69. மக்கள் ஒட்டகங்களல்ல!
சராசரி வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள், யுத்ததிற்கு முன்னால் 100 புள்ளி என்றால், யுத்தத்தின் பயனாக ஆலோசகர் சர்க்காரில் 300 புள்ளி ஆக உயர்ந்தது. இந்த நிலை இந்துஸ்தான் சுயராஜ்ஜிய சர்க்கார்தரும் விபரம். அதாவது மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு எடுத்த கணக்கு. கருப்புச் சந்தையின் விலை வாசியை வைத்துக் கொண்டால் இன்னும் எத்தனை 100கள் அதிகமாகுமோ? வந்த சுயராஜ்ஜியத்தால் வாழ வேண்டிய மக்களுக்கு ஒன்றும் வாட்டம் தீர இல்லை யென்றாலும், நாட்டில் நடமாடும் பண்டங்களுக் கெல்லாம் விலையேற்றமா? என்கிற உணர்ச்சி ஊசி மருந்து ஏற்றப்படுவதைப்போல், இந்நாட்டில் சராசரி வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் ஏறும் படியான நிலைமை வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையை – உணர்ச்சி குடியேறுவதை, கண்டு சுயராஜ்ஜிய சர்க்கார் ? பிரச்சார விளம்பரங்களின் பலனாகவே காலந்தள்ளிவிட முடியும் என்கிற, பெரும் நம்பிக்கையுடைய சர்க்கார், கலங்கவே செய்கிறார்கள். ஆனால் ஏற்படுங்கலக்கம், அதிகாரத்திற்கு ஆட்டங்கொடுத்து...