62. அரங்கேற்ற நாடகம் ஏன்?

தென்னாடு வடநாட்டிற்கு அடிமைதானாம். நிரந்தர அடிமையாகவே இருந்துதீர வேண்டியது தானாம். வடநாட்டு ஆதிக்க வெறியர்களின் ஆதிக்கத்திற்குத் தென்னாட்டிலிருந்து அவர்களால் பிடித்து வைக்கப்பட்டவர்கள் இதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டார்கள். சாஸ்வத அடிமை சாசனத்தில், அடிமைகளின் பிரதிநிதி எனக் கூறிக்கொண்டு வெளிப்படையாகக் கையொப்பமும் போட்டுவிட்டனர்.

பலநாட்களாய் அ.நி. சபையில்கடும் விவாதத்தில் இருந்து வந்ததுபோல் பேசப்பட்ட இந்தி மொழிப் பிரச்சனையானது, இந்தி என்கிற ஒரு மொழி மட்டும்தான் இந்தத் தேசத்தில் உள்ள எல்லோராலும் பேசப்பட வேண்டியமொழி (தேசீய மொழி) என்பதாக சட்டஅங்கீhரம் பெற்றுவிட்டது இந்த மாதம் 14ம் தேதி. பரிதாபத்துக்குரிய செய்தி! திராவிடனின் ஜீவனில் கை வைத்துவிட்ட முயற்சி!

அ.நி.சபையில் இந்தி பிரச்சனை கடுமையான தகராறில் இருந்து கொண்டிருக்கிறது என்றுவந்த செய்தி யெல்லாம் உண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ? முன்னேற்பாட்டோடு கூடிய நாடகம்தானோ என்றுதான் எவரும் நினைக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் அ.நி.சபையில் விவாதத்திற்கு உரியதாய் இருந்த பிரச்சனை இந்தியும், இந்தியினும் பல மடங்கு சிறந்த வேறு எத்தனையோ மொழிகளும் இருக்கும் இந்த துணைக்கண்டத்தில், இந்தி ஒன்றுமட்டும்தான் தேசீயமொழியா? துணைக் கண்டத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் தேசீயமொழி களா என்பதாக இல்லை. தேசீய மொழியை நிர்ணயிக்க வேண்டிய ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள், உண்மையாகவே அந்த ஸ்தானத்திற்குரியவர்கள் என்றால் அவர்களுடைய முதற்கவனம் தேசீயமொழி என்பதற்கு என்ன அர்த்தம்? என்பதிலாவது ஈடுபட்டிருக்க வேண்டும்.

ஆனால்  அ.நி.சபை நாடகக் குழுவினரில், இப்போது வேற்றுமை இருந்தது போல் நடித்துக் காட்டப்பட்ட பகுதி, இந்திமொழி தெரியாத 20-கோடி பொது மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்கிற முன்னேற்பாட்டோடு செய்யப்பட்ட, ஒரு காட்சி, அல்லது அப்படிப்பட்ட ஒரு பலனைத்தான் கொடுத்திருக்கிறது.

இப்போதைய அ.நி.சபைக்கு, வடநாட்டுப் பணமூட்டைகளின் கருவியாயிருக்கும் காங்கிரசி னால், நியமிக்கப்பட்ட நியமன மெம்பர்கள் தான், உறுப்பினர்களாய் இருப்பவர்கள். இந்த உறுப்பினர்கள் எல்லாம் எப்போது அதற்கு உறுப்பினர்களாய் நியமிக்கப்பட்டார்களோ, அதற்குப் பல காலத்திற்கு முன்னால் இருந்தே இந்தி ஒன்று தான் இந்தத் துணைக் கண்டத்திற்குத் தேசீய மொழி என்பதாக, வடநாட்டு ஆதிக்கத்தாரின் காங்கிரசால் பலமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதை ஒப்புக்கொண்டு, இந்தியைத்தான் தேசீய மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பின் பாட்டுப் பாடியவர்கள் யாரோ, அப்பேர்ப் பட்டவர்களைத் தான், இந்தி மொழி யறியாத நாடுகளிலிருந்து பொறுக்கி எடுத்து அ.நி.சபைக்கு நியமிக்கப்பட்டது.

இவ்வாறு முன்னாலேயே, மறைமுகமாக அடிமை சாசனத்தில் கையொப்பமிட்ட பேர்வழிகளை வைத்துக் கொண்டு நடிக்கப்படும் இந்த நாடகத்தில், நாடகமாய் இல்லாவிட்டால் வேற்றுமை – தகராறு என்பதற்கெல்லாம் எப்படி இடமிருக்க முடியும்? குறிப்பாக தென்னாட்டு பிரதிநிதிகள் என்று வைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்ப்போம். என்றைக்கு சமஸ்கிருதம் பயின்றோர்க்கு ஆதிக்கம் ஏற்பட்டதோ அன்று தொட்டுத்தான், தென்னாடு சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அத்தனை துறைகளிலும் வீழ்ச்சியடைய தலைப்பட்டது.

இந்த உண்மையை உணர்த்தும் வரலாறுகளும், இலக்கியங்களும் இன்றைக்கும் இந்த நாட்டில் மலிந்து காணப்படுகின்றன. இவ்வுண்மையைக் கண்டுணர முடியாத ஒரு பிரகிருதியை எப்படித் தென்னாட்டின் பிரதிநிதி என்று கருத முடியும்? அ.நி.சபையில் அங்கம் வகிக்கும் தென்னாட்டுப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களில், இவ்வுண்மையை உணராதவர்கள் அறவே இல்லை என்பது நம்கருத்தல்ல. உண்மையை உணர்ந்தவர்களாய் ஒரிருவர் உண்டு.

இன்னும் சொல்லப் போனால், ஒரு காலத்தில் பெருஞ் செல்வாக்கோடு இருந்தது என்று இப்போது பேசப்படுகிற, இறந்துபட்ட சமஸ்கிருதம் புழுத்த புழுக்களில் ஒன்றே இந்த இந்தி மொழி, சமஸ்கிருதத்தால் நாடு பெற்ற சீரழிவுக்குக் குறையாதபடிதான் இந்திமொழி ஆதிக்கம் ஏற்பட்டால் உண்டாகும் என்கிறதான இந்த உண்மைகளையும் அறிந்தவர்கள்தான் அந்த ஓரிருவர். அப்படி உணர்த்திருந்தும்தான் அடிமைச் சாசனத்தில் மறைமுகமாகக்கை யெழுத்துப் போட்டவர்கள் இவர்கள்.

இப்படி ஏற்கனவே அடிமை முத்திரை குத்திக் கொண்ட இவர்கள், இப்போது வேற்றுமை ? தகராறு என்று பேசியதெல்லாம், இந்தியாவை தேவநாகரி லிபியோடு (சமஸ்கிருத சார்பான எழுத்தோடு) ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் 1, 2, 3 என்று எழுதப்படுகின்ற எண்களை மட்டும், இந்திமொழியில் உள்ள எழுத்தால் இல்லாமல், அனைத்துலக எண்களையே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

வேற்றுமைக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட இந்த எண் வடிவத்தின் பிரச்சனை, அப்படி ஒன்றும் பிரமாதமானதில்லை. இருந்தாலுகூட எவ்வளவு பிரமாதமாகக் காட்டமுடியுமோ அவ்வளவு பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டது. மலை விழுங்கும் மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளமாகத் தானிருக்க முடியும். இந்தி மொழியையே பயின்றுவிடுவோம் என்பவர்களுக்கு, பார்க்கப்போனால் இந்தி எண்கள் அப்படி ஒன்றும் கடினமானதில்லை. இந்தியின் ஆதிக்கம் இந்தத் துணைக்கண்டம் முழுவதும் பரவவேண்டும், இதன் வாயிலாக பனியாக்களின் ஏகாதிபத்தியம் இந்தத் துணைக்கண்டத்தில் நடைபெறவேண்டும் என்று கனவு காணும் வடநாட்டு இந்தி வெறியர்களை எடுத்துக்கொண்டாலும், இந்த எண் வடிவப் பிரச்சனை அப்படி ஒன்றும் பிரமாதமான தில்லை. தலையும் உடம்பும் நுழைவதற்கு இடங்கொடுத்த பிறகு வாலைமட்டும் தானா நுழைத்துவிட முடியாது? இந்தியை ஒப்புக்கொண்ட, இன்னும் சில காலத்திற்குப் பின் இந்தி எண் வடிவங்களையும் நுழைத்துவிட முடியும் என்பதை அவர்களும் அறியாதவர்கள் அல்ல. எவருக்கும் விளங்காததுமல்ல. இருந்தும்கூட இரு தரப்பார் என்று பேசப்பட்டு, இருதரப்பாருக்கும் கடுமையான விவாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, இருதரப்பாருக்கும் வெற்றியான முறையில் சமாதானம் என்றும் பறைசாற்றப்பட்டு இருக்கிறது இப்போது.

15-ஆண்டு வரை ஆங்கிலம் இருந்துவருவது என்பதுபோல், 15-ஆண்டுவரை அனைத்துலக எண்களும் இருந்துவரும் பின்னர்…….. பின்னர்…..? இதுதான் இப்போது சமாதான மாகியிருக்கும் இந்தி எண் வடிவப்பிரச்சனை. இது யாருக்கு வெற்றி? இது எப்படி விவாதம்? தென்னாட்டின் உயர்வை ஒழிக்க – மட்டந்தட்ட அந்தக் காலத்தில் வடநாட்டிலிருந்து ஒரு அகத்தியன் வந்தான் என்பது பழங்கதை. அகஸ்தியன் அழிந்தான். அவன் கட்டிய சமஸ்கிருதக் கோட்டையும் அழிந்தது என்று மீண்டும் வீறுடன் முழக்கும் இந்த நாட்டில், சில அகஸ்திய தாசர்கள் இங்கிருந்து பிடித்து வைக்கப்பட்டு, அவர்களின் துணையால் மீண்டும் சமஸ்கிருதத்தின் ஒரு பிள்ளை அரியாசனத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த அரியாசனம் சரியாது என்பதுதான் அரியாசனம் அமைத்தோரின் எண்ணம். அகஸ்தியனும், அவன் கட்டிய கோட்டையுமே சரிந்துபோன இந்தத் துணைக் கண்டத்தில், அகஸ்தியதாசர்களின் அரியாசனம் எத்தனை நாளைக்கு?

தென்னாட்டிற்கும் வடநாட்டிற்கும் தீராத பகையுணர்ச்சிக்குத் தான் பலமாக வழிவகுக்கப் பட்டிருக்கிறது என்பதாகத்தான், இந்தி தேசீய மொழி என்கிற இந்த அரங்கேற்றத் தை நாம் கருதுகிறோம். எந்தக் காலத்திற்குமே தென்னாடும் ? வடநாடும் சிநேகபாவ உணர்ச்சிகூட கொள்ள முடியாத நிலைமைக்குத்தான் இப்போது அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது என்பதாகத்தான் இந்த நாட்டுப் பாமரன் கருதமுடியும். இதனால் எவ்வளவு நஷ்டமடைந்தாலும், இந்த ஏற்பாட்டைத்தகர்த் தொழிக்க வேண்டியதுதான் தென்னாட்டவரின் ? திராவிடரின் மானமுள்ள செயல் என்பதாகத்தான் திராவிடத்தின் இளைஞர்கள் எண்ணமுடியும். இவ்வாறு பலம் வாய்ந்த ஏகாதிபத்திய வெறியர்கள்கூட பறித்துவிட முடியாது என்பதைத் தான் இவ்வுலக வரலாறுகளே எடுத்தியம்புகின்றன. அப்படியிருக்க இந்த அரங்கேற்ற நாடகம் ஏன்?

குடி அரசு 17-09-1949

You may also like...