25. மந்திரிசபைப் பேரம்!

அத்தியாயம் முடிவுற்றது இதைக் கூறியவர் தோழர் பிரகாசம் அய்யர். மந்திரிசபை எவ்ளவு அகலமாக நீளும் – எவ்வளவு அகலமாக நீட்ட முடியும் என்கிறரப்பர் இழுப்புப் போட்டியில், ஒரு முனையில் நின்று இழுத்துக் கொண்டிருந்த தோழர் பிரகாசம்தான், சரியாக ஒரு மாச இழுப்பலுக்குப் பிறகு, அத்தியாயம் முடிவுற்றது என்று சோகம் வழிந்து கசியக் கூறியிருக்கிறார். இந்த மாதம் 2-ந் தேதி. தோழர் பிரகாசத்திற்குப் பின்னால் நின்று கொண்டு, அவருக்குத் தலையால் முட்டுக்கொடுத்து உதவி புரிந்து வந்த சகாத் தோழர் சுப்பராயனோ, இந்தப் போட்டி முடிவில் வாய் மூடி மௌனியாகி விட்டார். ஒருவேளை பலமாக முட்டுக் கொடுத்ததால் ஏற்பட்டிருக்கும் மூச்சுத் திணறல் காரணமாக இருந்தாலும் இருக்கலாம். ரப்பர் இழுப்புப் போட்டியில் சுப்பராயனுக்காக வேலை செய்து வந்த தோழர் காமராஜரும், சுப்பராயன் நிலையைத்தான் அடைந்திருக்கிறார். காமராஜரின் சகாவாக காமராஜரால் காட்டப்பட்டு வரும் பிரதமர் ராஜாவோ நடக்கிறபடி நடக்கட்டும், அசரப்போட்டு விடுவோம் என்கிற சலிப்பை அடைந்துவிட்டார்.

சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக பிடித்துவைக்கப்பட்ட தோழர் ராஜா அவர்களுக்கு, மற்ற மந்திரிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சட்டப்படி உண்டு என்றாலும், நியாயப்படி இல்லை என்கிற கருத்துத்தான், இந்தப் போட்டிக்கு அடிப்படை என்று நாம் விளக்கினால் அது தவறாகமாட்டாது. போட்டியில் முன்னணியில் நின்றவர்கள், முக்கியமாகத் தோழர்கள் பிரகாசமும், காமராஜரும் என்றால், அந்த இரண்டு பேருடைய மனப்பான்மையும், மற்ற மந்திரிகள் எல்லாம் நம் இஷ்டப்படிதான் பொறுக்கப்பட வேண்டும் என்கிற காரியத்தில் தீவிரமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான், மற்ற மந்திரிகளின் நியமனங்களும், ஒருமாதப் பேட்டிகளும், பேச்சுகளும் காட்டுகின்றன.

நாணயத்திற்குச் சீட்டுகொடுத்து வழியனுப்பிய, மெம்பர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சட்டசபைக் கட்சியைத் துணையாகக் கொண்டு, ஒழுங்கான ஒருவர் உயர் பதவியிலிருப்பதா? அவரை ஒழிப்பதே எனது லட்சியம் என்கிற லட்சியப் பாதைகண்ட தோழர் காமராஜர் என் முயற்சியால் – என் லட்சியம் நிறைவேறியதால் இடம் பெற்ற தோழர் ராஜா, என் இஷ்டப்படி அல்லவா நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். 9 பேர் மெஜரிட்டியால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் ராஜா, பலமான மைனாரிட்டியாய்க் காணப்பட்டாலும், பார்ப்பனீய ஆதிக்கம் 100-க்கு 100-ஆக உள்ள எனது கோஷ்டிக்கு மதிப்புக் கொடுத்து, என் இஷ்டப்படி அல்லவா நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார் தோழர் பிரகாசம்.

இந்த இரண்டுபேருடைய நினைப்பும் நியாயந்தானா? நிறைவேற வேண்டியது தானா? என்பவைகளைப்பற்றி நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை? ஆனால் தோழர்கள் பிரகாசமும் சாமராஜரும் இப்படி நினைப்பதினால்தான் – நினைப்பைச் செயலாக்கிவிடவேண்டு மென்று துணிந்ததினால் தான், இந்த மியூசிக்சேர் போட்டியே உண்டானது என்று தான் கூறுகிறோம்.

தோழர் காமராஜர் மேலிடத்தாரால் கரிபூசப்பட்டபிறகு, அதாவது சுப்பராயனோடு பங்கு விகிதாச்சாரம்பேசி, ஒப்பந்தம் செய்து கொண்டு டில்லிக்குப்போனவுடன், பழைய மந்திரிகளில் பலரும் இடம் பெறவேண்டும் என்று மேலிடத்தார் சொல்லிய பிறகு – புதிதாகச் சேர்ப்பதிலும் கோஷ்டிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று ஆணையிட்ட பிறகு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது போல் புத்திவந்து திருந்தி இருக்கவேண்டும். ஆனால் அதை எப்படி நம் காமராஜரிடம் எதிர்பார்க்க முடியும்? அவரோ, பாக்கியுள்ள இடங்களிலாவது, வேண்டுமானால் நாற்காலிகளின் எண்ணிக்கையைப் பெருக்கியாவது, நமக்குப் பூரண செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொண்டு விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்தோ! அந்த ஆசையிலும் இப்போது மண்!

உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்து ஒடிப்போன தோழர் பிரகாசம் – தானாகவும், தனக்குப் பதிலாக வேறு நபரை நிறுத்தியும் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பிரகாசம், மீண்டும் மீண்டும் மந்திரி நாற்காலியை வலம் வருவதற்கு ஆசைப்படுவது – அதற்காகப் பேரம் பேசுவது எவ்வளவு மோசமான பேராசை! அவரோ, நான் வேறு அத்தியாயத்திற்குப் போகிறேன் என்கிறார் இப்போது.

ஆச்சாரியாருக்கு எதிராகப் பிரகாசம் பிரதமராக்கப் பட்டபோது, காங்கிரசிலுள்ள கோஷ்டிகளை அவர் எப்படி, எவ்வளவு கேவலமாகக் கண்டித்தார் என்பதும், தன் பிரதமர் என்றால் மற்ற மந்திரிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தன்னைத் தவிர வேறுயாருக்கு உண்டு? என்று கேட்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அன்று அப்படிச் சட்டம் பேசிய பிரகாசம்தான், இன்று கோஷ்டியின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரம் வேண்டும் என்கிறார். (பிறவியிலேயே தனக்குத் தனிச் சட்டம் என்று கூறும் இனமல்லவா?)

தோழர் பிரகாசம் அவர்கள் ஆரம்பித்திருக்கும் அடுத்த அத்தியாயம், மேலிடத்தாருக்குக் காவடி. இந்தக் காவடி, பார்லிமெண்டரி போர்டுக்கு ஒரு மகஜர் என்கிற பெயரால், பிரதமரிடம் கொடுக்கப்பட்டு, பத்திரிகைகளிலும் வெளியாக்கப் பட்டிருக்கிறது.

ஆச்சாரியார் மந்திரிசபையில் ஒரு மந்திரியாக இருந்த காலத்திலும், பின்பு அவரே பிரதமராக ஆகிய காலத்திலும், தோழர் பிரகாசம் அவர்களுக்கு எந்த அளவு மதிப்பு இருந்தது என்பதும், அவர் எந்த அளவுக்கு நாணயமாய் நடந்துகொண்டார் என்பதும் இந்த நாடு அறியும். ஆகவே பாம்பின் கால் பாம்பறியும் என்ற நியதியை ஒட்டியோ; என்னவோ பழைய ? புதிய மந்திரிகளான ஏழுபேரைக் குறித்தும் குற்றஞ்சாட்டிப், பிரகாசம் அவர்கள் இந்த மகஜருடன், அச்சிட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

இவர் எண்ணம் என்ன, உண்மையிலேயே நாட்டு நலனில் உள்ள அக்கரையின் விளைவா இது? என்கிற சந்தேகந்தானே எவருக்கும் வரும்! உண்மையாகவே அந்தமந்திரிகள் செய்திருக்கும் குற்றங்களைத் தோழர் பிரகாசம் தெரிந்திருக்கின்றார் என்றால், அதை வெளிப்படுத்த வேண்டியது எப்போது? திருத்தியிருக்கத் தகுந்த குற்றங்களாயிருந்தால் திருத்தியோ, திருத்த இயலாதென்றால் மக்களைக்கொண்டு அவர்களை வீட்டுக் கனுப்பியோ அல்லவா இதற்கு முன்னாலேயே செய்திருக்கவேண்டும்? மந்திரி நாற்காலியில் எனக்கு ? என்னைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை என்று இதுநாள்வரை பேரம் பேசிவிட்டு, இப்போது! அந்தப் பேரம் பலிக்காதநிலையில், குற்றங் கூறினால் இது, மிரட்டல் வேலையே (யயிழிஉவதுழிஷ்யி) தவிரவேறென்ன? என்று தானே எவரும் எண்ணுவர்.

பிரகாசத்தினுடைய யோக்கியதையை இந்த மகஜர் வெளிப்படுத்துவதோடு, தோழர் காமராஜரின் இனத்துரோக வேலையையும் இந்த மகஜர் வெளியாக்கி இருக்கிறது. இந்த மந்திரி சபையில் முழுப்பார்ப்பனர் டி.விசுவனாதத்திற்கும், அரைப்பார்ப்பனர் சுப்பராயனுக்கும் இடந்தேடிக் கொடுக்க எப்படி யெல்லாம் காமராஜர் கஜகர்ணம் போட்டிருக்கிறார் என்பதையும் காட்டுகிறார் தோழர் பிரகாசம். இனவுரிமையை அடகுவைத்து வாழ்வதே இகவாழ்வு என்று கண்டு கொண்ட காமராஜர் இதனால் பின் வாங்கி விடவாபோகிறார்?

இன்றைய நிலையில் பிரதமர் ராஜா, மந்திரிசபை விஸ்தரிப்புக்குப், பிரகாசம் யோசனைப்படி தற்கால முற்றுப் புள்ளிவைத்து, பார்லிமெண்டரி போர்டின் யோசனை கேட்டுள்ளார் என்பதை யூகிக்கும் போது, எடுத்ததற்கெல்லாம் இப்படி வடக்கே காவடி எடுக்கும் பிழைப்புக் கண்டு நம்மால் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இந்தத் தற்காலிக முற்றுப்புள்ளியை நிரந்தர முற்றுப்புள்ளியாக்கி, நாட்டின் நலன் கருதி ஆட்சி செய்ய வேண்டுகிறோம். மூன்றுபேர் மிக மிகத்திறம்பட ஆட்சி செலுத்திய இடத்தில்தான் இன்றைய இடநெருக்கடியை உண்டு பண்ணியுள்ளனர் என்பதையும் நினைவூட்டு கிறோம். எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்து எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் நடக்க எண்ணி, உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து பாராங்கல்லில் மோதும் நிலையை அடைய வேண்டாமெனவும் எச்சரிக்கிறோம். உண்மையிலேயே கூடிருந்து கவிழ்க்கச் சதிசெய்பவர் இன்று மந்திரியாக இருந்தால் அவரை விலக்கி, ஒத்துழைக்கும் நல்லவரைக் கொண்டு நல்லாட்சி எனப்பெயர் பெறும்படி ஆட்சி நடத்துங்கள் என அவருக்கு ஆலோசனை கூறுகிறோம்.

நல்ல ஆட்சி நான்கு நாள் நடத்தினாலும் நல்லது நாற்காலிக்குப் பசை போடக் கருதி நாற்றம் உண்டாக்க வேண்டாம்!

குடி அரசு கட்டுரை  07.05.1949

You may also like...