33. இந்த முறை சரிதானா?

இந்திய யூனியன் சுயராஜ்ஜிய ஆட்சியை, மக்களாட்சி அதாவது மக்களே மக்களையாளும் ஜனநாயக ஆட்சி என்பதாக காங்கிரஸ்காரர்கள் வருணித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த சுயராஜ்ஜிய ஆட்சியைப் பார்ப்பன பனியாக்களின் ஏகாதிபத்திய ஆட்சியென்றும், சூத்திரன் என்றைக்குமே தேவடியாள் பிள்ளையாக இருந்து வருவதற்குப் பலமாக அஸ்திவாரம் போடும் ஆட்சி என்றும், திராவிடன் எந்தத் துறையிலும் முன்னேறிவிடக் கூடாது என்கிற வேதத்தின் கூச்சலை நடப்பில் மெய்ப்பிக்கப் போகும் ஆட்சி என்றும் நாம் அடிக்கடி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம்.

இந்த இரண்டு வகையான கருத்தில் எது உண்மை? எது பொய்? என்பதை நன்றாய்த் தெரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் பொது மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது இந்திய யூனியன் அரசியல் நிர்ணய சபையினரால். இந்த அரசியல் நிர்ணய சபையின் யோக்கியதையைப் பற்றி, அதாவது 100-க்கு 4-பேர் வோட்டர்களாய் இருந்த ஒரு அமைப்பில், மிரட்டியும், ஏமாற்றியும், வெறியைக் கிளப்பியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுள், நியமனம் செய்யப் பட்டவர்களைக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கும் அ.நி.சபையின் தகுதியில்லாமையைப் பற்றி, திராவிடக் கழகம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருப்பதோடு இதன்  முடிவுகள் திராவிடர்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்து வந்திருக்கிறது. என்றாலும் திராவிடக் கழகமோ பிற அரசியல் அறிஞர்களோ எடுத்துக்காட்டிய இந்தக் குறைபாட்டை நீக்க வேண்டுமென்கிற எண்ணம் கொஞ்சமுமின்றி, தன் போக்காகவே காங்கிரஸ் மேலிடம், மேலும் மேலும் காரியங்கள் செய்து கொண்டு போகிறதே யல்லாமல், நாளுக்கு நாள் சென்னை போன்ற மாகாணங்களை எப்படி ஆட்டிப்படைத்து, எந்த அளவுக்குக் குதிரைச் சவாரி செய்து, எப்படியெல்லாம் ஒடுக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்பதை விளக்குவதே அரசியல் நிர்ணய சபையில் நிறைவேறியிருக்கும் கவர்னர் நியமன முறை.

இந்த அரசியல் நிர்ணய சபையின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்குக் கொஞ்சமும் நியாயமில்லை என்பதைத் தகுந்த காரணங்களோடு, திராவிடர்களின் சார்பாகத் திராவிடக் கழகம் அறிவித்திருந்தாலும்கூட, நம்மிடமுள்ள விபீஷண ஆழ்வார்கள் – சிறிய திருவடிகள் எல்லாம் இல்லாத நிலைமை ஏற்படும்வரை, எப்படியாவது கட்டாயமாக நம்மீது அந்த முடிவுகள் திணிக்கப்பட்டுத் தூக்கி வைக்கப்படத்தான் போகின்றன என்பதையும், திராவிடர்களின் போதுமான எதிர்ப்புக்குப் பிறகே – எதிர்ப்பை நல்ல முறையில் மேலிடத்தை உணர வைத்த பிறகே, இந்தப் பொன் விலங்கு உடைத் தெறியப்படும் என்பதையும் திராவிடர்கள் அறிவார்கள். ஆகவே இந்தக் கவர்னர் நியமன முறையை நாம் மக்களுக்கு எடுத்துக்காட்டு வேண்டியதாயிருக்கிறது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தில், அந்தந்தப் பகுதியிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோ தேர்ந்தெடுக்கப் படாமலோ அமைக்கப்பட்ட மந்திரி சபையை அல்லது அதுபோன்றதை கண் காணித்துவர ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலராக – அலங்காரச் சின்னமாகக் கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்தக் கவர்னர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபை அமையுமானால் எப்படி வெறும் பொம்மைகளாக ஆகி விடுவார்கள் என்பதையும், ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாக, அல்லது சிறுகேட்டைத் தருவதாக இருக்குமானால் அப்போது அந்த மந்திரிசபை அழித்துத் தனக்கு விரும்பிய பேர்வழிகளில் சிலரை நியமித்துக்கொண்டு தனிக்காட்டு ராஜாவாக, அந்தப் பொம்மைகளே எப்படிச் சர்வாதிகாரிகளாக ஆக முடியும் என்பதையும் கண்டிருக்கிறோம்.

இந்த முறையைத்தான் காங்கிரஸ் மேலிடம் முதலில் மாற்ற வேண்டுமென்று விரும்பியது, கவர்னர்களே தேவையில்லை என்கிற உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொண்டபிறகு. தன் விருப்பம்போல் பிரசிடெண்ட் நியமனம் செய்யக்கூடாது, மாகாண மக்களால் கவர்னர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்; அல்லது மாகாணச் சட்டசபை குறிப்பிடும் நால்வரில்யாரேனும் ஒருவரை இந்திய பிரசிடெண்ட் தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டுமென்று.

இந்த விதி ? அரசியல் நகல் திட்டத்தில் உள்ள விதி நிறைவேறுமேயானால், சென்னைக்கு ஒரு பவநகர் எப்படிக் கவர்னராய் ஆக முடியும்? ஆகவே இந்த விதியையே மாற்றி, வெள்ளையர் காலத்தில் கவர்னர்களுக்குள்ள அதிகார வரம்பை எந்த அளவு நீட்ட முடியுமோ.

அந்த அளவு நீட்டித்து, வடநாட்டு ஏகாதிபத்தியம் சரிந்துவிடக்கூடா தென்பதற்குப் பலமான அஸ்திவாரம் போட்டு, கவர்னர்களே அந்தந்த மாகாணசர்வாதிகாரிகள், அந்த சர்வாதிகாரிகள் பிரசிடெண்டால் நியமிக்கப்படுவார்கள் என்பதாக அ.நி.சபை முடிவு செய்திருக்கிறது.

இந்தப் பின்யோசனை எதனால்? சென்னை போன்ற மாகாணங்களில், மாகாணம் தனி நாடு ஆக்கப்படவேண்டும் என்கிற கிளர்ச்சி இருக்கிறது; காங்கிரஸ் காரர்களே என்றைக்கும் தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்கிற நிலை உண்டாகிக் கொண்டு வருகிறது, கவர்னர்களையும் மக்களே தேர்ந்தெடுப்பதென்றால், அந்தக் கவர்னர் எப்படி நம் ஏஜண்டாக இருந்துவிட முடியும், என்கிற பார்ப்பன ? பனியாக்களின் சிந்தனையல்லவா இந்த மாறுதலுக்குக் காரணம்?

கவர்னர்கள் அந்தந்த மாகாணங்களுக்கும் வெளி மாகாணத்தவர்களாய்த்தான் இருப்பார்கள். அவர்கள் பெயரால்தான் மாகாண ஆட்சி நடைபெறும். அவர்களை மத்திய அரசாங்கத் தலை நகரிலுள்ள பிரசிடெண்டுதான் நியமிப்பார். அந்த கவர்னர்கள் பிரசிடெண்டுக்குப் பொறுப்பானவர்களே தவிர மக்களுக்குப் பொறுப்பானவர்கள் அல்ல.

அந்தக் கவர்னர்களுக்கு மந்திரி சபையை நீக்க, மாற்ற, அல்லது அதன் செயல்களை ஆட்சேபிக்க முழுச் சர்வாதிகார உரிமை உண்டு. ஆனால் இந்தச் சர்வாதகார உரிமையை, மந்திரிகள் வடநாட்டின் ஏவலாளர்களாய் இருக்குமட்டும் உபயோகிக்க வேண்டிய அவசியமே ஏற்படாது; என்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைப் பிரதிநிதிகள் மாகாண மக்களின் நலம், உரிமை என்றெல்லாம் பேசுகிறார்களோ அன்றைக்குத்தான் கவர்னர்களின் விசேஷ அதிகாரம் என்கிற சர்வாதிகாரத்துக்கு வேலையுண்டு என்பதாக அறிவித்து முடிவுகட்டி யிருக்கிறது அ.நி.சபை.

இதுதான் ஜனநாயக சுயராஜ்ஜிய ஆட்சியா? அல்லது பார்ப்பன பனியாக்களின் ஆட்சியா? என்றால், இந்த முறைதான் சரி என்கிறது நம் திராவிடத் தோழரை ! ஆசிரியராய்க் கொண்டிருக்கும் தினசரி. இந்த முறையைச் சரி என்பதற்கு, இன்றையக் காங்கிரஸ் காரர்களுக்குள் இருந்துவரும் கோஷ்டிகளை எடுத்துக்காட்டி நிரூபிக்க முயற்சிக்கிறதேயொழிய, இன்றைக்குப்பட்டங் கட்டிவிடப் பட்டிருக்கும்.

ஜவஹர்லாலையும், பட்டேலையும் மனதில் கொண்டு பேசுகிறதேயொழிய, பட்டேல் ஜவஹர் காலத்திற்குப் பிறகும் இந்த அரசியல் முறை இருந்து வரவேண்டியதாகும் என்கிற எதிர்கால அரசியல் ஞானமோ, மாகாண மக்கள் நலன் விரும்பும் குணமோ தன்னிடம் அறவே இல்லை என்பதை அது நன்றாகக் காட்டிக் கொண்டுவிட்டது.

ஏனென்றால் இப்படிச் செய்யாவிட்டால் மாகாணக் கிளர்ச்சிக் காரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக முடிந்துவிடுமே என்று பெரு மூச்சு விடுகிறது தினசரி. இப்பேர்ப்பட்ட அண்ணாத்தைகள் நம்மிடம் உள்ள மட்டும், அ.நி.சபை முடிவுகள் எப்படி நம்மீது சுமத்தப்படாமல் போய்விடும்? இருந்தாலும் இந்த முறை சரியானதா? என்று நாம் மக்களைக் கேட்கிறோம்.

குடி அரசு, தலையங்கம் 04.06.1949

 

You may also like...