59. ஆரியர் இயல்பு

ஜர்மானியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். இந்துமத ஆதாரங்களும் ஆரிய மதம், ஆரியக் கடவுள்கள், ஆரிய மன்னர்களின் கதைகள் என்பதாகத்தான் இருந்து வருகின்றன.

புராண ஆராய்ச்சிக்காரர்களும், பண்டிதர்களும், சரித்திர ஆராய்ச்சிக்காரர்களும், பாரதம், ராமாயணம் மற்ற புராதனக் கதைகள் ஆகியவைகளில் வரும் சுரர், அசுரர் என்கின்ற பெயர்களையும், ராக்ஷதர்கள் தேவர்கள் என்கின்ற பெயர்களையும், ராமன் அனுமான் என்கின்ற பெயர்களையும், ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவையே பிரதானமாய்க் கொண்டவை என்பதாகவும் தீர்மானித்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

மேல் நாட்டுச் சரித்திரக்காரர்களும், சிறப்பாக அரசாங்கத்தார்களும் மேல்கண்ட ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை ஒப்புக்கொண்டு அந்தப்படியே ஆதாரங்கள் ஏற்படுத்திப் பள்ளிப் பாடமாகவும் வைத்து வந்திருக்கிறார்கள். அரசியல்காரர்களில் தீவிரக் கொள்கை கொண்ட தேசீயவாதிகள், சமதர்மக்காரர்கள், பொதுவுடமைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற தோழர் ஜவகர்லால் நேரு போன்றவர்களும், தங்களது ஆராய்ச்சிகளில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவுகளை ஒப்புக்கொண்டும், சரித்திரங்களில் இருந்துவரும் ஆரியர் திராவிடர் பிரிவுகளை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆரியர்களின் தத்துவம் எப்படி இருக்கிறதென்றால் இந்தியா அவர்களுடைய பூர்வீக நாடு என்று சொல்லுவதற்கில்லாமல் இருப்பதோடு, இந்தியாவில் ஆரியர்களுக்கு உள்ள சம்பந்தம் கேவலம் அய்ரோப்பாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும், அரேபியாவிலும், பர்சியாவிலும் இருந்து வந்து குடியேறினர்.

அய்ரோப்பியர், முகமதியர்கள், பார்சியர்கள் ஆகியவர்களுக்கு இருந்துவரும் பொறுப்பும், உரிமையும், மனிதாபிமான மும்கூட இல்லாதவர்கள் என்று சொல்லும்படியான நிலையில்தான் இருந்து வருகிறார்கள்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஜர்மானியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டு ஜர்மனி தேசத்திலுள்ள யூதர்களுக்கு ஜர்மனியில் இருக்க உரிமையில்லை என்று  சொல்லி விரட்டியடித்த தன்மை போலத்தான் இந்தியா விலுள்ள மக்களால் ஆரியர்கள் விரட்டியடிக்கப்படவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லிய காரணங்கள், இந்தியர்கள் ஆரியர்களை விரட்டியடிக்கலாம் என்பதற்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

அவைகளில் ஒன்று, யூதர்கள் தங்களுக்கு என்று தேசமில்லாதவர்கள் என்றும், அதாவது ஜிப்ஸி-மலை சாதியார் லம்பாடிகள் – கூடாரத்தோடு திரிகிறவர்கள் போன்றவர்கள் என்றும் அப்படிப் பட்டவர்களை ஒரு நாட்டில் வாழவிட்டால் அவர்கள் அந்த நாட்டின் வளப்பத்தையும் முற்போக்கையும் காட்டிக்கொடுத்து ஜீவிக்கிறவர்களாகி விடுவார்கள் என்பது. இரண்டாவது, யூதர்கள் சரீரத்தில் பாடுபட மாட்டாதவர்கள்.  சரீரத்தினால் பாடுபடாதவர்கள் ஊரார் உழைப்பைக் கொள்ளை கொண்டு வாழுபவர்களாவார்கள் என்றும், ஊரார் உழைப்பால் வாழுகின்றவர்கள் மனித சமூகத்துக்கு க்ஷயரோகம் போன்ற வியாதிக்கு சமமானவர்கள் என்பதோடு தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்கு ஆக நாட்டையும் மனித சமூகத்தையும் பிரிவினையிலும் கலக்கத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக்கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிக்க குறைந்த விலைக்கு எதையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பதாகும்.

இந்த இரண்டு காரணங்களும் இன்று நம் நாட்டில் ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பன களாதியோரிடம் இருந்து வடுகின்றன. முதலாவது ஆரியர்களுக்கு இன்னதேசம் என்பதாகவே ஒன்று இல்லை என்பதோடு, ஆரியர்கள் என்பவர்கள் சரீரத்தினால் பாடுபடாமல் மதம், புரோகிதம், ஜாதி உயர்வு, அரசியல் உத்தியோகம், தேசியத் தலைமை என்கிறதான சூழ்ச்சித் தொழில்களால் சிறிதும் சரீரப்பாடுபடாமல் மற்ற ஆரியரல்லாத மக்கள் உழைப்பினாலேயே வஞ்சக ஜீவியம் நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்.

இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, தங்கள் ஆதிக்கம் என்பதல்லாமல் மற்றபடி எந்தத் தேசத்தைப்பற்றியோ, எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ, எந்த சமூகத்தைப் பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே நமது பழைய ஆதாரங்கள், அகராதிகள் ஆகியவற்றில் ஆரியர்கள் என்றால் மிலேச்சர்கள் என்றும், ஒருவிதக்கழைக் கூத்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதற்கேற்பவே ஆரியர்கள் இந்த நாட்டில் என்று காலடிவைத்தார்களோ அன்று முதல் இன்று வரை பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களை சின்னாபின்னமாகப் பிரித்து ஆபாசக் கற்பனைகளையும் நடத்தைகளையும் வேதமாகவும் மோக்ஷ சாதனமாகவும் ஆக்கி இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும் இகம் பரம் இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம் அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும் கூட தங்களை ஆக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையாரும் மறுக்க முடியாது.

ஆனால் இவர்களது தர்மகர்த்தாத் தன்மையிலும், எஜமானத் தன்மையிலும், வழிகாட்டித் தன்மையிலும் இந்நாட்டுக்கு எந்தத் துறையிலாவது ஏதாவது கடுகளவு முற்போக்கோ, நன்மையோ ஏற்பட்டிருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தியாவுக்கோ, இந்தியநாட்டு பழம் பெரும் குடி மக்களுக்கோ ஏதாவது ஒரு நன்மை சிறிதளவாவது ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுமானால், அவற்றில் சிறிது முஸ்லீம் அரசர்களாலும் பெரும்பாலும் அய்ரோப்பிய ஆட்சியாலும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.

அதுவும் ஆரியர்களின் முட்டுக்கட்டையையும், தொல்லைகளையும் சமாளித்து ஏற்பட்டவைகள் என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, மற்றப்படி ஆரியர்கள் முயற்சியோ, உதவியோ ஒரு சிறிதாவது கொண்டு ஏற்பட்டதென்று எதையும் சொல்ல, முடியாது. மேலும் இன்று அரசியல், சமூக இயல், பொருளியல், அறிவியல் ஆகிய நான்கு துறைகளிலும் இந்நாட்டு மக்கள் அடைந்திருக்கும் ஈன நிலைக்கு இந்த ஆரியர்களே காரணமென்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

ஆகையால் தேசமில்லாதவர்களும், தேக உழைப்பு இல்லாதவர்களுமான சமூகம் எந்த நாட்டிற்குடம் கேடுவிளைவிக்கக் கூடியது என்பதோடு முக்கியமாக இந்தியாவுக்கு அது ஒரு பெருங் கேட்டையே விளைவித்துக் கொண்டிருப்பதாகவே இருந்து வருகிறது.

இதை நமது பாமரமக்கள் உணராமல் ஏமாந்துபோய் தங்களுக்குத் தாங்களே கேட்டை விளைவித்துக் கொள்ளுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, இந்நாட்டு ஆரியரல்லாத மக்களில் படித்தவர்களாயும், விஷயமறிந்தவர்களாயுமுள்ள ஒரு கூட்ட மக்கள் இவ்வாரியர்களுக்கு உள் ஆளாயிருந்து சமூகத்தையே அடியோடு காட்டிக் கொடுத்தும் – கெடுத்தும் தாங்கள் வாழ முயற்சிக்கும் இழி நிலையை உணரும்போது ஆரிய சுபாவம் இவர்களது ரத்தத்தில் எப்படி ஊறியது என்று ஆச்சரியப்படவேண்டி இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

குடி அரசு 10.09.1949

 

You may also like...