26. காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு!

வகுப்புகள் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்கிறார்கள்; ஆனால், பார்ப்பனர்களை மட்டும் திட்டுகிறார்களே ஏன்? இது காங்கிரஸ் ஊழியர் மாநாட்டில் பேசிய ஒரு தியாக சொரூபி திராவிடக் கழகத்தின் போக்கை, அதன் நடவடிக்கையை எந்த அளவு உணர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் நம்மீது ? கழகத்தின் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை, இந்த அய்ந்தேக்கர் வாலாக்கள் மட்டும்தான், வேறு பேச்சுப் பேசுவதற்குப் வகையோ, அதற்கான வேலைத் திட்டமோ இல்லாமல், ஏதோ பேசியாக வேண்டும், அதுவும் காரசாரமாயிருக்க வேண்டும் என்று நினைத்துப் பேசிக்கொண்டு வருகிறார்கள் என்பதல்ல; பொதுவாகவே பல திராவிடத் தோழர்களும் அதாவது தியாக மூர்த்திகள் அல்லாத பல திராவிட தோழர்களும் அப்படித்தானோ என்று மயங்குகிறார்கள் அல்லது மயங்கத் தகுந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த மயக்கத்தை ? தவறான எண்ணத்தை ? திரிபு உணர்ச்சியைப் போக்கும் முறையில் திராவிடக்கழகம் பத்திரிகைகளிலும், மேடைகளிலும் விளக்கி வந்திருக்கிறது என்றாலும், அந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ளுவதற்கோ அல்லது ஏற்றுக் கொள்வதற்கோ மறுத்து வரும் குருடர்களும் செவிடர்களுமான சொரூபங்களுக்காக, அவர்களைப் புரியவைத்து விடவேண்டு மென்பதற்காக இன்று நாம் இதை எழுதவில்லை.

பொதுவாகத் திராவிடத் தோழர்கள் எல்லோருக்குமே ? அதாவது நம்மைத் தவறாகக் கருதிக் கொண்டிருக்கும் திராவிடத் தோழர்கள் எல்லோருக்குமே, அவர்கள் தவறைத் திருத்திக் கொள்ள, இதுவும் ஒரு சந்தர்ப்பமாக ஏன் இருக்கக்கூடாது என்கிற ஆசையினாலேயே இதை எழுதலானோம். வகுப்புகளும் ஜாதிகளும் ஒழியவேண்டுமென்கிறோம். அதுமட்டுமா? மனிதன் மனிதனாக வாழ வழி செய்ய வேண்டு மென்கிறோம்.

இது நூத்துக்கு நூறு உண்மை! ஆனால் நாம் பார்ப்பனர்களைத் திட்டுகிறோம் என்று கூறுகிறார்களே, அல்லது நினைக்கிறார்களே, இது அதைப்போலவே நூத்துக்கு நூறு தவறான உணர்ச்சி, பொய்யான கருத்து! என்பதை முதலிலேயே, திரும்பவும் வற்புறுத்திக் கூறுகிறோம். மறக்க முடியாத பார்ப்பனக் கொடுமைகளைக் குறித்துப் பெரியாரவர்கள் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையை, நாம் மற்றொரு புறத்தில் வெளியாக்கியிருக்கிறோம்.

அதை இன்றைய அரசியல் தலைவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் திராவிடத் தோழர்கள் யாராயிருந்தாலும் நன்றாகக் கருத்தூன்றிப் படிக்க வேண்டிடும். ஏன்? நாளைக்கு என்று, அவர்களுக்குப் பார்ப்பனர்களால் இன்றைக்கே தோண்டி வைத்து, கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் படுகுழி, எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.

நிற்க, பார்ப்பனக் கொடுமைகள் என்பதாகப் பெரியாரவர்கள் பார்ப்பனீயக் காங்கிரஸில் தாம் பட்டு அநுபவித்த கொடுமைகளைக் கூறுவது ? சமுதாயத்தின் முதற்படியில் நெடுங்காலமாயிருந்துவர சாஸ்திரத்தின்பேராலும், கடவுள் பேராலும், சட்டத்தின் பேராலும் பிறப்புரிமை பெற்றிருக்கிறோம் என்று கூறி ? நடத்தி வருகிற பார்ப்பனர்கள் எவ்வளவு கீழ்தர முறைகளைக் கையாண்டு, எப்படியெல்லாம் திராவிடச் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதா?

பார்ப்பனர்களைத் திட்டுவதாகும். 100-க்கு 3 பேராயிருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 50 பேர் மோசடி செய்திருக்கிறார்கள், திருடியிருக்கிறார்கள், அயோக்கியத்தனம் செய்திருக்கிறார்கள் என்று கோர்ட்டிலுள்ள ரிகார்டு சொல்லுமானால்; அந்தரிக்கார்டை எடுத்துக்காட்டிப் பார்ப்பனர்கள்.

இப்படியெல்லாம் நடந்திருக்கிறார்கள், அப்படியிருந்தும், 100-க்கு 10,20 பேர் குற்றம் செய்தார்கள் என்பதற்காக ஒரு ஜாதியையே குற்ற பரம்பரையினர் என்று சொல்லுவது சரியா? நீதியா? என்பது போலத்தானே பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளிப் படுத்தியிருப்போம். அது எப்படிப் பார்ப்பனரைத் திட்டுவதாகும்? மறுக்க முடியாத வகையில் அயோக்கியன் என்று முடிவு கட்டப்பட்ட ஒருவனை, அவனைத் தெரிந்து கொள்ளாத மற்றவர்களிடம் ? அவனோடு பழகிக் கொண்டிருக்கிற மற்றவர்களிடம்.

இவன் இப்படி யெல்லாம் அயோக்கியன் என்று முடிவு செய்யப்பட்டவன், முடியுமானால் பழகாதீர்கள், இல்லாவிட்டால் ஜாக்கிரதையாய்ப் பழகுங்கள் என்று கூறுவதா அயோக்கியனைத் திட்டுவதாகும்?

இதை அந்த அயோக்கியன், தன்னைத் திட்டுவதாகக் குற்றம் கூறுவானென்றால், அதில் எந்த அளவுக்கு உண்மையும் நியாயமும் இருக்கமுடிமோ, அந்த அளவுதானே நாம் பார்ப்பனர்களைத் திட்டுவது என்கிற குற்றச்சாட்டிலும் இருக்கமுடியும்? அயோக்கியனை, அயோக்கியன் என்று அம்பலப்படுத்துவதால், அந்த அயோக்கியனின் நடவடிக்கைக்கு ஒரளவு குந்தகம் உண்டாகித்தான் தீரும் என்பதை ஒப்புக் கொள்வோம். அதனாலேயே, அதாவது அயோக்கிய நடவடிக்கையை அவன் செய்ய முடியாததினாலேயே, அவன் எப்படிக் கோபித்துக் கொண்டு விடமுடியும், அவன் கோபிப் பதிலாவது ஏதோ ஒரு வகையில் அர்த்தம் இருக்கிறது என்றாலும்,அவனுக்காக மற்றவர்கள் கோபிப்பதே, வருத்தப்படுவதோ எந்த வகையான மனிதத் தன்மையாகும் அல்லது எந்த வகையான ஜீவகாருண்ணியமாகும்? என்று கேட்கிறோம்.

ஆகவே, பார்ப்பனரைத் திட்டுகிறோம் என்பது எவ்வளவு அர்த்தமற்ற ? பொறுப்பற்ற குற்றச்சாட்டு என்பதை யோசித்துப் பார்க்கும்படி திராவிடத் தோழர்களை வேண்டுகிறோம். அதோடு வகுப்புகள் மறையவேண்டும், ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்கிற காரியத்துக்காகத் திராவிடக் கழகம் என்ன செய்திருக்கிறது என்பதையும் ? முக்கியமாக அதற்கான பரிகாரம் எது என்று நினைத்துச் செய்து வந்திருக்கிறது காட்டுவது அவசியமாகிறது.

பார்ப்பனர்களின் நன்மைக்காக ? அவர்களின் வருவாய்க்காக ? ஆதிக்கத்திற்காக பல நூறு வகுப்புகளாகவும், பல ஆயிரம் ஜாதிகளாகவும், பார்ப்பனர்களால் பிரித்து வைக்கபட்டபடி பிரிந்திருக்கும் மக்களைக் கொண்ட இந்த நாட்டில், எல்லோரும் இந்நாட்டு மக்கள் இந்த நாட்டு மன்னர்கள் என்கிற நிலையை உண்டுபண்ண வேண்டுமென்றால், அதற்கு என்ன வழி? கீழ் நிலையில் இருப்பவர்கள் கீழான நிலைமையில்தான் இருந்து வரவேண்டும், மேல் நிலையில் இருப்பவர்கள் அந்த மேலான நிலையில்தான் இருந்து வரவேண்டும் என்று கூறுவதாக, அதற்கான பரிகாரமாகும்? அல்லது கீழ் என்பதும் மேல் என்பதும் ஒழிந்து எல்லோரும் ஒன்று என்னும் நிலைக்குவர முயற்சிக்க வேண்டும் என்று கூறுவது பரிகாரமாகுமா?

பிந்தியதுதான் பரிகாரம் என்றால், அதை நடைமுறையில் சாத்தியமாக்க கூடிய ? குத்துப் பழிவெட்டுப்பழி இல்லாத, அதாவது ரத்தப் புரட்சி இல்லாத சமாதானமுறை, வகுப்புவாரி உரிமைப்படி அந்தந்த மக்களுக்கு, ஒத்தவகுப்பு உரிமையை மறுக்காமலிருப்பதும் ? தடைபோடாமலிருப்பதும் தானே ஆகும். இதனுடைய உண்மையை ? நியாயத்தை ? அவசியத்தை உணர மறுப்பது அல்லது திரித்துக் கூறுவது எவ்வளவு வடிகட்டின மோசடியாகும்? வகுப்புவாரி உரிமையை ஏதோ ஒரு அளவுக்காவது அன்றைய ஜஸ்டிஸ் கட்சியார் உணர்ந்து, அதற்கான விகிதாச்சார முறையை வழங்கவேண்டுமென்று அஸ்திவாரம் போட்டதினாலேயே, இந்த நாடடில் உண்டாகியிருக்க வேண்டிய ஒரு பெரும் ரத்தப் புரட்சி உண்டாகவில்லை என்பதைப் பார்ப்பனர்கள் ஏனோ மறந்துவிடுகிறார்கள்?

இந்த வகுப்புவாரி உரிமைக்கு, கிரமமாகப் பார்ப்பனர்கள் நன்றி கூற வேண்டியதிருக்க, அதைவிட்டு விட்டு அன்றிலிருந்து இன்றுவரை அதை ஒழித்துக்கட்டுவதிலேயே கண்ணும் ருத்துமாயிருந்து காரியம் நடத்திக்கொண்டுவருவதை, சமாதான முறையில் தடுத்து வருபவர்கள் யார் என்பதை நம் அருமைத் திராவிடத் தோழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வகுப்பு விகிதாச்சாரப்படி உத்தியோகங்களும், கல்லூரிகளில் ஸ்தானங்களும் என்று, இன்றைக்கிருக்கிற அரைக்கால் நியாயம்கூட இல்லாவிட்டால், திராவிடத் தோழர்களில் இன்று நூற்றுக்குப்பத்துப் பேராவது படித்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலையையோ, பார்ப்பனர்கள் விகிதாச்சாரத்துக்கு அரைக்கால் திட்டமாவது திராவிடர்கள் உத்தியோகங்களில் இருந்துவருகிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலையையோ காணமுடியுமா? என்பதைத் திராவிடர்கள் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்த அளவுக்காவது இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதனாலேயே தன் பதவியை விட்டு ஒடிப்போகவேண்டிய அவசியத்துக்கு ஓமந்தூரார் வந்துதீர வேண்டிய நிலையில், பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலித்துவிட்ட தென்றாலும்; இந்த வகுப்புரிமைக்காக அன்றுதொட்டுப் பாடுபட்டு, அதனாலேயே பார்ப்பனர்களின் தூற்றுதலுக்கும் பழிக்கும் ஆளாகி, கஷ்ட நஷ்டங்களுக்கிடையேயும் சலியாது உழைத்துவரும் பெரியார் அவர்களுக்கு, நன்றி கொல்லாத திராவிடர்கள் எவ்வளவு தூரம் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

ஆங்கில அரசாங்கத்தின் 150 வருஷத்திற்கு மேற்பட்ட ஆட்சியின் பலனாய் ? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததின் பலனாய், பிராமணரல்லாத வகுப்புகள் எவ்வளவு முற்போக் கடைந்திருக்கிறது என்று பார்த்தால் உண்மைப் பிராமணரல்லாத ரத்தம் ஒடும் மனிதன் துடிக்காமல் இருக்கமாட்டான். நம் தென்னாட்டு அரசாட்சியில் பிராமணரல்லாதார் நிலை எப்படி இருக்கிறது, பிராமணர்கள் நிலை எப்படி இருக்கிறது? என்பது, கீழ்க்கண்ட கணக்குகளினால் அறிந்து கொள்ளக்கோருகிறோம். நமது அரசாங்கத்தில் 35 ரூபாய் சம்பளத்திற்குக் கீழ்ப்பட்ட உத்தியோகங்களில் அதாவது வாசல் கூட்டுவது, மேஜை துடைப்பது, பங்கா இழுப்பது, அதிகாரிகளுக்குக் கால் கை அழுத்துவது முதலிய வேலைகளில் பிராமணரல்லாதார் 37125 பேர்கள் இருக்கிறார்கள்.

பிராமணர்கள் 1810 பேர் மாத்திரமே இருக்கிறார்கள். இவர்களும், சம்பளம் குறைவாயிருந்தாலும் தளுக்காய் மேலதிகாரிகளை ஏமாற்றி, மேற்படி வேலைகளைப் பார்க்காமல் அதிகாரம் செலுத்தி வருவார்கள். 35-க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் உள்ள உத்தியோகத்தில் பிராமணரல்லாதார் 7003. பிராமணர்களோ 10934. இந்த இடத்திலேயே நம்மைவிட பிராமணர்கள் 4000 பேர் அதிகமாகி விட்டார்கள். 100-க்கு மேற்பட்டு 250ரூ. வரை உள்ள உத்தியோகத்தில் பிராமணர் 2679 பேரும், பிராமணரல்லாதார் 1666 பேருமாயிருக்கிறார்கள். இந்த இடத்தில் பிராமணரல்லாதாரைவிட பிராமணர்கள் 1000 பேர் அதிகமாயிருக்கிறார்கள். 250 ரூபாய்க்கு மேற்பட்ட உத்தியோகங்களில் பிராமணர்கள் 594, பிராமணரல்லாதார் 280 பேர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றுக்கு இரண்டிற்கு மேல் போய் விட்டார்கள். கலெக்டர் உத்தியோகத்தில் 11 உத்தியோகம் இந்தியர்கள் வகிப்பதில் 9 பேர் பிராமணர்கள். இந்த இடத்தில் ஒன்றுக்கு அய்ந்தாய் விட்டார்கள். ரிவின்யூ போர்டில் உள்ள ஒரு இந்திய மெம்பர் உத்தியோகத்தில் பிராமணர்தான் இருக்கிறார்.

இந்தியருக்குக் கொடுக்கப்பட்ட கைத்தொழில் டைரக்டர் வேலையில் பிராமணரே இருக்கிறார். அரசாங்கக் காரியதரிசி வேலையில் உள்ள இந்தியரும் பிராமணரே. 200 ஜில்லா முன்சீப்புகளில் 150 பேர் பிராமணர்கள். 61 சப் ஜட்ஜூகளில் 45 பேர் பிராமணர்கள். ஜில்லா ஜட்ஜூகளில் 7 பேர் பிராமணர்கள். அதாவது எடுபிடி உத்தியோகங்களில் பிராமணரல்லாதாரும், 100, 500 1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்களில் பிராமணர்களும் அனுபவிக்கிறார்கள்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சொல்லும் நம் தோழர்களை நாம் ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது: இவ்வித 1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்கள் பிராமணரல்லாத இந்துக்கள் என்போராகிய 100ல் 70பேருக்கு மேலாக இருக்கும் பிராமணரல்லாதாருக்குக் குறைவாயிருப்பதற்கும் 100ல் 3பேராயிருக்கும் பிராமணர்களுக்கு ஏகபோகமா யிருப்பதற்கும் யோக்கியதை இல்லாததாலா வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாத தாலா என்று கேட்பதோடு, நம் தோழர்கள் கோரும் சுயராஜ்யமோ சீர்திருத்தமோ வரவர பிராமணர்களுக்கு உத்தியோகம் பெருக்கமாகுமா? அல்லது ஏழைகளுக்கு வரி குறைந்து தொழிலாளிகளுக்குத் தொழில் கிடைக்குமா என்று கேட்கிறோம்.

இது பெரியாரவர்கள் 18.04.1926ல் வகுப்புவாரி உரிமை என்கிற தலைப்பில் எழுதிய குடி அரசு தலையங்கமாகும். இந்த உரிமைப் போராட்ட அடிப்படையினால் தான், பெரியாரவர்கள் காங்கிரசை விட்டு விலக நேர்ந்தது என்பதும், அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் போராட்டமே கொண்டிருக்கிறது என்பதையும் யாரே மறந்துவிட முடியும்?  பெரியாரவர்கள் 1926ல் உள்ள நிலைமையை ஒருவாறு எடுத்துக் காட்டியிருப்பதையும், இன்று அந்த நிலைமை எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த மாறுதல் யாரால்? எக்கட்சியால்? ஏற்பட்டது என்று கேட்கிறோம். மேலும் இந்த நிலைமையைப் புள்ளி விபரங்களோடு எடுத்துக்காட்டி, இன்றைக்கு நாம்தான் நீதிக்குப் போராடுகிறோமே தவிர வேறு யாருக்காவது இதைக் கேட்கத் தைரியமாவது ஏற்பட்டதா? என்றும் கேட்கிறோம்.

இதைப் பார்க்கும் போது, இன்றைக்கு சர்க்கார் கணக்குப்படி 3 பேராயிருக்கும் பார்ப்பனர்களுக்கு 14 ஸ்தானமும், பார்ப்பனரல்லாத முஸ்லிம் அல்லாத, கிறிஸ்துவரல்லாத, ஆதிதிராவிடரல்லாத 85 பேராயிருக்கும் திராவிடர்களுக்கு 56 ஸ்தானமும் என்றால் ? இந்த முறை கேடான நீதிக்குக்கூட, லட்சுமிகளும் லட்சுமி புருஷர்களும் துடியாய்த் துடிக்கின்றார்கள் என்றால், இந்த அக்கிரமம் தொடர்ந்து இருந்து வரவேண்டியதுதானா? இதைக் கேட்பவர்கள் யார்? அருமைக் காங்கிரஸ் திராவிடத் தோழர்களே எண்ணிப்பாருங்கள்.

தலையங்கம், குடி அரசு 14.05.1949

 

 

You may also like...