60. கடவுள்

வினா :      கடவுளைப்பற்றிய பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக் கூறு.

விடை      :      கடவுள்வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும்படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்.

வினா :      அப்புறம்?

விடை      :      கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம்.

வினா :      கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள்.

விடை      :      அவன் நீதிமானாம்; புனிதனாம்.

வினா      :      வேறு என்ன?

விடை      :      அவன் அன்பு மயமானவனாம்.

வினா      :      கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?

விடை      :      இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.

வினா :      உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு.

விடை      :      காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ் நாட்டு யதேச் சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுள் போர் வெறியனாயும் பழிக்குப் பழிவாங்கும் குணமுடையவனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக்கூடியவனாக இருக்கிறான்.

வினா :      கடவுளைப்பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?

விடை      :      மக்கள் மனோ வாக்குக் காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக்கிறானாம்.

வினா :      ஏன்?

விடை      :      அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக்கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும்.

வினா :      கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?

விடை      :      ஒவ்வொரு தேசத்தாரும் கடவுளை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். கிரேக்கர்கள் ஜ்யூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், ஹிந்துக்கள் பிரம்மம் என்றும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஜிஹோவா என்றும், முகமதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.

வினா :      கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு? பெயர்கள் எவை?

விடை      :      பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்திய சக்தி,பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.

வினா :      ஆனால் ஜனங்கள் சொல்லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது?

விடை      :      இல்லை. சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் கருத்தெனக் கூறுகிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார் கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும், மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள்.

வினா :      மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறார்களா?

விடை      :      மக்களில் பெரும்பாலார் ஒரே கடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்.

வினா :      ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளுண்டா?

விடை      :      பல கடவுள்கள் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது.

வினா :      பல கடவுள்களை நம்புகிறவர்களுக்கு என்ன பெயர் அளிக்கப்படுகிறது?

விடை      :      பல கடவுளை நம்புவோர் பல தெய்வ வாதிகள், ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வ வாதிகள்.

வினா :      சில பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு.

விடை  : எகிப்தியர், ஹிந்துக்கள், கிரேக்கர், ரோமர்.

வினா : ஏகதெய்வ வாதிகள் யார்?

விடை      :      யூதர்கள், கிறிஸ்துவர்கள், முகமதியர்கள்.

வினா :      இவர்கள் எல்லாம் எப்பொழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந்தார்களா?

விடை      :      இல்லை ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.

வினா :      பல தெய்வ வாதிகளின் கடவுள்கள் எவை?

விடை      :      சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.

வினா :      இவைகள் எல்லாம் கடவுளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?

விடை      :      எப்படியெனில் ஜனங்கள் அவைகளை வணங்குகிறார்கள்; அவைகளுக்கு ஆலயங்கள் கட்டினார்கள்; விக்கிரகங்கள் உண்டுபண்ணினார்கள்; அவை    களுக்குப் பூஜைகள் நடத்தினார்கள்.

வினா :      இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா?

விடை      :      எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள் அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப் பேர் நம்பினார்கள்.

வினா :      அறிவில்லாதவர்களோ?

விடை      :      அவைகளில் சில அதிக சக்தியுடையவை என்றும், சில கருணையுடையவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியுடையவை என்றும் நம்பினார்கள்.

வினா :      கடவுள் உற்பத்திக்கு அவர்கள் என்ன காரணம் கூறுகிறார்கள்?

விடை      :      கடவுள் உற்பத்திக்கு பல விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

வினா :      அவற்றுள் சிலவற்றை விளக்கு.

விடை      :      முதற்காரணம், ஆதிகால மக்கள் அறிவில்லாதவர்களாயும் குழந்தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே தனக்கு அறியமுடியாதவைகள் மீது அவர்களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காணமுடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டுபண்ணுகிறதென்று நம்பினார்கள்.

இரண்டாவது     : மக்கள் பலவீனராயும் உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ சக்தியுடைய வொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள்.

மூன்றாவது  :    மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன். பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறிய முடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப் படுத்திக் கொள்கிறான்.

நான்காவது :     தெய்வநம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்.

வினா :      அது எப்படி?

விடை      :      நமக்கு உலகத்தில் சிரஞ்சீவியாக வாழ முடியுமானால் தெய்வங்களைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறுஜென்மத்தைப் பற்றியும், பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப்பற்றியும் யோசிக்க வேண்டியதாக ஏற்படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை.

வினா :      தெய்வங்களின் தொகை பெருகிக்கொண்டே போகிறதா?

விடை      :      இல்லை. அது குறைந்து கொண்டே போகிறது.

வினா :      ஏன்?

விடை      :      மக்களது அறிவும் சக்தியும் வளர வளர தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது.

வினா :      அறிவில்லாதவர் கடவுள்களைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா?

விடை      :      ஆம். நாகரீகமில்லாதவர்களே பல தெய்வங்களை வணங்குகிறார்கள்.

வினா :      ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன?

விடை      :      இப்பொழுதும் பெரும்பாலார் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

வினா :      கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும் இருக்கிறார்களா?

விடை      :      ஆம். அதிகம் பேர் இருக்கிறார்கள்.

வினா :      அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை?

விடை : பொதுஜனங்கள் சங்கற்பப்படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள்.

வினா :      கடவுள் உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாதா?

விடை      :      சிலர் முடியும் என்கிறார்கள். சிலர் முடியாது என்கிறார்கள்.

வினா :      கடவுளுண்மைக்குக் கூறப்படும் ஆதாரங்கள் எவை?

விடை      :      முதல் ஆதாரம் காரணகாரிய வாதம்.

வினா :      அதை விளக்கிக்கூறு.

விடை      :      எதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். எனவே பிரபஞ்சத்துக்கும் ஒரு கர்த்தா இருக்கவேண்டும். அந்த கர்த்தாவே கடவுள்.

வினா :      இது ஒரு பலமான பல்லவா?

விடை      :      பலமான வாதந்தான், ஆனால் முடிவானதல்ல.

வினா :      ஏன்?

விடை      :      யாவற்றிற்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமானால் கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே.

வினா :      கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா?

விடை      :      காரணமில்லாமலே கடவுளுக்கு இயங்க முடியுமானால் காரணமில்லாமல் காரியமில்லை என்றவாதமே அடியற்று வீழ்ந்துவிடுகிறது.

வினா :      அப்புறம்?

விடை      :      காரணமின்றி அனாதி காலமாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதி காலமாக இயங்க முடியும்?

வினா :      கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?

விடை      :      அப்படியானால் அந்தக் காரணத்துக்கு மூலகாரண மென்னவென்று ஆராயவேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது.

வினா :      வேறு வாதமென்ன?

விடை      :      பூரணத்துவவாதம்.

வினா :      அது என்ன? விளக்கிக் கூறு.

விடை      :      அதாவது நாம் அபூரணராக இருந்தாலும் (குறைபாடுடையவர்களாக இருந்தாலும்) பூரணமான ஒருபொருள் உண்டென்ற      உணர்ச்சி நமக்கு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்தப் பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது.

வினா :      அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன?

விடை      :      அந்த உணர்ச்சி நமது உள்ளத்து இருந்து கொண்டு இருப்பதினால் வேண்டுமென்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது.

வினா :      மேலும் கொஞ்சம் விளக்குக.

விடை      :      ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்ற வேண்டுமானால் அது உள் பொருளாக இருக்க வேண்டும். அது உள் பொருளாக இல்லையானால் பூரணமாக இருக்க முடியாது.

வினா :      அப்படியானால் முடிவு என்ன?

விடை      :      கடவுளைப் பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதினால் கடவுள் ஒன்று இருக்க  வேண்டும். அப்படி ஒன்று இல்லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பதுதான் முடிவு.

வினா :      இந்த வாதம் சரியானதுதானா?

விடை      :      முதல் வாதத்தைப்போல இது அவ்வளவு உறுதியானதல்ல.

வினா :      ஏன்?

விடை      :      பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை. அவை இரண்டும் சம்பந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்பதாகவோ, மேக    மண்டலத்தில் மிதந்துக் கொண்டிருப்பதாகவோ நமது உள்ளத்து ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அப்பேர்பட்ட ஒரு பட்டணம் இருக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை.

வினா :      வேறொரு உதாரணத்தினால் விளக்கிக்காட்டு.

விடை      :      பூமி பரந்திருப்பதாக வெகுகாலம் மக்கள் நம்பி வந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதிபிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில் பரப்பான பூமி இல்லவே இல்லை.

வினா :      அப்படியானால் பூரண வஸ்துக்களும் அபூரண வஸ்துக்களும் நமது மனோ கற்பிதம்தானா?

விடை      :      ஆம்

வினா :      அடுத்த வாதம் என்ன?

விடை      :      அடுத்தது உருவகவாதம்.

வினா      :      அதை விளக்கு.

விடை      :      வினாடி, நிமிஷம், மணி காட்டும் முறையில் ஒரு கடிகாரம் உருப்படுத்தப் பட்டிருப்பதினால் அது ஒரு நோக்கத்துடன் உண்டுபண்ணப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு ஒருகர்த்தா இருக்க வேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோலவே உலகமும் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப் பட்டிருப்பதினால் அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்த கர்த்தாவே கடவுள்.

வினா :      இந்த வாதம் எப்பேர்ப்பட்டது?

விடை      :      கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக் கூறமுடியாது. கடிகாரம் எதற்காக உண்டுபண்ணப்பட்ட தென்று கூறிவிடலாம். ஆனால் உலகம் எதற்காக உண்டுபண்ணப் பட்டதென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

வினா :      பிரபஞ்ச அமைப்பு கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவானதல்லவா?

விடை      :      தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை.

வினா :      கடிகாரத்தைப் பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பதுபோல பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லையென்று நீ கூறுகிறாயா?

விடை      :      ஆம். கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூறமுடியும். பிரபஞ்ச அமைப்பைத் தெளிவாக விளக்கிக் கூறமுடியாது.

வினா :      இந்த வாதத்தiப் பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டியதுண்டா?

விடை      :      கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதை உண்டுபண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமென்று அறியலாமேயன்றி கடிகார உற்பத்திக்குக் காரணமான பொருள்களையுண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கவேண்டுமென்றும் சொல்ல முடியாது.

வினா :      வேறு என்ன?

விடை      :      உலகத்தை உண்டுபண்ணியவன் ஒருவன் உண்டென்று ஒப்புக்கொண்டாலும் உலகத்தை சிஷஷ்டித்தவன் ஒருவன் இருப்பதாக நமக்கு ருசுப்படுத்த முடியாது.

வினா :      இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதினால் பிரஸ்தாப விஷயத்தில் நாம் கைக்கொள்ளவேண்டிய நிலை என்ன?

விடை      :      நாம் அந்தரங்க சுத்தியோடு ஆராயவேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறியமுயலவேண்டும்!

வினா :      கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்க வேண்டும்?

விடை      :      ஜீவகோடிகளின் உயர்ந்த லக்ஷ்யத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்கவேண்டும்.

வினா :      அப்படியானால் சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும் சிலரின் தெய்வங்கள் மோசமானவையென்றும் ஏற்படாதா?

விடை      :      ஆம். நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் லக்ஷ்யத்துக்கும் கடவுளுக்கும் அளவுகோலாக இருக்கிறான்.

வினா :      நமது கண் பார்வை எட்டும் அளவுக்கே நமக்குப் பார்க்க முடியும். அதுபோல நமது மனோ சக்திக்கு இயன்ற அளவிலே நமக்கு சிந்திக்கவும் விரும்பவும் முடியும்.

வினா :      அப்படியானால் கடவுளைச் சிருஷ்டித்தது யார்?

விடை      :-     ஒவ்வொருவனும் தன் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான்.

குடி அரசு 10.09.1949

You may also like...