43. பழிவாங்கும் உணர்ச்சி!

குடி அரசுக்கு ஜாமீனாக ஏன் 3000 ரூபாய் கட்ட வேண்டுமென்பதற்குக் காரணங்களை(!) சர்க்கார் நமக்குத் தெரிவித்து விட்டார்கள். 07-08-1949-ல் செய்தியும் ? சிந்தனையும் என்ற தலைப்பில் காந்தியார் காலட்சேபம் பற்றி வந்த செய்தியையொட்டி எழுதிய ஒரு கிண்டல் குறிப்பு குற்றமாம். அதே தேதியில் அதே தலைப்பில் சாந்தூர் சமஸ்தான நிர்வாகம் பற்றி வந்த செய்தியை ஒட்டிய ஒரு கிண்டல் குறிப்பு மற்றொரு குற்றமாம்.

மேற்படி தேதியில் கற்பனை என்ற வரிசையில், அக்கரகாரம் என்ற தலைப்பில், புதுமைப் பித்தனின் பொன்னகரம் என்ற கதையின் தழுவலாக அடிக்குறிப்புப்போட்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுக்கதை இன்னொரு குற்றமாம். 28-08-1949-ல் ஆச்சாரியார் தவிப்பு அம்மையார் மறுப்பு என்கிற தலைப்பில் எழுதியிருக்கும் ஒரு துணுக்குச் செய்தியும் அதன்கீழ் இதன்ரகசியம் என்ன? என்கிற தலைப்புப் போட்டு எழுதப்பட்டிருக்கும் துணுக்குச் செய்தியும் ஒரு குற்றமாம். 04-09-1948-ல் பச்சிளங் கருவைச் சிதைக்கும் பாதகமான ஆட்சி என்கிற தலைப்பில், கர்ப்பிணியை கார் ஏற்றி நடுக்காட்டில் கொண்டுவிட்ட ஓமந்தூராரின் போலீஸ் ஆட்சியை கண்டித்திருப்பது ஒரு குற்றமாம். ஆக இந்தக் காரணங்களுக்காக எடுத்துவை ரூ.3000 என்று கூறிவிட்டது நம் சுயராஜ்ஜிய சர்க்கார்.

இந்தக் காரணங்களைப் பார்க்கும்போது, சென்னை சர்க்காருடைய நடத்தையைப்பற்றி நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்? என்றுதான் திராவிடத் தோழர்களைக் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. காந்தியார் பார்ப்பனர்களைப் போற்றி, அவர்கள் நலத்தில் அக்கரை காட்டியபோது, அவர் மகாத்மாவாக ஆக்கப்பட்டார். பின்பு பார்ப்பனர்களுடைய தனி நலத்தைக் கருதாமல், மக்களுடைய பொதுநலம் என்கிற அடிப்படையில் பார்ப்பனர்களுடைய குறைபாட்டைப் பெரிதாக மதிக்கவில்லை.

அவர் எப்போது பார்ப்பனர்களைக் குறித்துச் சற்று அலட்சியமாகப் பேச ஆரம்பித்தாரோ அப்போதே, அவர் துர்ராத்மாவாகக் கருதப்பட்டு, ஒரு பார்ப்பனக் கும்பலால் சதி செய்யப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப் பட்டார்.

இந்த அக்கிரமத்தை மறைப்பதற்காக – நியாயமாக மனித உணர்ச்சியின்படி அல்லது வரலாற்று ஆதாரத்தின்படி, பார்ப்பனீயத்தின் மீது மக்களுக்கு எந்த அளவு வெறுப்பு உண்டாக வேண்டுமோ, அந்த வெறுப்பை மக்கள் மறப்பதற்காகப், பார்ப்பனத் தலைவர்கள் எவ்வளவோ காரியங்களைச் செய்தார்கள். காந்தியார் இப்படிப் பரிதாபகரமான முடிவையடைந்தது கடவுளின் விருப்பம், கடவுளே அவரை அழைத்துக் கொண்டுவிட்டார் என்றெல்லாம் நாளுக்குநாள் புதுப்புதுவிதமாய் நாட்டில் கயிறு திரித்தார்கள்.

இந்தத்துக்ககரமான வெறுக்கத் தகுந்த வெறிச் செயல் நடந்து, அதனால் மக்கள் வெதும்பிய நிலையில் இருக்கும்போது, காந்தியாரைப்பற்றிக் காலட்சேபம் செய்து, அவர் வாழ்க்கை வரலாறு ஒரு புண்ணிய கதை என்பதாக மக்கள் உள்ளத்தில் தவறான உணர்ச்சியைக் கிளப்பி, பார்ப்பனீயத்தின் மீதுள்ள வெறுப் புணர்ச்சியைப் போக்கிக்கொள்ள, கொல்லை வழி தேடப்படுகிறதே இது நியாயமா? என்பதாகக் கேட்ட கேள்வி ஒரு குற்றமாம்.

சாந்தூர் சமஸ்தானத்தில், மன்னர் தள்ளப்பட்டார், மக்களாட்சி பூத்தது என்கிற செய்தியில், ஆட்சி நிர்வாகத்தில் – அந்த வைபவத்தில் முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களே கலந்து கொண்டிருக்கிறார்களே, இதற்குப் பெயர்தானா மக்களாட்சி? இதுவா இந்தியயூனியன் ஆட்சி? என்பதாகக் கேட்ட கேள்வி ஒரு குற்றமாம்.

உத்தியோகத்தைக் காப்பாற்றிக்கொள்ள, எத்தனையோ ஊதாரிகள் மனைவிகள் தயவையும் ஒத்துழைப்பையும் பெறுவது நம் நாட்டில் புதிய ஒரு சங்கதியல்ல. ஸ்டாத்தம் அய்யங்கார் சரித்திரம் உத்தியோகம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் மிக மிக நன்றாகக் தெரிந்த ஒரு சங்கதி. இந்த மாதிரி உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ள மானத்தை இழக்கலாமா? என்று கேட்பது போல, கற்பனை என்கிற தலைப்பை போட்டுக்கொண்டு இது பொன்னகரம் என்ற இன்னொரு கதையைத் தழுவியது என்று முடித்துக் காட்டியிருக்கும் கற்பனைக் கட்டுக்கதை ஒரு குற்றம் என்கிறது சர்க்கார்.

அப்படியானால் காந்தியார், ஒரு வெறி நாய் சுட்டுக் கொல்லப்படுவது போல் சுட்டுக்கொல்லப் பட்டதை நியாயம் என்று நினைக்கிறதா இந்த சர்க்கார்? இயற்கைக்கு மாறாகக் காந்தியார் படுகொலையை மக்கள் மறப்பதற்காகப், பார்ப்பனர்கள் காந்தியாரைப் பற்றி அளந்துவரும் புளுகு மூட்டைகளை யெல்லாம், அத்தனையும் உண்மை என்று சாதிக்கிறார்களா நம்ம சுயராஜ்ஜிய சார்க்கார்? ஒரு சமஸ்தான நிர்வாகமாற்றத்தில், நிர்வாகத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும், 100க்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர்களே கலந்து கொண்டிருக்கிறார்களே, இது என்ன அக்கிரமம்! இதற்குப் பெயர்தானா யூனியன் ஆட்சி என்று கேட்பது குற்றமென்றால், பார்ப்பனர்கள் தான் நாட்டை ஆளுவார்கள், நீ அதைப்பற்றிப் பேசக்கூடாது என்கிறார்களா நம்ம சுயராஜ்ஜிய மந்திரிமார்கள்? உத்தியோகமே பெரிது! மானம் பெரிதல்ல! உத்தியோகத் தைக்காப்பற்றிக்கொள்ள மனைவியையும் கூட்டிக்கொடுக்கலாம்! ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு ? எழுதுவதற்கு நீ யார் என்கிறாரா நம்ம பவநகர் மகாராஜாவான கவர்னர் பிரபு அவர்கள்? என்று நாம் கேட்கிறோம்.

28-08-1948-ல் மார்ச் என்கிற வடநாட்டுப் பத்திரிகையில் ஆச்சாரியாரைப் பற்றி, கார்ட்டூன் போட்டு, கிண்டலாக எழுதப் பட்டிருந்ததுதான், ஆச்சாரியார் தவிப்பும் அம்மையார் மறுப்பும் என்று தலைப்புப்போட்டு மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதைப்பற்றி மார்ச் என்கிற பத்திரிகையின் மீது சர்க்கார் வழக்குத் தொடர, அது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தும், அந்த முடிவைத் தெரிந்துகொண்டே நம் சென்னை சர்க்கார் இந்த மொழிபெயர்ப்புக்குக் கொண்டா 3000 என்றால் இந்த சர்க்காருக்கு நீதியைப்பற்றி – நீதியின் முடிவைப் பற்றிச் சிறிதாவது கவலை இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம்.

பத்திரிகை ஆலோசனை போர்டில் பார்ப்பன ஆசிரியர்களான சகுனி மாமாக்கள் இந்த விஷயத்தைப்பிரமாதப்படுத்திய நேரத்தில், ஒரு வெளிநாட்டுக்காரர் ? சென்னை மாகாணப் பத்திரிகாசிரியர் மட்டும் இதைக்குற்றமென்று சொல்லுவது தப்பு. இதைக்குற்றம் என்றால் மார்ச் பத்திரிகையல்லவா குற்றவாளி? இதற்கு குடி அரசு எப்படிப் பொறுப்பாகும் என்றெல்லாம் சரமாரியாகக் கேள்வி கேட்டார் என்றுகூட ஒரு வதந்தி உலவுகிறது. இதற்குப் பிறகும் கூட இந்த மொழியெர்ப்பைக் குற்றம் என்றால், நீதிமன்றங்களை நம் சென்னை சர்க்கார் எந்த அளவு கேவலப்படுத்துகிறதெனக் கேட்கிறோம்.

அதே ரகத்தைச் சேர்ந்ததுதான் இதன் ரகசியம் என்ன என்கிற தலைப்பில் எழுதியிருக்கும் கிண்டல் செய்தியும். 04-09-1948-ல் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களை 8 மாத கர்ப்பிணியும் கலந்திருக்க ? அவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்தி – காப்பத்திற்கும் ஊறு விளைவித்த ஓமந்தூராரின் போலீஸ் ஆட்சியைக் கண்டித்தது தவறு என்றால், நீதிபதி கொடியைப்பற்றி பேசியது நேர்மையற்றது என்று எடுத்துக்காட்டியது தவறு என்றால், போலீஸ் நிர்வாகத்தில் என்ன அட்டூழியம் நடந்தாலும் வாயைத் திறக்கக்கூடாது; நீதிபதிகள் எவ்வளவு நேர்மைத் தவறாக நடந்தாலும் அதை எடுத்துக் காட்டக்கூடாது என்பதுதானே நம்முடைய சுயராஜ்ஜிய சர்க்காரின் கட்டளை? இந்தக் கட்டளையை ஒரு சுதந்திர உணர்ச்சியுடைய ? அநீதிக்கு அஞ்சுகிற ? எந்த மனிதன்தான் எடுத்துக் காட்டாமல் இருக்கமுடியும் என்று கேட்கிறோம்.

சர்க்காரால் சுமத்தப்பட்டிருக்கும் இக் குற்றச்சாட்டுகள், எப்படியாவது ? எந்தக் காரணத்தைச் சொல்லியாவது குடி அரசு என்கிற பத்திரிகையிடத்திலும், அதன் பங்குவிகிதாச்சாரத்திற்கு 3000 ரூ. பறித்துவிட வேண்டுமென்கிற ஒரே நோக்கத்தோடு, கூறப்பட்டிருக்கிறதே தவிர, நீதி மன்றத்திலும் இது நீதிக்குப் பிழை என்று சாதித்துவிட முடியுமா? என்று கேட்கிறோம்.

வகுப்புத் துவேஷத்தை உண்டாக்கும் குற்றங்கள், அவதூறை உண்டாக்கும் குற்றங்கள் என்பதாக எல்லாம், இந்தச் செய்திகளுக்கும் காதும் கண்ணும் வைப்பதாக இருந்தால், இந்த வகுப்புத் துவேஷத்தால் எந்த வகுப்பினருக்கு எப்படி எப்போது நஷ்டமுண்டாயிற்று? பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பியிருக்கிறதென்றால் எத்தனை பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள்? என்பதைச் சர்க்கார் புள்ளி விபரத்தோடு கூறவேண்டாமா? என்று கேட்கிறோம்.

குடி அரசுக்கு ஜாமீன்கேட்ட நடத்தையிலிருந்து, அதுவும் ஜாமீனுக்கு ஆதாரமாகக் காட்டி யிருக்கும் குற்றச் சாட்டுகளிலிருந்து, சென்னை சர்க்கார் பழி வாங்கும் உணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு என்ன நியாயத்தைச் சமாதானத்தைக் கூறிவிடமுடியும்? இந்த அநாகரீகமான படலங்கள் நாட்டில் நடக்க வேண்டியதுதானா? அக்கிரமப் போக்குகள் எவ்வளவு காலத்திற்குத்தான் செல்லுபடியாகும்? தோழர்களே! தீர்ப்பளியுங்கள்.

குடி அரசு 09.07.1949

 

You may also like...