61. வேறு யாருக்கு வேலை?

பஞ்சம்! பஞ்சம்!! பஞ்சம்!!! உணவுக்குப் பஞ்சம், உடைக்குப் பஞ்சம், குடியிருக்க வீட்டுக்குப் பஞ்சம் என்று இந்துஸ்தானம் முழுவதிலும் ஏகக் குரலாயிருப்பதைத் தான் இந்த நாளில் கேட்க முடிகிறது. இந்தப் பஞ்சங்களைப் போக்க, எப்படி எப்படியோ மண்டைகளை உடைத்துக் கொண்டுதான் பார்க்கிறோம், ஆனால் ஒன்றும் பயனில்லை என்று தான் சேர்ந்து அழுகிறார்கள் இந்துஸ்தான் சர்க்காரும். பஞ்சங்களைப் போக்க – பற்றாக்குறையை ஒழிக்க உருப்படியான நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், எல்லாம் வாய் வீராப்போடு முடிந்து விடுகிறது.

நாட்டிலுள்ள பெரும்பான்மையோர், அறிவைப்பெருக்க ஆதரவு இல்லாதவர்களாய் – இருட்டறையில் உழன்று கொண்டு, பஞ்சங்களுக்கு பலியாகி, எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகி, வாழ்வையே ஒரு பெருஞ் சுமையாகக் கருதிக் கொண்டு, என்றைக்கு இந்த உலகத்தை விட்டு, எப்படி ஒழிந்துபோவோம் என்கிற சிந்தனையையே தியானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தியானம் கலைந்து உலகத்தில் அவர்களை மீண்டும் நடமாடவைக்க – நல்வாழ்வு தழைக்க மார்க்கமில்லா மலில்லை. மார்க்கம் தெரிய வில்லை என்றோ, தெரியப்படுத்தவில்லை என்றோ, எளிதில் தட்டிக்கழித்து விடவும் முடியாது. இந்துஸ்தான் அதிபர்கள் இப்போது முழக்க மிடுவதெல்லாம், பற்றாக்குறை தீர – பஞ்சத்தை ஒழிக்க உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான்.

உற்பத்திப் பெருக்கம் தான் பற்றாக்குறை தீரும் வழி என்பதை நாமும் ஒப்புக்கொள்ளுகிறோம். உண்மையும் அதுதான். ஆனால் உற்பத்திப் பெருக்கம் எப்படிஆகும்? பெருக்கத்திற்கான வழி துறை என்ன? சித்திரம் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் சுவர் இருக்க வேண்டாமா? என்பது கேள்வியாயிருக்கும் போது, சுவர் இருக்கிறதோ இல்லையோ கவலை இல்லை என்பதாகச் சொல்லிவிட்டு, சித்திரத்தைப் பற்றிப் பேசினால், அந்தப் பேச்சுக்கு எதை ஒப்பிடுவது? 3-பேர் இருக்கும் ஒரு வீட்டில், காலத்தாலும் சந்தர்ப்பத்தாலும் முன்னணிக்கு – தலைமைக்கு ஆதிக்கத்திற்கு வந்துவிட்ட 2 பேர் தங்களின் சுய தேவையையும் பூர்த்திசெய்து கொண்டு, மேற் கொண்டும் ஆயிரக் கணக்கில் செல்வத்தை முடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குடுப்பத்தில் எஞ்சிய 28 பேர், ஒரு வேளை யுணவுக்குக் கூட வழியற்றவர்களாய் வாடுகிறார்கள். வாடி வதங்கும் 28 பேருடைய கூக்குரல் – கேள்வி இதுதான்.

குடும்பம் என்றாலே முப்பது பேரும் உறுப்பினர்களாய்ச் சேர்ந்த ஒரு கூட்டுறவுதானே. கூட்டுறவான வாழ்வில் எப்படி 2 பேர் மட்டும் சுய தேவைகளையும் பூர்த்திசெய்து கொண்டு, மேற்கொண்டு முடக்கி வைக்கமுடிந்தது? கூட்டு உறுப்பினர்களை வஞ்சித்த வஞ்சகம்தானே இதற்குக் காரணம்? இல்லாவிட்டால் எங்கள் 28 பேர் வாழ்வும் இப்படியா இருக்க வேண்டும்? ஏதோ ஒருகாலத்தில் ஏமாந்து போனோமென்றாலும் இனி ஏமாற மாட்டோம். எங்களை ஏமாற்ற நினைக்கும் எத்தர்களே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத்திமிர் வாதம்?

இப்படி மனங்குமுறிக் கேட்கும், குடும்பத்தின் துணை உறுப்பினர்களை நோக்கி, இது உங்கள் தலை எழுத்து; அதற்கு யார் என்ன செய்வது? தலை எழுத்தை மாற்ற ஆண்டவனைச் சந்தோஷப் படுத்தும் வழி அவன் மனம் மாறும் வண்ணம் பிரார்த்திப்பது தான்! என்று வேறு யாரேனும் கூறும் சமாதானத்தைக் கேட்டு எவ்வளவு காலத்திற்குத்தான் 28-பேரும், அதை நியாயம் நியாயம் என்று ஒப்புக் கொள்ளுவார்கள். 28-பேர்களில் இரண்டொருவருக்காவது சுயசிந்தனையும், ரோஷமும் உண்டாகாமலா இருந்துவிடும்?

வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்து வஞ்சகர்களின் வஞ்சகத் தன்மையைக்கைவிட்டு விடவேண்டு மென்று வற்புறுத்தும்போது, வஞ்சகர்களைப் பற்றிக் கவலை படாதே! நீ உழைப்பது போதாது, மேலும் பாடுபடு!! மூச்சு இருக்கும்வரை முட்டின்றிப் பாடுபடு!!! என்று இதோபதேசம் செய்வதென்றால், உபதேசம் செய்வதற்குச் சுலபமானதே தவிர, செயலுக்கு அது எந்தஅளவு பயன்படக் கூடியதாய் இருக்கும்?

உழைக்கத் தயார்! உயிர் வாழத் தேவையான உழைப்பை, உயிர்போக்கும் அளவுக்குக் கூட மாற்றிக்கடுமையாக உழைக்கத் தயார்! ஆனால் உழைப்பு வஞ்சிக்கப் படாமல் இருக்க ? இதுநாள்வரை வஞ்சித்தது போல் இனியும் வஞ்சியாமலிருக்க, வழி என்ன என்பதைத் தெரியப்படுத்த வேண்டாமா? என்றுதானே பாடுபட்டும் பலன் பெறாதவன் கேட்பான்.

இப்படிக் கேட்பதை எந்தவகையிலாவது நியாயத் தவறு என்று சொல்லிவிட முடியுமா? ஆனால் இதற்கான விளக்கம், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்பவர்களிடம் கிடைக்கிறதா? பணக்காரர்களை உடனடியாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும், அவர்களுடைய வம்சத்தில் ஒரு புல் பூண்டு கூட இருக்கவிடக் கூடாது என்பது நம் கருத்தல்ல. பணக்காரர் ஆக இருப்பவர்களை இந்தத் தலை முறைக்குவிட்டு விட்டாலும் படிப்படியாகப் பணக்காரத் தன்மையைக் குறைத்துக் கொண்டுவருவதற்கு, இனியும் புதிதாகப் பணக்காரத் தன்மைக்கு நாட்டில் வழி இல்லை. என்று சொல்வதற்கான ஒரு முறையையாவது, உழைப்பைப் பெருக்கச் சொல்லும் உத்தமர்கள் காட்ட வேண்டாமா? என்று தான் கேட்கிறோம். ஏன்? நாட்டில் பற்றாக்குறை தீரவழி, உரிமையுணர்ச்சி எப்போது ஊட்டப்படுகிறதோ அப்போது தான் அது தானாகவே உண்டாகும்.

ஆனால் இந்துஸ்தான் சர்க்காரிடத்தில் இதற்கான பதிலை எப்படிப் பெற முடியும்? ஏழைகள் மேலும் ஏழையாக எத்தனை புதுவரிகளைப் போட்டு ஒடுக்கலாம், நாட்டில் பணக்காரர்களை எந்தெந்த வகையால்எல்லாம் சலுகைகாட்டி, உற்பத்தி செய்து பெருக்கலாம் என்பதாக வெளிப்படையாகவே சொல்லி மத்தியும் மாகாணமும் போட்டி போட்டுச் செய்யும் ஒரு சர்க்காரின் அமைப்பில், பணக்காரத் தன்மைக்குச் சாவோலை வாசிக்கப்படவே மாட்டாது என்பதை நாம் அறிவோம். என்றாலும் இந்துஸ்தான் சர்க்கரை இன்னமும் ஓரளவுக்கு நம்பிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்களுக்காகவே நாம் பரிதாபப் படுகிறோம்.

இந்துஸ்தான் ஆட்சிப்பீடத்தின் உச்சாணிக் கொம்பில், இன்றைக்கு இருப்பவர்கள் நேரு அவர்களும் பட்டேல் அவர்களுமாவார்கள். இந்துஸ்தானத்தின் வலதுகை நேரு என்றால் பட்டேல் இடதுகை என்பதாக எல்லாம் வருணிக்கப்படுகிறது. இந்த வலதுகை இடதுகைகள் தான் உற்பத்திப் பெருக்கு உற்பத்திப் பெருக்கு என்று முழங்குகின்றன.

பற்றாக்குறையைப் போக்க – பஞ்சங்களை ஒழித்துக்கட்ட ஆக்கவேலைகள் எவையோ, அவற்றைச் செய்து ஆக வேண்டிய ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவர்கள் தான். ஆனால் என்ன செய்கிறார்கள்? பட்டேல் பிரபு அவர்கள் இப்போதுதான் கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார். மக்களின் பற்றாக்குறையைப் பற்றி மணிக்கணக்கில் பேசி ஓலமிடும் இந்த உத்தமர்கள் செய்துதீர வேண்டிய வேலை கோயில் திருப்பணிதானா? அதுவும் சாதாரணச் செலவில் சாதாரணத் திருப்பணியல்லவாம். சோமநாதர் கோயிலைப் புதுப்பிப்பதற்காகக் கோடிக்கணக்கில் நிதிதிரட்டுவதாம்! இப்போதே 34 லட்சம் சேர்ந்துவிட்டதாம்.இந்த நிதி டிரஸ்டிகள் ஏழுபேரில் இந்துஸ்தான் சர்க்காரின் தொழில் நுணுக்க நிபுணர்கள் மூன்றுபேராம். கோவிலில் பிரதிஷ்டை செய்யப்போகும் ஆவுடையாரை (லிங்கத்தை) புது லிங்கமாய், கருப்புச் சலவைக் கல்லால் ஆக்கப்போகிறார்களாம். எப்படியிருக்கிறது இந்தத் திருப்பணி?

இப்போதே ஏராளமான செல்வங்கள், மக்கள் மத்தியில் நடமாடாமல் கோவிலில் சுருண்டு தூங்குகின்றன. இவற்றைத் தட்டி எழுப்பி நடமாடச் செய்தாலாவது, மக்களின் பஞ்சங்களைத் தீர்க்க  வழியுண்டு என்று எடுத்துக் காட்டப்படுகிறது. மக்களின் அறியாமையால் குவித்து வைக்கப் பட்டிருக்கும் இந்த உழைப்புக் குவியல்கள், நாட்டில் பெருக்கெடுத்து ஓடுமாயின், மக்கள் வாழ்விலேயே மறுமலர்ச்சி உண்டாகி விடும் என்பதை அவர்களும் அறியாதவர்களல்ல. இருந்தும் கூட இந்துஸ்தானத்தின் தொழில் நிபுணர்கள் (!) உட்பட இந்துஸ்தானத்தின் இடதுகையான பட்டேல் பிரபு அவர்களும் சேர்ந்து இந்தத் திருப்பணி நடத்தப்படுகிறது என்றால், இந்த வயிற்றெரிச்சலுக்கு யாரை நோவது? வலது கையான நேரு அவர்கள், பணக்காரத் தன்மையை நாட்டில் பராமரித்து வளர்க்கப் போகிறேன் என்றால், பணக்காரத் தன்மைக்கு அஸ்திவாரமான மதத்தன்மையை வேரூன்றச் செய்யப் போகிறேன் என்கிறார் இடதுகையான பட்டேல் அவர்கள்.

அடிப்பவனுக்குத் தடி! திருடுபவனுக்குக் கன்னக்கோல்! தூக்கிக் கொடுப்பதைப் போலப் பணக்காரனுக்குக் கைக்கருவியாகக் கோயில் என்கிறார் உதவிப் பிரதமர். பாட்டாளிகள் பகுத்தறிவைப் பெறாத வரையில் இப்பேர்ப்பட்ட பிரதமர்கள் உதவிப் பிரதமர்களைத் தவிர, வேறு யாருக்குத்தான் நாட்டில் வேலை?

குடி அரசு 10.09.1949

 

You may also like...