48. வாழ்க தியாகராயர்!

செய் நன்றி மறவாத  தமிழன், ஏன் திராவிடன் எவனுமே மறக்கக் கூடாத ஒரு பெயர் தியாகராயர். சமுதாயத்தில் சண்டாளர்களாய் – தீண்டப்படாதவர்களாய் ஆக்கப்பட்டு; இந்நாட்டிற்கு உரிய சொந்த மக்களாக இருந்தும் ஏதும் உரிமை அற்றவர்களாகி; கல்வித் துறையில் கடைசித் தரத்தில் நின்று, கல்விக்கும் நமக்கும் காத தூரம் என்று நம்ப வைக்கப்பட்டு; உத்தியோகம் என்றால் அது உயர் குலத்தோரின் தனியுரிமை, நாம் ஒதுங்கி வாழ்வதே நமக்கு ஏற்றது என்று வைக்கொண்டு நடந்த மக்கள், இன்று ஓரளவுக்காவது எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், இந்த முன்னேற்றத்திற்கும் வித்து ஊன்றிய ஒருவர் வள்ளல் தியாகராயர்தான்.

இன்றைக்கு நாம் அல்லாதவர் என்கிற பெயரை வெறுக்கிறோம். இந்த நாட்டைப் பரம்பரை பரம்பரையாக ஆண்ட நாங்கள் – இந்த நாட்டின் பூர்வகுடிகளாகிய நாங்கள், ஏன் அல்லாதவர் என்கிற பட்டயத்தைப் பெறவேண்டும் என்று ஆத்திரத்தோடு கேட்கிறோம். எந்தக் காரணத்தினாலும் அல்லாதவர் என்கிற குறிப்பு எங்களுக்குப் பொருந்தாது என்பதை நிரூபித்துவிட்டோம்.

ஆனால் அன்றைய நிலையில் தென்னிந்திய நலவுரிமை சங்கம் என்பது பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்கிற பெயராலேயே எல்லா மக்களாலும்  குறிப்பிடப்பட்டு வந்தது. குறிக்க வேண்டிய அவசியத்திலுமிருந்தது. இந்தப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், இறக்கும் வரையிலும் அதன் தலைவராக விளங்கிய ஒப்பற்ற பேரறிஞர் தியாகராயர். பார்ப்பனரல்லாதாரின் – திராவிடர்களின் முன்னேற்றத்திற்கு மூலபுருஷரான தியாகராயரின் அரும் பெருங்குணங்கள் ஒவ்வொன்றும் திராவிடன் எண்ணி எண்ணிப் பூரிப்புக் கொள்ளத்தக்கதாகும்.

தியாகராயரின் மன உறுதியை விளக்கும் ஒரு சிறு சம்பவத்தை இங்கு தருகிறோம். சென்னை நகரசபையில் நாற்பதாண்டுகளுக்குமேல் அதன் அங்கத்தினராய் இருந்து சில காலம் அதன் தலைவராயும் விளங்கினார். அவர் நகரத் தந்தையாய் விளங்கிய காலத்தில்தான் வேல்ஸ் இளவரசர் சென்னைக்குவந்தார். இளவரசரை வரவேற்பதற்கு, வெள்ளையர்களின் அய்தீகப்படி நகரத் தந்தை பங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் அவர்களின் அய்தீகப்படி வரவேற்பதில் கலந்து கொள்ளும் அத்தனைப் பேரும் கருப்பு நிறமான உடையணிந்து வரவேண்டும். ஆனால் தியாகராயரோ, வெண்ணிற உடையைத் தவிர வேற்று நிறத்தில் ஒன்றையும் அணியாதவர். நகரத் தந்தை வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டுமெனப் பாடுபட்ட வெள்ளை அதிகாரிகள், எப்படி எப்படியோ முயன்று பார்த்தும், தியாகராயரின் வெண்ணிற உடையணியும் விரதத்தை மாற்ற முடியாமல் இறுதியில் தோல்வியடைந்தனர். எல்லோரும் கருப்புடையணிந்து கடற்கரையில் வேல்ஸ் இளவரசரை வரவேற்ற கூட்டத்தில், தியாகராயர் மட்டுமே வெள்ளாடை பூண்டு விளங்கினார்.

இந்த நிகழ்ச்சி, மிக மிக அற்பமான சங்கதி என்று இக்கால இளைஞர்கள் எண்ணலாம். அவர்கள் அக்கால நடப்பையும், வெள்ளையர்கள் இந்நாட்டில் எப்படி மதிக்கப்பட்டார்கள், பதவிகளுக்கு எப்படிப்பட்ட யோக்கியதையும், அந்தஸ்தும் இருந்தது என்பதையும் சேர்த்து எண்ணவேண்டும். கொள்கையில் விடாப்பிடியாய் – நேர்மையில் சற்றும் பிசகாது வாழ்ந்த தியாகராயரின் வாழ்வு, மற்றொரு வகையிலும் திராவிடர்களுக்குப் பாடமாய் ஆகியது. அவர் கைக்கொண்டிருந்த வைதீகநெறி திராவிடத்துக்கு எப்படிப்பட்ட வைரி என்கிற பாடத்தை, அலைக்கழிந்து போன பிற்கால வாழ்வே தெளிவாக எடுத்துக் காட்டியதைத்தான் குறிப்பிடுகிறோம்.

தியாகராயர் அரசியலில் பார்ப்பனர்களோடு போட்டிப் போட்டார் என்றாலும், சமூக வாழ்வில் பார்ப்பனீய ஏற்பாடுகளை வெறுத்தவரல்ல. அதற்கு மாறாகப் பார்ப்பனீயக் கருத்துக்களைச் சமயவாழ்வு என்கிற பேரால் முழுக்க முழுக்க ஏற்று நடந்தவர். அப்படியிருந்தும் நம் அருமைப் பார்ப்பனத் தோழர்கள் அவரை எந்த அளவுக்கு வெறுத்தார்கள், வெறுத்து வருகிறார்கள் என்பதை, தியாகராயநகர், டி.நகராகவும் மாம்பலமாகவும் வழங்குவதிலிருந்தே தெரியலாம். இந்தப் பிரகிருதிகள்தான் மற்றவர்களைப் பார்ப்பனத் துவேஷிகள் என்கிறார்கள். இந்தக் கூற்றுக்கும் நம் விபீஷணர்கள் தாளம் போடுகிறார்கள். நிற்க,

உரிமையுணர்ச்சி இழந்து உறங்கிக் கிடந்த திராவிட சமுதாயத்தைத் தட்டி யெழுப்பிய பெருவீரன் நினைவாக, இப்போது சென்னையில் ஒரு சிறந்தபணித் தொடங்கப்பட்டிருக்கிறது. தியாகராயர் பேரால் உயர் நிலைப்பள்ளியாய் இருப்பதை ஒரு கல்லூரி ஆக ஆக்க வேண்டு மென்பதுதான் அது. இந்த முயற்சிக்கு ரூபாய் 5-லட்சம் வரை தேவைப்படுகிறது எனச் சொல்லப்படு கிறது. எப்படியும் அடுத்த(கல்வி) ஆண்டிற்குள் கல்லூரியைக்கட்டி முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கி யுழைக்கும் இசையரசு தேசிகர் அவர்களையும், நிர்வாகப் பொறுப்பில் பங்கெடுத்துக் கொண்டு பொறுப்போடு காரிய மாற்றுகிறோம் என்று உறுதிகூறியிருக்கும் ஏழிசை மன்னர் பாகவதர், நகைச்சுவையரசர் ஆகியோரையும் தமிழகம் என்றும் மறவாது.

இந்தக் காரியத்திற்காக, இசைக்கச் சேரிகள் நடத்தியும், நாடகம் நடத்தியும் உதவிய இசைவாணர்களையும், நடிக மணிகளையும் பாராட்டுகிறோம். 100க்கு 80 பேர் தற்குறிகளாய் இருக்கும் இந்த நாட்டில், உயர் நிலைக் கல்வியின் பேரால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு காசும் பயனற்றது என்பது நம் அழுத்தமான முடிவு என்றாலும், வள்ளல் தியாகராயரின் பேரால் – தியாகராயரின் செந்நெறியைத் திராவிட இளைஞர்களுக்கு நினைப்பூட்டும் ஓவியமாய் நிறுவப்பட இருக்கும் கல்லூரி ஏற்பாட்டை மனமுவந்து வரவேற்கிறோம். சென்னை மாகாணத்தி லுள்ள திராவிடர்கள் ஒவ்வொருவரும் இக்காரியம் வெற்றிபெறப் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது நம் ஆசை. வாழ்க தியாகராயரின் புகழ்! வெல்க இசைவாணர்களின் முயற்சி!

குடி அரசு, தலையங்கம் 06.08.1949

You may also like...