51. கடவுள் சக்தி!

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்கமுடியாதாம். ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங் களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதியவைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை  கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்திவைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவைகளில் கஷ்டப் படுத்திவைக்கவும் முடியுமாம். நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்துவர்களுடைய கடவுளும் மனிதன் செத்தபிறகு, எல்லார் குற்றம் குறைகளையும் ஒன்றாய்ப் பதியவைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுளியிலிருந்து எழுப்பிக் கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம்.

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களுக்கும், வைணவர்களுடைய கடவுள்களுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்தபின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவை பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து அந்த சரீரத்திற்கு அதற்குத் தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

கிறிஸ்துவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம். அந்தப் பாவம் ஏசுகிறிஸ்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம். முகமதிய மார்க்கப்படி மகமது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.

சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம். வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம். ஆனால் சைவ வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.

அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கிற பதவிகள் உண்டாம். அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம். இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம். ஆகவே பொதுவாகக் கடவுள்களுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ளமுடியாது என்பது மாத்திரமல்லாமல், அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகா மகா பெரிய பெரிய பாவமாம்.

அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவைகளுக் கெல்லாம் பிராயச்சித்தமும் மன்னிப்பு முண்டாம். ஆனால் கடவுளைப்பற்றியோ அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.

அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறிஸ்து நாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது சிவன், விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம் கடவுளைச் சந்தேகப்பட்ட குற்றம்?) மன்னிக்கப்படவே மாட்டாது.

ஆனால், இந்த எல்லா கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும் அவர்களுடைய அவதாரங்களுக்கு கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்களைச் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ, அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்கமுடியாதாம். ஏனென்றால், அவ்வளவு நல்லசாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்தியசர்வ வியாபகமுள்ள கடவுள்களாம். பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்திரவு செய்ய வேண்டும். எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்துவிடுவோம்.

குடி அரசு 20.08.1949

You may also like...