52. பாதுகாப்புச் சட்டம்!

சென்ற வாரக்கடைசியில் சென்னைக் கவர்னர் பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் சென்னைப் பொதுஜன பாதுகாப்புச் சட்டம் 1949-ம் வருஷம் என்கிற முத்திரையைத் தாங்கிக் கொண்டு, மிக மிகப் பலமாகப் பழுதுபார்க்கப்பட்டு ? கெட்டியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது மனிதர்கள் மிருகங்களை எப்படி அடைத்து வைத்துத், தங்கள் சௌகரியத்துக்குத் தகுந்தபடி எப்படி அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களோ, அதே தத்துவத்தை அனுசரித்து, தங்களுக்கு வேண்டாத மனிதர்களை யெல்லாம் (பேசி எழுதிவாதிட்டு விடமுடியாத) மிருகங்களாகப் பாவித்து, இன்றைய அரசாங்கம் தன் சௌகரியத்துக்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளும் என்பதான சட்டம் பூரண உருவமாக்கப் பட்டிருக்கிறது.

அன்னிய வெள்ளையர்கள் ஆண்டுகொண்டிருந்த அந்தக் காலத்தில் – நாஸீஸ, பாஸீஸ வெறியர்களின் ஆதிக்கப்போட்டி உலகை அலைக் கழித்த நேரத்தில் வெள்ளையனே வெளியேறு என்கிற வெத்து வேட்டை முழக்கி, இந்த நாட்டுப் பொதுமக்களின் நலத்திற்காகவே நூற்றுக்கு நூறு பயன் பட்டுக் கொண்டிருக்கும் தண்டவாளங்களைப் பெயர்த்தல், தந்திக்கம்பிகளை அறுத்தல், தபால் நிலையங்கள் – கோர்ட்டு வகையராக்களைக் கொளுத்துதல் போன்ற நாசவேலைகளில் இந்த நாட்டு இளைஞர்களை ஈடுபடவைத்துவிட்டு,காங்கிரஸ் திருச்சபையானது அஹிம்சா பரமோ தர்ம என்று புலம்பிக் கொண்டிருந்த பொழுதில் ? மாம்பலங்களும் மயிலாப் பூர்களும் ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் வரவேற்புப் பத்திரங்களைத் தயார் செய்து கொண்டிருந்த வேளையில், வெள்ளை ஏகாதிபத்தியம் இப்படிப்பட்ட பாதுகாப்புச் சட்டங்களைத் துணைக்கு அழைத்தது.

வெள்ளை ஏகாதிபத்தியம் பிறப்பித்த பாதுகாப்புச் சட்டங்களை, ஏகாதிபத்தியத் திமிரால், இந்த நாட்டு மக்களை மிருகங்களாக மதித்து ஈவு இரக்கமோ, பச்சாதாபமோ இல்லாமல், எடுத்து வீசப்படும் எறியீட்டிகள் என்று வருணிக்கப்பட்டன.

அப்போது காங்கிரஸ்காரர்களால். ஆணவமேறிகள் அதிகார போதையில் மூழ்கி ஆர்ப்பரிக்கும் இந்த அட்டகாசங்கள், நம் உரிமைகளை நாசப்படுத்தி, நாம் என்றைக்குமே தலைதூக்க முடியாதபடி அழுத்திவைக்கும் குரூரச் செயல்கள் என்று கண்டிக்கப் பட்டன. மனிதாபிமான மற்ற சட்டத்தின் கொடுமையை எண்ணும் போது, நாட்டில் நீதிக்கும் நேர்மைக்கும் இரங்குபவர் எவராயிருந்தாலும், நெஞ்சம் புண்ணாவதும், எதிர்த்தொழிக்க வேண்டிய அவசியத்தை ? ஏகோபித்துச்சாவு மணியடிக்க வேண்டிய கட்டாயத்தை விளக்குவதும், விளக்கம் பயன்தராவிட்டால் விபரீதபுரிக்குப் போய் விடாமல் வேண்டிய – தேவையான எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவதும், அந்த ஈடுபாட்டில் வாழ்வா, சாவா என்பதையே முன்னிறுத்தி முயற்சிக்கப்படுவதும் நாட்டுக்குரிய நல்லோர்களால் வரவேற்கப்படும், பாராட்டப்படும்.

ஆனால் வெள்ளையன் மீது விரோத மென்று பெயர் பண்ணிக்கொண்டு, இந்நாட்டுப் பொது மக்கள் நலனுக்குக் கேடாகப் பல நாசவேலைகளில் தலையிட்டுக் கொண்டே, மற்றொரு பக்கத்தில் கண்டித்தனர் காங்கிரஸ்காரர்கள், அந்த ஆகாத, பாதுகாப்புச் சட்டங்களை. அந்த ஆகாத – குரூரமான சட்டத்தை வெறுத் தொதுக்குங்கள் என்று நாட்டினர்க்கு உபதேசித்த நல்லோர்களே, இப்போது நாட்டை ஆளும் நல்லோர்களே, இப்போது நாட்டை ஆளும் நல்வாய்ப்புப் பெற்றிருக்கும் இந்நேரத்தில் அவர்கள் பாஷைப்படி.

அந்த ஆகாத ? நாசப்படுத்தும் சட்டம், காங்கிரஸ் ஆட்சியினரால் கட்டித் தழுவப்படுகிறது. கொஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல வெள்ளையன் அடிச்சுவட்டைப் பின்பற்றி நாம் பிறப்பித்த பாது காப்பில்(!) வேண்டிய மட்டும் ஓட்டைகள் அல்லவா இருக்கிறது? என்று வெம்பி, ஓட்டைகளை அடைத்து, உறுதிப்படுத்தி விட்டோம், பாரீர்! என உவப்போடு முழக்கப்படுகிறது. அந்த முழக்கமே 1949-ம் வருஷ சென்னைப் பொதுஜன பாதுகாப்புச் சட்டம்!

நாட்டில் அன்னியன் ஆட்சி. அந்த ஆட்சிக்கு நாட்டிற்குள்ளேயே எதிர்ப்பு. மற்றொரு புறத்தில் நாட்டிற்கு வெளியில் ஆளும்வர்க்கத்தினரை அடியோடு ஒழிக்க வேண்டுமெனப் போர் முரசு. போர் முரசு கேட்டுப்பூரித்து, புளகாங்கிதத்தோடு, வெள்ளையன் ஒழிந்தால்சரி, வேறு யார் புகுந்தாலும் சரி என்கிறவரவேற்பு மனப்பான்மை நாட்டில் ஒரு சிலரிடம்.

அதற்கு ஏற்ப நாட்டு மக்களிடமே நாசவேலை. நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாரோ ஒரு சிலர் தான். ஆனால் நாசத்திற்கு ஆளாவோர் எத்தனை பேர்? யார்? இந்தக் கட்டத்தில், அன்னியமான வெள்ளை ஏகாதிபத்தியம் தன்னைப் பாதுகாக்கவும் ? நாட்டு மக்கள் காப்புச் சட்டம் போன்றவைகளைப் பிறப்பிக்கவேண்டியது ? ஏகாதிபத்திய ரீதியில் அவசியமானது, அன்னிய ஆட்சிக்குத் தேவையானது, ஓரளவு நாட்டுப் பொதுமக்களில் பெரும்பாலோர் நலனைப் பாதுகாப்பது. ஆனால் நம்மை நாமே ஆளுகிறோம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், மக்களுக்காக மக்களால் ஆளப்படும் ஆட்சியில், பொதுஜன பாதுகாப்பு என்கிற பெயரால், மனிதாபிமானமற்ற ? மக்களை மிருகங்களிலும் கேவலமாக மதிக்கும் பாதுகாப்புச்சட்டம், ஓட்டை ஒடைசல்களையெல்லாம் அடைத்துக் கொண்டு ஏன்புறப்பட வேண்டும்? இது உண்மையிலேயே பொது ஜனங்களுக்குப் பாதுகாப்பா?

இது சென்னைப் பொது மக்களின் பாதுகாப்புக்காக என்று பிறப்பிக்கப் பட்டிருந்தாலும், இயக்க மற்ற உருவங்களைச் காட்டி எத்தர்கள் வயிறு வளர்க்கும் நாடுதான் இந்த நாடு என்பதை வற்புறுத்துவது போல், பொது மக்களைச் காட்டி, இன்றையப் பார்ப்பனப் பனியா ஏகாதிபத்தியம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே திருத்திப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை சென்ற 2 ஆண்டுகளாய் அமுலில் இருந்துவரும் இந்தச் சட்டமே உணர்த்திவிடும். இந்த 1949 என்கிற முத்திரை, நீதி மன்றங்களுக்கு ? ஆம் உயர் நீதிமன்றங்களுக்கு விடப்பட்டிருக்கும் சவாலுக்கு அறிகுறி! 1947ம் வருடத்தில் பிறப்பித்து, 1948லும் அதை நீட்டிப் பலரை இரவோடிரவாய் தூக்கிக்கொண்டு போய் சிறையில் வைக்க, சட்டத்திலுள்ள குறைகளை எடுத்துக் காட்டிச் சில நீதிபதிகள் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டார்களே, அந்த நீதிபதிகளுக்கோர் மூக்கறுப்பு! இந்த 1949 முத்திரை, மக்களை எப்படித் துச்சமாகக்கருதுகிறது இந்த அரசாங்கம் என்பதற்கோர் தங்கமான விளக்கம்.

மக்கள் கருத்தையறியாமலே – மக்களுடைய பிரதிநிதிகள் என்பதாக அவர்களாலேயே ஆக்கப்பட்டு, விளம்பரப் படுத்தப்பட்ட திருச்சபையார்கள் கூட, கூடாதிருக்கும் நேரத்திலே,  அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் ஆளவந்தார்கள், இதை பிறப்பித்திருக்கிறார்கள் என்பது, தேவையானதை தேவையான நேரத்தில் தேவைப்படும் முறையில் எல்லாம் ஆளவந்தார்கள் செய்துகொள்வார்கள் என்பதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு.

இந்த 1949 என்கிற முத்திரை, மக்கள் துணைகொண்டு மன்ற மேறினோம் என்று கர்ஜித்த மாவீரர்கள், இன்று மக்களைக் கண்டு எப்படியெல்லாம் மருண்டு விட்டார்கள் என்பதற்கோர் படப்பிடிப்பு! இந்த 1949 என்கிற முத்திரை, ஜனநாயகம் ஜனநாயகம் என்பதாக வாயார மனங்குளிரப் பேசினாலும், எப்படிப்பட்ட ஏகச்சக்கராதி பத்தியத்திற்கும் இளைத்ததல்ல என்பதைக் காட்டும் சித்திரம்.

இன்றைய அரசாங்கம் யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிறைப்பிடிக்கலாம். ஏன்? எதற்காக? என்பதற்குக் காரணம் கூறமாட்டாது. நீதிமன்றத்தை நாடலாமோ என்றால் ? உத்தரவிலுள்ள ஒழுங்குத்தவறை எடுத்துக்காட்டலாமோ என்றால், நீதிமன்றங்களே நெட்டித்தள்ளப்படும்! ஆகா! அழகான ஜனநாயகம்! அற்புதமான ஆட்சி!! இந்த ஆட்சியில் வாழக்கொடுத்துவைத்திருக்கும் மகா புருஷர்கள் நாம்!!!

குடி அரசு 20.08.1949

You may also like...