22. பதினோறாவது தடவை?
நமது சென்னை சர்க்கார் ? பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் தடைப் படலத்தைப் பார்க்கும் போது, குறிப்பாகப் பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக்கவேண்டி இருக்கிறது.
நாட்டின் நலிவை எண்ணி, தமது தள்ளாத முதுமைப் பருவத்திலும் நாள் தவறாது, பட்டிதொட்டியெல்லாம் சுற்றிப் பிரச்சாரம் செய்து, மக்களின் மடமையையும் இழிவையும் போக்கப் பாடுபட்டுவரும் தந்தை பெரியாரவர்களை, இந்த மாதம் 16-தேதி உடுமலைப் பேட்டையிலுள்ள அதிகார வர்க்கம் 11-வது தடவையாக, இரவு ஏழரை மணிக்குக் கைது செய்ததையும், பின், அன்றிரவு நடுச் சாமத்திலேயே விடுதலை செய்ததையும் நினைக்கும்போது, இந்த எண்ணந்தானே வலுப்படமுடியும்?
தடை உத்தரவை மீறுவது என்கிற காரணமாகப், தமிழ் நாட்டில் பெரியாரவர்கள் 100க்கணக் கான தடவைகள் தடை உத்திரவு சார்வு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு ஆக கைது செய்யப்பட்டிருப்பது இது 4-வது தடவையாகும். சமீபத்தில் குடந்தையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும், மறு நாள் நள்ளிரவில் போலீஸ் லாரியில் ஏற்றி திருச்சி, தஞ்சை யெல்லாம் சுற்றியடித்து, தடியடியையும் எல்லை மீறிய கொடுமையையும் தொண்டர்களுக்குப் பரிசாகக்கொடுத்து, ஆதித்தன் தர்பார் நடந்து முடிந்ததை யாருக்கும் நினைப்பூட்ட வேண்டியதில்லை. இப்போது மறுபடியும் இரவின் தொடக்கத்தில் கைது செய்து, நடுச் சாமத்திலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நள்ளிரவு நடவடிக்கைகளை, அதிகாரிகள் நடத்துவதற்குக் காரணம், பகலில், மக்கள் கண்ணெதிரில் தங்கள் செய்கையைச் செய்ய வெட்கப் படுகிறார்களா? அல்லது பகல்நேரத்தில் கைது செய்வதால், மக்களின் கொதிப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்று அஞ்சுகிறார்களா?
இவற்றில் எது உண்மையாக இருந்தாலும், அதிகாரிகளின் நடத்தைக்கு நாம் உண்மையாகவே பரிதாபப்படுகிறோம். ஆனால் பொறுப்பு வாய்ந்த ஒரு மக்கட் தலைவரை, ஏதோ ஒரு செக்ஷனைக் கூறிக் கைது செய்வதும், பின் சிறைக்குக் கொண்டு செல்வதும், உடனே விடுதலை செய்வதையும் கண்டால் நாட்டு மக்கள் இந்த நடத்தையை எவ்வளவு கேவலமாக எண்ணுவார்கள்?
பெரியாரவர்கள் குடந்தையில் கைது செய்யப்பட்டபோது, குடந்தைத் தலைவர்களான தோழர்கள் நீலமேகம், முத்துதனபால், பொன்னுசாமி, சாமி ஆகிய நால்வரையும் உடன் கைது செய்தனர். ஆனால் எவருமே அப்போது தடையை மீறவில்லை. தடையை மீறாத நிலையிலேயே அங்குகைதுசெய்யப்பட்டனர் உடுமலையிலேயே தடையை மீறியபின் கைது! இப்போது பெரியாரவர்களுடன், மத்திய திராவிட மாணவர் கழகத்தலைவர் தோழர் மதியழகனும், உள்ளூர் கழகத்துணைத் தலைவர் தோழர் நாராயணனும், செயலாளர் தோழர் தங்கவேலும் ஆகிய மூவரும் உடன் சேரக் கைது!
உள்ளூர்த் தலைவர்கள் நால்வருக்கும் கொடுக்கப்பட்ட தடையுத்தரவு, உரிமையை ஒழித்துக்கட்டும் இழவோலை என்று மக்கள் கருதியதால், அந்தத் தடையை மீறுவதென்று நாள் குறித்து, அதை அற வழியில் அமைதியாகச் செலுத்த வேண்டும் என்பதில் கவனஞ்செலுத்தி, அதைப்பார்வையிடச் சென்றிருந்தபோது குடந்தையில் கைது! தடையுத்தரவுக்குக் காரணமோ, காங்கிரஸ் தோழர்கள் கழகத்தை மோசமாகத் தாக்கிப் பேசியதும், உள்ளூர் மக்கள் சிலர் (கழகத் தோழர்களல்ல) அதைத் தாக்கிப் பேசியதும் ஆகுமென்று குடந்தை மாஜிஸ்திரேட் தோழர் ஜெயபாண்டியன் குறிப்பிட்டிருந்தார்!
உடுமலையில் தடையுத்தரவோ விசித்திரமானது. உடுமலைப் பேட்டை மாஜிஸ்திரேட் தோழர் அருள்ராஜ் அவர்களால் தடையுத்தரவுக்குக் காரணம் கூறப்பட்டிருப்பதைக் காணும்போது, வெளியூர்க் காங்கிரஸ்காரர்கள் கூட கை கொட்டிச் சிரித்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு அபாண்டமானது? ஆதாரமின்றியல்லவா உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது? என்பதை அவர்கள் அறிவார்கள். திரு ஈ.வெ.ராமசாமி 16.04.1949ல் உடுமலைப்பேட்டைக்கு வரப்போவதாகவும், அன்று பொதுக் கூட்டமோ ஊர்வலமோ நடத்த அனுமதிப்பது அவராலும், அவரைப் பின்பற்றுவோராலும், அநுதாபிகளாலும், அமைதியையோ சட்ட ஒழுங்கினையோ ஒட்டி நடந்து கொள்ளப்படும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது ஆகவே 144 என்கிற தடையுத்தரவு.
பெரியாரவர்கள் பொது வாழ்வில் இறங்கியது இன்று நேற்றல்ல. அவர் பொதுப் பணியில் இறங்கிய காலத்திலிருந்து, பல்லாயிரக் கணக்கான பொதுக்கூட்டங்களில், பல லட்சக்கணக்காக மக்கள் கூடியுள்ள இடங்களில் பேசியிருக்கிறார். எப்போதேனும் எந்த இடத்திலாவது பெரியாரவர்களுடைய பேச்சு கலவரத்தை உண்டாக்கியதாகவோ, பலாத்கார உணர்ச்சியைக்கிளப்பிய தாகவோ எவராவது எடுத்துக் காட்டிவிட முடியுமா?
பெரியாரவர்கள் கலந்துகொள்ளும் மாநாடுகளில் நடக்கும் ஊர்வலங்களில் கூட, பார்ப்பனர் ஒழிக என்றுகுரல் எழுப்பினால்கூட, கோபமாக, ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாது, இதுபோன்ற ஒழிகக் கூச்சல் உதவாது என்று கண்டிப்பவர் என்பதைப் போலீஸ் ரிப்போர்ட் கூறும். ஏமாற்றத்தில் அகப்பட்ட சிலர், தங்களை எதிரிகளாக எண்ணிக் கொண்டு, எத்தனை தொல்லைகளைக் கொடுத்தாலும்கூட, அவை எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பொறுமையும், கடமை யுணர்ச்சியும், கட்டுப்பாடுமுடைய ஒரு தலைவரின் வருகையால் ? அவர் கலந்துகொள்ளும் கூட்டத்தால் ? பேசும் பேச்சால் அசம்பாவிதம், நிகழ்ந்துவிடுமென்று அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அய்யத்திற்குக் காரணம் என்ன?
இந்த நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டால் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு, அடிதடியும் ரத்தக் களரியும் பெருகிவிடுமென்று தோன்றும்படி செய்யப்பட்டுள்ளது என்று அந்தத் தடையுத்தரவு மேலும் விளக்குகிறது. அந்தத் தோற்றத்தைச் செய்ததெது? யார்? ஆதாரமென்ன? ரத்தக்களரி பெருகும் என்று பயப்பட வேண்டிய அளவுக்கு, யார்யாரைத் தாக்க அங்கு ஆயுதம் சேகரித்து வைத்திருந்தனர்? அப்படியொரு தகவல் போலீசுக்குக் கிடைத்திருந்தால், அங்கு யார் யார் வீட்டைச்சோதனை செய்யப்பட்டது? அந்தச் சோதனையில் கிடைத்த தகவல் என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லாமல், அபாண்டமாக ரத்தக்களரி உண்டாகிவிடும் என்று அனுமானிப்பது எப்படிப் பொருந்தும்?
இந்தத் தடையுத்தரவு எதனால் ஜனித்தது என்று நாம் அறிகின்றோமென்றால், உடுமலைப் பேட்டையிலுள்ள சிலர் (40) கையெழுத்துச் செய்து, போலீசுக்கு மனுக் கொடுத்தார்களாம், அந்த மனுவின் மீது தடையுத்தரவு என்பதை அறிந்தவுடன், அந்த ஊரிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்துச் செய்து, அப்படி ஒரு அசம்பாவிதமும நடந்துவிடாது.
கூட்டம் நடத்த அனுமதி கொடுத்துவிட வேண்டும் என்று கோரினார்களாம். முந்திய சிலரின் வேண்டுகோளுக்கு இணங்கியும், பிந்திய ஆயிரத்தோரின் வேண்டுகோளை அலட்சியம் செய்துமே இந்தத் தடையுத்தரவாம். இது உண்மையாயிருக்குமானால், நீதியின் கழுத்து எவ்வளவு கொடுமையாக திருகப்பட்டிருக்கிறது என்று கேட்கிறோம்.
இந்தத் தடையுத்தரவு போடுவதற்கு அவசியம் எதுவாக இருந்தாலும், இந்தக் கூட்டத்தை நடத்த இருந்த முக்கியஸ்தர்யார்? அவர் அமைதிக்குப் பங்கமான, ஆட்சேபிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுபவரா? மக்களின் பிரதிநிதி ? நகரத்தின் தந்தை ? (முனிசிபல் சேர்மன்) தோழர் கனகராஜன் எத்தகைய போக்குடையவர் என்பதை உள்ளூர் அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்தத் தடையுத்தரவு போடப்பட்ட கூட்டம் எந்த நாளோ, அந்த நாளில்தான் உடுமலைப்பேட்டை நகரவாசிகள் நகரசபையின் பேரால், தடையுத்தரவால் தடுக்கப்பட்ட தலைவரை வரவேற்று, அவர் செயலைப் போற்ற, வரவேற்புக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஊர் மக்களோ வரவேற்று, உவகையுடன் அவர் வருகையைக் கொண்டாடும் காட்சி ஒரு பக்கம்! அந்த ஊர் மக்களுக்கு அபாயம் என்று காரணம் கூறி, பெரியார் பேச இருக்கும் மற்றொரு பொதுக்கூட்டத்திற்குத் தடை விதிக்கும் காட்சி மற்றொருபக்கம்! இந்த இரண்டையும் சேர்த்து எண்ணியிருக்க வேண்டாமா?
ஒரு நகரத் தந்தைக்கு தடையுத்தரவு போட்ட செயல், அந்த நகர மக்களையே அவமானம் செய்வதல்லவா? தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பது போலல்லவா இந்த அதிகாரிகள் நடந்து கொண்டிருக்கின்றனர் என்று யாரேனும் எண்ணலாம். ஆனால் நாம் அதிகாரிகளைக் குற்றம் கூறவில்லை.
ஏனென்றால் கழகத்தினுடைய கொள்கை எதிர் வழக்காடுவதல்ல, எது உத்தரவோ அந்த உத்தரவுக்கு உடனே கட்டுப்பட வேண்டியதுதான் என்பதை அதிகாரிகள் அறிவார்கள். மேலும் எவ்வளவு கேவலமாகக் கழகத்தாரை நடத்துகிறோமே அந்த அளவுக்கு நமக்குப் பரிசு (உத்தியோக உயர்வுண்டு என்கிற நம்பிக்கை, இன்றைய மந்திரிமார்களால் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகிறது என்பதை எண்ணினால், அதிகாரிகளின் இந்த நடத்தைகளுக்கு, அந்த அதிகாரிகளையே எப்படிக் குற்றம் சொல்லிவிட முடியும்?
மேலும், அன்று உடுமலைப் பேட்டையில், ஸ்தலஸ்தாபன மந்திரி பேசியிருக்கும் பேச்சைக் கவனித்தால், அதிகாரிகளை எப்படிக் குறைசொல்ல முடியும்? காலையில் மந்திரிக்கு வாவேற்பு நகரசபையில். மாலையில் பெரியாருக்கு வரவேற்பு அதே நகர சபையில். அந்த வரவேற்புக்குப் பிறகுதான் பொதுக்கூட்டம். அந்தப் பொதுக் கூட்டத்திற்குத்தான் தடையுத்தரவு. இந்தத் தடையுத்தரவு வெளிப்படுத்தப்பட்ட பிறகு அன்று காலையில், காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசிய தோழர் சந்திரமௌலி அவர்கள், திராவிடக் கழக இயக்கத்தைக் கண்டித்துப்பேசியதுடன் நில்லாமல், கிராமங்களிலும் நகரங்களிலும் அவ்வியக்கத்தைப் பரவவிடாமல் தடுக்கக் காங்கிரஸ் ஊழியர்கள் பாடுபடவேண்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு உண்மையான அர்த்தமென்ன?
பெரியாரைக் கைது செய்த அன்று, பெருத்த போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடாகியிருந்ததையும், காலையில் மந்திரியார் காங்கிரஸ் தியாகிகளுக்கு செய்த உபதேசத்தையும் சேர்த்து எண்ணினால் பெருத்த போலீஸ் பந்தோபஸ்துக்கு என்ன அவசியம் என்பது நன்றாகத் தெரியும். சர்க்கார் செய்ய வேண்டிய வேலையை, மந்திரிமார்கள் தங்கள் கட்சியில் உள்ள கூலிக்காரர்களைக் கொண்டு நடத்தச் செய்தால், அதனால் ஏற்படும் பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை எண்ணித்தான், அந்த பந்தோபஸ்துக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களோ, என்னவோ? இனி என்ன? பெரியாரவர்களுக்கு மற்ற தோழர்களுக்கும் விரைவில் அழைப்பு வரலாம். உடனே, மனம் போலத் தண்டிக்கவும் படலாம்.
நமது கடமை என்ன? சிறை செல்லும் தலைவர் நமக்கு விடுக்கும் கட்டளை எதுவோ, அதைப் பொறுமையோடு நிறைவேற்ற வேண்டியது தானே நமது கடமை. தயாராகக் காத்திருப்போம்.
குடி அரசு 23.04.1949