65. திருவாரூர் மாநாடு!

திராவிடக் கழகத்தின் – சுயமரியாதை இயக்கத்தின் – பெயரியாரின் பெரும்படைக்கு, என்றைக்குமே முன் வரிசையில் நிற்கும் தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை மாவட்டகழக மாநாடு, திருவாரூரில் இந்த மாதம் 2ந் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாடு, பெயரளவில் ஒரு மாவட்ட மாநாடு என்று கூறப்படவேண்டியதாய் இருக்கின்றது என்றாலும், இயக்க வரலாற்றில் சிறந்த இடத்தை – தனி இடத்தைப் பெற்றிருக்கும் மாநாடு என்பது முக்காலும் உண்மையாகும்.

ஆய்ந்தோய்ந்து பாராமல் பெற்ற அன்னையை வெட்டுவதே அருமைச் சேய்களின் கடன் என்கிற பெரு நீதியை யுணர்த்த வந்த நவீன. பரசுராமர்களால், உண்டு பண்ணப்பட்ட சலசலப்புக்குப் பின்னால் – ஏன், திராவிடக் கழகத்தைச் செல்லாக் காசாக்கி விடுவோம் என்ற அந்த நவீன வர்த்தகர்களின் நாணயத்தை நம்பி, அந்த நிலை எப்பொழுது? எப்பொழுது? என்று ஏங்கித் துடித்துக்கொண்டிருந்த ஆளவந்தோர்களின் அசையா நம்பிக்கைக்குப் பின்னால் –  நம்பிக்கைக்கு நற்சாட்சியாக, நாங்களிதோ புதுக்காசு தயாரித்து விட்டோம் என்று அவர்கள் அறிவித்தற்குப் பின்னால், நடத்திருக்கும் இந்த மாநாடு, உண்மைத் தொண்டர்களுக்குப் பேரூக்கத்தைக் கொடுத்து, ஊராள வந்தவர்க்கு உற்ற நிலையையும் விளக்கி, நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலமுண்டு என்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.

அண்மையில் – சென்ற ஆகஸ்ட்டு மாதம் 7-ந் தேதி திருச்சியில் கூடிய திருச்சி மாவட்டக் கழக மாநாடு, திராவிட இயக்கத்தை சீரழியச் செய்யத் தீராத கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லி, நம் மாஜி தோழர்கள் ஜாலவித்தைகள் செய்து காட்டிக்கொண்டிருந்த நேரத்தில் கூடியது. அந்த ஜால வித்தைக் காட்சியில் அடுத்த பகுதியாக மாய்மாலப் படலத்தில் இறங்கியிருக்கும் வேளையில் கூடியது இந்தமாநாடு.

இந்த மாநாடு கூடிக் கலைந்தது! வேறு இதனால் என்னபலன்? என்கிற ஏளனச் சிரிப்பொலி – ஏளனச் சிரிப்பா? வேதனையின் விம்மலொலி கேட்பதை நாம் மறைக்கவில்லை.

இந்த மாநாடு கூடிக் கலைந்தது, வேறு என்ன பயன் ஏற்படவேண்டும்? திராவிட இயக்கம், ஒரு மின்சார இயக்கம். இயக்கத்தின் தந்தை எத்தனையோ பல்புகளையும் படைக்கும் திறன் படைத்தவர். காலவேகத்தில் எத்தனையோ பல்புகள் மண்டைக் கர்வம் கொண்டு நாமில்லாவிட்டால் வெளிச்சம் ஏது? என்று எண்ணி, மின் சாரத்தையே பழிக்கத் தலைப்பட்டு, எதிர்க்கத் துணிகிறபோது, ஏற்படுகிற நிலை, பிரிவு மட்டுமல்ல; ப்யூஸ் ஆகி விடுவதுதான். பல்பு, ப்யூஸ் ஆகி விடுவதினாலேயே, மின்சாரமிருக்கும் வீட்டில் இருள் அடைந்து விடுமென்று சொல்லிவிட முடியாது. இருக்கலாம், இருள் சிறிது நேரம் நீடிக்கலாம், வேறு பல்பை பொருத்திவைக்கிற கால அளவில்தான் அது என்பதையாரும் மறுக்கமுடியாது.

இந்த உண்மையைத் தான், நாங்களில்லா விட்டால் வெளிச்சம் ஏது? என்று கேட்டு நையாண்டி செய்த – பல்புகளுக்கு, இந்த மாநாடு காட்டியிருக்கிறது. ஆம்! மின்சாரந்தான் முக்கியமேதவிர, பல்பு முக்கியமல்ல, அதுமர்க்குரியாயிருந்தாலும் சரி என்கிற உண்மையைத்தான் இந்த மாநாடு காட்டியிருக்கிறது. வேறு என்ன பலன் ஏற்படவேண்டும் என்று கேட்கிறோம்?

திராவிட இயக்கத்தினுடைய முதல் வேலைத் திட்டம் அறிவுப் பிரச்சாரம்! அது தங்கு தடையின்றி நாட்டில் நடைபெறும் என்பதைத்தான் 4. திருவெறும்பூர் 5. தஞ்சை, 6. ஒரத்தநாடு,                         7. பட்டுக்கோட்டை, 8. அறந்தாங்கி, 9. கண்டியூர் என்கிற பெரியாரவர்களின் சுற்றுப்பயணம் காட்டுகிறது. இது இந்த மாநாட்டின் பின் நிகழ்ச்சியாகத் துவக்கப் பட்டிருக்கிறது. இந்த மாநாடு, நட்டாற்றில் கைவிட்ட நல்லறிவாளர்களை எண்ணி மீண்டும் மொழிப் போரைத் துவக்கத் தலைவரை வேண்டி யிருக்கிறது. நாங்கள் மண் குதிரைகள் அல்ல என்று தலைவருக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறது.

இந்தி எதிர்ப்பா? அல்லது வேறு நடவடிக்கையும்? எதற்கும் எப்போதும் தயார்! என்பதை இந்த மாநாட்டின் வாயிலாக, மாவட்ட மக்கள் உறுதி தந்திருக்கிறார்கள். ஊர் தோறும் சென்று இந்த உண்மையைக் காண்போம், உற்சாகம் கொடுப்போம் என்று தலைவர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லுகிறார். வேறு என்ன பலன் ஏற்படவேண்டும் என்று கேட்கிறோம்.

ஏட்டில் சர்க்கரை என்பதாக எழுதி அது இனிக்கிறதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடும் இயல்பு இல்லாத தலைவர் தான் திராவிடக் கழகத்தின் தலைவர் என்பதை இந்த மாநாடு நாட்டு மக்களுக்கு மீண்டும் எடுத்துணர்த்தி யிருக்கிறது.

மாய்மாலப் படலத்தில் போர்ஜரி வேலை மும்முரமாக நடைபெறுகிறதெனப் பல இடங்களி லிருந்து செய்தி வருகிறது. இதனை மிகமிகப் பெருமையாக மாய்மாலத்தில் இறங்கி யிருப்பவர்களே ஒப்புக்கொண்டு, இப்பேர்ப்பட்ட போர்ஜரி வேலை எங்கும் நடைபெறட்டும் என்று தான் தூண்டு கிறார்கள். வெட்கம்! வெட்கம்!! கட்டுப்பாட்டுக்கும் ஒழுங்குக்கும் பேர்பெற்ற, திராவிட இயக்கத்திலிருந்த மாஜித் தோழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே யுள்ள திராவிடக் கழகங்களையே, தி.மு.க என்று பெயர் மாற்றுவதையும், திராவிடக் கிளைக் கழகத்தின் சொத்துக்களுக்கு தி.மு.க என்று விலாசம் போடுவதையும் தான் குறிப்பிடுகிறோம்.

இப்படி போர்ஜரி பண்ணப்படும் இடங்களில் உள்ள தோழர்கள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாநாட்டின் தலைவர் வற்புறுத்தி யிருக்கிறார். விரோத பாவம் வேண்டாம்! வீண் சச்சரவுக்கு இடங் கொடாதீர் இதுதான் மாநாட்டுத் தலைவர் தோழர் கோவிந்தராசரின் ஆய்வுரை. இதனை நம் தோழர்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். சரியான நேரத்தில், தகுந்த வேளையில் இந்த மாநாட்டை நடத்தி, இயக்கத்தின் ஒரு திருப்பத்துக்கு அறிகுறியாய் விளங்கி நிற்கும், மாநாடு நடத்திய தோழர்களை நாம் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறோம்.

குடி அரசு 08-10-1949

 

You may also like...