54. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!

வினா :      மதம் என்றால் என்ன?

விடை      :      உண்மையில் நம்பிக்கை.

வினா :      உண்மை என்றால் என்ன?

விடை      :      ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றி பரிபூரண ஞானமே உண்மை.

வினா :      உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?

விடை      :      அப்பேர்ப்பட்ட பூரணஞானம் வாழ்க்கையின் உயரிய லட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும்.

வினா :      உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது?

விடை      :      தன் உயர்வான ? தெளிந்த ? அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதினால் நிரூபித்துக்காட்டலாம்.

வினா :      உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது?

விடை      :      அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் அடையலாம்.

வினா :      வேறு வழியில்லையா?

விடை      :      இல்லை.

வினா :      மதத்தைப்பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வியாக்கியானம்தானா?

விடை      :      தெய்வ நம்பிக்கையும் தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் எனமதிக்கப்படுகிறது.

வினா :      தெய்வீகம் என்றால் என்ன?

விடை      :      தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம்பானவைகளெல்லாம் தெய்வீகமானவைகளே.

வினா :      அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?

விடை      :      அவைகளை நாம் எதிர்க்கக்கூடாது. அவைகளைப் பற்றிக் தாராளமாக விவாதிக்க      இடம் கொடுக்க வேண்டும்.

வினா :      இதர வழிகளில் அறிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை, கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?

விடை      :      எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்தவேதம் உண்மையான கடவுள்வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

வினா :      வேதங்களில் சிலவற்றைக் கூறுக.

விடை :-   ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பௌத்த வேதம், யூத வேதம், கிறிஸ்வ தேவம், முகமதிய வேதம், மார்மண் வேதம்.

வினா :      இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டுகின்றனவா?

விடை      :      ஆம்.

வினா :      அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்ணியம் செய்கின்றனவா?

விடை      :      இல்லை. மாறாக ஒவ்வொன்றும் மற்றவை பொய்யென்று கண்டிக்கின்றன.

வினா :      அதை விளக்குக.

விடை      :      எனக்கு நிகராக உலகத்திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன் என்று புத்தர் கூறியிருக்கிறாராம்.

வினா :      வேறொரு உதாரணம் கூறுக.

விடை      :      நானே உண்மையான வழிகாட்டி எனக்கு முன்வந்தவர்கள் எல்லம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது என்று இயேசு கூறியிருக்கிறாராம்.

வினா :      இதைவிட முக்கியமாக மதிக்கக்கூடிய ருசு வேறு எதாவது உண்டா?

விடை      :      ஒவ்வொரு மதஸ்தரும் பிறமதஸ்தரை தம் மதத்துக்கு இழுக்க முயல்கிறார்கள்.

வினா :      மதமாற்றம் என்றால் என்ன?

விடை      :      நாம் நம்புவதுபோல பிறரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்.

வினா :      அதன் நோக்கம் என்ன?

விடை      :      நோக்கம் பலவாராக இருக்கலாம். எனினும் அவற்றுள் முக்கியமானது நம்மைப் போல் மற்றவர்கள் நம்பாவிட்டால் நரகதண்டனை பெறுவர்கள் என்பதே.

வினா :      மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?

விடை      :      ஒன்றாவது முழுதும் மெய்யானதோ பொய்யானதோ அல்ல.

வினா :      அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது?

விடை      :      பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.

வினா :      அப்படியானால் வேதங்களைவிடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா?

விடை      :      ஆம். ஏற்படத்தான் செய்யும்.

வினா :      அவ்வளவு உயர்வான பகுத்தறிவு நம்மிடம் இருக்கையில் மேலும் நமக்கு மதங்களும், வேதங்களும் வேண்டுமா?

விடை      :      நமக்கு வேண்டாம். பகுத்தறிவுக்குப் பொருத்தமான வேதங்களைத்தான் ஒப்புக்கொள்ள முடியும்.

வினா :      ஒரு புத்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால், அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீ அதைப் பூரணமாக நம்ப வேண்டியதுதானே?

விடை      :      நம்பத் தேவை இல்லை.

வினா :      அது எப்படி?

விடை      :      நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக் மதிப்பேயில்லை. கட்டாயத்தின் பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக்கையுமல்ல பகுத்தறிவால் தூண்டப்பட்டு நான் நம்பினால் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்பகுத்தறிவேயன்றி வேதமல்ல.

வினா :      இதற்கு ஒரு உதாரணம் கூறுக.

விடை      :      பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்பமாட்டோம். ஏனெனில் நமது அனுபவத்திலும் ஆராய்ச்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை.

வினா :      பகுத்தறிவுப்படி தப்பானதையும் நம்ப வேண்டுமென்று வேதம் கட்டளையிட்டால்    நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்படிவாயா? பகுத்தறிவுக்குக் கீழ்படிவாயா?

விடை      :      பகுத்தறிவுக் கொத்தபடி நான் நடந்து கொள்ளவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.

வினா :      பகுத்தறிவு பொய் என்று கூறுவதை மெய் என்று நம்புவது சாத்தியமில்லையா?

விடை      :      சாத்தியமே அல்ல. பகுத்தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகார மில்லை.

வினா :      பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை எந்த மதமாவது போதனை செய்கிறதா?

விடை      :      ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன?

வினா :      உதாரணம் கூறுக.

விடை      :      படைப்புக் கதை.

வினா :      வேறொரு உதாரணம்.

விடை      :      பிரளயக் கதை.

வினா :      மேலும் ஒரு உதாரணம்,

விடை      :      மனிதன் சபிக்கப்பட்டு பாவியான கதை.

வினா :      அவைகளைப் பற்றித் தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?

விடை      :      வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாகவில்லை; பிரளயம் உண்டாகவில்லை;  கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

வினா :      வேதங்களில் உள்ள வேறு தப்புகள் எவை?

விடை      :      சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. வேதங்களில் கூறப்பட்டவைகள் எல்லாம் பரஸ்பரம் முரணாக இருக்கின்றன. பாபகரமான பல விஷயங்களையும் வேதங்கள் போதனை செய்கின்றன.

வினா :      வேதங்களில் காணப்படும். இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?

விடை      :      மனிதன் தப்புச் செய்யக்கூடியவன்தானே!

வினா :      அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்ததுதானா?

விடை      :      வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், துர்க்குணங்களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.

வினா :      அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

விடை      :      நம்மிடமுள்ள ஒளி, வழி காட்டுகிறபடி நடக்க வேண்டும்.

வினா :      அது என்ன ஒளி?

விடை      :      அதுதான் பகுத்தறிவு.

வினா :      பகுத்தறிவு நம்மை தப்பு வழியில் செலுத்தாதா?

விடை      :      ஆம். செலுத்தக்கூடும்.

வினா :      அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?

விடை      :      ஏனெனில் அதைவிடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.

குடி அரசு 27.08.1949

You may also like...