68. பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ஆண்டு தவறினாலும், கலாட்டா தவறாது என்கிற ஒரு கெட்ட பெயரை எப்படியும் சம்பாதித்துத்தர வேண்டுமென்று சிலர் கங்கணங்கட்டிக் கொண்டிருக் கிறார்கள் என்றுதான் முடிவுகட்டவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஸ்தாபகர்தினக் கொண்டாட்டத்திற்குச் சென்னை மேயர் வரவழைக்கப் பட்டிருந்தாராம். விருந்தினராக வந்த மேயருடன், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், விருந்தினர் மனையில் பேசிக்கொண்டிருந்தபோது சில மாணவர்கள் சென்று கலவரஞ்செய்து இருவரையும் சிறைவைத்துவிட்டார்களாம். எப்படியிருக்கிறது படிப்பு! 18 மணி நேரங்கழித்துத்தான் துணை வேந்தர் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். விருந்தினரான மேயர்கூறி சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப் படாமல், மேயருக்குமட்டும் 11/2 மணி நேரம் தாமதித்து விழா நிகழ்ச்சிக்குச் செல்ல விடுதலை கொடுக்கப் பட்டது எனச் சொல்லப்படுகிறது.

இந்தச் சிறைவைப்புக்குக் காரணம், ஸ்தாபகர் விழா கொண்டாடக்கூடாது என்கிற நன்றி கொல்லும் குணம் மேலோங்கி நின்றதுதான் என்பது வெளிப்படை. இந்த சில மாணவர்கள் தங்கள் குறைகளைப்பற்றிய ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், துணை வேந்தர் பல்கலைக் கழகத்தைவிட்டு நீக்கப்பட வேண்டும்; மாணவிகள் தங்கியிருக்கும் ஹாஸ்டலைச் சுற்றி எழுப்பப்படும் மறைப்புச் சுவரை இடித்தெறிய வேண்டும் என்பதுபோன்ற குறைபாடுகள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. மாணவர்களின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு அத்யாவசியமான குறைபாடுகள் இவை? இக்குறைபாடுகள் மாணவர்களின் நல்ல மாண்புக்கு அறிகுறியா? அல்லது வேறு எதற்கு அறிகுறி?

பல்கலைக்கழக வரலாற்றில், எப்படி எப்படியோ இதுவரை பல தடவைகளில் கலாட்டா நடந்திருந்தாலும், அத்தனை தடவையிலும் பார்ப்பன மாணவர்கள் தப்பித்துக்கொண்டு விடுவதும், திராவிட மாணவர்கள் சிறைச்சாலை வரை சென்று திரும்புவதும் என்பதுதான் கண்ட பலனாக இருந்தது. இந்தப் பல்கலைக் கழகத்தில் இதுவரை நடந்து வந்திருக்கும் கலவரங்களை எடுத்துக் கொண்டால், நிர்வாக ஊழலுக்குப் பேர்பெற்ற வெள்ளிநாக்கு சாஸ்திரியாரின் நிர்வாக அடிப்படையைக் காரணமாகக் கொண்டு, பல்கலைக் கழகத்துக்கு வெளியேயுள்ள பார்ப்பனத் தோழர்களின் தூண்டுதலினால், பல்கலைக் கழகத்திலுள்ள பார்ப்பன ஆசிரியர்களும், பார்ப்பன மாணவர்களும் உதவிசெய்ய, திராவிட மாணவர்களும் உதவிசெய்ய, திராவிட மாணவர்கள் கருவியாகநின்று அதன்பலனையும் அவர்களே அனுபவித்து வந்திருக் கின்றார்கள் என்பதை நாம் அவ்வப்போது எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம்.

ஆனால் அப்போது உணர்ந்து கொள்ள மறுத்து ஒருதலைச் சார்பாகவும் நடந்து கொள்வதுதான் அதிகாரத்திற்கு அழகு என்று நம்பிய காங்கரஸ் மந்திரிகளும் இப்போது தெளிவாக உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தக் கலவரத்திற்கு முன்னணியில் நின்று பெரும்பணி ஆற்றியவர்கள், இன்றைய சுயராஜ்ஜியத்தில் பெரிய அதிகார நிலையிலுள்ளவர்களின் பிள்ளைகள் என்பதாக வெளிப்படையாகவே சொல்லப்படுகிறது. இந்தப்போக்கை, ஆரம்பத்திலேயே நமது காங்கிரஸ் சுயராஜ்ஜியபுரியினர் தடுப்பதற்கு விரும்பியிருப் பார்களேயானால், துணைவேந்தரைச் சிறைவைக்கும் அளவுக்கு காட்டு மிராண்டித்தனம் வளர்ந்திருக்காது என்பதுறுதி. இன்றுதான், இந்தத் தடவையில்தான் மதிமிக்க மாதவர், பொறுப்பற்ற அந்தச்சில மாணவர்களைக் கண்டித்து உடனே மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று போதனை புரிகிறார்! போதனையை வரவேற்கிறோம். இக்கலவரத்தில் பெரும்பாலான திராவிட மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதைக்கேட்கும்போது நாம் உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியடைவதோடு, மிகமிகப்பாராட்டி, இந்த காட்டு மிராண்டித்தனத்தை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகிறோம்.

பார்ப்பனர்களும் – பார்ப்பன மாணவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் அதன் நிர்வாகப் பொறுப்பிலுள்ள பார்ப்பனரல்லாத அறிஞர்களையும் எவ்வளவு துச்சமாகக் கருதி இந்தக் கலவரங்களைச் செய்துகொண்டு வருகின்றார்கள் என்பதையும் இந்த நேரத்தில் திராவிடப் பெருங்குடி மக்களைச் சிந்திக்க வேண்டுகிறோம்.

குடி அரசு 29-10-1949

 

You may also like...