35. மித்திரன் காலித்தனம்!

ஊருக்கு ஒரு வழி என்றால் ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி என்று சொல்லுவதுண்டு. தென்னிந்தியாவுக்கு இந்தத் தனி பெருமை (குருட்டுத் தன்மை) வாங்கிக் கொடுப்பதுதான், தற்போது இங்கு அதிகாரம் செலுத்துவோரின் (திராவிடமந்திரிகளின்) ஆசை! அதாவது சென்னை மந்திரிசபையில் உள்ளவர்கள் குருடர்களாய் நடந்து கொள்கிறார்கள். அதனால் சென்னை மாகாணத்துக்கே ஒரு களங்கம்.

இவர்கள் தனி வழியில் செல்ல, அவர்கள் சொல்லும் வாதம் மிகக் குயுக்தியானது. அதாவது சென்னையிலுள்ள திராவிட மந்திரிகள், மற்ற மாகாணங்களோடு கருத்து ஒற்றுமையில்லாமல் வேறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் வாதம்யுக்திக்கு ? அறிவுக்கு மாறுபட்டது. இதைப் பார்க்கும்போது இவர்கள் குயுக்தி வேலைக்காரர்கள் ? அறிவுக்கு மாறுபாடான அறியாமைச் செயலைச் செய்பவர்கள். சுருக்கமாக அழிவு வேலைக்காரர்கள்.

தென்னிந்தியாவில் அதிகாரம் வகிப்பவர்களின் தனி சொரூபம் வெளியாகியிருக்கிறது. அதாவது திராவிட மந்திரிகள் வேஷக்காரர்கள், அவர்கள் பல வேஷமும் போடுவார்கள். உண்மையான அவர்களின் சொரூபம் இது என்று கண்டுபிடிக்க முடியாது. இப்போது வேஷங் கலைந்து உண்மை சொரூபம் வெளிப்பட்டுவிட்டது. சென்னை சர்க்கார் பேசுவது ஒரு கள்ளவாதமே அதாவது திராவிட மந்திரிகள் நயவஞ்சகர்கள், கள்ள உள்ள முடையவர்கள், திருட்டுப் பேச்சுப் பேசுகிறார்கள்.

திராவிட மந்திரிகள் ? இன்று தென்னிந்தியாவில் அதிகாரத்திலுள்ளவர்கள் குருடர்கள், அறிவற்ற குயுக்திக்காரர்கள், வேஷம் போட்டு நடிப்பவர்கள், திருட்டுப் பேச்சுப் பேசுகிறவர்கள். இத்தியாதி, இத்தியாதி.

இப்படி யார் கூறியது? எப்போது கூறியது? எதற்காகக் கூறியது? ஏன் இந்த ஆணவ அடங்காப்பிடாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளக்கூடாது? என்றெல்லாம் இதைப் பார்க்கும்போது கேட்கத்தான் தோன்றும். ஆனால் யார், எப்படி, நடவடிக்கை எடுக்கமுடியும்? பூனையைப் புலியாக எண்ணிக்கொண்டு சிங்கங்கள் எல்லாம் சிறு எலியாகவும் தங்களைக் கருதிக் கொண்டிருந்தால் புலியின் மீது எலி நடவடிக்கை எடுக்க முடியுமா? அல்லது நினைக்கத்தான் முடியுமா?

இந்த மாதிரி போக்கிரித் தனமான பேச்சு, சொல்லப்போனால் வடிகட்டின அயோக்கியத்தனமாக வேறு யார் பேசமுடியும்? பார்ப்பனர்களைத் தவிர, பார்ப்பனச் சுயஜாதி மித்திரனை தவிர. மித்திரன்தான் இந்த மாதம் 6ந் தேதித்  தலையங்கத்தில், சென்னைத் திராவிட மந்திரிகளை இவ்வாறு அர்ச்சித்திருக்கிறது. அர்ச்சித்த அர்ச்சனையில் நமக்குக் கேட்டிருப்பவை இவ்வளவு. அதாவது எழுத்தில் எழுதியிருப்பது இவ்வளவு இன்னும் எவ்வளவோ அவர்கள் நாள் தோறும் அர்ச்சித்துக் கொண்டிருப்பது? அதாவது எழுத்தில் எழுதாமல் பாடிக்கொண்டிருக்கும் வசை புராணம் எவ்வளவோ? எதற்காக இந்த மித்திரன் இந்த காலித்தனமான தோரணையில் இறங்கி இருக்கிறதென்றால், பார்ப்பன ? பனியாக்களின் ஏகாதிபத்திய பீடம் (டெல்லி மத்திய சர்க்கார்) உத்தியோகங்களிலும் மற்ற பொதுத் துறைகளிலும் கையாளப்பட்டுவரும் வகுப்புவாரி நியமன முறையை ஒழிக்க வேண்டுமென்று விரும்பியபோது, விரும்பிய மாத்திரத்தில் ஒழித்துவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டு, வெள்ளைக்காரர்கள் கையாண்ட தந்திர முறையை மேற்கொண்டு ஒருகமிட்டியை நியமித்தது கமிட்டி அங்கத்தினர்களை நியமித்த முறையும் அதே வெள்ளையர்கள் முறையில் அதாவது இந்த நாட்டு பிரச்சனையை தீர்க்க, இந்த நாட்டுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத வெள்ளையர்களையேகமிட்டி அங்கத்தினர்களாய்ப் போட்டுவந்ததைப் போல, இந்த ஆட்சி பீடமும் நூற்றுக்கு நூறு வடநாட்டுப் பனியாக்களையே கொண்டு, ஜாதியுணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்டு சின்னாபின்னமாய்க்கிடக்கும் திராவிடத்திற்கும் சேர்த்து, அந்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாத பனியாக்களை, நிலைமையை ஆராய்ந்து பரிசீலனை செய்ய என்று, கமிட்டி நியமித்தார்கள்.

அதற்குப் பெயர்தான் திவாகர் கமிட்டி. அந்தக் கமிட்டியின் முன்பு சாட்சியம் கொடுத்தபோதுதான், சென்னை மாகாணசர்க்கார், வகுப்புவாரி நியமன முறையை இந்த மாகாணத்தைப் பொறுத்த மட்டிலும் நிலைமை சீர்படும்வரை விட்டுவிடமுடியாது என்று கூறி இருக்கிறார்கள் ஒரு காலம் குறிப்பிடலாம் என்று பின்பு அந்த முறைகைவிட்டுவிடலாம் என்றும் கூறியிருக்கிறார்கள் மாகாணசர்க்கார் மாத்திரமல்ல திராவிடத்திலுள்ள சமஸ்தான சர்க்கார்களும் மாகாணசர்க்கார் கருத்தையே வலியுறுத்தி இருக்கின்றன. இதைக் கேட்டுத்தான் மித்திரன் இப்படி உளறியது. ஆனால் சமஸ்தான சர்க்கார்களைப் பற்றி அது ஏனோகுரைக்கவில்லை.

வகுப்புவாரி நியமன முறை இருக்கவேண்டுமென்று சொல்லுகிற சென்னை சர்க்கார்; நியமன முறையை விட்டு விடுவதானது வகுப்புப் பூசல்களுக்கே இடமாக முடியும், ஆதலால் ஒரு காலவரையறையைக் குறிப்பிட்டு, எல்லா வகுப்பினரும் எல்லா உத்தியோகங்களிலும் ? பொதுத்துறைகளிலும் ஏற்ற இடத்தைப் பெற்ற பிறகு வேண்டுமானால் இந்த முறையை விட்டு விடலாம் என்று கூறுகிறார்களாம்; இதைக் கேட்டுத்தான், நான் இந்தக் காலித்தனத்தில் இறங்கினேன் என்கிறது மித்திரன்.

வகுப்புவாரி நியமன முறைகூடாது என்பதற்கு, வகுப்புவாரி அடிப்படையில் முற்போக்கு அல்லது பிற்போக்கை நிர்ணயிப்பது என்பது ஒரு சிலரது சுயநல வளர்ச்சிகே உதவ முடியும் என்று காரணம் கூறுகிறது மித்திரன். ஜாதிகளும் வகுப்புகளும் இருந்துவரத்தான் வேண்டும். ஆனால் அதற்காக வகுப்புவாரி நியமனமுறை இருக்கவேண்டுமென்பது என்ன அவசியம்? என்றும் கேட்கிறது.

குடிகாரர்களுக்குப் பயந்து குடி ஒழிப்பைக் கொண்டுவரவில்லை என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமோ அப்படித்தானே வகுப்புக்களுக்காக, வகுப்புவாரி நியமனமுறை இருக்கவேண்டும் என்று கூறுவதும் ஆகும் என்று கேட்கிறதுமித்திரன். மேலும் ஜமீன் ஒழிப்பு, அறநிலைப் பாதுகாப்பு மசோதாக்கள் கொண்டு வரும் போது அவற்றால் ஜமீன்தாரர்களும் பார்ப்பனர்களும் பாதிக்கப்பட்டார்களே, அப்போது ஏன் இந்த வாதம் செய்யவில்லை என்கிறது மித்திரன். எதற்காக வேண்டுமானாலும், விரும்பினால் மித்திரன் கும்பல் காலித்தனத்தில் இறங்கட்டும். அதன் பலனையும் அநுபவிக்கட்டும். நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் உள்ள பல நூற்றுக்கணக்கான வேற்றுமைகளில், திராவிடத்தில் குடியேறிய பார்ப்பனர்களால், இந்நாட்டில் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு வரும் ஜாதிகள் அமைப்பு வடநாட்டில் காணமுடியாதது. இதன் கொடுமையை அங்குள்ளவர்களால் உணர்ந்து கொள்ளவும் முடியாது. அங்கு இந்து ? முஸ்லீம் ? தாழ்த்தப்பட்டார் ? சீக்கியர் வேற்றுமை,பிளவு என்று சொல்லப் படுவதைப் போல, பிளவுணர்ச்சி காணப்படலாமே ஒழிய திராவிடத்தில் உள்ள இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்குள்ளாகவே காணப்படும் ஜாதித் திமிரை அங்கு காணமுடியாது. காரணம் அங்கு குடியேறிய பார்ப்பனர்கள், ஓரளவாவது சமத்துவமாக நடந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியத்தில் இருந்ததால். இதனால்தான் மற்ற மாகாணங்களில் திவாகர் கமிட்டி உண்மையிலேயே பணியாற்ற முடிந்தாலும், திராவிடத்தைப் பொறுத்தவரையில் அது சிறிதும் தகுதியற்றது என்று நாம் குறிப்பிட்டது. வகுப்புவாரி அடிப்படை நியமனம் அந்தந்த வகுப்பிலுள்ள சிலரது சுயநலத்துக்கே தவிர வேறென்ன என்று கேட்கிறது மித்திரன்.

இதை நாம் அடியோடு மறுக்கவில்லை. ஓரளவு உண்மை இருக்கிறது என்றே ஒப்புக் கொள்வோம். அதனால் அந்தந்த வகுப்பின் பேரால் வகுப்பில் உள்ள சிலர் சுயநலமடைகிறார்கள் என்பதற்காக, அந்தந்த வகுப்புகளுக்குச் சம்பந்தமே யில்லாத, அந்தந்த வகுப்புகளை வெறுத்து, இழித்துப் பேசி வரும் பார்ப்பனர்கள், அந்தச் சுயநலத்தையடைய வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்?

ஜாதிகளும் வகுப்புகளும் இருந்துவரத்தான் வேண்டும், ஆனால் வகுப்புவாரி நியமனமுறை கூடாது என்றால் இந்த வாதத்தை என்ன வாதம் என்று சொல்வது என்று கேட்கிறோம். மதுவிலக்குக்கு எவ்வளவு நியாயமுண்டோ அவ்வளவு நியாயம் வகுப்புவாரி நியமன ஒழிப்புக்கும் உண்டு என்கிறது மித்திரன். மித்திரனின் அறிவை எதற்கு ஒப்பிடுவது என்றே நமக்குத் தெரியவில்லை.

மதுவிலக்குக்கு எவ்வளவு நியாய முண்டோ, அவ்வளவு நியாயம் ? அதைக்காட்டிலும் அதிகமான நியாயம் வகுப்புவாரி நியமனத்தைக் காப்பாற்றுவதில் இருக்கிறது என்பதை அது எப்படி உணர்ந்து கொண்டிருப்பதாய்க் காட்டிக் கொள்ள முடியும்?

ஏமாந்த காலத்தையே தங்களுக்கு ஏற்றமாகக் கொண்டுவாழும், மடப் பூனைகளுக்கும் கோயில் பெருச்சாளிகளுக்கும் அரண்மனை உடும்புகளுக்கும் வக்காலத்து வாங்கி, அற நிலையப் பாதுகாப்பு, ஜமீன் ஒழிப்பு வேலையோடு, வகுப்புவாரி நியமன ஒழிப்பையும் ஒத்திட்டுப் பேசுவது மித்திரனின் எந்தக் குணத்தைக்காட்டுகிறது?

கொள்ளையடிப்பவர்கள் கொள்ளயடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றால், கொள்ளை யடிப்பது சட்ட விரோதமென்றால், கொள்ளையடிப்பவர்களுக்கு வயிற்றெரிச்சலாய்த் தானிருக்கும்; அதுபோலவே பகற்கொள்ளையடித்துக் கொண்டிருந்த கோயிற் பெருச்சாளிகளை, மடப்பூனைகளை, அரண்மனை உடும்புகளை, அவற்றின் கொட்டத்தையடக்கி, அவர்களின் கொள்ளையடிப்புக்கு எவ்விதத் தண்டனையுமில்லாமல், போனதெல்லாம் போகட்டும் இனிமேலாவது மற்றவர்களை வஞ்சியாமல் வாழுங்கள் என்று கூறி சட்டம் செய்ய ஆரம்பிப்பது, வயிற்றெரிச்சலைத் தந்தால் அதற்கு யார் என்ன செய்வது? அந்தந்த வகுப்புகளே நன்மையடைய வேண்டும் இல்லாவிட்டால் அந்தந்த வகுப்பிலுள்ள சிலராவது நன்மையடைய வேண்டும் என்கிற ஏற்பாட்டுக்கும், கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையைவிட்டுவிட வேண்டும் என்கிற ஏற்பாட்டுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்க முடியுமா?

ஜாதிகளை ஒழிப்பதில், வகுப்புகளைத் தொலைப்பதில் திராவிடக்கழகம் கொண்டிருக்கும் தீவிரமான கருத்தைக் கழகத்தின் பரமவிரோதியான வடநாட்டினரும் அறிவார்கள். உண்மையாகவே ஜாதிகள் ஒழிந்து வகுப்புகள் மறைந்து, மனிதன்,மனிதன் என்கிற ஒரேசமம் என்கிற நிலையை, இந்த நாட்டில் காண வேண்டுமென்பதில் நம்மைப்போல் மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. ஆனால் ஜாதியை ஒழிக்க வகுப்பு வாரி நியமன முறையை விட்டுவிடுவதா வழி?

ஒரு வேளை மித்திரன் இப்படி நினைக்கலாம். வகுப்புவாரி முறை இருப்பதினால்தானே சூத்திரத் தேவடியாள் பிள்ளைகளும் படிக்கிறதுகள், படித்தபின் உத்தியோகம் வேண்டு மென்கிறதுகள், உத்தியோகம் இல்லை என்றால் எங்கள் வகுப்புக்கு எங்கே விகிதாச்சாரம் என்கிறதுகள். இதுகளைப் படிக்கிறதுக்கே சந்தர்ப்பம் கொடுக்கா விட்டால் என்ன செய்ய முடியும்? அதற்கு இந்த வகுப்புவாரி யொழிப்பு பயன்படாதா என்று. இந்த எண்ணத்தைத் தவிர மித்திரனுக்கு வகுப்பு முறை நியமனத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்கு வேறு எண்ணம் இருக்கமுடியாது.

இராம ராஜ்ஜியம் வேதகாலம் என்று பேசி விட்டுக் கண்ட கனவில்தான் இந்த எண்ணம் தோன்றியிருக்க முடியுமே தவிர, வேறு சுயபுத்தியில் இந்த எண்ணம் தோன்றியிருக்க முடியுமென்று எப்படிச் சொல்லமுடியும்? தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி வேண்டும் என்கிற மனுநீதிப் பரம்பரையினர், குருட்டுப் போக்கில் சென்று குருடர்களாய் விளங்குவதும், குயுக்திக் காரர்களாய்க் காணப்படுவதும், நயவஞ்சகர்களாய் நேரத்திற்குத் தக்கபடி வேஷம் போடுவதும, பக்காத்திருடர்களாய் அகப்பட்டதைச் சுருட்டுவதும் திராவிடநாட்டு வரலாறு கூறும் உண்மைகள்.

இதை மறைப்பதற்காக மித்திரன் மற்றவர்கள்மீது பழிபோட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிற தென்றால், இந்த இருபதாம் நூற்றாண்டிலா இது செல்லுபடியாகும்? அப்படிச் செல்லுபடியானாலும் கூட நாட்டில் அமைதியைக்கண்டுவிட முடியுமா?

குடி அரசு, தலையங்கம் 11.06.1949

 

 

You may also like...