63. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முடிவு கட்டியதாம் ஒரு குள்ள நரி. இப்படி முடிவு கட்டிய நரியினுடைய கதையை வாசகர்கள் அறிவார்கள். தேமதுரமான திராட்சைக் கனிகள்! சிந்தியவற்றி லிருந்து தின்று பார்த்துத் தெரிந்து கொண்டிருந்த உண்மைதான் அது. ஆனால் இப்போது எட்டாத உயரத்தில் அல்லவா இருக்கிறது? எத்தனை முறைதான் மூர்ச்சையை அடக்கிக் கொண்டு எழும்பி எழும்பிக் குதிப்பது? கண் விழி பிதுங்க, கால்கள் தள்ளாட என்கிற நிலைமை எவ்வளவு நேரத்திற்குத்தான் நீடிக்க முடியும்? அது புத்திசாலியான நரி! எத்தனை பாடுபட்டாலும் தன் முயற்சியால் அது தனக்குக் கிடைக்கமாட்டாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது! இருந்தாலும் உடம்பு ஒத்துழைக்காதபோது, எண்ணத்துக்குக் காரணமாய் நிற்கும் மனது ஆசைப்பட்டு என்னபயன்? ஆகவேதான், புத்திசாலியான அந்த நரி ஆசையை அகற்றக் கண்டு பிடித்ததாம் இந்த முடிவை.

இதை திராட்சை என்று நினைத்தால்தானே இனிப்பும் ? அதனை நுகர முடியாத தவிப்பும். புளி….. படுபுளி….. என்று நினைத்தால்……. நினைக்க முடியாதுதான்……இருந்தாலும் நினைத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது என்கிற நிலைக்கு வந்ததாம் நரி.

இந்த நரியின் கதைதான், இந்த மாதம் 17-ம் தேதி சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றத் தோழர்கள் கட்டியிருக்கும் முடிவைப் பார்க்கும்போது நினைவுக்குவரும். திராவிடக் கழகத்தை எப்படியும் கைப்பற்றி ஆகவேண்டும்! கழகத்தின் தலைவர் கழகத்தை விட்டுவிட்டு ஓடிவிடப் போகிறாரா, இல்லை, ஒடிவிடும்படி செய்யவேண்டுமா? என்று இரண்டு மூன்று மாதங்களாக, வெளிப்படையாக, மிரட்டி – தாவி – குதித்துக் கொண்டிருந்த கூட்டத்தார் இப்போது திராவிடக் கழகம் எட்டாக் கனி என்று முடிவுக்கு வந்துவிட்டோம் என்கிறார்கள்.

விலகினோமா – ஒதுங்கினோமா என்பதே வினாவும் எதிர் வினாவுமாக இருந்த நிலையை மாற்றிக்கொண்டு, சீச்சீ திராவிடக் கழகம் புளிக்கும் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம் என்கிறார்கள் அவர்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றிலேயே, இப்போது எங்களால் உண்டாக்கப்பட்ட எதிர்ப்பு ஒன்றுதான், இதற்கு முன்கூட இருந்தவர்களால் செய்யப்பட்ட நாசவேலை களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். இனி மேல் இராமசாமியார் எந்தவகையிலும் தலைவன் என்கிற பெயரோடு இருக்க விட்டுவிடமாட்டோம். என்று எப்படி எப்படியோ காரசாரமாக – கீழ்த்தரமாக எத்தனை வழிகளால் முழக்க முடியுமோ அத்தனை வழிகளாலும் ஆர்ப்பரித்தவர்கள்தான் இவர்கள்.

இவர்களின் எதிர்ப்பொலியைக் கேட்டு, நமக்கு எதிரியாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் சிலர்? மாற்றுக்கட்சியாளர்கள் ஆகாயக் கோட்டையே கட்ட ஆரம்பித்து விட்டார்கள். அடக்கு முறையாலும் ஆதிக்க பலத்தாலும் அடக்கிவிட முடியாத திராவிடக் கழக உயிர் நாடியான பெரியாரை கேலியாலும் கிண்டலாலும் தோல்வியடையச் செய்துவிட முடியாத இயக்கத்தை – காலித்தனத்தாலும் சில்லரை விஷமங்களாலும் கரைத்துவிட முடியாத கழகத்தை – ஏமாற்று எத்து வேலைக் காரர்கள் எந்த வேஷம் போட்டாலும் இனிமானத்தோடு வயிறு வளர்க்க முடியாது என்கிற நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்த ஈரோட்டுப்பாசறையை, ஒழித்துக் கட்டுவதற்கு – தரைமட்ட மாக்குவதற்கு – ஆழப் புதைப்பதற்கு மாற்றுக் கட்சியிலிருந்து எத்தனையோ சத்திய முர்த்திகள் (!) கைலாகு கொடுத்தார்கள்.

ஆட்சிப் பீடமும் இவர்களைக் கொண்டே இவர்களை ஒழிப்போம் என்று ஆதரவுப்படலங்களில் அடி எடுத்து வைத்தது. இவ்வளவுக்குப் பிறகுதான் சீச்சீ திராவிடக் கழகம் புளிக்கும் என்று சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகம் என்பதாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தோழர்கள்.

இந்த முடிவைக் கேட்டு திராவிட மக்கள் – திராவிடர் நலத்தில், வளர்ச்சியில் அக்கரையுடைய மக்கள் யாராயிருந்தாலும், திராவிடக் கழகத்தைப் பற்றிக்கொண்டிருந்த ஒரு தொல்லை, தானாகவே தொலைந்து விட்டது என்று மகிழ்ச்சியடையவே செய்வார்கள்.

இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூடியிருப்பவர்களில், அதாவது முன்னணியில் இருப்பவர்களில், இரண்டொருவரைத்தவிர மிகப் பலர் 2, 3 ஆண்டுகளாகவே இயக்கப் பணிக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே எத்தனை முட்டுக் கட்டைகளைப்போட முடியுமோ அவ்வளவையும் செய்து வந்தவர்கள்தான். தலைவர் பெரியார் அவர்களைப் பற்றி வசைபுராணம் கட்டி, எதிர் முகாமை எப்போது, எப்படி ஆரம்பிக்கலாமென்று எதிர் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்தான்.

இந்த மிகப்பலர் இயக்கத்தைத் தங்கள் சௌகரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில், எவ்வளவு தவறான நடத்தைகளை மேற்கொண்டிருந்தார்கள் என்பது அந்த நாணயக்கேடு – பொறுப்பற்ற நடத்தையைப்பற்றி இயக்கத் தோழர்களாலேயே எத்தனை புகார்கள் சொல்லப்பட்டு வந்தன என்பதும், இந்தப் புகார்கள் எழுந்தபோதெல்லாம, தலைவர் பெரியாரவர்கள், கட்டுப்பாடு – நேர்மை ஆகியவற்றையே பெரிதாக மதித்து, புகார்க்கு ஆளானவர்களை, தாம் அவர்களுடைய அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தும் எவ்வளவு பலமாக – வெளிப்படையாகக் கண்டித்து வந்தார்கள் என்பதும் இயக்கத் தோழாகளில் பெரும்பாலோர் அறிந்த உண்மையேயாகும்.

தலைவர் பெரியாரவர்களிடம், தங்களின் தாறுமாறான நடத்தையால் வெறுப்புக் கொண்டிருந்த தோழர்கள் அய்க்கியமாகி இருக்கும் இந்த முன்னேற்ற முன்னணி ஒதுங்கவில்லை, விலகியே விட்டோம் என்று சொல்வதைக்கேட்டு யார்தான் மகிழ்ச்சியடை யாமலிருக்க முடியும்?

ச்சீ! புளிக்கும்! என்கிற முடிவு கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, கட்டிய முடிவாக இருந்தாலும், இந்த முடிவுக்கு வந்ததற்கு முன்னேற்றத் தோழர்கள் இப்போது விளக்க ஆரம்பித் திருக்கும் படலம் மாய்மாலப்படலம் ஆக இருக்கிறது என்பதை நம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை.

திராவிடக் கழகத்தின் கொள்கைகள் எவையோ, அவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையவும் கொள்கையாம். ஒரு கொள்கையைக்கூட மாற்றவுமில்லையாம், திருத்தவு மில்லையாம், புகுத்தவுமில்லையாம். கழகத்தலைவர் பெரியார் அவர்களைக் குறைகூறுவது – துவேஷத்தை வளர்ப்பது அவர்களுடைய நோக்கமல்லவாம்.

திராவிடக் கழகம், அதனின்றும் பிரித்துவிட முடியாத பெரியார் தலைமையிலேயே இயங்கிவரவேண்டியது தான். தி.மு.கழகம் தனியாக வேலை செய்துவரவேண்டும்; ஒருவரோடு ஒருவர் முட்டுதல் – மோதுதல் வேண்டிய தில்லையாம். இப்படியாகக் கண்ணியப்பாதையில் காலடி வைத்து விட்டோம், என்று தங்களுக்குத் தாங்களே இப்போது சபாஷ் கூறத் தொடங்கி இருக்கிறார்கள். உண்மைக் காரணத்தை மக்கள் உணர்ந்து கொண்டு விடக்கூடாது; மக்கள்முன் தாங்கள் மகா உத்தமர்களாக நடித்துக்காட்ட வேண்டும் என்கிற, காலங்கடந்த ஒருமாய்மால நடிப்பே தவிர, இதில் கண்ணியம் எவ்வளவு நிறைந்திருக்கிறது என்பதை, இன்றைக் கில்லாவிட்டாலும் மிக விரைவாகவே மக்கள் தெரிந்து கொண்டுவிடுவார்கள்.

லட்சுமிகாந்தத்தையும் தோற்கடித்துவிடும் முறையில், சாக்கடைப் பத்திரிகைகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு – அப்பேர்ப்பட்ட யோக்கியதையுடையவர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு நடத்தும் ஒரு கூட்டுக்கம்பெனி, கண்ணியம் என்கிற போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கிறது என்பதை எவ்வளவு காலத்திற்குத்தான் மறைத்துவிட முடியும்? உண்மையாகவே கண்ணியத்தில் கருத்து இருக்குமானால், மிக மிக மட்டரகமான குச்சுக்காரியைக் காட்டிலும் கேவலமாக நடந்துகொண்டுவரும் கூட்டுத் தோழர்களைப் பற்றி, வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இந்தக் கூட்டுக் கம்பெனி இதுவரை கண்டித்து நிறுத்தாது ஏன்? என்கிற அய்யம் எவரும் உண்டாக்கத்தானே செய்யும்? எப்படியோ போகட்டும்! இந்த நோக்கத்தோடு, இப்போது இந்தப்படலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தை நாம் உண்மையாகவே வரவேற் கிறோம்.

திராவிட மக்களுடைய அரசியல் முன்னேற்றத்துக்கு, திராவிட மக்களின் சமயத் துறையிலும் சமுதாயத்துறையிலும் முதலில் காணப்படும் முன்னேற்றமே வழியாகும் என்பதை உணர்த்தி அந்த வழியில் பாடுபட்டுவரும் திராவிடக்கழகம், இனிமேலாவது, இப்படிப்பட்ட உட்பகை ஒழிந்துவிட்ட காரணத்தால், தன்னாலான அளவுக்குத் தீவிரமாகவே வேலை செய்துவரும் என்பது உறுதி.

திராவிடக் கழகம் இனி எப்படி? திராவிடக் கழகத்தால் இதுநாள்வரை விளம்பரப் படுத்தப்பட்டு வந்த பல எழுத்தாளர்களும் பேச்சாளர்களும், முன்னேற்றக் காரர்கள் என்கிற லேபிளைக் குத்திக்கொண்டு விட்டார்களே.

இனித்திராவிடக் கழகத்துக்குப் பெருமை இருக்குமா? என்கிற எண்ணம் சிலருக்கு உண்டா கலாம். திராவிட இயக்கத்தின் உண்மையான அடிப்படையை உணர்ந்தவர்களுக்கு; இந்தக் கவலையே தேவை இல்லை. இத்தனை எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் உண்டு பண்ணிய பெரியாரவர்களைத்தான் கழகம் இப்போதும் தலைவராகக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி மறந்துவிட முடியும் என்று கேட்கிறோம்.

கடைசியாக இதைப்பற்றி விடுதலை கூறியிருக்கும் கருத்தைக் கூறி இதனை முடிக்கிறோம். தலைவர் பெரியாருக்குப் பெருமை இருந்தால், தலைவர் பெரியாரிடத்தில் நாணயம், உண்மை, சுயநலமற்ற உழைப்பு இருந்தால் கழகத்துக்கும் பெருமை, மரியாதை  இருக்கும். அதுபோலவே எந்தக் கட்சிக்கும், அதற்கு ஏற்ற பெருமையுண்டு. ஆதலால் அதைப் பற்றிப் பொது மக்களுக்கு கவலை தேவை இல்லை.

குடி அரசு 24.09.1949

 

You may also like...