58. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!
வினா : வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?
விடை : வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங் கெட்டுவிடும் என்ற பயமே அதற்குக் காரணம்.
வினா : அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?
விடை : இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களையே நம்பாத அநேகர் உத்தமர்களாக இருந்திருக்கிறார்கள்.
வினா : எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா?
விடை : இல்லை சுமார் 5000 வருஷங்களுக்குமுன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.
வினா : அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?
விடை : நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்குமுன் மக்களும், சமூகங்களும் தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன.
வினா : உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப் படுகிறது.
விடை : இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா : அப்படியானால் உலக மக்களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்கமுடையவர்கள்?
விடை : இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர், பண்டு மிக்க நாகரீகம் உடையவர்களாயிருந்திருக்கிறார்கள்.
வினா : அதனால் விளங்குவது என்ன?
விடை : வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை என்பது அதனால் விளங்குகிறது.
வினா : வேதங்களில்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்பதினால் நன்மை ஏற்படுமா?
விடை : ஏற்படாது. முதலில் வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெடாது. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமலாகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமலாகிவிடும்.
வினா : மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?
விடை : பிரதிபலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதினாலும் விரும்புவதினாலும் வலுப்படுத்தலாம்.
வினா : நல்லொழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?
விடை : முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; முன்றாவது கடமை உணர்ச்சி.
வினா : கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?
விடை : கடமை ஒரு சோதனை என்றும் உத்தமர்களாக இருக்க வேண்டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்து விடவேண்டும் என்று பழைய மதங்கள் போதனை செய்கின்றன.
வினா : அத்தகைய மதபோதனையினால் விளையும் பயன் என்ன?
விடை : அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படுகிறார்கள். உத்தம வாழ்க்கையைப்பற்றி எண்ணும் போதும் பயமும் மனச்சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.
வினா : அவ்வளவுதானா?
விடை : துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.
வினா : கடமை என்பதற்குச் சரியான பொருள் என்ன?
விடை : கடமை ஒரு சோதனை அல்ல. தியாகமுமல்ல. கடமை என்பது ஒற்றுமை, அழகு, மகிழ்ச்சி, சரீர மானஸி விதிகளை நாம் மீறும்போதுதான் நாம் ஆத்மதியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.
குடி அரசு 10.09.1949
மலத்தில் அரிசியா?
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும், மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல்தானே கம்பராமாயண இலக்கியமும் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழன் சரித்திரகால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரியதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயணம் இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பரா மாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையி லிருந்து யோசித்துப் பாருங்கள்.
– பெரியார்