53. மொழிவாரிப் பிரிவினை

கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், தமிழ்ப் பெண்ணே! நீ பாட்டியாகிவிடவில்லை. உலகில் உன்னைப் போன்ற மற்ற பெண்கள் எல்லாம் கூனிக்குறுகி சிலர் பாட்டியாகி ? மலர்ச்சியின்றி ? நடைப் பிணமாகிவிட்டனர். சிலர் செத்த இடத்திலே புல்லும் முளைத்துவிட்டது. ஆனால் அன்றிருந்த நிலைக்கு (முற்றும்) அழிவின்றி நீயோகன்னிப் பெண்ணாக விளங்குகிறாய். உன்னை வாயார மனமார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். ஏன்? நான் வாழ, என் மொழியினர் வாழ என்றார் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.

ஆசிரியர் சுந்தரம்பிள்ளை ஒரு சுயமரியாதைக்காரரோ, சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பிரிவான திராவிடக்கழகத்தை சேர்ந்தவரோ அல்ல. மாறாக, சுயமரியாதை இயக்கத்துக்கு நேர் விரோதமான சைவமதத்தில், பழுத்த ஒரு சைவப்பழமாக, பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் கூறுகிறார் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன என்றும், அத்தனை மொழிகளும் வழங்குகிற பிரதேசத்துக்குப் பெயர் திராவிடம் என்றும்.

ஆனால் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், தமிழிலிருந்து பல மொழிகள் உண்டாயின என்று சொல்வதினால், அதை ஒரு பெருமைக்குக் காரணமாகக் கொண்டாரே தவிர, ஒரு மொழியிலிருந்து அத்தனை மொழிகள் ஏன் உண்டாயின? உண்டாவதற்குக் காரணம் எது? என்கிற ஆராய்ச்சியை, அந்த பாட்டுமொழியில் சொல்லவில்லை. என்றாலும் தமிழில் இருந்து இந்த மொழிகள், பதின்மூன்றா, பதினான்கா என்று சந்தேகப்படக் கூடிய அளவுக்குப் பல மொழிகளாகப் பிரிந்த தென்னாட்டுச் சரித்திரத்தை – மொழி வரலாற்றை ஆராய்ந்த நேர்மையான ஒவ்வொரு ஆராய்ச்சிக்காரர்களும், வெளிநாட்டார் ? நம் நாட்டார் என்கிற வேறு பாடில்லாமல், ஒப்புக்கொண்டிருக் கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக் கூற்றுக்கள் மட்டுமேயல்லாமல், அநுபவத்திலிருந்து பார்த்தாலும்கூட, தமிழர் தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளைத் தனித்தனிக் கூட்டத்தவர்கள் என்றோ, என்றைக்கும் தனித்தனியாகவே வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்கள் எவரும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது என்பதை நாம் பல முறை விளக்கிவந்திருக்கிறோம்.

இந்த அடிப்படை உண்மைகள்தான், தமிழர்களையும், தெலுங்கர்களையும், கன்னடியர்களையும், மலையாளிகளையும் சேர்த்துத் திராவிடர்கள் என்பதாகவும், இவர்களின் மொழிகளுக்குத் திராவிட மொழிகள் என்பதாகவும், பல மொழிக்காரர்களாயிருந்தாலும் அனைவரும் ஒரே இனத்தவர்கள்தான் என்பதாகவும் நாம் கூறி ? விளக்கி ? பிரச்சாரம் செய்து வருவதற்குக் காரணமாகும்.

இந்த அடிப்படைக் காரணங்களை வைத்துக் கொண்டுதான் ஆந்திரர்கள் ஆதரித்தாலும் இல்லா விட்டாலும், மலையாளிகள் மனமொப்பினாலும் இல்லா விட்டாலும், கன்னடிகள் காது கொடுத்தாலும் இல்லா விட்டாலும், தமிழர்கள் திராவிடர்கள் என்பதை எப்படி மறுக்க முடியும் மறந்துவிட முடியும்? என்று கேட்டுவந்திருக்கிறோம்.

இனவாரியாக நாட்டைப் பிரிக்கவேண்டும் என்கிற கிளர்ச்சி, என்றைக்கிருந்தாலும் ஒருநாள் வந்தேதீரும், அது எவ்வளவு நாள் கழிந்தாலும் வெற்றிபெற்றே தீரும் என்பதை அறிந்த இந்துஸ்தான் ஏகாதிபத்திய காங்கிரஸ், மக்களின் உரிமை உணர்ச்சியானது பெருங்கொந்தளிப்புக்கு இடமாகி, ஏகாதிபத்தியச் சிதைவுக்குக் காரணமாகிவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையோடு வகுத்த ஒரு சிறு வாய்க்கால்தான் உரிமைக்கு வழியற்ற மொழிவாரிப் பிரிவினை!

இந்த உப்பு சப்பற்ற மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சியானது, குறிப்பாக நம் தென்னாட்டில் ? திராவிடத்தில் கேட்கும்போதெல்லாம், இன்றைய இந்துஸ்தான் ஏகாதிபத்தியத்தால், மொழிவாரியாகப் பிரிவினை செய்யப்பட்டு, ஏதோ ஒரு சில காலத்திற்காவது, ஆந்திராவும், மற்ற திராவிட மொழிகள் பேசப்படும் பிரதேசங்களும் தமிழ் நாட்டிலிருந்து கத்திரிக்கப்பட்டு விடும் என்பதை நாம் அறியாதவர் களல்ல. அப்படிக் கத்திரிக்கப் பட்டாலும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பலவித ஒற்றுமைகளும் அனுகூலங்களும் இருக்கிற காரணத்தால், மொழிப் பேரால் கத்திரிக்கப்பட்ட.

இந்தப் பிரதேசங்கள், இனப்பேரால் ஒன்றுபட்டே விடும் என்கிறதான உண்மையையும் மொழிவாரிப் பிரிவினையை, ஒரு பிரிவினையாகக் கருதாமல் ? மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சியை ஒரு கிளர்ச்சியாக மதிக்கவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலும் பார்ப்பனீயத் திற்குச் சாவுமணியடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனீயத்தின் கெடுபிடி ஒன்றும் தமிழ்நாட்டுத் திராவிடர்களிடம் பலிக்காது என்பதைக் கண்டு கொண்ட ஆந்திரப் பார்ப்பனர்களின் தந்திரமும், தனி மாகாணமாக ஆக்கினால் பதவிக்கான இடங்கள் பலவாக உண்டாக்கப்பட்டு, பதவிக்குத் தரித்திரம் என்பது இருக்காது என்று நம்புகிற படித்த தோழர்களின் பதவி ஆசையுமே தென்னாட்டில் ஆந்திராவைப் பொறுத்தவரையிலும மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி வெகு பலமாக வளர்ச்சி யடையக் காரணமாகும்.

இந்த மொழிவாரிப் பிரிவினை என்கிற பிரச்சனையில், அதிலும் குறிப்பாக ஆந்திரத்தைத் திராவிடத்திலிருந்து பிரிப்பதில், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்குப் பெருமகிழ்ச்சி. அது மாத்திரமல்ல. சுயமரியாதை உணர்ச்சி ஊட்டப்பட்டிருக்கும் தமிழ் நாட்டுத் திராவிடர்களோடு, ஆந்திரத்திராவிடத் தோழர்களை மோதவைத்து, ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு வழும் வரையிலும் தனக்குக் கொண்டாட்டந்தான் என்பது அதன் நினைப்பு.

இந்த நினைப்போடுதான், இந்துஸ்தான் முழுவதிலுமே மொழிவாரி பிரிவினை ஏற்பாட்டை புகுத்தவேண்டும் என்கிற காரங்கிரஸின் ஒரு திட்டத்தைக் கைவிட்டு விட்டு ஆந்திராவிலும், இன்னும் அந்த நிலைக்கு ஆளான வேறு இரண்டொரு பகுதிகளிலும் பிரிவினைக்குச் சம்மதம் என்பதாக ஏகாதிபத்தியத் தலைமைப்பீடம் அறிவித்திருக்கிறது. மொழிவாரியாக ஏகாதிபத்தியத்தால் பிரிக்கப்படும் பிரிவினை, பிரிவை என்றைக்கும் கெட்டியாக வைத்திருக்கவும், தன்தயவை எதிர்பாத்துத்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிலையைப் பெருக்கி வளர்க்கவும, அண்டையில் நெருங்கி வாழ்பவர்களுக்குள், ஒருவர் மீதொருவரை உசுப்பிவிட்டு இடையில் சிந்தப்படும் இரத்தத்தை உறிஞ்சுவதற்காகவும் பயன்படும் ? பயன்படவேண்டும் என்பதுதான். இந்த நோக்கங்களோடு ஏகாதி பத்தியத்தால் பிரித்து வைக்கப்படும் பிரிவினையைத்தான் நாம வெறுக்கிறோமே தவிர ? கேடு உண்டாகும் என்பதாக அஞ்சுகிறோமே தவிர, ஒவ்வொரு மொழிக்காரர்களும் தனித்தனி மாகாணமாக நின்று, (இப்போதைய சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள்)

அடிப்படையில் ஒரு சமஷ்டியும் இணைந்து, வடநாட்டு ஆதிக்கத்திலிருந்து அறவே விலகி, பரிபூரண சுதந்தர வாழ்வு வாழவேண்டும் என்கிற லட்சியத்தோடு, செய்யப்படுகிற மொழிவாரிப் பிரிவினையை நாம் வெறுக்கவில்லை. மாறாக அதுதான் நம் அரசியல் லட்சியம் என்பதாக விளக்கி வந்திருக்கிறோம். ஆந்திரத்திலுள்ள பார்ப்பனர்களும் – வடநாட்டு ஏகாதிபத்தியமும் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தந்தான் எல்லாவற்றுக்கும் முதலில் ஆந்திரம் தனியாகப் பிரிக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆந்திரத் திராவிடர்கள், உரிமைக் கொண்டாடுகிறார்கள் அல்லது சென்னை நகரில் பங்கு கேட்கிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லித், தமிழ்த் திராவிடர்களின் பல்லைப் பிடுங்கவேண்டும் என்று திட்டமிடப் பட்டிருக்கிறது என்பதைத்தான்.

ஆந்திரப் பிரிவினையைப் பற்றி ஏகாதிபத்தியம் நடந்து கொள்ளும் போக்கிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பல்லைப் பிடுங்கும் சங்கதிதான், தமிழ்த் திராவிடர்களுக்கே உரிமையான சென்னையை, தனி மாகாணமாக ஆக்கிவிட வேண்டுமென்கிற பேச்சு. ஆந்திரத் தோழர்களை நமக்குக் காரணமாகக் காட்டி, அப்பத்தை நிறுத்துக் கொடுக்க வந்த குரங்கு நியாயத்தையும் தோற்கடிக்கும் முறையில், சென்னை நகர், தமிழ் திராவிடனிடமிருந்து பறித்துக் கொள்ளப் படுவதை, எந்த ஒருதிராவிடனும் ஒப்புக்கொள்ளவே முடியாது.

இந்த மாதிரியான அடிப்படையில்தான், அன்றைய ஏகாதிபத்திய வெள்ளையர்கள் சமஸ்தானாதி பதிகளை அமைத்தார்கள். அதே முறையைத்தான் இன்றைய ஏகாதிபத்தியமும் வேறு பேரால் அமைக்க எத்தனிக்கிறது. இப்போது தமிழ் திராவிடர்களின் கடமை என்ன? ஏன் தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவருடைய கடமை என்ன? எந்தக் காரணத்தாலும், சென்னை நகரைத் தமிழ் நாட்டிலிருந்து பிரிக்க முடியாது என்பதை, வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு வற்புறுத்தி எடுத்துக்காட்ட வேண்டியதுதான் இன்றைய தமிழ் நாட்டார்களின் முதல் வேலை, முக்கியமாகச் சென்னைத் தமிழர்கள், இந்தக் காரியத்தில் உடனடியாக இறங்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

குடி அரசு 27.08.1949

You may also like...