55. சகுணம் சோதிடம்

மத சித்தாந்தங்களிலுள்ள நம்பிக்கையே மாந்தரின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களை ஜோதிட தீர்க்க தரிசிகள் என்று சொல்லப் படுகின்றவர்களின் மாயவலைகளில் எளிதில் அகப்படுமாறு செய்கின்றது. மறைவாக உள்ள இடத்தைக் காணவேண்டுமென்பதில் மனிதனுக்கு ஆவல் அதிகம்; அதனால் இனி வரப்போகும் எதிர்கால சம்பவங்களை முன்னமே உணர்ந்து, அவைகளால் தனக்கு, தற்காலத்திலிருந்து கஷ்ட நிஷ்டூரங்கள் ஒழிவதற்கு ஏதாவது வழியுண்டாவென்பதுபற்றி அளவு கடந்த ஆசையோடும் விசாரிக்கத் தொடங்குகின்றான்.

பூசாரிகளும், மத குருக்களும் எதிர்காலத்தைப்பற்றி முன்னமே அறிந்துகொண்டிருப்பதாக எப்பொழுதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். தேவதைகளுக்குப் பலியிடப்படும் பிராணிகளைத் தும்மல், துடித்தல் முதலிய நடவடிக்கைகளைக் கவனித்தல்; பறவைகள் பறந்து போகும் திசைகளைப் பார்த்தல்; அந்நாட்டினருக்கு ஏற்பட்ட யுத்தம் முதலிய சம்பவங்களை வேத பாராயணம் பண்ணுதல்; காண்டிராவின் கதை; முதலிய இவைகள் கிரேக்கர், உரோமர் என்பர்கள் எதிர்கால சம்பவங்களை அறிவதற்கு அடையாளங்களாக மேற் கொண்டார்களென்பது நன்கு விளங்குகின்றன.

இன்னும் மந்திரவாதிகளென்ன, மையிட்டுக் குறி பார்க்கின்றவர்க ளென்ன, ஜோதிட ரேகை சாஸ்திரக்காரர்களென்ன; தீர்க்கதரிசிகளெனப் படுவோரென்ன – இவர்களெல்லாம் சட்ட விரோதமான பல செய்கைகளை மேற்கொண்டு ஒன்றுமறியாத பாமர மக்களைத் தங்களிஷ்டம் போல் ஆட்டி வருகின்றனர். இந்தியாவிலே மேற்கூறியோர் தங்களுடைய அட்டகா சங்களைப் பாமர மக்களிடத்தில் மாத்திரம் இன்றி, படித்தவர்கள் என்று சொல்லப் படுகின்றவர்களிடத்திலும் சுலபமாகச் செலுத்தி வருகின்றனர்.

பூசாரிகள், மனிதர்களின் வாழ்நாளின் நிலைமையைக் காட்டுவதற்கென்று ஜாதகங்களைக் கணித்து வருகின்றனர்; அதோடு வாழ்நாளில் நிகழவிருக்கும் தீமைகளைப் போக்கும் பொருட்டுப் பிராயச்சித்தம் என்னும் பெயரால் பல வகையான மந்திர தந்திரங்களையும், சடங்குகளையும் கைக்கொண்டு ஜன சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

அற்ப சம்பவங்களிலிருந்தெல்லாம் நற்சகுனமென்றும், துர்ச்ற்சகுனமென்றும் ஏற்படுத்திக் கொண்டு, தொடங்கிய காரியங்களுக் கெல்லாம் அவைகளைப் பார்க்கின்றனர். தெருவில் நடக்கும்போது ஒரு பூனை வலமாதலையும், இடமாதலையும் கண்டு, அதனால் நல்லது கெட்டது உண்டாகும் என்று கருதப்படுகின்றது. ஒரு காரியத்தை உத்தேசித்துப் போகும் போது ஒரு கைம்பெண் எதிரே வரின் கெட்ட சகுனமாம். அதனால் உத்தேசித்துச் செல்லும் காரியம் கைகூடாதாம்; ஆனால் ஒரு கட்டுக்கழுத்தி, அதுவும் நிறைந்த நீர்க்குடத்துடன் எதிர்ப்படுவாளானால் அது மிகவும் மேலான நற்சகுனமாம். அதனால் உத்தேசித்துச் செல்லும் காரியம் சடிதில் முட்டின்றி நிறைவேறிடுமாம்! வாரத்தில் ஒரு சில நாட்கள் தாம் நல்ல நாட்களாம்; ஏனையவை சூலம் கொண்ட கொடிய நாட்களாம்!

இம்மாதிரியான மூடத்தனமுள்ள சகுன நம்பிக்கைகள் எண்ணிக்கையில்லாமல் இருக்கின்றன. இவைகளையெல்லாம் இந்தியர்களுக்கு, அவர்கள் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் கூட வருத்தத்தையும் பயத்தையும் உண்டாக்குகின்றன. இம்மாதிரியான மூடக் கொள்கைகளாகிய வித்துக்களை இளைஞர்களின் மனதில் சிறு வயதிலே விதைத்துவிடுவதால், அவைகள் அவர் களிடத்தில் நன்றாக வேரூன்றிச் செழித்துக்கிளைத்து வளர்ந்து வருகின்றன; அவர்கள் பெரியவர் களான பிறகு அவைகளை அகற்றுவதென்றால் முடியாத காரியமாகி விடுகிறது.

மனிதனின் வாழ்நாளில் நிகழப்போகும் சம்பவங்களை முன்னரே தெரிவிக்கும் சாஸ்திரங்களி லெல்லாம், ஏதோ நக்ஷத்திரங்களின் இருப்பைக் கொண்டு கணிக்கப் படுவதாகக் கூறும் ஜோதிட சாஸ்திரமே மிகச் சாதாரணமாகவும், அதிமுக்கியமானதாகவும் கருதப்படுகின்றது. அதிகக் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்ற மேனாட்டு அறிஞர்களிலும் கூட அநேகர் இந்தச் சோதிடத்தில் அதிக நம்பிக்கை யுடையவர்களாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலும் அந்த வருஷத்தில் நிகழப்போகும் முக்கியமான சம்பவங்களை என்னவென்பதையும், எவரெவர் சாகப்போகின்றனர், பருவ காலங்கள் என்ன நிலைமையிலிருக்கப் போகின்றனவென்பன போன்ற விஷயங்களையும், பிரபலமாகப் புஸ்தகங்களில் அச்சிட்டு வெளியிடுகின்றனர். சோதிடத்தின் மூலமாகப்பொருள் பறிப்போரைத் தண்டிக்க இங்கிலாந்து தேசத்தில் சட்டம் இருந்தபோதிலும், அந்நாட்டில் உள்ள அனேகர் இன்னும் சோதிடத்தைக் கையாடிவருவதைக் காணலாம். அநேக நாவல்கள் ? ஏன் ? ஸ்காட் எனும் பேர்பெற்ற நாவலர் எழுதிய கைமேனேரிங் க்வெண்டின் ? டர்வாட் எனப்படும் நாவல்களில்கூட இந்தச் சோதிட விஷயம் கையாளப்பட்டிருக்கின்றது.

ஆகாயத்தில் ஆகர்ஷண சக்தியால் பல்வேறு கதிகளில் செல்லாநின்ற இந்தநட்சத்திரக் கூட்டங்களுக்கும், ஒர் மனிதனுடைய வாழ் நாளின் சம்பவங்களுக்கும், எப்படிச் சம்பந்தம் ஏற்பட்டதென்பதும், அவற்றை இவர்கள் எவ்வாறு அறிந்து இத்தனை நம்பிக்கையோடு கையாளு கின்றனர் என்பதும், அறிவிற்கே எட்டாததாக இருக்கின்றது. ஆனால் இந்த சோதிட கணித சாஸ்திரம் எல்லாத் தேசங்களிலும் கையாளப்படுவதோடு, அந்த விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் மிக்கத் திறமையும், புத்தி நுட்பமும் உள்ள பலரால் நம்பப்பட்டு வருகின்றதென்பதும் உண்மையேயாகும்.

எந்த அறிவாளியும் ஒரு விஷயம் ஏறக்குறைய சற்றேனும் தனது பகுத்தறிவிற்கு எட்டக்கூடிய தாக இருந்தால் முற்றிலும் நம்பத்தகாதது எனக் கூறமாட்டான் என்பது உண்மை. இதனால்தான் வெளி மாத்திரம் மூட சித்தாந்தங்களாகவிருந்த பல கொள்கைகள், பின்னால் அறிஞர்களால் நன்கு ஆராய்ந்துணரப்பட்டு அவற்றிலுள்ள உண்மைத் தத்துவங்கள் வெளியாக்கப் பட்டன.

உதாரணமாகச் சூரியப் பிரவேசத்துள் காணப்படும் பலவித மங்குல் புள்ளிகளும், பருவக் காற்றுகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகக் கூறப்பட்ட சித்தாந்தத்தைப் பின்னால் பௌதீக வானசாஸ்திரிகள் நன்கு பரிசோதனை செய்து அதன் உண்மைத் தத்துவத்தை விளக்கினார்கள்.

சூரிய வெளிச்சம் நமது தேகத்தில் நேராகப் படாவிடினும் அதனால் நமது இரத்ததில் மாறுதல் ஏற்படுகின்றது என்ற விஷயமும் சாதாரணமாக நம்பத்தக்கதாக இல்லை.

ஆனால் தேக சாஸ்திர விற்பன்னர்கள் சில வியாதிகளுக்கு மூலகாரணமாக இருக்கும் கிருமிகள், இரத்தத்தை இரவில் பரிசோதிக்கும்போதுதான் புலப்படுகின்ற தென்பதையும், பகலில் அவை காணப்படுவதில்லையென்பதையும் தங்களுடைய ஆராய்ச்சியினால் நிரூபித்திருக்கின்றனர். இருந்த போதிலும், இம்மாதிரியான வெளிக்கு நம்பத்தகாத விஷயங்களையும் விஞ்ஞான தத்துவ முறைப்படி ஆராய்ந்தறியப்படு வரை நம்பாமலிருத்தல் சால ஏற்புடையதாம்.

சோதிடத்திற்கு, முற்கூறியவாறு ஏதாவது அடிப்படையான உண்மைத் தத்துவங்களிருப்பின், அவற்றிற்குள் சம்பந்தங்களை விஞ்ஞான முறையாக எடுத்துக்காட்டினாலன்றோ அது உண்மை யென்று கொள்ளப்படும்? முதலாவதாக அவ்வித அடிப்படையான தத்துவங்களிருக்கின்றன வென் பதற்குச் சரியான ? அதாவது இவைகள்தான் என்ற குறிப்பான ? இதுவோ அதுவோ, வென்ற சந்தேகங்களுக்கு இடம் இல்லாத ? ஆதாரங்கள் இவைகள் தான் என்று நமக்குத் தெரிய வேண்டும். பார்க்கப் போனால் இந்தச் சோதிடர்கள், இரண்டு மூன்று விதமாகப் பொருளைத் திரித்தும், மறித்தும் கூறும் புரட்டு மொழிகளை முதன்மையாக கையாளுவதோடு, அவர்கள் கூறும் சோதிடமானது பல பொருள்படும் மிக்க சாமர்த்தியமான வாக்கியங்களினாலேயே அமைக்கப்பட்டிருப்பதும் வெளிப் படையாகத் தெரியும்.

இன்னும் இந்தச் சோதிடர்கள் குறிப்பாக வெளியிடும் ஆதாரமுள்ள விஷயங்களில் உண்மை யாக நடப்பவை எத்தனை? பொய்யாகப் போகின்றவை எத்தனை? என்பவைகளை கணக்கிட்டு, எவை அதிகமாக இருக்கின்றன என்பதைக் கண்டு தெரியவேண்டும் தவிர ? அவ்வளவு முக்கியமன்றெனினும் ? எந்தெந்த நட்சத்திரங்கள் எவ்வெவ்விதமாக மனிதர்களுக்கு நன்மை தீமைகளைத் தருகின்றனவென்றகித்தாந்தம் விளக்கமாகத் தெரியவேண்டும். மேலும் அவற்றிற்கு மாறுபாடாகக் கூறப்படும் எதிர்ப்புகளுக்கேற்ற சாதனங்களும் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பூலோகத்தில் வாழும் மாந்தரை ஒன்றாக எடுத்துக் கொண்டோமானால், சாதாரணமாக ஒரு வினாடியில் இருபது அல்லது முப்பது (30) குழந்தைகள் ஜனனமெடுக்கினறன. அவைகள் யாவும் சோதிட சாஸ்திரப் பிரகாரம் ஒரே நட்சத்திர பாதத்தில்தான் பிறந்ததாக கொள்ள வேண்டியிருப்பதால், அவைகள் ஒரே மாதிரி உருவத்தோடு பிறந்து.

ஒரே தன்மையில் வாழ்ந்து, ஒரே காலத்தில் இறக்கவும் வேண்டுமன்றோ! உலக வழக்கில் அவ்வாறு இருக்கின்றதா? தவிர, அநேக விஷயங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடித்து வருகின்றனர். ஏன், மரணத்தைத் தருவதான அநேக நவீன முறைகளும் தற்காலத்தில் சாதாரணமாகக் கையாளப்படுகின்றன. இவைகளை எல்லாம் முறை தவறாமல் ஆகாயத்தில் விரைந்தேகும் நட்சத்திரங்களுடன் சம்பந்தப்படுத்துதல் பொருத்தமுடையதல்லவென்பது வெளிப்படை.

மேற்குறித்தவைகளைத் தவிர, ஏனைய காரணங்களால், தக்க அத்தாட்சிகளில்லாத சோதிட சாஸ்திரத்தை இன்னும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலொழிய, அறிவாளிகள் நம்பமாட்டார் களென்பது திண்ணம். இந்தச் சோதிடத்தை இத்தனைகாலமாக எவ்வளவோ மக்கள் நம்பிக்கையோடு கையாண்டுவருகின்றார்கள் என்பதாலேயே அது சோதிட சாஸ்திரதிலுள்ள உண்மைத் தத்துவத்தை ஒருசிறிதும் விளக்குவதாகாது; அது மக்களின் அறிவு, இன்னும் பரந்த நோக்கம் பெறாமல் குழந்தைப் பருவத்திலே இருக்கின்றதென்பதைத்தான் உணர்த்துவதாகும்.

சோதிடத்திலுள்ள உண்மைத் தத்துவத்தை, உள்ளபடி ஒரு மோசடியான சாஸ்திரமென்றே, கூறவேண்டியிருக்கிறது. அதில் நம்பிக்கை வைப்பது அநேக கஷ்டங்களையும், மனக் கிலேசத்தையுமே உண்டுபண்ணுவதாயிருக்கின்றது. இதனால் மக்கள், பூசாரிகளுக்கு, மந்திரவாதிகளுக்கும், நக்ஷத்திர அதிதேவதைகளைத் திருப்தி செய்வதற்கென மணிமந்திர பூஜை கைங்கரியங்களுக்கும் ஏராளமான பொருளைப் பறிகொடுக்கின்றனர். சோதிடமே உண்மையென ஏற்றுக்கொண்ட போதிலும் இவர்கள் பூமியில் செய்யும் மந்திர யந்திர தந்திர பூஜைகள், பரந்த ஆகாயத்தில் எத்தனையோ கோடி மைல் தூரத்திற்கப்பாலிருந்து கொண்டு அதிவேகமாகச் சதா சூழன்று கொண்டிருக்கும் நக்ஷத்திரங்களை, எவ்வாறு திருப்திசெய்கின்றதோ அறியோம்!

ஒரு சோதிடன் ஆருடம்பார்த்து காலம் போதாததாக விருக்கின்றது என்று சொல்லிவிட்டால் போதும், அது எவ்வளவு அத்தியாவசியமான காரியமாக இருந்தபோதிலும் உடனே அதனைக் கைநழுவவிட்டுவிடத் தயாராக இருக்கும் எத்தனையோ மனிதர்களை இப்பொழுதும் காணலாம். நல்ல அழகும், சம்பத்துகளும் நிறைந்த ஒரு வாலிபனோ, அல்லது கன்னிகையோ மூலநட்சத்திரம் (னிழி³வி) போன்ற இன்னும் சில நட்சத்திர நாட்களில் பிறந்திருந்தால் அவர்களுக்குக் கலியாணம் ஆவது மிகவும் கஷ்டமாம்!

இந்த மாதிரியான இளைஞர்களின் மண விஷயமாகத் தினசரிப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் மும்முரமாக வந்துவிடும்; ஏனெனில் அந்தக் கெட்ட நட்சத்திரத்தில் பிறந்த ஒருவனுக்கும் அதேமாதிரியான நக்ஷத்திர தோஷமுள்ள ஒருத்திக்கும் மணம் நடைபெறாது; வேறுவிதமாக நடைபெற்றுவிடின் புருஷனோ மனைவியோ மாமனாரோ, அன்றி மாமியாரோ கட்டாயம் மாண்டேதீருவார்களாம்! கலியாணமான பின்னர் ஏதோ காரணத்தால் கணவன் கண்ணுறங்கிவிடின், அப்பொழுது அவ்வித இளம் விதவைகள் மிக்க துர் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்பட்டு அவர்கள் கொடுமையாக நடத்தப்படுகின்றார்கள். பம்பாய், கல்கத்தா முதலிய நகரங்களில் குதிரைப் பந்தயம் முதலியவற்றிற்கு மேல், பணம் கட்டுபவர்கள், அவ்வாறு செய்வதற்குமுன் ஒரு சோதிடனிடம் ஆரூடம் கேட்டே பணம் கட்டுகின்றனர்.

சோதிடன் சொன்னமாதிரியே அநேக மந்திர தந்திரங்களுடனே நடந்தபோதிலும், அவர்களில் அநேகர் பல தடவைகளில் கட்டிய பணத்தை இழக்கின்றனர். எத்தனை தடவைகளில் அவ்வாறு மோசம்போன போதிலும், அவர்களிடம் இந்த மாய சோதிடத்தின்பால் வைத்துள்ள மூட நம்பிக்கை குறையாமலிருப்பதை இன்னும் காணலாம். வியாபார நிமித்தமாகத் தங்கள் மூலதனத்தைப் போட்டுச் சரக்குகளைச் சேகரித்து வைத்திருப்பவர்களில் அநேகர், சோதிடனை நம்பி நல்ல காலத்திற்காகக் காத்திருந்து மோசம் போகின்றார்கள்.

சோதிடத்தை விடுத்துத் தங்கள் சுயமதியை நம்பி நடந்திருப் பார்களானால், மிக்க நலமாகவேயிருக்கு மென்பதை அவர்கள் அறிகின்றார்கள் இல்லை. ஒரு அறிவாளிக்கு விஞ்ஞான தத்துவங்களெல்லாம் (றீஉஷ்ளஐமிஷ்க்ஷ]ஷ்உ-மி³ற்மிஜுவி) வெளிப் படையானவைகளாகவே இருக்கவேண்டும். அவற்றுள் ஏதாவது ஒரு சித்தாந்தம் தப்பிதம் என்பதாக நிரூபிக்கப்பட்டுவிட்டால், அதனால் என்ன நன்மை நேரிடுவதானாலும் அது தள்ளிவிடப்படுகின்றது. சோதிடமானது வெளிப்படையான உண்மையான தென்று நிரூபித்துக் காட்டப்பட்டது அல்லவாயினும், அதன் கொள்கைகளில் பிரகாரம் நமது எதிர்காலத்தை முதலிலேயே அறிவதால், நமக்கு இப்போதிருக்கும் நன்மை தீமைகளைவிட ஏதாவது அதிகமான நன்மை ஏற்படப்போகிறதா? என்பதை நாம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றோம்.

இனி என்ன ஏற்படப்போகின்றது என்பதை நிச்சயிக்க முடியாததாக இருப்பதனால், எதிர்காலத்தைக் கூடியமட்டும் தன் மனோவலிமையாலும், சமய சாமார்த்தியத்தாலும் வென்று சமாளிப்பதில்தான், வாழ்நாளில் நமக்குமகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஒருவன் தனது ஜாதகத்தைக் கொண்டு தனது ஆயுட்காலத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சம்பவங்களையும் முதலிலேயே உணர்ந்து கொள்ளுவானாயின் அவன் தனது நடத்தைகளில் ஒரு சிறிதும் கவனம் செலுத்தாமல், தானாக வேறு எந்தக் காரியத்தையும் செய்ய மனம் இல்லாதவனாய், சமுதாய வாழ்விற்கோர் முட்டுக்கடையாகவே இருப்பான் என்பது திண்ணம்.

சோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை கொள்வதானது, உயிருக்குயிராய் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் காத்தளிப்பதாகக் கூறும் ஒரு அழியாத கடவுள்மேல் வைக்கும் நம்பிக்கைக்கு முற்றும் மாறானதேயாகும். மதத்திலே மாறாத பக்தி கொண்டு தங்கள் இஷ்ட காரியாதிகளுக்காக அந்த சர்வவல்லiயுள்ள கடவுளையே அடிபணிந்து பிரார்த்தித்து, எண்ணிய எண்ணியாங் கெய்துவதாகக் கூறும் பல மதபக்தர்கள்கூட தங்கள் கொள்கைகளுக்கு மாறாக விளங்கும் நட்சத்திரங்களின் நியதிப் பிரகாரம் விதித்த விதி மாறாது நடக்கின்றது எனக்கூறும் அந்தச் சோதிடத்திலும் குறையாத நம்பிக்கையோடிருப்பது எதற்காகவோ அறியோம்.

இம்மாதிரியான ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையவைகளை  நம்பி நடப்பது அவர்கள் தங்களுடைய அறிவை நேர்வழியில் செலுத்தாமையையே விளக்குகின்றது. மதப்பற்று மிக்குள்ளோருக்கு பகுத்தறிவிற்கும் வெகுதூரம் போலும்!

நாம் இவ்வளவு அதிகமாகச் சோதிடத்தைப்பற்றி வலியுறுத்த வேண்டியேற்பட்டது எதனா லெனில், இரசாயனம் பூகோளம் முதலிய சாஸ்திரங்களைப்போல் இதனையும் ஓர் உண்மைச் சாஸ்திரமாகக் கருதி வருவதாலும், இதனை முற்றும் நம்பி மோசம்போகும் மாந்தர்கள் இந்தியாவில் மாத்திரம் அன்றி இன்னும் பிறநாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றார்கள் என்பதனாலுமேயாகும். மேற்குறித்த எதிர்ப்புகள் சோதிடம் போன்ற இன்னும் பல போலி சாஸ்திரங்களுக்கும் பொருத்த மானவைகளே. உதாரணமாக மிக்க பிரக்கியாதி பெற்றுள்ள இரேகை சாஸ்திரமும் போலியேயாகும். அறிவைக் கையாளுவோருக்கு எதிர் காலத்தை அறிவிக்கும் ஒர்குறுக்கு வழி இல்லையென்று கூறலாம்.

நாம் அதைப்பற்றி நம் அனுபவத்திற்கேற்ப ஏதோ உத்தேசித்தல் கூடும்; எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான சமாச்சாரங்கள் நமக்கு எட்டுகின்றனவோ அவைகளுக்கேற்ப நமது உத்தேசமும் உண்மையாக அமைவதைக் காணலாம். மானச தத்துவங்களின் விவரங்கள் நமக்கு அதிகமாக விளக்கமுறாதிருத்தலின், தற்காலத்தில் மனிதன் எதிர்காலத்தை அறிதல் என்பது குதிரைக் கொம்பே யாம்; ஏனெனில் எல்லாவித மனித முயற்சிகளிலும், எதிர்பாராத சந்தர்ப்பங்களைத் தனதுபுத்தி சாதுர்யத்தாலும், விடா முயற்சியாலும் கூடுமான வரையிலும் அடக்கியாளலாம். அறிவாளியாக இருக்கின்ற ஒரு மனிதன் தனக்கு எதிர்பாராத விஷயங்கள் நேர்ந்து அவை மனித முயற்சிகளுக்கு மேற்பட்டுவிடின் அவைகளுக்காகக் கடவுளையும் காலத்தையும் நோகாமல் ஆனது ஆகட்டும் என அதன் போக்கிலே எதிர்த்து நின்று தனது திட்சித்தத்தால் சந்தோஷமடைகிறான்.

குடி அரசு 03.09.1949

You may also like...