64. கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை!

பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு எவ்வித அனுதாபமோ, ஆதரவோ கிடைக்காதென்பதைக் கண்ட கம்யூனிஸ்ட்டுகள், வேறு வழியின்றி, தற்போது குழப்பம் உண்டுபண்ணவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர் இது நமது சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமானதென்று, ஏன்தடை விதித்தோம் என்பதை விளக்கி மாகாண சர்க்கார் கொடுத் திருக்கும் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டு.

இந்தக் காரணத்தைக் கூறி, சென்னை மாகாணத்திலுள்ள பல வகையான 19 தொழிலாளர் சங்ககளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் அவைகள் இருக்கின்றன வென்பதாக அவைகள் எல்லாவற்றையும் சர்க்கார் தடைப்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காக நாம்வக்காலத்து வாங்குவதோ, கம்யூனிஸ்ட் கட்சியினரின் மீது சர்க்கார் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து, அப்படிப்பட்ட தீச்செயல்களுக்குப் பரிந்து பேசவேண்டுமென்பதோ நம் கருத்தல்ல.

தடைப்படுத்தப் பட்டிருக்கும் 19 வகையான தொழிற் சங்கங்களிலும், பங்கு கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் பிரித்தால் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நேரடியாக சர்க்காருக்கு வருமானத்தைத் தரும் தொழில் நிலையங்களில் வேலை செய்து வரும் தொழிலாளிகள். தனிப்பட்ட முதலாளிகளின் லாபப் பெருக்கத்திற்காக – சர்க்காருக்கு மறைமுகமாக வருமானம் வர, சர்க்காரின் கங்காணிகளாய் இருப்பவர்களின் தொழில் நிலையங்களின் வேலை செய்து வரும் தொழிலாளிகள். இந்த இரண்டு வகையான தொழிலாளிகளையும் எடுத்துக் கொண்டால், இவர்களுக்கு எந்த விதமான குறைபாடுகளும் இல்லை  என்றோ, அவர்களின் குறைகளைப் போக்கிக்கொள்ள மேற்படி ஸ்தாபனங்கள் தேவையில்லையென்றோ சர்க்கார் கருதுகிறதா? என்று கேட்கிறோம்.

அல்லது ஜனநாயக சர்க்கார் என்று சொல்லப்படும் ஒரு சர்க்காரில் இந்த வகையான தொழில் ஸ்தானங்களுக்கு இடமில்லை என்பதாக முடிவுகட்டி விட்டோம் என்று சர்க்கார் சொல்லுகிறார்களா? கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாயிருக்கும் சிலர், சர்க்காரின் அறிக்கை கூறுவதுபோல, மலபார், கிருஷ்ணா, தஞ்சை ஆகிய மூன்று ஜில்லாக்களிலும் மிருகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

அப்படி ஒருசிலர் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, அக்கட்சியினர் எல்லோருக்குமே ஏன் தடைவிதிக்க வேண்டும்? அப்படியே கட்சிக்குத் தடைவிதிக்க வேண்டு மென்றாலும், அக்கட்சியினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று சொல்லப்படும் 19 வகையான தொழில் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகளின் நடவடிக்கைகளுக்கும் ஏன் தடை விதிக்க வேண்டும்? என்று கேட்பது இந்நாட்டில் பாடுபடும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.

பலாத்கார நடவடிக்கைகளை அதாவது பொது ஸ்தாபனங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது, கொள்ளையிடுவது போன்ற அட்டூழிய நடத்தைகளை வீரச் செயல்கள், புனிதமான தொண்டு என்று பலபடியாக வர்ணித்து, அப்பேர்ப்பட்ட காலித்தனங்களில் பங்குகொண்டவர்களை தியாகிகள் என்பதாக முத்திரைகுத்தி, அவர்களுக்கு வீரமானியமும் கொடுக்க முன்வந்த ஒரு கட்சியின் சர்க்கார், தங்களின் பழைய அடிச்சுவட்டைப் பின்பற்றுகிற சில கம்யூனிஸ்ட்டுகளை மட்டும் இன்று குற்றம் சுமத்தி அழிவு வேலைக்காரர்கள் என்று அறிவிக்கிறார்கள் என்றால் இந்த அறிவிப்பு, ஆகஸ்டு தியாகிகளின் சாயத்தை வெளுத்து விடமாட்டாதா? என்றுதானே பொதுமக்கள் எண்ண வேண்டும்.

எந்தக் கட்சிக்காரர்களாய் இருந்தாலும் பலாத்கார செயல்களில் ஈடுபட்டவர்களை, நாம் ஒவ்வொரு தடவையிலும் வன்மையாகவே கண்டித்து வந்திருக்கிறோம். இந்த நாட்டு நலம் கருதும் எவரும் எந்தக் காரணத்தாலும் பலாத்கரச் செயல்களை ஆதரிக்க முடியாதென்பதுறுதி. ஆனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்கிற நியாயம் கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் காட்டப்படுகிற காரணத்திற்காகத்தான் நாம் இதை எடுத்துக்காட்ட நேர்ந்தது.

நிற்க, நாசவேலை செய்யும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, நாட்டில் செல்வாக்கில்லை. பொது மக்களின் ஆதரவும் இல்லை, அனுதாபங் காட்டுவோர் யாருமே இல்லை இது சர்க்கார் அவர்களை அளந்தறிந்து நாட்டிற்கு கூறும் உண்மை! வேறு வழியின்றிக் குழப்பம் உண்டு பண்ணுகிறார்கள் இது சர்க்கார் காரணத்தோடு கூறும் குற்றச்சாட்டு. அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் முயற்சி இது தாங்கள்தான் இந்த நாட்டின் ஆட்சிக்கு ஏகபோக வாரிசு என்கிற இறுமாப்பில் சர்க்கார் கூறும் அர்த்தமற்றவாதம்!

நாட்டில் செல்வாக்கோ, பொது மக்களிடம் ஆதரவோ இல்லாத ஒரு கட்சி, அதைக் கட்சி என்று சொல்வதே தவறு, ஒரு காலிக்கும்பல் என்று வர்ணிக்க ஆசைப்படுகிறார்கள். சர்க்கார் ஆசைப்பட்டும் அக்கரையில்லை. காலிக்கும்பலை ஒழிக்கச் சர்க்காரிடம் வேறு ஆயுதமா இல்லை? கொலையாளி களைத் தண்டிக்க, கொள்ளையிடுவோரை அச்சுறுத்த எத்தனையோ ஆயுதங்கள் – அதற்கான உபகருவிகள் இருக்கின்றன சர்க்காரிடம். அப்படியிருக்க, எறும்பு என்று கூறிவிட்டு, அந்த எறும்பை நசுக்க இவ்வளவு பெரிய பாறாங்கல்லையா தூக்க வேண்டும் என்று கேட்கும் நிலையில், ஏன் இந்தத் தடை உத்தரவு? பாறாங்கல்லைத் தூக்கியிருப்பதிலிருந்து, கம்யூனிஸ்ட்டுகளைச் சர்க்கார் அளந்திருக்கும் அளவை, நாட்டுக்கு மறைக்கிறார்கள் என்பது அர்த்தமா? வேண்டாத ஒன்றுக்கு வேண்டாத ஒன்றைக் கொண்டுவரும் விபரீதப் பாதையில் இறங்கியிருக்கிறார்கள் என்பது அர்த்தமா?

சர்க்கார் கம்யூனிஸ்ட்டுகள் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு, நாச வேலைகள், குழப்பம் உண்டு பண்ணும் முயற்சி! கம்யூனிஸ்ட்டுத் தோழர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கையுடையவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். குழப்பம் உண்டு பண்ணுவதுதான் வெற்றிக்குவழி – தொழிலாளிக்கு நன்மை என்று முடிவு கட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, இந்தப்பாதை தவறானது என்பதையும் வற்புறுத்திக் கூறுகிறோம். ஆனால் பலாத்காரத்தில் நம்பிக்கையுடைய, சர்க்கார் வியாக்கியானப்படி செல்வாக் கில்லாத காலி ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிவைத்து நசுக்கவேண்டிய அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? அதற்கான சூழ் நிலையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்திருந்தால் காலிகள் எப்படி வளர்ச்சியடைந்திருக்க முடியும்?

தொழிலாளிகளில் சிலர் அல்லது பலர் நாசவேலைக் காரர்களுடைய தூண்டுதல்களால் நாட்டிற்குக் கேடு செய்யுமளவுக்கு மனம்திரிந்து விட்டிருக்கிறார்கள் என்றால், அது தொழிலாளிகள், எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை விளக்க வில்லையா? தொழிலாளிகளின் குறையறிந்தும், அதற்கான பரிகாரத்தைத் தெரிந்தும் அதைச் செய்யத் துணிவில்லாத ஒரு சர்க்கார், அவர்களை மற்றவர்கள் ஆட்டிவைக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு அந்த மற்றவர்களைக் கையையும் காலையும் கட்டிக் கிணற்றில் ஏன் தூக்கி எறிய வேண்டும்?

பொதுமக்களிடம் ஆதரவுபெற, அவர்களின் அநுதாபத்தையடைய கம்யூனிஸ்ட்கள் எத்தனை யோ வழிகளில் முயன்றார்கள்.  அந்த முயற்சி பலன்தரவில்லை. வேறு வழியில்லாமல் இப்போது குழப்ப முண்டுபண்ணுகிறார்கள் என்று விளக்கந்தரும் சர்க்கார், தங்கள் ஜம்பத்துக்காக இப்படிச் சொல்லியாக வேண்டியிருக்கிறதென்றால் நன்றாகச் சொல்லிக்கொள்ளட்டும், ஆனால் குறிப்பிட்ட தொழில் ஸ்தாபனங்களைத் தவிர மற்ற மக்களிடம், இந்த நாட்டுக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எந்தக்காலத்திலும் தொடர்பு இருந்ததில்லை, தொடர்பையுண்டாக்கிக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை, அதற்கான திட்டமுமில்லை என்பதை நாடறியும்.

கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். தடைவிதிப்பதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்லும் சர்க்காரின் அறிக்கையைக் கண்டு நாம் உண்மையாகவே பரிதாபப் படுகிறோம். ஆளவந்தவர்கள் எப்படிப்பட்ட அறியாமையின் சிகரத்தில் வீற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆளும் உரிமை, என்றைக்குமே தங்களுக்குத்தான் சாஸ்வதம் என்கிற பைத்தியக்கார எண்ணத்தைத் தவிர இந்தக் குற்றச்சாட்டுக்கு வேறு என்ன உண்மையான காரணம் சொல்லமுடியும்?

எப்படியோ வங்கத்தைப்பின் பற்றி, இப்போது சென்னையும் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்து விட்டது. இது மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை கேட்டுத்தான் செய்யப்பட்டது என்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையாயிருக்குமானால் கம்யூனிஸ்ட்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்பது என் கருத்தல்ல என்று பேசிவரும் இந்துஸ்தானத்தின் பிரதமர், இந்துஸ்தானத்தின் சில பகுதிகளில் மட்டும் தடைவிதித்துக்காட்டியும், பல மாகாணங்களில் தடைவிதிக்காதிருப்பதையும் எண்ணும் போது.

இது அமெரிக்காவையும்,ரஷியாவையும் ஏககாலத்தில் அகமகிழச் செய்ய வேண்டுமென்கிற நவீனத் திட்டமோ என்றுகூட நாம் சந்தேகப்படுகிறோம். எப்படியிருந் தாலும், காலிச்செயல்களைத் தடுக்கப் பல கருவிகளை வைத்துக்கொண்டிருக்கும் சர்க்கார், காலித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற காரணத்தைக்கூறிக் கம்யூனிஸ்ட் கட்சிக்கே தடை விதித்திருப்பதை நாம் கண்டிக்கிறோம். கம்யூனிஸ்ட் ஆதிக்கத்திலுள்ளவையென்று கூறி பல தொழிலாளர்களின் சங்கங்களுக்கு விதித்திருக்கும் தடையை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டிப்பதுமட்டுமல்ல, இன்றையக் காங்கிரஸ் சர்க்கார், முதலாளிகள் – பனியாக்களின் ஒரு அய்க்கிய முன்னணி என்பதையும் உலகத்துக்கே காட்டவில்லையா? என்றும் கேட்கிறோம்.

பாடுபட்டுழைக்கும் பாட்டாளிக்கு மதிப்புத் தருபவர்கள்தான் இன்றைய ஆளவந்தார்கள் என்று சொல்வது உண்மையானால், உடனடியாகச் செய்யக்கூடிய வேலை, முதலில் தொழிலாளர் சங்கங்களுக்குப் போட்டியிருக்கும் தடையை நீக்கிவிடுவதுதான். ஆனால் இன்றைய பனியா ஏகாதிபத்தியம் அப்படிச் செய்யுமா?

அடக்கு முறைகளை அடிக்கடி கூப்பிட்டு, அதன் கொடூர நர்த்தனத்தைக் கண்டு கும்மாளமிட்டு கோலோச்சியோரை, எந்த நாடும், எந்தக் காலத்திலும் வரவேற்றதுமில்லை, நெடுங்காலம் வாழ விட்டதுமில்லை. உலக வரலாறு கூறுகிற இந்த உண்மையை ஆளவந்தார்கள் அறிந்திருக்க வேண்டும். இன்றேல் அறிந்து கொள்வார்களாக!

குடி அரசு 01.10.1949

 

You may also like...