத்த பெரியார் காவியத்தின் ஒரு பகுதி. அவரது நினைவாக

90-வது வயதில்  மூ  180 கூட்டம்.

91-வது வயதில்  மூ  150 கூட்டம்.

93-வது வயதில்  மூ  249 கூட்டம்.

94-வது வயதில்  மூ  229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலி களுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்…..

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட் டிருக்கும்…..

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்கச் செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா?

நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்க்கம்;

என்னை வணங்காவிட்டால் நரகம்

என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக் கிடையில்…………

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் என்னை நீ ஆதரித்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக்கொள் இல்லை யென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே……..

முகநூலிலிருந்து

நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்

பெரியாரும் ,சபை நாகரீகமும் .
===================

அவர் தான் பெரியார்!

வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார் பெரியார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, ‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். ‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர் பெரியார்.

***

சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. ‘நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க.

…. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர்.

…அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும், மு.வரதராசனாரும் வந்து, ‘திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள்.

…. ‘சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். ‘திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். ‘அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

***

குன்றக்குடி அடிகளாரைப் பார்க்க, அவரது மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை.

சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, ‘விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவர்.

***

தான் நடத்திய அநாதைகள் இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, “உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?” எனப் பெரியாரிடம் கேட்டார். “ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயது வந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி” எனச் சொன்னார்.

***

திருச்சியில் ராமசாமி அய்யங்கார் என்பவருடைய கலைக் கல்லூரி. அந்தக் கல்லூரியின் ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் செல்கிறார். விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். பெரியாரும் எழுந்து நிற்கிறார். அதைக் கண்ட ராமசாமி அய்யங்கார் பதறிப் போய் வேகமாக வந்து “நீங்க உட்காருங்கோ” என்கிறார். பெரியார் மறுத்து விடுகிறார். அனைவரும் அமர்ந்த பின்பே பெரியார் அமர்கிறார்.

ராமசாமி அய்யங்கார் பெரியாரிடம் “நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவா. நீங்க எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே” என்று கூற “உண்மைதான். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான். சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. அனைவரும் நிற்கும்போது நான் மட்டும் உட்கார்ந்திருப்பது நாகரீகம் ஆகாது. நாகரீகம் இல்லாதவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது” என்றார் பெரியார்.

– தொகுப்பு சிற்பி ராசன்

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், ‘ அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்’ என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன்.

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும்.

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்
வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார்
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

>>> மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.
செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

Image may contain: 3 people, people standing and wedding

பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி.

எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை.

அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிறைபடுத்தி வைத்திருந்த பழமை விரும்பும் புலவர்களை கண்டித்தார். அவர்களுக்கு உணர்வில் உறைக்கும் படியாகத் தமிழ் மொழியை ‘ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்றும் கூறினார்.

பெரியார் தமிழ்மொழியைப் பற்றிக் கருத்துக் கூறும் பொழுதெல்லாம், அவர் அதைப் பற்றி ஏதும் தெரியாத வகையில் கருத்துக் கூறிவிட வில்லை. தமிழ்மொழியின் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதல் திருக்குறள், கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், புறநானூறு, நாலடியார் முதலிய பாட்டு, கதை இலக்கியங்கள், அறநெறி நூல்கள்வரை அவர் ஓரளவு கற்றிருந்தார். திருக்குறளையும், கம்ப ராமாயணத்தையும் அவர் நன்கு ஆராய்ச்சி முறையில் அறிந்திருந்தார். கம்பராமாயணத்தை வடமொழி வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பெளத்த இராமாயணம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு, ஆராய்ந்து படித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையே பெரியார் எழுதியிருக்கிறார்.

பெரியார் நல்ல தமிழ்ப் பற்றுக் கொண்டவர். அவர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்னும் தம் நூலில் தந்தை பெரியாரின் தமிழ்ப்பற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘பெரியார் வீட்டு மொஇ கன்னடமாயினும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர். அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவருக்கிணை எவருமிலர்’ என்று எழுதுகிறார்.

தமிழ்மொழியேதான் திராவிட மொழிகளாக விளங்குகின்றது என்னும் கொள்கையுடையவர், பெரியார் அதைப் பற்றிக் கூறும் பொழுது அவர்,

“என் சிற்றறிவிற்கு, என் பட்டறிவிற்கு, ஆராய்ச்சிக்கு எட்டிய வரையில்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளன்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நாலு இடங்களுலும் நாலுவகையாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் கருதுகிறேன்” என்று கருத்தறிவிக்கிறார்.

தமக்குள்ள தமிழ்ப் பற்றைப் பற்றி அவரே 1939 ஆம் ஆண்டில் கோவை மாணவர் மன்றத்தில் பேசிய சொற்பொழிவில் கீழ்வருமாறு விளக்கியிருக்கிறார்.

‘தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டுமொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்வகைப் பற்றும் இல்லை. அல்லது தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. பொருளுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்று. குணத்தினாலும், அக்குணத்தினால் ஏற்படும் நற் பயனுக்காகவுந்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கிறேன்.

…….. என் தமிழ்ப்பற்றும் அதுபோல்தான். தமிழினடத்தில் நான் அன்பு வைத்திருக்கின்றேன் என்றால், அதன்மூலம், நான் எதிர்பார்க்கும் தன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பேற்படும் அளவையும் எண்ணி மதிப்பிட்டே நான் தமிழ்மொழியிடம் அன்பு செலுத்துகிறேண்.

…. தமிழ், இந்நாட்டு மக்களுக்கு எல்லாத் துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், உரிமையளிக்கக் கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்கையளிக்கக் கூடியதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் அப்படிப்பட்டவையெல்லாம் தமிழிலேயே இருக்கின்றனவா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லை என்றாலும் மற்ற பல இந்திய மொழிகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ்மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாகும் என ஐயுறத்தக்க வேறு எந்த மொழியும் விரும்பத் தகாததேயாரும்”

தந்தை பெரியார் அவர்கள் சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர் ஆகையால், எந்த கருத்தையும் ஆராயாது, அவர்க்குச் சரி என்று பட்டாலல்லாது, வெளிப்படையாகக் கூற மாட்டார். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு -தமிழர்களுக்குத் தாய்மொழியாகிய, தமிழ் மொழியிடத்தில் பற்று வேண்டும் என்று தந்தை பெரியார் மனவியல் முறைப்படி அறிவுறுத்தியிருக்கிறார். 1924 திசம்பரில் திருவண்ணாமலையில் நடந்த பேராயக் கட்சி மாநாட்டில் அவர் பின்வருமாறு பேசினார்.

“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு-தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று கட்டாயம் தேவை,தேவை என்று சொல்கிறேன்.

வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு. மராட்டிரனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழ் மொழியில் பற்றில்லை. இது பொய்யா? தமிழ் நாட்டில் தமிழ்ப் புலமை மிகுந்தவர்கள் எத்தனைப் பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனைப் பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்”

தந்தை பெரியாருடைய இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது. அறிவு சான்றது என்று தமிழரனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெரியார் தமிழ்மொழியை மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் பொதுமக்களிடம் கையாண்டார். அவர் நினைத்த கருத்தைப் பேசுவதற்கென்று அவர் கையாண்ட சொற்கள் படிக்காத மக்களுக்கும் நன்கு புரியக் கூடியவை. அவர் தமிழ் மொழியை மிக இயல்பான முறையில், இன்னும் சொன்னால் கொச்சையாகக் கூட கையாள்வார். ஆனால் அதில் இனிமை இருக்கும். சுவையிருக்கும். கேட்போரை ஈர்க்கக் கூடிய கவர்ச்சியிருக்கும்.

தமிழ்மொழியை இவ்வாறு இயல்பாகவும் கொச்சையாகவும், கலப்பாகவும் பெரியார் பேசினாலும் அல்லது எழுதினாலும், தமிழ் மொழி தூய்மையாகக் கலப்பில்லாமல் பேசப்பட வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறையிருந்தது. ஆர்வம் இருந்தது. தமிழ்மொழியைக் கலப்பில்லாமல் தூய்மையாக எழுத வேண்டும் – பேச வேண்டும் என்பதில் பெரியார் வலிமையான கருத்துக் கொண்டிருந்தார்.

1926 ஆம் ஆண்டு குடியரசு இதழிலும், 1937 ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழிலும் அவர் இப்படி எழுதுகினார்.

“தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும். சமசுக்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்றும் கூறி, பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று அமைவு சொல்லுவதோடு இதிலுமா சாதி வேற்றுமை என்கிறார்கள்.

அப்படியானால் ‘தண்ணீர் கொண்டு வா’ என்பதற்கு பகரமாக(பதிலாக) நம்மால் சரியாகப் பலுக்கவும் (அதாவது உச்சரிக்கவும்), எழுதவும், பழக்கமும் வாய்ப்பும் இல்லாத சமசுக்கிருதச் சொல்லாகிய ‘ஜலம் கொண்டு வா’ என்று சொல்வது குற்றமில்லையானால், ‘வாட்டர் கொண்டு வா’ என்று ஆங்கிலச் சொல் சொல்லுவதில் தப்பென்ன? அப்புறம் தனித் தமிழ் என்ற சொல்லுக்கும், மொழிப் பற்று என்கிற சொல்லுக்கும் பொருள் தான் என்ன? இம்மாதிரி மொழி பற்றிலிருந்தே, இவர்களது நாட்டுப் பற்றின் தகுதியையும், அறிந்து கொள்ளலாம். பழையன கழிந்து, புதியன புகுவதாயிருந்தால், நமக்கும் கவலையில்லை. புதியவை வந்து வலுக்கட்டாயத்தில் புகுந்து கொண்டு, பழையவற்றையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால், அதைப் பொறுத்துக் கொண்டு, அதற்குச் சார்பாகப் பேசுவதென்பது மொழிக்கு இரண்டகமும், இன வஞ்சகமும் ஆவதோடல்லாமல் தமிழ்த்தாயின் கற்பைத் தமிழ்ப் பகைவர்களுக்குத் தந்நலத்திற்காக விற்றவர்கள் என்றுதான்சொல்ல வேண்டும்”

இத்தகைய கருத்துகள் எவ்வளவு துல்லியமானவை. துணிவு உடையவை.

பெரியாரின் மொழித்துறை ஈடுபாட்டுக்கும் தமிழ்மொழி பற்றி அவர் கொண்ட தெளிவுக்கும் அவர் சிறந்த தமிழ்ப் பேரறிஞர்கள்பால் கொண்ட தொடர்புகள் தான் காரணமாக இருந்தது.

மறைமலையடிகள், திரு.வி.க, சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியனார், சாமி சிதம்பரனார் போன்ற பெருமக்கள் தொடர்பும் துணையும் பெரியாருக்கிருந்தது.

திருக்குறள் பொதுமக்களிடமும் அறிஞர்களிடமும் இன்று பரபலாக வழங்குவதற்கும் பெருமையுற்றதற்கும் ஒருவகையில் பெரியார்தாம் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்திய முதல் பேரறிஞர் அவர். தமிழ் விழாவான பொங்கல் விழாவைப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும்படி செய்தவரும் பெரியார்தாம்.

தமிழ்மொழிக்கு ஊறுநேரும்படி பிற மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்பதைத் துணிவுடன் எதிர்த்தவரும் பெரியார்தாம்.

வேறு மொழியைக் கல்வி மொழியாக்குவதால், தமிழ்மொழியின் வளர்ச்சி குன்றும், தமிழ் மக்களின் முன்னேற்றமும் தடைபடும் என்று 1926 இலேயே குடியரசு இதழில் கண்டனம் தெரிவித்தார். மொத்தத்தில், பெரியார் ஈடுபாடு கொண்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் முதலிய துறைகளில் போலவே தமிழ்மொழித் துறையிலும், பலவகையான முன்னேற்றக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இன்று அரசு கொண்டுவந்துள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்ததிற்கு முதன்முதல் வழிவகுத்துக் கொடுத்தவரும் அதை நடைமுறைப் படுத்தியவரும், தந்தை பெரியார்தாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தமிழினத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டு செய்த பேரறிஞர் பெரியார். உலகிற்கே பயன்படுகின்ற வகையில் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரும், மக்கள் தொண்டாற்றியவருமாகிய பெரியார், தமிழ் மொழியில்தான் பேசினார். தமிழ்நாட்டில் தான் பிறந்து வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமையன்றோ! வாழ்க பெரியார்

-தென்மொழி, சுவடி-18, ஓலை-8,1982

திராவிடத்தின் மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள்.

இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழனுக்குள்ள கலைகள் என்பன-வெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும்.

விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவை-களை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி, விடுமுறை இல்லாத பண்டிகைகள் _ கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி*, தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத – முக்காலத்திற்கும் ஏற்றநிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.

கிறித்தவர்கள் காலத்தைக்காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக்காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.

(விடுதலை 30.1.1959)

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடக்கும் சூழலில் இந்த கருத்தை ஆதரித்து பெரியார் 1956இல் எழுதிய தலையங்கம்.

முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதி மன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது, இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும் சட்டத்துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதிடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்துவிட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாயிருக்காது.

மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழிபெயர்ப்புத் தொல்லை சட்டப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற் களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனிநாடாகப் போகிறது. அது முதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு களிலாவது தமிழில் நடவடிக்கைகளும், தீர்ப்பு களும் இருக்க வேண்டு மென்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதி மன்றத்திலும் தமிழில் நடக்க வேண்டுமென்று உத்தர விடலாம். தன்னைப் பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப் படுகிறது என்பதைக் குற்றவாளி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார்.

ஆம்! இதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இன்று நீதிமன்றமும், கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷில் பேசும் வக்கீல் இன்னொன்றில் சமஸ்கிருதத்தில் பேசும் அர்ச்சக வக்கீல்! வக்கீல் கூட்டமும், அர்ச்சகக் கூட்டமும், வயிற்றுப் பிழைப்பு நடத்துவது, மற்றவர்களின் மடமையை மூலதனமாக வைத்துதான். ஆகவே நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். இதற்கு முன்னணி வேலையாக ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் ஆட்சியாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாகியுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

இதேபோல் ஆட்சி நிருவாகத்துறையிலும், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளில் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதியிடங்களைத் தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும். இதுமட்டுமல்ல, தமிழில் சுருக்கெழுத்தும், டைப்ரைட்டிங்கும் கற்றுத் தேர்ச்சி பெறக் கூடியவர்கள் ஏராளமாகத் தேவை. இத்தேர்வுகளுக்குச் செல்வோரில் 100க்கு ஒருவர், இருவருக்குத்தான் இன்று வெற்றி கிடைக்கிறது. இந்தக் கடுமையைத் தளர்த்த வேண்டும்.

அச்சுப்பொறியிலும் அவசர மாற்றம் ஏற்பட வேண்டும். தானே உருக்கி வார்க்கும் தமிழ் மானோடைப் (அடிnடிவலயீந) இயந்திரங்கள் பெருக வேண்டும். இம்முயற்சியில் கோவை நவ இந்தியா உரிமையாளர் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி கண்டிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். இத்தொழிற் சாலையில் உருவாக்கப்படுகின்ற ரோட்டரி அச்சு இயந்திரத்தையும் தமிழில் ஆக்கி மலை மலையாக குவிக்க வேண்டும். கல்லூரிகளிலும் தமிழிலேயே பாடங் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கல்வியமைச்சரின் ஆசை உண்மையா யிருக்குமானால் தமிழ் மொழிபெயர்ப்புப் படை (கூசயளேடயவiடிn யசஅல) ஒன்று தயாராக வேண்டாமா? இந்தப் பொறுப்பு யாருடையது? இதற்காக இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பெருந்தொகை ஒதுக்கினால் தான் முடியும்.

இவற்றையெல்லாம் செய்யாவிடில் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ், தமிழ் என்று கூறுவது போல், மந்திரிகளும் பேச்சளவில் பேசி வருகிறார்கள் என்றுதான் கருத வேண்டி யிருக்கும். தமிழ் வளர வேண்டுமானால் இவ்வளவு துறைகளிலும் ஆக்க வேலைகள் நடக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் இடுக்கண்ணாக உள்ள இன்றையத் தமிழ் நெடுங்கணக்கு சுருங்க வேண்டும். தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும். குறைந்த பட்சம் “விடுதலை”யின் எழுத்து மாற்றங்களை யாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். திரு.ஓமாந்தூர் ரெட்டியார் அவர்களின் ஆட்சியில் திரு.அவிநாசிலிங்கம் அவர்களது முயற்சியினால் முடிவு செய்யப்பட்ட தமிழ் எழுத்து மாற்ற உத்தரவைக் குப்பைத் தொட்டியில் போட்டார் திரு.ஆச்சாரியார் அவர்கள். இல்லையேல், இன்று எல்லாப் பாடப் புத்தகங்களும் அறிவுக்கேற்ற முறையில் திருந்திய எழுத்துக்களுடன் அச்சிடப்பட்டவைகளா யிருக்கும்.

தமிழில் ஆட்சி நடப்பதென்றால் சுளுவல்ல.  பல அவசர மாற்றங்கள், திருத்தங்கள், ஆக்கவேலைகள் செய்ய வேண்டும். ஆட்சி யாளரிடம் அகம்பாவ உணர்ச்சிகள் இருக்கக் கூடாது. மாற்றார் கூற்றிலும் உண்மையிருக்கும் என்ற பரந்த உணர்ச்சி வேண்டும்.

– ‘விடுதலை’ 01.09.1956

நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

1932 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டுகாலம் வெளிநாட்டு பயணத்தை முடித்து தமிழ் நாடு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிக்கை தோழர்கள் என்று அழையுங்கள் என்பதுதான்.

பெரியாரின் அறிக்கை:

“இயக்கத் தோழர்களும்,

இயக்க அபிமானத் தோழர்களும்

இனி ஒருவருக்கொருவர்அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால்,

பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, “தோழர்” என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும்,  மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்.

‘குடிஅரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

-ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)

நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

இந்தி எதிர்ப்புப் போரில் இளைஞர்கள், பெண்கள், அவர்களுடன் சில கைக்குழந்தைகள் என எல்லோரும் சிறை சென்றனர். இறுதியில் 1938 டிசம்பரில் பெரியாரும் சிறை புகுந்தார். அவர் சிறை சென்ற நாளில், தமிழ்நாடே ஆர்ப்பரித்து நின்றது. அப்போது அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. நீதிபதியின் முன்னால் நின்று, தன்னுடைய கூற்றை எழுதிப் படித்தார் பெரியார்.
“இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிசபைக்குக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்களும் ஒரு பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே இந்த நீதிமன்றத்தில் நான் நியாயத்தை எதிர்பார்க்கவில்லை” என்று வெளிப்படையாகக் கூறினார். இப்படி ஒருவர் எங்கேனும் நீதிமன்றத்தில் கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. இறுதியில் அவர் கூறியுள்ள வரிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்:
“எனவே கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”
இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்!

இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு.

கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால்   வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும்.

– ‘விடுதலை’ 12.1.1956

சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப் பட்ட சூழ்ச்சி முறையே.

– ‘விடுதலை’ 20.1.1959

சரியாகவோ தப்பாகவோ இந்தியாவில் சனநாயக ஆட்சி வந்து விட்டது. ஆனால் கட்சி ஆட்சிகள் அதைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கின்றன? இதைப் பார்த்து மற்ற நாட்டான் என்ன நினைப்பான்? சனநாயகவாதிகள் வெட்கப்பட வேண்டாமா?

– ‘விடுதலை’ 19.3.1968

சதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும் அயோக்கியத்தனமு மாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் சாதிக்கு நலத்தையும், சௌகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் இது சனநாயகமா? பித்தலாட்ட நாயகம், அயோக்கிய நாயகம், சாதி நாயகம் என்பதுதான் பொருந்தும்.

– ‘விடுதலை’ 15.10.1954

சனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பது தான். சனநாயகம் என்ற பித்தலாட் டத்தின் பெயரால் வருபவர் ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட சனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்தச் சனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக் கேடுகள் ஒழிய வேறு வழி என்ன இருக்கிறது?

– ‘விடுதலை’ 25.8.1958

போதிய பிரதிநிதித்துவம் இல்லாத வர்களுக்குச் சரியான நீதியும் பிரதிநிதித்துவமும் வழங்குவதுதான் சனநாயகத் தத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். எல்லா வகுப்பு களுக்கும் ஏற்ற பிரதிநிதித்துவம் அளிக்காத எந்தச் சனநாயகமும் நொண்டிச் சனநாயகமாகத்தான் – உதவாக்கரைச் சனநாயகமாகத்தான் – காட்சியளிக்கும்.

– ‘விடுதலை’ 6.3.1959

பெரியார் முழக்கம் 23022017 இதழ்

என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பாம்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன்.

பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ, பழமைப்பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன்.

அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

— தந்தை பெரியார்
குடியரசு 2.6.36

இந்தியாவோடு நம்மை (தமிழ்நாட்டை) இணைத்து சட்டத்தால் கட்டி விட்டதால் நாம் பூரண சுதந்திரம் கேட்கக் கூடாது என்பது தேசக் கட்டளையா என்று கேட்கிறேன்.

நான் (தமிழ்நாடு) பூரண சுதந்திரம் பெறக் கூடாது என்பதற்கு வடநாட்டானா அதிகாரி?

இது அடிமைநாடா? சுதந்திர நாடா?

ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வேறு நாட்டான்களா அதிகாரிகளாய் இருப்பது? இது சொந்த நாட்டானுக்கு எவ்வளவு அவமானம்!

“எனக்கு இந்த காட்டாட்சி வேண்டாம்.”

“எனக்கு இந்தி மொழி வேண்டாம்” என்றால் இதுசட்ட விரோதம் என்று பதிலளித்தால் இது அடிமை நாடா? சுதந்திர நாடா?

எனது சுதந்திரத்தை மறுக்க அன்னியனுக்கு என்ன அதிகாரம்?

ஒரு ஊரில் ஒரு பகுத்தறிவுவாதி (அடங்காப் பிடாரி) இருந்தான். அவன் மீது நம்பிக்கைக் காரர்களுக்கு வெறுப்பு. அவனுக்கு ஒரு நாள் ஒரு மயக்கம் வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அங்குள்ள டாக்டரைக் கொண்டு அந்த மயக்கமாய்க் கிடந்தவனை செத்துப் போய்விட்டான் என்று சொல்லிவிடு. நாங்கள் மூட்டைக் கட்டிக் கொண்டு போய்ப் புதைத்து விடுகிறோம் என்று சொல்லி டாக்டரைக் கொண்டு மயக்கமாய்க் கிடக்கிறவனை இவன் செத்துப் போய்விட்டான் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.

உடனே ஆஸ்பத்திரி ஆட்கள் இவனை ஒரு  கோணிப் பைக்குள் திணிக்கத் தலையைத் தூக்கி பைக்குள் திணித்தார்கள்.  அதற்குள் மயக்கக் காரனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. உடனே தன் தலையை தூக்கினவர்களைப் பார்த்து, “என்னை என்னச் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அந்த ஆட்கள், “நீ செத்துப் போய் விட்டாய். உன்னைப் புதைப்பதற்காகத் தூக்குகிறோம்” என்றார்கள். அதற்கு மயக்கம் போட்டுக் கிடந்தவன் இதைக் கேட்டவுடன் தடபுடலாய், “யார் சொன்னான் நான் செத்துப் போய்விட்டே னென்று? நான் உயிரோடு இருக்கிறேன்! என்னை இப்படிச் சொல்கிறிர்களே! இது என்னடா அக்கிரமம்!” என்றான். அதற்கு அந்த ஆட்கள் “நீ செத்து விட்டாய் என்று டாக்டர் சொல்லிவிட்டார். நீ யார் சாகவில்லை என்பதற்கு? நீ என்ன டாக்டரா? ஒரு மனிதன் செத்தானா இல்லையா என்பதற்கு டாக்டருக்குத்தான் உரிமை உண்டு. அ வர் படித்தவர், நீ யார் அதை மறுக்க?” என்று சொல்லி சாக்குப் பையை அவன் தலையில் போட்டார்கள். உடனே அந்த மயக்கக்காரன் தன் மடியிலிருந்த கத்தியை எடுத்து ஆளுக்கு இரண்டு குத்துக் குத்தினான்.  ஆட்கள் ஓடி விட்டார்கள்.  அவன் வீட்டிற்கு சுகமே திரும்பி வந்தான் என்கிற ஒரு கதை உண்டு.

அதுபோல் “எனக்கு சுதந்திரம் வேண்டுமென்றால் சட்டத்திற்கு விரோதம் எனக்கு இந்தி வேண்டா மென்றால் அது சட்டத்திற்கு விரோதம்” என்பதாக சட்டத்தைக் காட்டிக் கொண்டே எத்தனை நாளைக்கு ப் பிற நாடுகளை அடிமையாக்கிக் கொண்டு பிற மொழிகளைப் புகுத்திக் கொண்டு ஆதிக்கம் செய்யலாம் என்று வடவர்களும் அவர்கள் கூலிகளும் காத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மொழிப் பிரச்சினை நமக்கு நல்ல வாய்ப்பு என்றுதான் கருதுகிறேன்.

இதிலிருந்துதான் பூரண சுயேச்சை தோன்ற வாய்ப்பு ஏற்படும்.

எப்படிப்பட்ட சட்டத்திற்கும் அதன் மதிப்பிற்கும் எல்லை உண்டு.

– பெரியார்

1989ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரிலிருந்து

பெரியார் முழக்கம் 26012017 இதழ்

நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்?

– பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று.

தமிழ்நாடு தமிழருக்கே

பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.

உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!

தமிழ்நாடு தமிழருக்கே!!

தமிழ்நாடு தமிழருக்கே!!!

(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938)

#தமிழ்நாடு_தமிழருக்கே!

‘சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்’ என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் ‘ஹிந்துஸ்தான்’ கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் ‘ஹிந்துஸ்தானில்’ இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்”

– பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு

தமிழ்நாடு தமிழருக்கே

இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

– நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்

 

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’

27111950 சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்

பூணூல்

“பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.” – மஞ்சை நாயக்கன் பட்டியில் 14-10-1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 19.10.1958

 

மத விடுமுறை

“மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம் செய்யப் பட்டிருக்கின்றது.
நமது அரசாங்கத்தில் வருஷம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 52 நாட்கள் கழிந்து விடுகின்றன. இது கிறிஸ்துவ சமயத்தை ஒட்டி ஏற்படுத்தப் பட்ட நாளாகும். மற்றபடி குறைந்தது எல்லா மத சம்பந்தமாக வும் வருஷத்தில் 35 நாட்கள் விடுமுறையாகப் பாவிக்கப்படுகின்றன. இவைகள் அரசாங்க இலாகாக்களிலும், பள்ளிக்கூடங்களிலுமே கையாளப் பட்டு பிறகு எல்லாக் காரியாலயங்களுக்கும் பரவி வரப்படுகின்றது. இதனால் அந்த நாட்களின் தொழில்கள் கெடுவதுடன் கைப்பணமும் செலவழிக்கப்படுவதோடு மத உணர்ச்சியையும் வலுப்படுத்துவதாக ஏற்பட்டு வருகின்றன.

அன்றியும், ஒரு சமூகத்தாரின் விடுமுறைக்காக மற்ற சமூகத்தாரின் வேலை கெடுவதுடன் இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு மற்ற மதக்காரர் களும் நஷ்டமடைய வேண்டியவர்களாகின்றார்கள். ரம்சானுக்காக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? வைகுண்ட ஏகாதசிக்காக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? கிறிஸ்துப் பிறந்தநாள் பண்டிகைக்காக இந்துக்களும், முஸ்லீம் களும் ஏன் நஷ்டமடையவேண்டு? மென்பதையும் மற்றும் மத சம்பந்த மான விஷயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த விடுமுறை நாட்களுக்காக ஏன் நஷ்டமடைய வேண்டுமென்பதையும் கவனித்தால் மதத்தின் பேரால் மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கஷ்ட நஷ்டமடைவது விளங்கும்.

ஆதலால் ஞாயிற்றுக்கிழமை என்பதையும் அது மத சம்பந்த மானது என்பதற்கு ஆகவே மாற்றி பொதுவாகவே ஒருவித விடுமுறை களை ஏற்படுத்தி அவற்றிற்கும் எல்லோரும் அனுபவிக்க சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

சாதாரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடப்படும் விடுமுறை நாட்கள் வாரத்தில் சனி, ஞாயிறு என்பதில் 52 வாரத்திற்கு 104 நாட்களும், வெயிற் காலம் 2-மாதம் என்பதில் சனி ஞாயிறு நீங்கி 45 நாட்களும் இவை தவிர ஜனவரியில் 10 நாட்களும் மற்றும் பண்டிகைகளில் 25 நாட்களும் ஆக ஒட்டு மாதம் வருஷத்தில் 6 மாதகாலத்திற்கு மேலாகவே 200 நாட்கள் வரை கூட விடுமுறை நாளாக பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பொருள் நஷ்டம் கால நஷ்டம் எவ்வளவு என்று பார்த்தால் அதன் கஷ்டம் விளங்கும். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத சம்பந்தமாக அரசாங்கத்தில் ஏன் லீவு விட வேண்டும் என்பதும், அவசியமாயிருக்கின்றவர்கள் தங்கள் தங்கள் சொந்த லீவாக வாங்கிக்கொள்ள சௌகரியம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதன் மூலம் மத உணர்ச்சியை எவ்வளவு குறைக்கப்படக்கூடுமோ அவ்வளவு குறைக்க வழி தேடவேண்டும் என்பதுமே இத்தீர்மானத்தின் கருத்தாகும். மற்றபடி ஓய்வோ விடுமுறையோ மக்களுக்கு கூடாதென்ற கருத்தின் மீது இத்தீர்மானம் செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.” தந்தை பெரியார், குடி அரசு – 30081931

 

தமிழன் விழா

“அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் வருடப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப் படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு – ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.” தந்தை பெரியார் – விடுதலை 30011959

பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…… நீதிபதி, கைது செய்த காவலரிடம்….

இவர் என்ன குற்றம் செய்தார்?

காவலர்… இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்….

நீதிபதி…. பெரியாரிடம்.. பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?

பெரியார்… ஆமாம், போட்டுடைத்தேன்..

நீதிபதி… ஏன் அப்படி செய்தீர்கள்?

பெரியார்… கடைவீதிக்குப்போனேன், அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்… யாருக்கும் இடையூறு இல்லாமல், தெருஒரமாகப் போட்டுடைத்தேன்…

நீதிபதி… ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா? அது தவறல்லவா?

பெரியார்…. நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்..அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றார்…

நீதிபதி… காவலரிடம்… மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்..

காவலர்.. அவர்களும் போட்டுடைத்தார்கள் என்று கூறினார்…

நீதிபதி… அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார்..

காவலர்.. அவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லி உடைத்தார்கள்…ஆனால் இவரோ கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி உடைத்தார்.. என்று பதிலளித்தார்..

நீதிபதி… இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? கடவுள் இல்லை என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு..கடவுள் உண்டு என்று சொல்பவர் அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? என்று சொல்லி… அய்யா நீங்கள் போகலாம் என்றார்…

பெரியார் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்..

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

– பகுத்தறிவு, ஜூலை – 1935

“திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுததி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும்படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது.”

– பெரியார் ‘விடுதலை’ 27.11.48

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

“தமிழ்நாட்டில் பல காலமாக சமஸ்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும். பயன்படும் என்று காட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மை கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணனாக’ இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதை யோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள்.”                – பெரியார் ‘விடுதலை’ (15.2.60)

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

மாடு செத்தால் எடுத்துப் போய்தின்று விடுகிறார்கள். குதிரை செத்தால்

சாப்பிடாமல் புதைதது விடுகிறார்கள். இவைகள் சொர்க்கத்தில் இருக்கின்றன; நரகத்தில் இருக்கின்றன என்று எவரும் கருதுவதில்லை. ஆனால் இந்த முட்டாள்தனத்தை மனிதனுக்குத்தான் ஒட்ட வைத்து விட்டார்கள்.

                                                  – பெரியார், ‘விடுதலை’ 22.11.1972

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான்.

அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்துப் பொருத்தம் பார் என்றால் இது குதிரைச் சாதகம், இது கழுதைச் சாதகம் என்று கூற மாட்டானே! உடனே பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்றுதானே கூறுவான்? குதிரை, கழுதைச் சாதகத்துக்கு வித்தியாசம் தெரியாத இவன் எப்படி மனிதனுக்குப் பொருத்தம் கூற முடியும் என்று நம் மக்கள் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லையே!

                                            – பெரியார், ‘விடுதலை’ 9.10.1964

 

அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று சோசியத்தில் நம்பிக்கையுள்ளவன் கருதினாலும் அவன் வீட்டில் ஒரு அமாவாசையில் பிறந்த ஒருவன் திருடியிருந்தால் அவன் வெளியில் சொல்லாமல் போலீசில் பிராது சொல்லாமல் இருப்பானா?

                                                 – பெரியார், ‘விடுதலை’ 1.11.1972

 

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

”1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான். இவ்வளவுதானா?

ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்;
(தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான்.
இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள். இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.”

—————————– தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் `”விடுதலை”, 3.11.1968

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? – (கு.1.11.36;5:1)

 

மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும். – (வி.6.12.47;1:3)

ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? (more…)

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை, கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா என்பதை யோசித்தால், மதம் மேற்கண்ட காரியங்களுக்கு உண்மையாய்ப் பயன்படுகின்றதா என்பது விளங்கும்., இன்று எந்தத் தேசத்திலும், எந்த மதத்திலும், எந்தச் சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும் சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்கச் சட்ட திட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே, மதத்தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் புரிந்துவிடும்.
‘பகுத்தறிவு’ தலையங்கம் 9.9.1934

எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்.

அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.

(வி.27.11.69;3:4)

 

அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!

(கு.30.10.32;9)

இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின்சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள்தனமல்ல – துவேசமுமல்ல.

(வி.17.11.57;பெ.செ.)

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆற அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்.

ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.

”மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.”

– தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமயங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.- “விடுதலை” -10-02-1963.

சாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல் சாதிக்காரன்மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஓர் அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைவித்திருக்கிறோமா? சாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா? விடுதலை 251061

இந்த நாட்டில் சாதி இழிவைப் போக்க பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்களுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்லர். நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன். விடுதலை 041161

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் ஜாதி ஒழிய வேண்டும்

விடுதலை 131161

நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்வை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் ஜாதிநோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்

விடுதலை 250762

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புத்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும் – பெரியார் – குடியரசு

நான் சொல்லும் சில கருத்துக்கள் இன்று தலைகீழ் புரட்சியாக சிலருக்குத் தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் என்னையே மகா பிற்போக்குவாதி என்று உலகம் கூறும். அறிவின் வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாகிறது – தந்தை பெரியார்

நான் யார்? நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்கு சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்லுவது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. (வி.15.7.68.3:1)