28. புதிய மந்திரிசபையும் இந்தியும்
இப்போது குமாரசாமி ராஜா அவர்களைப் பிரதமராகக் கொண்ட சென்னை மாகாணப் புதிய மந்திரிசபை, இந்த மாகாணத்தில், முக்கியமாகத் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலுமாவது, பழைய மந்திரிசபையின் இந்திக் கொள்கையிலிருந்து, ஒரளவு மாறுதலைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பதைக் கண்டு அந்த ஆசையைத் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். பழைய இந்திக் கொள்கையில் ஏதோ ஒரு தவறுதல் – திருத்தவேண்டிய பிழைபாடு இருக்கிறது என்பதை ஸ்துலமாகவாவது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல, பிழைபாட்டைத் திருத்திக் கொள்வதற்கும் முயற்சிக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அந்த அளவுக்காவது வரவேற்கத்தானே வேண்டும்.
இந்தி நுழைப்பு ? கட்டாயமாகத் தமிழ்படிக்கும் நூத்துக்குப் பத்துபேரும் படித்தாக வேண்டும் என்கிற ஏதேச்சாதிகார ஆணை ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியாரால் பிறப்பிக்கப்பட்டு, அவர் மந்திரிசபை ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், அந்தத் திட்டமும் இந்த நாட்டை விட்டு ஒடிப்போன திட்டமாகும். மேலும் நூற்றுக்கணக்கான தாய்மார்களும், ஆயிரக்கணக்கான கட்டிளங் காளையரும் பச்சிளங் குழந்தைகளோடும், நாட்டுமக்களின் தந்தையோடும், வெஞ்சிறைபுகுந்து, கடுங்காவல் தண்டனையேற்று காரியுமிழ்ந்த திட்டமாகும்.
இந்தத் திட்டத்தைத்தான் ? பத்து ஆண்டுகளுக்குமுன் வந்து தோல்வியுற்ற இந்தத் திட்டத்தைத்தான் ? பிறகு வந்த பார்ப்பனப் பிரகாசம் அவர்களின் மந்திரிசபை திரும்பவும் புகுத்துவதற்குப் பின்வாங்கிய இந்தத் திட்டத்தைத்தான் ? ஓமந்தூரார் மந்திரிசபையும் திணிப்பதற்கு முதலில் அஞ்சிய இந்தத் திட்டத்தைத்தான் – பிறகு மூக்கைச் சுரண்டிவிடப்பட்ட ஊமையர்கள் நிலையைப்போல், எப்படியும் இந்த நாட்டில் இந்தியைப் புகுத்தியே தீரவேண்டும் என்கிற மூர்க்கத்தனமான பிடிவாதத்தோடு, பார்ப்பனர்களின் தூண்டுதலுக்குக் கட்டுப்பட்டவர்களாய் – பனியாக்களின் நன்மதிப்புக்குக் குறுக்கு வழி என்று கருதியவர்களாய் – பார்ப்பனர்கள் செய்து தடைபட்டு நிற்பதைப் பார்ப்பனரல்லாதவர்களாகிய நாம் செய்து முடித்தோம் என்கிற வீண் பெருமை தங்களுக்கு ஏன் கிடைக்கக் கூடாது என்று ஆசைப் பட்டவர்களாய், ஓமந்தூரார் மந்திரி சபை சென்ற ஆண்டில் 2-வது உத்தரவு போட்டுக்கொண்டுவந்தது.
இப்படி, மற்றவர்களின் தூண்டு தலுக்காகக் கொண்டுவந்த இந்த உத்தரவை, செயல்படுத்தியே தீருவது என்கிற பிடிவாதக் குணத்தினால், தன் இனப் பெரியாரையும், தன் உடன் பிறப்பாளர்களையும், ஆண் என்றும், பெண் என்றும், கருக்கொண்ட தாய்மார்கள் என்றும் வித்தியாசம் பாராமல், சுடும் மணலில் கால்நடைத் தண்டனை கொடுத்தும், ஒருவேளை இரண்டு வேளை முழுப் பட்டினி போட்டும், ஒரு வாரம்முதல் இரண்டு மாதம்வரை கடுங்காவல் தண்டனை கொடுத்தும், மேன்மை மிக்க நீதிபதி ஸ்தானத்திற்கே களங்கம் உண்டாகும் வகையில், மிக மிக மட்ட ரகமான முறையில் பேசச் செய்தும், சுருண்டு கீழே விழுந்தாலும் தூக்கி நிறுத்தித் தடிமாரி பொழிந்தும். நவீனமனு நீதிப் பரிபாலகராக ஓமந்தூரார் விளங்கினார். இவ்வளவு கடுமையான அவமானங்களையும், சித்திரவதைக் கொப்பான கொடுமைகளையும் ஏற்று அநுபவித்தாலும் கூட புசு புசுத்துப் போய்விடும் என்ற மந்திரிகளின் மனப்பாலைப் பொய்யாக்கி, ஒரு மயிரிழைகூடப் பலாத்காரமின்றி, அற வழியில் நின்று தமிழ் மக்கள் திராவிடக் கழகத்தின் ஆணைக்கடங்கிப் போரிட்டு வருகின்றார்கள். அப்போராட்டம் பள்ளிகளின் விடுமுறையையொட்டி இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வளவும் நமது புதிய மந்திரி சபையினர் – முக்கியமாகப் பிரதமர் அறிந்திருக்க வேண்டும்; அவருக்கு நினைப்பில் இருக்க வேண்டும். நிற்க, புதிய மந்திரி சபையினர், பழைய இந்திக் கொள்கையில், இப்போது எப்படி? எந்த அளவு? மாறுதல் செய்யப் போகிறார்கள் என்பது, அடுத்த மாத முதல்வாரத்தில்தான் திட்ட வட்டமாகத் தெரியும் என்றாலும்.
இந்த மாதம் 18ந் தேதி மந்திரி சபை உப-கமிட்டி என்கிற பேரால் ஒரு நான்கு மந்திரிகள், கல்விச் சீர்திருத்தம் என்கிற பெயரில் கூடி பத்திரிகைகளுக்குத் தந்திருக்கும் செய்தியைக் கவனிப்போம்.
இந்தியா – இந்துஸ்தானியா என்று இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில், இந்தியைப் போதிப்பதென்றும் அதைத் தமிழ் எழுத்தில் சொல்லித்தர ஊக்குவிப்பதென்றும் இந்த உப-கமிட்டி ஒரு முடிவு செய்திருக்கிறது. முடிவு செய்யப்படாத இந்தியை முதல் வாரத்திலிருந்து தொடங்குவதா? இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்குவதா? என்பதை அந்தந்த பள்ளிக்கூடங்களில் நிருவாகிக் களுக்கே விட்டுவிடுவததென்று மற்றொரு முடிவு செய்திருக்கிறது? பாடங்கள் எல்லாம் தாய் மொழியில் என்கிற பொதுவிதியை, மாற்றச் சரித்திரப்பாடத்தை மட்டுமாவது இந்திமொழியில் 4,5,6 பாரங்களில் கற்பிக்க சிபார்சு என்பதாக ஒருமுடிவு ஒரு பிரதேசத்தில் வேறு தாய்மொழியைக் கொண்டவர்களாய் இருந்தால், அவர்களுக்கு எந்த மொழியில். பாடங்களைப் போதிப்பது அந்த அதிகச் செலவையார் ஏற்பது என்கிற விஷயங்களிலும் முடிவுகள் செய்திருக்கிறார்கள்.
இந்தியைத் திராவிடர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை மிக மிக நன்றாக, தெளிவுபட வற்புறுத்தி விளக்கிச் சொல்லப்பட்டு வருவதையறிந்து கொண்டிருந்தும், இந்த மந்திரிசபை உப-கமிட்டி அதாவது மாறுதல் செய்ய முன்வந்த உப-கமிட்டி, அதற்கேற்றவாறு காரியம் செய்யவேண்டும் என்பதைச் சிறிதாவது கவனித் திருக்கிறதா? என்றால் அது சந்தேகமே.
இளம் மாணவர்கள் தலைமையில் ஏககாலத்தில் மூன்று மொழிகளைச் சுமத்துவது, தலைக்கு மிஞ்சிய பாரம் என்பது மட்டும் எதிர்ப்புக்குக் காரணமல்ல. பயனற்ற ஒரு மொழியை – மூட நம்பிக்கைக்கும் பிற்போக்குக்கும் காட்டுமிராண்டித் தன்மைக்கும் கருவியாக இருக்கும் மொழியை, ஏன் இந்த நாட்டில் புகுத்த வேண்டும் என்பது தான் எதிர்த்து வருபவர்களின் கேள்வி. இந்தக் கேள்வியை அநியாயமானது அல்லது அபாண்டமானது என்று எந்தக் காரணங் கூறியும் மறுக்க முடியாத நம் மந்திரிகள், அந்தக் கேள்வியை உண்மையென்று ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், அதற்கல்லவா முதலில் பரிகாரம் செய்ய முன்வரவேண்டும். அதை விட்டு விட்டு ஏதோ ஒரு மாறுதல் என்று பேருக்காகச் செய்வதென்றால், அந்த மாற்றம் எப்படிமக்களுக்கு மனமாறுதலை உண்டாக்கும்?
தமிழ் எழுத்து மூலம் அல்லது தாய்மொழி எழுத்து மூலம் இந்தி கற்பிக்கப்படும், தேவநாகரி எழுத்து கைவிடவேண்டும் என்று கூறுவதைக்கூட, வற்புறுத்தி முடிவுகட்டாமல், பரீட்சார்த்தமாகச் செய்து பார்க்கவேண்டும் என்றுதான்.
இந்த உப-கமிட்டி வாழைப்பழத்தை எடுத்து அழுத பிள்ளைக்குக் காட்டுவது போல் கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் 4,5,6 பாரங்களில் சரித்திர பாடத்தை மட்டுமாவது இந்தியில் சொல்லிக் கொடுக்க, இந்திப் பிரச்சாரசபையின் சிபார்சின் பேரில், ஆச்சாரியாரின் முத்திரையைக் குத்தி பரிசீலனைக்கும் வைத்திருக்கிறது என்றால், இந்த உப-கமிட்டியின் யோக்கியதையைப் பற்றி எவருக்கும் சந்தேகந்தானே உண்டாகும்?
இந்த உப – கமிட்டியில் அங்கம்வகித்த மந்திரிகள் என்று, தோழர்களான பக்தவத்ஸலம் மாதவமேனன், சந்திரமௌளி, ஏ.பி.ஷெட்டி ஆகிய நால்வரின் பெயர் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையோருடைய தகுதி முக்கியமாக முதல் மூவருடைய தகுதி என்னவென்றால், திராவிடக்கழகத்தார் என்னென்ன கூறுகிறார்களோ, அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதுவே தங்களுக்குத் தகுதி என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள். திராவிடக் கழகத்தார் மேட்டைமேடு என்று கூறினால், அதைப் பள்ளம் என்று சாதிப்பதுதான் தங்களுடைய நித்தியத் தொழில் தங்கள் வாழ்வு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். இப்பேர்ப்பட்ட மகானுபாவர்களைக் கொண்டு, இந்த நாட்டு மக்களின் தலையெழுத்தை நிர்ணயிருக்கும் ஒரு காரியத்தைச் செய்யச் செய்யலாமா?
எந்த மந்திரி சபை மாறினாலும், இப்போதைய அரசியல் அமைப்பில், அது பனியாக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் கட்டுப் பட்டதாகவும், அவர்களின் குற்றேவல்களையும் ஏற்றுச் செய்ய வேண்டியதாகவும் தான் இருக்கும் என்பதை, மந்திரிசபைகளைக் காட்டிலும் நாம் நன்றாக உணர்வோம். ஆதலால் இப்போதைய மந்திரிசபை திராவிடர்களின் கருத்தையேற்று அதற்கேற்றவாறு நடந்து கொண்டு விடும் என்கிற நாம்பிக்கை நமக்கில்லை.
பனியா ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட வகையில்தான், ஏதோ செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது என்று எண்ணுவார் களேயானாலும், திராவிடர்களின் நல்வாழ்வுக்குத் திராவிடர்கள் ஏற்ற விலையைக் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று சொல்லுவதா யிருந்தாலும், நாம் புதிய மந்திரிசபையினருக்குச் சொல்லும் ஆலோசனை இதுதான்.
2-வது பாரத்திலிருந்து இந்தியைத் தொடங்கலாம், அல்லது பள்ளிக்கூட நிர்வாகிகளின் இஷ்டத்துக்கு விட்டுவிடலாம் என்கிற ஆலோசனையை, 4-வது பாரத்திலிருந்து தொடங்கலாம் என்று வரையறுத்து, அது கட்டாயமில்லை என்று ஏன் தெளிவுபடுத்தக்கூடாது?
ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாய், இன்று நான்கு மொழியினராகக் காணப்படும் திராவிடர்களுக்கு, வடவர் ஏகாதிபத்தியத்தின் பலவந்தத்தால் புகுத்தப்படும் இந்தியை அல்லது இந்துஸ்தானியை, அவரவர் தாய் மொழி எழுத்தில் கற்றுக் கொடுப்பது என்கிற முறையைக் காட்டிலும், நால்வருக்கும் பொதுவான – என்றைக்கும் தேவையான ஆங்கில எழுத்தில் ஏன் அதை கற்பிக்கக் கூடாது? இதைப் புதிய மந்திரி சபை சிந்திக்குமா? சிந்தித்துச் செயல் புரியுமளவுக்கு உரமுண்டா?
குடி அரசு, தலையங்கம் 21.05.1949