40. ஜாமீன் ரூ. 3000!

விடுதலை, திராவிட நாடு ஆகியவற்றிற்கு ஜாமீன் கேட்ட நம் சுயராஜ்ஜிய சர்க்காரின் கிருபா கடாட்சம் இப்போது நம்மீது பாய்ந்திருக்கிறது. இந்த கிருபைக்கு நாம் 3000 ரூபாய் பரிசாகக் கொடுக்க வேண்டுமாம். ஆம்! குடி அரசுக்கு ஜாமீன் ரூ.3000ம் என்கிறது பத்திரிகைச் செய்தி.

இந்த ஜாமீன் நடவடிக்கையை யொட்டிய உத்திரவு எதுவும் இன்னும் நம் கைக்குக்கிடைக்க வில்லை. எதற்காக – என்ன காரணத்தைச் சாக்காகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது, அந்த உத்திரவைப்பெற்ற பிறகுதான் நாம் ஆதாரபூர்வமாக தெரிந்து கொள்ளமுடியும்.

குடிஅரசு ஆரம்பித்து சுமார் இந்த 25-வருஷங்களுக்குள் எத்தனையோ முறை, என்னென்ன மோ காரணங்களுக்காக என்று, இந்த ஜாமீன் கிஸ்திகளும் வழக்கு நடவடிக்கை தர்பார்களும் நடந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் குடிஅரசின் ஆயுட் காலத்தில், 2-வருஷத்துக்கொரு நடவடிக்கை என்கின்ற வீதாச்சாரத்திலேயே நடந்து வந்திருக்கின்றன என்று கூறலாம். ஆனால் அத்தனையும் வெள்ளைக்கார அந்நியனான ஆங்கிலேயனுடைய ஆட்சியில். அதாவது இந்தியநாட்டில் இந்திய மக்களுக்குப் பேச்சு சுதந்திரமில்லை, எழுத்துச சுதந்தரமில்லை, கருத்துச் சுதந்திரமில்லை என்பதான காரணங்களைச் சொல்லி, நாட்டு மக்களுடைய உத்வேகத்தைத்திரட்டி; அன்னியனாகிய வெள்ளக் காரனுடைய ஆட்சியை ஒழித்துக் கட்டவேண்டுமென்று காங்கிரஸ் தேசீய சபையினரால் முழக்கமிடப்பட்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தினால்.

அந்த ஏகாதிபத்தியத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட தொல்லை, தொந்தரவு, கஷ்ட நஷ்டங்கள் ஆகியவைகளை எண்ணும்போது, இந்த மாகாணத்தில் வேறு எந்தத் தேசீயப் பத்திரிகைகளுக்குக் கூட அந்த அளவு வெள்ளைக் காரசர்க்காரால் அந்தக் காலத்தில் கொடுக்கப் படவில்லை என்றே கூறவேண்டும்.

எதற்காக இதை நாம் கூறுகிறோமென்றால், குடி அரசுக்கு ஜாமீன் நடவடிக்கைகளோ, வழக்கு நடவடிக்கைகளோ புதியவை அல்ல. திமிர்படைத்த ஏகாதி பத்தியத்தின் முழு வேட்டைக்கும் வேறு எந்தத் தேசீய ஏடுகளும் ஆளாகாத அளவுக்கு ஆளாகி, ஆனால் இன்றுவரை உயிர்போகாமல் நின்று போராடிவரும். பெருமைபெற்றது குடி அரசு. ஏகாதிபத்தியத்தின் உருட்டலும், மிரட்டலும், பாய்ச்சலும், பிடுங்கலும் குடி அரசுக்கு நெடுநாளைய நித்திய அநுபவம். இந்தச் சலசலப்பு வகையில், குடி அரசு ஒருபனங்காட்டு நரி என்பதை இன்றைய ஆளவந்தார்களுக்கு நினைப்பூட்டுவதற் காகவே.

மேலும் இப்போது கேட்கப் பட்டதாய்ச் சொல்லப்படும் 3000 ரூபாய் ஜாமீன் நடவடிக்கையைக் காணும்போது, நம்ம சுயராஜ்ஜிய சர்க்கார் முந்திய ஏகாதிபத்திய அந்நிய வெள்ளை அரசாங்கத்தையும் பலவகையில் தோற்கடித்து விட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காகவுமாம்.

குடி அரசின் மீது இப்போதைய பனியா – பார்ப்பன அடிமை சர்க்காரான சுயராஜ்ஜிய சர்க்கார், ஏதோ ஒரு சாக்கைக்கூறி, இந்த ஜாமீன் குத்தைக் குத்த இருக்கிறது என்கிற சேதியானது, நெடுநாளாகவே கேட்கப்பட்டும், சொல்லப் போனால் நம்மால் எதிர்பார்க்கப்பட்டும் வரும் சேதியே யாகும். ஏனென்றால் 7, 8 மாதங்களுக்கு முன்னாலிருந்தே இந்தப் பேச்சு நடந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். எப்படியும் பார்ப்பனர்கள் தயவில்தான் வாழ்ந்தாக வேண்டுமென்கிற முடிவுக்கு வந்துவிட்ட ஒரு சர்க்காரிடமிருந்து, வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்த நடவடிக்கைக்குக் காரணங்களாகச் சர்க்கார் எதைக் கூறுவதாயிருந்தாலும், அந்தக் காரணங்களுள் ஒன்றுகூட, அறிவுக்கோ நியாயத்துக்கோ கட்டுப்பட்டதாக ? நம்மீது குற்றமென்று சுமத்தக்கூடியதாக ஒன்றுகூட இருக்க முடியாது என்பதை இன்றைக்கே நாம் வற்புறுத்திக்கூற முடியும். இன்னும் கூறுவதாயிருந்தால், குடி அரசின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவாயிருந் தாலும், அவைகள் எல்லாம் இந்தத் துணைக் கண்டத்திலேயே, வெவ்வேறு மாகாணங்களில் குற்றமற்றவை என்பதாகக் கோர்ட்டார் தீர்ப்புக் கூறியவைகளாகவும், எந்த நடுநிலைமையுடைய ஜனநாயகவாதியும் குற்றம் என்று குறிப்பிட முடியாதவைகளாகவும்தான் இருக்க முடியும்.

இப்படி அர்த்தமற்ற காரணங்களைச் சாக்காகக் கூறிக்கொண்டுதான், நம்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது  உண்மையானால், இந்த சுயராஜ்ஜிய சர்க்காரின் நடவடிக்கைக்கு நாம் மிகமிக வெட்கப்படுகிறோம். இந்த நடவடிக்கையில், எவ்வளவு கோழைத்தனமும் குறுகிய புத்தியும் நிறைந்திருக்கிறது என்பதை உணரும்போது எவர்தான் வெட்கப் படாமல் இருக்க முடியும் என்றும் கேட்கிறோம்.

பார்ப்பனீயமே! வெற்றி மேல் வெற்றி உனக்கு. உனக்குப் பராக்குக் கூறுவதுதான் எங்களுடைய கடமை என்று இந்த சர்க்கார் துணிந்த பிறகு, உன்னுடைய பூரிப்புக்குக் கேட்கவாவேண்டும்? வெற்றிச் சங்கு ஊதுகிறாய்! ஊது! ஊது!! உன் வெறி தீருமட்டும் ஊது! உன் வயிறு வீங்கிவெடிக்கு மட்டும் பலமாக ஊது!!

தேசீய பார்ப்பனப் பத்திரிகைப் பரப்பிருமங்களே! உங்கள் எண்ணம் நிறைவேறிற்று. உங்கள் துர்ப்போதனை நூற்றுக்கு நூறும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. உங்கள் பாத மலருக்கு சரணம் கச்சாமி என்று பிரார்த்தித்துவிட்டது இன்றைய சர்க்கார். எதிரியில்லாத இடங்களில், – எதிரிகளின் கைகள் கட்டிப் போடப்பட்ட பிறகு உங்களின் வீரமிக்க பேனாக்கள் வெற்றி முரசு கொட்டட்டும்! உங்கள் தலையணை மந்திரத்துக் ஜே! ஜே!! ஆனால் பார்ப்பனீயத்தின் வலையில் வீழ்ந்து, நாம் இன்னதுதான் செய்கிறோம் என்பதை அறியாமலே, ஒன்றின்மேல் ஒன்றாக புசுபுசுத்த அம்புகளைப் பாய்ச்சும் சுயராஜ்ஜிய சர்க்காரே! உங்களுக்குச் சிந்தித்துப் பார்க்கும்போக்குச் சிறிதாவது உண்டா? விடுதலைக்கு ரூ.10,000ம் என்றீர்கள்! திராவிடநாட்டுக்கு ரூ.3000 என்றீர்கள்! இதற்கு இந்த நாட்டு மக்கள் அளிக்கும் பதில் என்ன? இரண்டணாவும் நான்கணாவுமாக எத்தனை ஆயிரம் பாட்டாளி மக்கள் வீசி வீசி எறிந்து, உங்கள் உத்தரவை எவ்வளவு கேவலமாகத் துளைத்து விட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்கக்கூடாது? 5, 6 அக்கிரஹார வாசிகளைத் திருப்திப்படுத்த ? காண்டீபம் சொல்வதுபோல் இரண்டொரு மந்திரிகள் நமஸ்தே வாங்க, நடக்கும் இந்த ஜாமீன் கூத்தைக் கண்டு எத்தணை ஆயிரம் ஏழைகள் வயிறெரிந்து வாழ்த்துகிறார்கள் என்பதை ஏன் நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லை? அழிவுக்காலத்தில் அறிவுக்கோ,சிந்தனைக்கோ வேலை யில்லை என்பீர்களானால் சிந்தனையைக் கெட்டியாய் – பலமாய் – பத்திரமாய் மூடி வையுங்கள். இதுதான் நாம் உங்களுக்குக் கூறும் புத்திமதி!

குடி அரசு 02.07.1949

You may also like...