39. இறக்குமதி மோகம் என்று தீருமோ?
வடக்கே காவடி எடுப்பது என்பதும், வடக்கேயிருந்து தலைவர்கள் (வடக்கே இருந்து வந்தாலே தலைவர்கள் தானே) வருவது என்பதும், இங்கே அவர்கள் சமாதானம் செய்வது, பேரம் பேசுவது, விசாரணை செய்வது என்பதும் நமது திராவிடக் காங்கிரஸ் தோழர்களுக்கு ஏனோ வெட்கமாகத் தெரிவதில்லை.
ஒரு வேலை பழக்கத்தின் முதிர்ச்சியோ என்னவோ, அந்த வெட்க உணர்ச்சி மரத்துப்போய் விட்டது போலும். எப்படி என்றால் நரகல் எடுப்பவனுக்கு நரகலின் நாற்றம் எப்படித் தெரியாதோ அதுபோல.
வடக்கே இருந்து முன்பு காந்தியார் வந்தார். தோழர் காமராஜரைக் கிளிக் என்று அப்போது வருணித்தார். தமிழ் நாட்டு ராஷ்டிரபதி என்று பட்டம் கட்டிவிடப்பட்ட பேர்வழியின் நிலைமையே, தவித்துத் தாளம் போட வேண்டிய நிலையாய் இருக்கும்போது, மற்ற அப்பாவிகள் என்ன செய்ய முடியும்?
வடக்கே இருந்துவரும் இந்த இறக்குமதிகள் எல்லாம், பெரும்பாலும் பார்ப்பனருடைய கண்காணிப்பில், தயவில், விளம்பரத்தில் இங்கு வந்து போவது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இறக்குமதிகள் மட்டுமல்ல, நம் நாட்டுப் பூர்வீகப் பெருங்குடி மக்கள் நிலைமையே அப்படித்தானே இருந்து வருகிறது.
இன்றையச் சென்னை சர்க்கார் ? பெரும்பாலும் திராவிடர்களையே மந்திரிகளாய்க் கொண்டிருக்கும் சர்க்கார் கூட, அசல் வெள்ளையன் சர்க்காரும் வெட்கப்படும்படி நம் பத்திரிகைகளின் மீது, புத்தகங்களின் மீது, நாடகங்களின் மீது, மாநாடுகளின் மீது, சாதாரணக் கூட்டகள் மீது எல்லாம் தங்கள் கைத்திறனைக் காட்டவில்லையா?
இந்த நடவடிக்கைகள் அவர்களாகவே சர்க்கார் நன்மையை நாடியோ, மக்கள் தொண்டென்று கருதியோ அப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? ஏதோ இப்படி நம்மீது விழுந்து பாயாவிட்டால், ராஜபாளையத்தாருக்கும் ஓமந்தூரார் கதியே ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம்தானே இந்த ஜாமீன் கெடுபிடிகளுக்குக் காரணம்? நாளைக்கு ராஜ பாளையத்தார் ஆட்சியில் நடந்ததென்ன என்று, சட்டசபையில் யாரோ ஒரு இரண்டுக்கெட்டான் பேர்வழி, ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தால், நம் எதிரிகள் மீது எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்கிற ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்தால் அல்லவா ராஜபாளையத் தாருக்குள்ள பேராதரவுக்குச் சாட்சியாகும்! அப்பொழுதல்லவா, மந்திரிகளின் விளாசல் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில், அவர்கள் போட்டோக்களோடு வெளிவரும்.
இன்றைக்கும் அதைச் சொல்லித்தானே, பத்திரிகை முதலைகள், சர்க்கார் தங்களுக்குப் போடக் கருதியிருக்கும் விளம்பர வரியை நீக்கவேண்டும்மென மிரட்டுகின்றன. சர்க்கார் கையிலேயே பல பாஷைப் பத்திரிகைகளும், ரேடியோக்களும் இருந்தால்தானென்ன, அவைகளுக்காகச் சர்க்கார் பல லட்சங்கள் செலவு செய்துதான் என்ன? நம்நாட்டு ஆரியப் பத்திரிகைகளின் ஆதரவில்லாவிட்டால், இவர்கள் எப்படித் தலைவர்கள் ஆகமுடியும்? இதனை உணர்ந்துதான் நம் மந்திரிகள் புத்திசாலித் தனமாக நடந்துகொண்டு விடுதலையின் 2000த்தைப் பறிமுதல்செய்து ரூ.10000 புது ஜாமீன் கேட்டுள்ளனர். பதவியிலே சிரஞ்சீவியாக வாழத் திட்டமிட்டுத்தான் காங்கிரஸ் திராவிடர்களே வெட்கப்படும் நிலையில் ? தினசரியே கண்டனத் தலையங்கம் தீட்டும் வகையில் நடந்தாலும், ஆரியத்தின் புன்னகை ஒன்றே போதாதா என்று எதிர்பார்த்து வாழ்கின்றனர். வாழ்க அவர்கள் புத்திசாலித்தனம்! வளர்க அவர்களின் அடக்குமுறை!
இந்த அற்புதமான நம் சர்க்காரிலே சில மந்திரிகளைப்பற்றி பல புகார்கள் அச்சிட்ட புத்தகமாக ? ஆதாரங்களுடன் அனுப்பப் பட்டதாம். திராவிடர் கழகத்தாராலல்ல. திராவிடக் கழகத்தார் நியாயம் கேட்டால்தான் இம் மமதைகள் கருத்தில் காலித்தனம் எனும் பட்டம் வழங்கப்பட்டு விடுமே! பிராது கொடுத்தவர்கள் பிரகாசம் கோஷ்டியார். இன்று தான் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கையைக் கூற முடிவதில்லையே.
ஒரு தோழருக்கு ஒரு சிறுசலுகை மறுக்கப்பட்டால் அவர் ஒரு கோஷ்டி; ஒருவருக்கு ஒரு சலுகை செய்து நண்பராக்கிக் கொண்டால் அவர்கோஷ்டி ஒன்று. இப்படித்தானே அவர்களுக்குள்ளே ஆள் சேர்ப்பதும் ஆள் கவிழ்ப்பதும் நடைபெறுகிறது. நாம் எந்த மந்திரிக்கும், எந்தக் கோஷ்டிக்கும் வக்காலத்து வாங்க விரும்பவில்லை. நம் வீட்டுக்குடும்ப நிலையைச் சந்தி சிரிக்கும்படி அன்னியனிடம் காட்டி நீதி எதிர்பார்க்கலாமா? நீதி கிடைக்குமா அன்றி நீங்காப் பழி கிடைக்குமா? இதனை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
விவேகமும் வீரமும் இருந்தால் நம்ம சர்க்கார் என்ன செய்திருக்கவேண்டும். எங்கள் மந்திரிகள் மீது புகாரா; இங்கே அனுப்புங்கள் எனப் புகார்களை வாங்கி பூர்வாங்கமாக விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களில் உண்மை இருந்தால், சம்பந்தப் பட்டவர்களை வழக்கு மன்றத்தில் ஏற்றி நீதியை நாட்டுக்கு எடுத்துக்காட்டி, சர்க்காருக்கு ஏற்படும் களங்கத்தை ? கட்சிக்கு ஏற்பட்டுள்ள கேவல நிலையைப் போக்கவேண்டுமே ஒழிய, சர்க்கார் தங்களிடமுள்ள தஸ்தாவேஜீகளை அன்னியருக் காட்டுவதும், அதனைச்சட்டசபையில் கேட்டால், அந்தரங்க தஸ்தாவேஜீகள் தேவிடம் தரப்படவில்லை. யுக்தமறிந்தே சர்க்கார்நடந்து கொண்டிருக்கிறார்கள். சில தஸ்தாவேஜீகளை வைத்துக் கொண்டு சம்பாஷணை நடந்திருக்கலாமென்றும் பதில் மழுப்பலாகவும், புரியாதது போலவும் பதில் கூறுவது அழகா? விசாரணைக்கு வந்த தோழர் தேவ் அவர்கள் தம்முடன் ஒத்துழைத்து, சர்க்கார் வேண்டியதைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதற்கு என்ன சொல்வார்களோ நாமறியோம். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து தோப்புக் கரணம்போடும் புத்தியை விட்டு, நமக்கு நாமே தீர்ப்பளிக்கும் அறிவும் ஆற்றலும் நம்மிடமுள்ளது என்பதனை ஏனைய நாடுகளுக்குக் காட்டவேண்டாமா?
இப்படி வடநாட்டுத் தலைவர்கள் இங்கே வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் சும்மா இருப்பதில்லை. நீரிலிருந்து எடுத்தெறியப்பட்ட மீன்போலத் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். எங்கள் பிள்ளைகள் படிக்க வசதியில்லை. எங்களுக்கு உத்தியோகமோ படித்தவர்களுக் கெல்லாம் கொடுப்பதில்லை. எங்களைச் சர்க்கார் உயர்ந்த ஜாதிக்காரர் என உணர்ந்துகொண்டனர் என ஓலமிட்டு, ஒப்பாரி வைத்துத் துடிப்பது வழக்கமாகிவிட்டது.
அண்மையில் சென்னைக்கு பட்டேல் வந்தபோது, நம் பத்திரிகைகளைப் பற்றிப் புகார்கள் செய்து பார்த்தார்கள். அவரும் சட்டம் இடந்தரவில்லை என்று சொன்னார். சட்டம் இடந்தராவிட்டாலும் ஜாமீன் எனும் கொல்லைப்புறம் இல்லையா? பறிமுதல் என்னும் அணுக்குண்டு இல்லையா? என ஆரியம் தூபம் போட்டு வந்தது. இதனையெல்லாம் நம் தோழர்கள் மறந்திருக்க முடியாது. சில தலைவர்கள் தங்கள் சூழ்நிலைக்குத்தக்கபடி தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், பேசும் இடத்திற்கும் தக்கபடி நம்மைத்தாக்கியும், தாக்குவதாகப் போக்குக் காட்டியும் செல்வதுண்டு. ஓரிருவர் தைரியமாக உண்மையை எடுத்துக் கூறுவதும் உண்டு.
குறிப்பாகப் பார்ப்பனர்கள் இத்தலைவர்களிடம் இலோசனை முகாரியாகக் கூறுவது, எங்கள் சிறுபிள்ளைகளுக்குப் படிக்கக்கூட வசதியில்லையே என்பது. பின் அடுத்துப் போடுவது இந்த சர்க்கார் மதசார்பற்ற சர்க்காராக இருந்துகொண்டு இன்னும் கம்யூனல் ஜி.ஒ.வை ஒழிக்காதிருப்பது என்பது. இதனை முன் காந்தியார் வரையில் கூறினார்கள். காந்தியார் சரியான சூடு கொடுத்தார் அப்போது நீங்கள் மக்கள் சுபீட்சமாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே உங்கள் தொழில். அதனைவிட்டு விட்டு உங்கள் பிள்ளைக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டாமென்றார். என்ன இருந்தாலும், யாராயிருந்தாலும், அந்தக் கடவுளாகவே இருந்தாலும் அவர்கள் இனத்திற்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறினால் சும்ம இருப்பார்களா? காந்தியாரைச் சுட்டுக் கொன்றார்கள்.
இன்று காந்தியாரைச் சுட்டுக்கொன்றது சுயநல நோக்கமல்ல, பொதுநல நோக்குடன் அப்படிச் செய்தவரை தூக்கிலிட்டால் காந்தியார் ஆத்மா துன்பமடையும் என்று கூட கூறத் துணிந்து விட்டார்களே! அப்படியில்லாமலா சேலத்திலுள்ள ஒரு பார்ப்பனப் பெண்ணுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால், கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் எழுதுவார்கள்! அவ்வளவு புத்திசாலியான இனம், மந்திரிசபையைச் சோதனைபோட வந்த இந்த நேரத்தில் சும்மா விட்டுவிடுமா? அவரையும் கேட்டுவைத்தார்கள்.
எங்களுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என முகாரி பாடியுள்ளனர். அதற்கு முன்னாள் பிரதமர் ஒமந்தூர் ராமசாமியாரைப் பார்த்த மறுநாள் ராஜாஜி மண்டபத்தில் பேசிய தோழர் தேவ், லட்சாதி லட்சம் நாட்டு மக்கள் ஆரம்பக் கல்வி கூட பெற வசதியில்லாது தவிக்கும் நேரத்தில் அதை மனதிற் போட்டுக்கொள்ளாமல்.தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளில் இடங்கிடைக்கவில்லையே என புகார் கூறிக்கொண்டு திரிகின்றனர் சுயநலக்காரர்கள் எனப்பதில் கூறியதுடன் நில்லாது, ஜாதி மத வேற்றுமைகள் மறைந்துபட்டால்தான் ஜனநாயகம் சாத்தியமாகும் என்று பார்ப்பனரோ பார்ப்பன ரல்லாதாரோ ஒருவருக்கொருவர் குறை கூறுவது பயனில்லை; கல்லூரிகளில் பார்ப்பன மாணவர்களுக்கு இடங்கிடைப்பதில்லை எனப் புகார் செய்யப்படுகிறது; கல்லூரிகளில் இடங்கிடைக்க வில்லையே என ஏக்க முற்றுப் பேசுபவர்கள், நாட்டின் நிலையை அறிய முனையவேண்டும். எழுத்து வாசனையற்ற ஏழைகள் லட்சம் லட்சமாக உள்ளனர். அவர்களைக் கவனிக்க வேண்டாமா? அவர்களுக்கு உதவிட வசதிசெய்ய வேண்டாமா? கல்லூரிப்படிப்பைக் காத்திருந்து பெறுவதுதானே என இடித்து வேறு கூறியுள்ளார்.
இதனை ஆரியர்கள் படிப்பினையாகக் கொள்வார்கள் என நம்புவதற்கில்லை. தலைமை யிடங்களில் தங்களுக்குச் சலுகை உள்ளது என்ற காரணத்தினால் தென்னாட்டுத் தலைவர்கள் வடநாட்டுத் தாசர்கள்தான் என்ற உண்மை இருக்கும் வரை, இங்கிருப்பவர் யாராயிருந்தாலும் இவர்களுக்கு எட்ட நின்று உத்தரவு போட நம்மவா அங்கே டில்லியில் இருக்கிறார்கள் என்ற தைரியம் உள்ள வரை இதனை அவர்கள் கைவிடமாட்டார்கள்.
இந்த நிலைமை மாறி நம் நாடு வடக்கே காவடி தூக்குவதை எப்பொழுது கைவிடும்? வடக்கத்தியார் நம் எஜமானர்களாய் ஆகிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலம்தான் நீட்டித்துக் கொண்டிருப்பது? இந்த இறக்குமதி மோகம் என்றைக்குத் தீருமோ? இதுதானே நாம் திராவிட காங்கிரஸ் தோழர்களைக் கேட்கும் கேள்வி!
குடி அரசு 25.06.1949