41. ஈ.வெ.ரா. அறிக்கை!

தோழர்களே! கட்டாய இந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் நான் தீவிரமாய் ஈடுபடப்போவதால் ஏற்படக்கூடிய விளைவு, உடுமலைப் பேட்டையில் நான் 144 தடையுத்தரவை மீறியதற்காக என்று சர்க்கார் நடத்தப் போவதாகத் தெரியவரும் காரியத்தின் விளைவு, சென்னையில் 2 மாதத்துக்கு முன் நான் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சின் பேரில் சர்க்கார் ஏதோ நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாய்த் தெரிய வருவதால் அதனால் ஏற்படும் விளைவு, ஆகிய மூன்று விளைவுகளுக்கும் நான் ஆளாகத் தயாராய் இருக்க வேண்டியவனாக இக்கிறேன்.

ஆதலால், அதற்குள் நான் இதற்கு முந்திய அறிக்கையில் தெரிவித்தபடி இயக்க நடப்புக்கு, இயக்கப் பொருள்களுக்கு நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். என்மீது ஏற்படும் வழக்குகளுக்கு எதிர்வாதம் செய்வதில் நான் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதால், சர்க்கார் கேஸ்தொடர்ந்தால் நான் தண்டனை அடைய வேண்டியது என்பது தவிர, வேறு முடிவு எதிர்பார்ப்பதற்கு இல்லை. மற்றும் எனக்கு என்னைத் தலைவனென்று சொல்லிக்கொண்டும், என்னைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டும் என்னைச் சுற்றி இருக்கும் தோழர்கள் சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத் தன்மை, அவர்களது தவறை மறக்கும் தன்மை, அனுசரிப்புத் தன்மை முதலியவைகளைக் காட்டினாலும் அவைகளை அவர்கள் எனது பலவீனம், ஏமாந்ததனம் என்று கருதிக்கொண்டு இயக்கத்தினுடையவும், என் முயற்சியினுடையவும் பின் விளைவைப்பற்றி நான் பயப்படும் வண்ணமாய்ப், பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும்வண்ணமுமாக அவர்கள் நடந்து வருவதாக உணர்கிறேன். மற்றும் நான் நாணயஸ்தர்கள் என்றும், இயக்கத்தினிடமும் என்னிடமும் உண்மையான பற்று உள்ளவர்கள் நம்பின தோழர்கள் பலர் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை மோசம் செய்துவிட்டதைக் கண்டும் கண்டு பிடித்தும் வருகிறேன். சிலர் இன்னமும் என்னை மோசம் செய்து வருவதாக அய்யம்கொண்டும் உறுதி கொண்டு வருகிறேன்.

இந்த நிலையில் என்னைப்பற்றியும் இயக்கத்தைப்பற்றியும், இயக்க நடப்பைப்பற்றியும், எனக்குப் பின்னும் ஒரு அளவுக்காவது  இயக்கம் நடைபெற வேண்டும் என்பதுபற்றியும், ஏதாவது ஒரு வழி செய்யவேண்டியதைப் பற்றியும் மிகக் கவலையுடனும் பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாக இருக்கிறேன். இந்த சிந்தனை கடந்த 4, 5 மாதங்களாகவே என்னை வாட்டி வருவதுடன், என் உடல் நிலைக்கும் காரணமாக இருந்து வருகிறது.

இதற்காக என் அனுபவத்தைக் கொண்டு எனக்குத் தோன்றியதை நான் செய்து முடிக்க ஏற்படுசெய்து கொண்டிருக்கிறேன். சற்றேற்குறைய ஒரு முடிவுக்கும் வந்து விட்டேன். அக்காரியங்கள் எனது தோழர்களுக்கும் என்னிடம் அன்பும் எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்று புரட்சியாகவும் திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்துவிடுமோ? என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கும் ஒருகெட்டபேரும் இழிவும் ஏற்படக்கூடிய பெரிய தவறாகவும் கூடகாணப் படுவதாகத் தெரிகிறது. பொதுமக்ளுக்கும் அப்படியே காணப்படலாம்.

எனக்கு வயது 71-க்கு மேலாகிறது. நான் பொது வாழ்வில் 40-50 வருஷகால அனுபவமும் டையவன். பொது ஜனங்களையும், சிறப்பாகப் பாமர மக்களையும் ஒரு அளவுக்கு உணர்ந்தவன். அவர்களது மனப்பான்மையையும் (னிழிவிவிஸ்ரீவிதீஉஜுலியிலிஆதீ) தெரிந்தவன். நான் நடப்பு முறையில் சுலபமாக யாருக்கும் இணங்கிவிடக்கூடிய அளவு வழவழப்பானவன் என்றாலும் கொள்ளை, லட்சிய முறையில் உறுதியானவன்.

என்னிடம் உள்ள இயற்கைகுணம் என் நண்பர்களுக்கும், கூட்டு. வேலைக்காரர்களுக்கும் எவ்வளவு பொருத்தமற்றதாக இருந்தாலும், குற்றமானதாகக் காணப்பட்டாலும், இந்த 30 ஆண்டில் என்கூட்டு வேலைக்காரர் பலர் விலகினாலும் அவர்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கடந்து அந்த என் இயற்கைக் குணத்தாலேயே மற்றவர் என்ன நினைப்பார்களோ என்பதைப்பற்றிக் கவலைப் படாமல் நடந்து வந்ததாலேயே, யார் இயக்கத்தை விட்டுப் போனாலும் சரி, எனக்கு எதிரியானாலும் சரி என்று உறுதியாய் நடந்ததாலேயே, பொது ஜனங்களுடைய நம்பிக்கைக்குச் சிறிதாவது ஆளானவனாக இருந்து இயக்கத்தை நடத்தி வந்திருக்கிறேன்.

எனது காரியம், கொள்கை, திட்டம் எதுவானாலும் அவைபற்றிய என் அனுபவத்தில் துவக்கத்தில் நான் வெளியிடும்போது பொதுவாகவே மக்களுக்கு எவ்வளவு கஷ்டமாக, கேடானதாகக் காணப்பட்டாலும் அதை விடாப்பிடியாய் நடத்திக்கொண்டு வந்து, ஆட்சேபித்த மக்களைப் பெரிதும் ஆமோதிக்கச் செய்தே வந்திருக்கிறேனே தவிர, தவறு செய்ததாகக் கருதிவிட்டுவிடவோ, திருத்திக் கொள்ளவோ, துக்கப்படவோ எனக்கு வாய்ப்பே ஏற்பட்டதில்லை. அநேக தடவை எனது மானம், அவமானத்தைப் பற்றிக் கூடக் கவலைப் படாமலும் நடந்து வந்திருக்கிறேன்.

பொதுவாகச் சொல்லவேண்டுமானால் எனது பொதுநல வாழ்வு என்பது பொது மக்களுக்காக என்று கருதி வாழ்ந்து வந்திருந்தாலும்கூட, அவைகளை என்சொந்த வாழ்வுக்காகச் செய்யப்படும் என் சொந்தக்காரியம், என்சொந்தச் சொத்து என்பதாகக் கருதியே சுயேச்சையாய், சொந்த உரிமையாய் நடந்தும் நடத்தியும் வந்திருக்கிறேன்.

ஆகவே அப்படிப்பட்ட உரிமையையும் சொந்தப் பொறுப்பையும் ஆதாரமாய்க் கொண்டே எனது லட்சியத்தின் நன்மை, இயக்கத்தின் நன்மை என்பதைக் கருதி மேல்காட்டிய அவசர நிலையில் இயக்கத்துக்கு ஆக சில ஏற்பாடுகள் செய்ய முன்வந்து விட்டேன். அதைச் செய்ய முன்வந்து விட்டேன்.

அதைச் செய்ய வேண்டியது எனது அறிவான, யோக்கியமான கடமை என்று உண்மையாகக் கருதிவிட்டேன். இதைப் பற்றிய முழு விவரமும் தெரியாதவர்களும், நடு நிலையில் அரைகுறையாய் அறிய நேந்தவர்களும் என் செயலைத் தவறாகக் கருதலாம்; ஆத்திரப்படலாம்; எதிரிகள் இதைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு பெரியதொரு கேடு ஏற்பட்டதாக துடிதுடிக்கலாம். என் பொறுப்பு எனக்குப் பெரிது.

அது எனக்குத் தெரியும். பொதுமக்களுக்கு ஆக என்று நான் எடுத்துக் கொண்ட காரியம், அவர்கள் என்னை நம்பி நடந்துகொண்ட தன்மை, ஆகியவைகளும் என் ஆயுள்வரையும், கூடுமான அளவு ஆயுளுக்குப் பின்னும் ஒழுங்கானபடி நடக்கும் படியாகப் பார்த்து என் புத்திக்கு எட்டினவரை அறிவுடைமையோடு நடந்து கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

என் வார்த்தையை நடத்தையை நம்பாமல் ஒப்புக்கொள்ளாமல் எனது காரியத்தைக் குறை எண்ணுபவர்களுக்கு சமாதானம் சொல்லவோ, அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்படி நடக்கவோ இந்த அவசர சமயத்தில் நான் கவலை எடுத்துக் கொள்ளுவதும் கருதுவதும் வீண் வேலை என்று கருதித் தீரவேண்டியவனாக இருப்பதால் அந்த வேலையை இப்போது நான் மேற்கொள்ளவில்லை. எனவே சுமார் 4,6 மாதங்களாகவே பொதுக் கூட்டங்களில் எனது பேச்சிலும் எழுத்திலும் தெரிவித்து வந்திருக்கிற படியும், கோவை மாநாட்டில் எனக்கு வார்சு ஏற்படுவது பற்றித்தான் கவர்னர் ஜனரலிடம் பேசினேன் என்று வெளியிட்ட படியும், அதில் மக்களுக்கு உறுதி கூறினபடியும், சமீபத்தில் 19-ந் தேதி விளக்கம் என்னும் தலைப்பில் விடுதலையில் குறிப்புக் காட்டி வந்திருக்கிறபடியும் முதலில் எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வார்சாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும் அவசரமுமாகையால் நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும் என் நலத்திலும் இயக்க நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்துவந்திருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வார்சுரிமையாக ஆக்கிக்கொண்டு. அந்த உரிமையையும் தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார் 4, 5 போர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது. இதில் சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று நமது இஷ்டத்துக்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டதென்றோ, போய்விடுமோ என்றோ பயன்படுவது உறுதியற்ற தன்மையேயாகும்.

துவக்கத்தில் மேலே காட்டியதான, கட்டாய இந்தியை எதிர்ப்பதால் ஏற்படும் தொல்லை. சட்டம் மீறிய சொற் பொழிவாற்றியதன் பலனாய் என்றும், மற்றும் இயக்கத்தை அடக்குவதற்கென்றும், சர்க்காரால் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் தொல்லை ஆகியவைகள் வெளிவந்து என் எண்ணம் நிறைவேறச் செய்ய முடியாமல் தடையாகிவிடும்படி நேருவதற்குமுன், இந்தக் காரியத்தைத் துரிதமாகச் செய்யவேண்டியவனாக இருக்கிற படியால் அதைச் செய்யத் துவக்கிவிட்டேன்; இது விஷயத்தில் மற்றவர்கள், பொது ஜனங்கள் என்ன நினைப்பார்கள், எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதைப்பற்றி எல்லாம் சிந்திக்க ஆரம்பித்தேனேயானால், இயக்கப் பாதுகாப்புக் காரியம் அடியோடு கெட்டுவிடும். இயக்கப் பொருள், இயக்கத்துக்காக நான் சேர்த்த பொருள், இயக்கத்துக்காக என்னை நம்பி பலர் அளித்தபொருள், இயக்கத்துக்காக நான் உதவவேண்டும் என்று கருதி இருக்கிற பொருள் ஆகியவைகள் நாதியற்று இயக்கத்துக்குப் பயன்படாததாக இயக்கமும் பொருளும் தலைவிரிகோலமாகி ஆகிவிடுவதோடு உலகோர் என்னைப் பழிகூறவும் ஏற்பட்டுவிடும்.

ஆதலால் எனது கடமையை உத்தேசித்து, என் மனசாட்சிமீது நம்பிக்கை வைத்து நான் மிகுந்த யோசனைமீது நல்ல எண்ணத்துடன் இந்தக்காரியம் செய்கிறேன். கூடிய விரைவில் மக்கள் எனது நல்லெண்ணத்தையும் இதன் நற்பலனையும் உணருவார்கள் என்கின்ற உறுதி எனக்கு உண்டு.

குறிப்பு :- இதை ஏன் இப்போது தெரிவிக்கிறேன் என்றால், இந்த ஏற்பாடு இயக்கத் தோழர்கள் என்பவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்று எனக்குத் தெரியவருவதாலும், எந்தக் காரியமும் முடிந்தபின்தான் உருவாகக்கூடுமானதாலும், ஏதாவது காரணத்தால் இது நடைபெறாமல் போகுமானால், வேறுவிதமாய் எனக்கு ஏதாவது முடிவு ஏற்படுமானால் (தடை முடிவு எந்த நிமிஷமும் எதிர்பார்க்கக் கூடியதுதானே) பொதுமக்களுக்கு என் உள்ளம் தெரிவதற்காக வேண்டியே இப்போது தெரிவிக்கிறேன். மக்கள் சுபாவம் எனக்குத் தெரியும். மக்களின் பொதுநல உணர்ச்சி என்பது எப்படிப்பட்டது என்பதும், அவர்களின் சராசரி நாணயம் தன்னல மறுப்பு எவ்வளவு என்பதும், எவ்வளவு பேர் பொதுநலத்துக்காக மாத்திரம் வாழ்பவர்கள் எவ்வளவு தூரம் நடப்பவர்கள் என்பதும் எனக்குத் தெரியும் என்பதை எனது நண்பர்கள் உணர வேண்டுகிறேன்.

– ஈ.வெ.ரா. குடி அரசு 02.07.1949

 

 

You may also like...