37. விடுதலைக்கு ஜாமீன்!

திராவிடர் கடமை என்ன?

நம் விடுதலைக்கு மீண்டும் 10,000 ரூபாய் ஜாமீன். சென்ற வருஷங்கட்டிய ரூபாய் இரண்டாயிரத்தையும் பறிமுதல் செய்துவிட்டோம், இந்த வருஷத்தில் இன்னும், 10,000 ரூபாய் கட்டு! இன்றேல்…..என்கிறது நம் பார்ப்பனீய சுயராஜ்ஜிய சர்க்கார். திராவிட நாடும் ரூ.3,000 ஜாமீன் கட்டவேண்டுமாம்.

விடுதலை திராவிடர்களுக்காகப் பாடுபடக்கூடிய ஒரே ஒரு தினசரிப் பத்திரிகை. இது தோன்றி 10, 15 ஆண்டுகளாகத் திராவிடர் வாழ்வையே தன் குறிக்கோளாகக்கொண்டு, எவ்வளவு அமைதியான முறையில், எத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கிடையேயும் மனஞ் சலியாமல், பலாத்கார உணர்ச்சியில் நாடு இறங்கி விடக்கூடாதே என்கிற பெருங்கவலையோடு பாடுபட்டு வருகிறது என்பதை, நாட்டு நிலையில் அக்கரையுடைய எவரும் அறிந்திருக்கவேண்டும்.

திராவிடர்களுடைய கல்விக்காக ? செல்வத்திற்காக ? மானத்திற்காக ? பெருமைக்காக ? எல்லா வகையிலும் முன்னேறி இந்நாட்டு மக்களும் உலக மக்களோடுச் சரிசமானமாக வாழ வேண்டு மென்பதற்காக பாடுபடக்கூடிய ஒரேஒரு தினசரி விடுதலை.

பார்ப்பனர்களின் தில்லு முல்லுகளையும், சூழ்ச்சி வேலைப்பாடுகளையும் அம்பலப்படுத்தி, பார்ப்பன நச்சு வலையில் மக்கள் மேலும் மேலும் விழுந்து கேடுறா வண்ணம் எச்சரித்து வரும் ஒரே ஒரு தினசரி விடுதலை.

வடநாட்டுப் பொருளாதாரப் பிடிப்பு, திராவிடத்தை எவ்வாறு நெருக்கிக்கொண்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டி, இந்த நிலைமை நீடிக்க திராவிடம் எப்படிச் சீரழியும் என்பதை மக்கள் மனக்கண் முன் காட்டிவரும் ஒரே ஒரு தினசரி விடுதலை. சின்னஞ் சிறிய சிற்றூரில் ஒரு திராவிடன் பட்டுவரும் அவமானத்திலிருந்து, இன்றைய மந்திரிகள்படும் அவமானத்தையெல்லாம் தன் அவமானம் என்று கருதி, அவற்றைத் துடைக்கப்பாடுபட்டுவரும் ஒரே ஒரு தினசரி விடுதலை.

இந்த விடுதலைக்குத்தான் ஓமந்தூரார் ஆட்சியில், ஓமந்தூராரையறியாமலே  (ஆனால் அவர் கையெழுத்துப் போட) ரூ. 2000 ஜாமீன் கேட்கப்பட்டது. திராவிடப் பாட்டாளி மக்களால், ஜாமீன்கேட்ட சர்க்காரைத் தள்ளுவோர் நாணித் தலை குனியும் வண்ணம், போதும் போதும் என்று சொல்லும்வரை, அப்போது பணங்களை வீசி எறியப்பட்டது.

இந்த ரூ.2,000-ம்தான் இப்போது பறிமுதல் செய்யப்பட்டதாம். வேர்வை வழிய ரத்தத்தைச் சுண்டவைத்து உழைத்து, உழைத்த பயனால் கிட்டிய ஒரு பகுதியில், தங்கள் வாழ்க்கைத் தேவையைக்கூடச் சுருக்கிக் கொண்டு, தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் பத்திரிகை நின்றுவிடக் கூடாதே என்கிறகவலையும்; ஏழைகளை வதக்கிக் கொடுமைப்படுத்த எண்ணும் எத்தர்கள் வலையில் சர்க்கார் சிக்கிவிட்டார்களே, இந்த எத்தர்கள் கொட்டத்தைத் தவிடுபொடியாக்குவோ மென்கிற முனைப்பும் தூண்ட, வீசி எறியப்பட்ட பாட்டாளிகளின் ரத்தத் துளிகள்தான் அத்தனையும்.

பாட்டாளிகளின் ரத்தத்தைப் பருகி ருசிகண்ட சென்னை சர்க்கார், அந்த ரத்தவெறி எவ்வளவு கொண்டலைகிறது என்பதைக் காட்டுவதுதான், விடுதலைக்கு மீண்டும் இந்த புது 10,000 ரூபாய் ஜாமீன். ஏன் இந்த இரட்டை நடவடிக்கை? விடுதலை அப்படி என்ன குற்றம் செய்துவிட்டது? ஜாமீனுக்கு என்ன காரணம் என்பதை இந்த மந்திரிக்கிளிப் பிள்ளைகள் பத்திரிகைகளுக்குக் கொடுத்த அறிக்கையில் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வகுப்புத் துவேஷம் வகுப்புத்துவேஷம் என்பதைத்தான் இந்தக் கிளிப் பிள்ளைகள் திருப்பித் திருப்பிச் சொல்லியதாய் இருக்கமுடியும். இந்த வகுப்புத் துவேஷம் என்கிற பூச்சாண்டி, நீதி மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் தோலை உரிக்காதவரை, பூச்சாண்டிப் பயந்தான் காட்டிக் கொண்டிருக்கும் இந்த சர்க்கார் என்கிற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டியதாயிருக்கிறது.

விடுதலைக்குக் கேட்கப்பட்டிருக்கும் இந்த பத்தாயிரம் ரூபாய் ஜாமீன், சென்னை மாகாணத்தில் இதுவரை எந்தப் பத்திரிகைக்கும், அடக்குமுறைக்குப் பேர்போன வெள்ளையர்கள் ஆட்சியில் கூட கேட்கப்பட்டதில்லை. இது சரித்திரத்தில் காணாத புதுமையான ? ஆனால் ஞான சூன்யமான கொடுமை என்று கூறுகிறது தேசீயத் தினசரி

இந்த 10,000 ஜாமீன் என்கிற நடவடிக்கை, இன்றைக்குப் பத்திரிகைகளில் காணப்பட்டாலும், கூட இந்த நடவடிக்கை என்கிறபேச்சு 7,8 மாதங்களுக்கு முன்னாலேயே, ஓமந்தூரார் மந்திரிசபை இருந்தபோதே நடந்ததாகும். வடநாட்டுக் கங்காணியான கவர்னர் ஜெனரலுக்குக் கருப்புக்கொடி! வட நாட்டு மைனர் ராஜாவான சென்னை மாகாணக் கவர்னருக்குப் பகிஷ்கார நிகழ்ச்சி! ஆகிய சம்பவங்களைக் காரணமாகச் சொல்லியே இந்த நவடிக்கை பேச்சு நடைபெற்றதாகும்.

இப்படி ஆரம்பத்தில் இருந்த நிலைமையைத்தான், அட்வைசரிக்கமிட்டி என்கிற பெயரால் சர்க்காருக்கு பத்திரிகை சம்பந்தமாய் ஆலோசனை சொல்வதற்கென்று இந்து, சுதேசமித்திரன், கல்கி போன்ற பார்ப்பனச் சகுனி மாமாக்களைப் பெரும்பாலோராய்க் கொண்டிருக்கும் கமிட்டி, இந்த நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்தித் தூண்ட, மலையாள மாதவமேனரும் ஜம்பத்துக்குப் பேர் வாங்க நினைக்கும் தோழர் பக்தவத்சலமும் ஆதரிக்க, மேலிடம் கட்டளையிட, ராஜபாளையத்தார் அறிந்தோ அறியாமலோ கையெழுத்துப் போட, இப்பொழுது தலை எடுத்திருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், பத்திரிகை ஏதோ குற்றஞ் செய்துவிட்டது, அந்தக் குற்றத்திற்காக இந்தத் தண்டனை என்பது அல்ல. எப்படியும் இந்தப் பத்திரிகைகளை ஒழித்துவிடவேண்டும். சர்க்கார் இதற்காகத் தடைபோட்டு ஒழித்ததாகவும் இருக்கக்கூடாது.

தடையும் போடக்கூடாது, பத்திரிகைகளும் நின்றுவிடவேண்டும் என்பதுதான். காரணம், இந்த ஆலோசனை கூறிய கல்கி கும்பல், திராவிட இயக்கம் 10,000 ரூபாய் என்றால் பதுங்கிவிடும், அத்தனை ரூபாயை அள்ளிக்கொடுக்க அவர்களிடம் பஜாஜ்கள், பிர்லாக்கள் பரம்பரையினர் இல்லை என்பதாகக் கணக்குப் போட்டிருப்பதுதான்.

இப்படித் தென்னாட்டுப் பார்ப்பயனர்கள் கணக்குப் போட்டுக்காட்ட, இது நூற்றுக்கு நூறு சரி என்று பட்டேல் பெருமானைக் கொண்ட மத்திய சர்க்கார் டிக்மார்க் செய்ய, யார் தலையை வெட்டுகிறோம் என்பதையறியாமல்தான் அறிந்து கொள்வதற்கான சிறுபிள்ளை,  தன்மை விலாகாமையில் தான் இந்த நடவடிக்கை நம் திராவிட மந்திரிசபையினரால் எடுக்கப் பட்டிருக்கிற தெனலாம். இப்படிப் பார்ப்பனர்களுக்கும் ? வடநாட்டுப் பனியாக்களுக்குமாக இங்கு நடந்து கொண்டிருக்கும் ஒரு சர்க்கார், இப்படி 10,000 ஜாமீன் கேட்பதை, தேசீய தினசரி கொடுமை! கொடுமை!! என்று கூறுவதைப்போல, நாமும் கொடுமை என்று கூற முன்வரவில்லை. விரையைக் கசக்கிக் கசக்கி, வேதனையைப் பெருக்கி, ஆடுமாடுகளைக் கொல்லாமல் கொன்று, யாக வேள்வி நடத்து தலைப் புண்ணிய கர்மமாகக் கொண்ட பார்ப்பனர்கள், கொடுமை என்ற கருத்தோடு செய்யும், ஒரு காரியத்திற்கு யார்தான் எந்த வரையறையைக் காட்ட முடியும்? ஆகவே பார்ப்பனீயத்தின் கொடுமைகளில் இது ஆயிரத்தில் ஒன்றுகூட ஆகாது என்றே சொல்லவேண்டும்.

நிற்க, பார்ப்பன – பனியாக்களின் ஏவலாட்களாய் நடந்து கொண்டுவரும் இந்த சர்க்கார், இந்த விஷயத்தில் புனராலோசனை செய்யவேண்டும் என்று தினசரி கேட்பதைப் போலவும் நாம் கேட்கவில்லை. காரணம் புனர் ஆலோசனை செய்வதே, முதல் ஆலோசனை நடந்திருந்தால்தானே. முதல் ஆலோசனைக்கே வேலை தராமல், அதாவது சுயேச்சையாகச் சிந்தியாமல், வஞ்சகர்களின் தூண்டுதலுக்கு சிக்கியவர்களாய், ஆலோசனையை இழந்து செய்யும் ஒரு காரியத்தில், புனர் ஆலோசனைக்கு எப்படி இடம் இருக்கமுடியும்?

இந்த சர்க்காரின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது, ஜனநாயகத்துக்குப் புதைக்குழி தோண்டுவது, ஒருதலைப்பட்சமானது, மந்திரி சபைக்கே மாசைத் தருவது, ஞானசூன்யமானது, என்றெல்லாம் தேசீயத் தாளாகிய தினசரியே எடுத்துக்காட்டியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? ஆனால் பொறுப்பை பிறருக்குக் கொடுத்துவிட்டு, பேரளவில் பொறுப் புடையவர்களாய் நடக்கிறவர்களிடத்தில், அதிகாரத் துஷ்பிரயோகம் என்றோ, ஜனநாயகத்துக்குப் புதை குழி என்றோ, ஒரு தலைப்பட்சமானது என்றோ எடுத்துக்காட்டுவதெல்லாம் என்ன பயனைத் தரும்?

எதிர்க்கட்சிப் பத்திரிகைகளே இருக்கக்கூடாது என்கிற நோக்கத்தோடு, இப்பொழுது கேட்கப்பட்டிருக்கும் ஜாமீன் நடவடிக்கைகள், காங்கரஸ் சர்க்காருக்குச் சாவுமணி அடிக்கப் பட்டிருக்கிறது என்பதை வற்புறுத்துவது ஆகும் என்றே நாம் கருதுகிறோம். எப்படியும் ரூ.10,000 ஜாமீன் கட்டவேண்டும். இதுதான் திராவிடர்கள் முன் இப்போதுள்ள பிரச்சனை.

சர்க்காரின் அக்கிரமமான இந்த நடவடிக்கையை, மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்றே இதைக் கூறவேண்டும்.

ஆகவே திராவிடத்திலும் திராவிடத்திற்கு வெளியிலும் உள்ள தோழர்கள், சர்க்காரின் இந்தச் சவாலுக்குச் சரியானபடி பதில் சொல்லவேண்டுமென்றால், ஆங்காங்கே உள்ள கழகத்தோழர்கள் தீவிரமாகப் பங்கெடுத்து முயற்சி செய்யவேண்டும். திராவிடத்தின் செல்வந்தர்களும், வியாபாரிகளும், இதைத் தங்களுக்கு எதிர்பாராது கிடைத்த வாய்ப்பு என்று கருதி, தங்கள் செல்வத்தின் சிறுபகுதியை இதற்குச் செலவிடுவதில் முன் நிற்கவேண்டும்.

தேனீக்களையும் தோற்கடிக்கும் முறையில், நம் அருமை இளைஞர்கள் ? மாணவர்கள் இதில் தீவிரமாகக் கவலை செலுத்திப் பண வசூலில் ஈடுபடவேண்டும். அவரவர் ஆற்றுலுக்கேற்ப அள்ளி அள்ளிக் கொடுங்கள்! ஆணவத்தின் தலையிலடித்து அதை முறியடிப்போம் என்று முழக்குங்கள்! இதுவே நமது வேண்டுகோள்.

குடி அரசு 18.06.1949

 

You may also like...