45. காங்கிரசைக் கலைத்துவிடுவதே நலம்
காங்கிரசின் மீது துவேஷமுடையவர்கள் என்று, தவறாக நம்மீது குற்றஞ்சுமத்தப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கும் நாம் கூறுவதல்ல இது. காங்கரசினால் அசல் ராமராஜ்ஜியத்திற்கு, அதாவது பச்சவர்ணாச்சிரமத்துக்கு இடம் கிடைத்தும் அது பூர்ணமாக இல்லாது போய் விட்டதே என்று வேதனைப்படும், விஷப்பாம்புகளின் அய்க்கியமான இந்துமகாசபையினர் கூறுவதுமல்ல. நாடு முழுவதும் நம்மை வெறுத்தொதுக்கினால், நாளை நமக்குப்பின் நம் ஆட்களாயிருந்து நாட்டை ஆளவேண்டுமே என்று திட்டம் போட்டு, அதற்காக இன்றைய ஆளவந்தார்களால் தயாரிக்கப்பட்ட சோஷியலிஸ்டுகள் கூறுவதல்ல இது. கொள்ளைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் காங்கிரஸ்க hரர்களால் பேசப்பட்டு வரும் இந்தியக் கம்யூனிஸ்டுகளால் கூறப்பட்டதுமல்ல.
இந்து ஸ்தானத்தின் பிரதம மந்திரி தோழர் ஜவஹர்லால் அவர்கள் லக்னோ காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இந்த மாதம் 18ம் தேதி திருவாய் மலர்ந்தருளியது இது! பண்டிதரவர்கள் எவ்வளவுதான் மூடிவைக்க வேண்டமென்று, எத்தனையோ ஜால வித்தைகளெல்லாம் செய்து பார்த்தபிறகுதான் இந்த முடிவுக்கு வருத்தத்தோடு வந்திருக்கிறார். எங்குபார்த்தாலும் லஞ்சக் காட்சிகள்! எங்கு திரும்பினாலும் லஞ்சப் புகார்கள்!
இவற்றைக் கண்டு கூட அவர் திடுக்கிடவில்லை என்பதைத்தான் அவரின் பேச்சுகள் நமக்கு உணர்த்துகின்றன. இத்தகைய காட்சிகள், புகார்கள் எப்படி வெளிவருகின்றன? ஏன் வெளி வருகின்றன? என்பதில் தான் பண்டிதருடைய கவனம் சென்றிருக்கிறதோ என நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. காங்கரசின்பேரால் பதவிக்கு வந்தவர்கள், நாணயக் குறைவாகவும் லஞ்ச ஊழலுக்கு இடம் கொடுத்தும்தான் நடந்து கொள்ளுவார்கள்.
நாணயமற்றமுறை அவர்களுக்குத் தெரியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரோ? என்றே நினைக்கவேண்டியிருக்கிறது. காங்கிரஸ்காரர்களைப் பற்றிப் புகார்கள், இப்படிப் பச்சை பச்சையாக வெளிவருவதற்குக் காரணம், காங்கிரஸ்காரர்களுக்குள் பொறாமையும் போட்டியும் வலுத்து, பிளவு ஏற்பட்டு கோஷ்டிகள் உண்டாகியதால் அல்லவா? என்கிற ஒரு விஷயத்தில்தான் அவரின் கவனம் சென்றிருக்கிறது.
இடைக்காலத் தேர்தலுக்குப் பின் வங்கத்தில் பங்கமடைந்து விட்டது காங்கரஸ் என்பதை மறைக்கமுடியாது போன பிறகு ? அதிலும் வங்க சர்க்காரின் வண்டவாளங்கள் மறைக்கமுடியாத நிலையில் அம்பலமாகிவிட்ட பிறகு, பண்டிதரவர்கள் வங்காளத்திற்கு நேரில் கண்டார். டில்லி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதை விளக்கினார் அந்தக் கூட்டத்திற்கு இடையிலேயே அய்க்கிய மாகாணம் சென்றார். அங்குதான் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு உணர்ச்சிக் கோஷ்டிகளை வளரவிட்டுப் பிளவு படுத்துவதைக் காட்டிலும், காங்கிரசைக் கலைத்துவிடுவதே மேல் என்பதாக.
வெள்ளையரின் வெளியேற்றத்திற்குப் பிறகு, நாடு நாளுக்கு நாள் கேவல நிலையையே அடைந்து கொண்டிருக்கிறது. ஏழை உழைப்பில், ஏற்றங்கொண்ட சிறு கும்பல் இன்னும் வாடாமல் வதையாமல், நாளுக்கு நாள் புது மெருகு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்பதாக, இந்து ஸ்தானத்தில் மற்றொரு மந்திரியான சாக்சேனா கூட ஒப்புக் கொள்கிறார்.
இந்த நிலைமை ஒழிக்கப்படா விட்டாலும், மேலும் மேலும் கேடடைந்து கொண்டே போவதற்குக் காரணம்; அநுபவம் இல்லாமையும், அறிவுக்கு மதிப்பளிக்காமையும் கொண்ட தன்னலமிக்க சிலரை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தி, மேலிடம் அவர்களைப் பதுமையைப்போல், ஆட்டிவைப்பதினுடைய விளைவுதான் என்பது இன்று உலகம் பகிரங்கமாகத் தெரிந்து கொண்ட உண்மை.
இந்த நிர்வாக ஊழலை மறைப்பதற்காக அல்லது இந்துஸ்தானின் பாதுகாப்பு என்கிற மிரட்டலுக்குப் பயன்படுவதற்காகத்தான், சுயராஜ்ஜியத்தையே லட்சியமாகக் கொண்ட காங்கிரஸ், அந்த சுயராஜ்ஜியத்தை அடைந்த பிறகும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை, காங்கிரசால் சொந்தத்துக்குப் பயனடைந்து கொண்டு வரும் ஒரு சிலரைத்தவிர, மற்ற எல்லோரும் நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சுயராஜ்ஜிய லட்சியத்தை அடைந்த காங்கிரஸ், பார்க்கப் போனால், இயற்கையின் பரிணாமப்படி ஒரு நடைப்பிணம்தான். இந்த நடைப்பிணத்தைத்தான், அழித்துவிடவேண்டியது என்று கூறுகிறார் நேரு. நடைப்பிணத்தின் கையாலாகாத தன்மையையும், அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளையும் உணர்ந்து, அதனால் அதை அழித்துவிட வேண்டுமென்கிற முடிவுக்கு வந்திருப்பாரே யானால், அது உண்மையிலேயே பாராட்டுவதற் குரியதுதான். ஆனால் பண்டிதரவர்கள் கலைத்துவிடும். முடிவுக்கு வந்தது வெறும் மிரட்டலுக்கே தவிர வேறு எதற்கும் இல்லை.
நாட்டிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் காங்கிரஸ் பலவழிகளில் கீழ்நோக்கிவிட்டது. காங்கரசுக் குள்ளேயே பலவீனம் ஏற்பட்டு, குறுகிய நோக்கமுடையவர்கள் நிரம்பிவிட்டதினால் இந்த நிலை என்று கூறும் நேரு அவர்கள், கலைந்துவிடுவது நலம் என்று கூறுவதின் உண்மையைப் பார்த்தால், ஏதோ சிலபேர்மட்டும் சுயராஜ்ஜிய சுகமனுபவிக்கிறார்கள் காங்கிரசில் பாடுபட்டிருந்தும் பலருக்கு அதில் பங்கு இல்லை என்கிற பொறாமையால், காங்கிரசின் பேரால் பதவியிலிருப்பவர்களின் வண்டவாளத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களே! எல்லோருமே சுயராஜ்ஜிய சுகத்தைப் பரிபூர்ணமாக அநுபவிக்கிறதென்பது சாத்தியமா? ஒருவர் மாறி ஒருவர் என்கிற வரிசையிலேதான் பயன்படும். அதற்குள் இப்படி அவசரப் பட்டால் அது எப்படி? வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் பங்கு கேட்பதற்கு உரிமையென்று கருதிக் கொண்டிருக்கும் அந்த நடைப்பிணத்தையே நாசஞ்செய்துவிடவா? என்கிற அர்த்தத்தைத் தவிர ? மிரட்டலைத் தவிர வேறு என்ன என்பதாகக்கூற முடியும்?
இது மிரட்டல் அல்ல என்றால், பண்டிதரவர்களுடைய கவனம் ? மேலிடத்தின் முயற்சி, முதலில் எதில் பாய்ந்திருக்கவேண்டும்? காங்கிரசில் உள்ள கோஷ்டிகளை ஒழிப்பதிலா? காங்கிரஸ் போர்வையில் நடந்து, நாற்றமடித்துக் கொண்டிருக்கும் ஊழலை ஒழிப்பதிலா? என்று கேட்கிறோம். எப்படியோ நடைப்பிணத்தை நாசமாக்கினாலும் சரி, கோஷ்டிகளையெல்லாம் உருக்கி ஒரே அச்சாக வார்த்து விட்டாலும் சரி. அதைப்பற்றிக் கவலை இல்லை. முதலில் நாற்றத்தை அகற்றி விடுங்கள்! இதுதான் இப்போது நாட்டு மக்களின் கவலை தோய்ந்த வேண்டுகோள்! ஆனால் நாற்றம் அகற்றப்படுமா? நாடு சுகப்படுமா?
குடி அரசு 23.07.1949