பொழுது போக்கு
இன்று காங்கரஸ் மந்திரி பதவி வகிப்பதானது காங்கரசுக்கு வெற்றி என்றால் இது ராட்டினத்தால் கிடைத்த வெற்றியா? காந்தியின் சரணா கதியினால் கிடைத்த “வெற்றியா”?
* * *
காங்கரஸ் மந்திரி பதவி ஏற்பது பிரிட்டிஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்ததற்கு ஒப்பாகும் என்று சொன்ன ஜவஹர்லால் “மந்திரிகளைக் குறை கூறாதீர்கள்” என்று சொல்வது அடிமை முறிச்சீட்டுக்கு மேலொப்பம் போட்ட அடிமையாக ஆகி விட்டதாக அர்த்தமாகவில்லையா?
* * *
கனம் ஆச்சாரியார் தான் ஒரு ஜனநாயகவாதி என்கிறார், ஆனால் அவர் சொல்வதை யாராவது ஆக்ஷேபித்தால் “உங்களுக்கு ஒன்றும் தெரியாது வேண்டுமானால் அடுத்த தடவை எனக்கு ஓட்டு கொடுக்காதீர்கள்” என்று சொல்லுகிறார். ஆகவே ஜனநாயகத்துக்கு அருத்தம் ஆச்சாரியாரை கேட்டு அகராதியை திருத்திக்கொள்ள வேண்டியது தான்.
* * *
“அப்துல் கலாம் அசாத்தின் நடவடிக்கை சரியோ தப்போ அது வேறு விஷயம். இந்துக்கள் காங்கரசில் முஸ்லிம் சம்மந்தமான விஷயங் களில் ஒரு முஸ்லீமுக்கு சர்வாதிகாரம் கொடுத்திருப்பதைப்பற்றி பெருமை அடைய வேண்டும்” என்று காந்தியார் ஜனாப் சையத் பஷீர் அகம்மது அவர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு இந்திய முஸ்லீமுக்கு அவர் செய்யும் காரியம் சரியோ தப்போ அதுவேறு விஷயம். பிரிட்டிஷார் இந்திய ஆட்சியைப் பொறுத்தவரை கவர்னர் வேலை கொடுத்ததற்கு இந்தியர் என்று சொல்லிக்கொள்ளும் காங்கரஸ்காரர் பெருமை அடையாமல் இந்திய முஸ்லீம் கவர்னரை தேசத்துரோகி என்று சொன்னது யோக்கியமா? அயோக்கியமா?
* * *
தோழர் கே.வி. ரெட்டி நாயுடு கவர்னர் ஆனபோது இந்தியருக்கு இந்தியர் மரியாதை செய்வது அநாவசியமென்று சொல்லி வரவேற்புப் பத்திரமளிக்க மறுத்த காங்கரஸ்காரர்கள் தோழர் கனம் ஆச்சாரியார் முதலியவர்கள் மந்திரியானதற்கு ஓடி ஓடி வரவேற்புப் பத்திரம் கொடுத் திருப்பதும் மற்றவர்களையும் கொடுக்கும்படி வேட்டையாடுவதும் எதற்கு? ஒரு சமயம் ஆச்சாரியார் இந்தியர் அல்ல என்கின்ற எண்ணமா?
– ஈ.வெ.ரா.
குடி அரசு – துணுக்குகள் – 24.10.1937