57. பிழைத்துப் போகட்டும்!

அறிஞர்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டு, அது சிலகாலம் வழக்கத்திலும் வழங்கிவிடுமென்றால், பிறகு அந்த அறிஞர்கள் என்பவர்கள் அறிஞர்கள் என்கிற பட்டத்தையே கைமுதலாகக்கொண்டு, எவ்வளவு பிற்போக்கான நடவடிக்கைகளையும் துணிச்சலுடன் மேற்கொள்வதைப் பார்க்கிறோம். அந்த நேரத்திலும் அறிஞர்கள் என்கிற அந்தப் பட்டம் தங்களுக்கு நல்ல பாதுகாப்பாகவே இருந்துக் கொண்டிருக்கும் என்றும் நம்புகிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களின் இந்த நம்பிக்கை, இந்த நாட்டில் பெரும்பாலும் பொய்ப் பித்துவிடுவதுமில்லை.

ஆந்திராப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள், இந்தப் பட்டியலில் இப்போது தம் பெயரையும் பதிவு செய்துகொண்டிருக்கிறார். தோழர் ரெட்டி அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகப் பொதுமன்றத்தில் சில விரிவுரைகள் ஆற்றுவார் என்கிற வரிசையில், பேசிவரும் பேச்சுக்களினாலேயே இந்தப் பதிவைப் பதிந்து கொண்டிருக்கிறார்.

மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் நாளுக்கு நாள் கரைந்து கொண்டு வருகிறது. மேலும் மேலும் சாயம் வெளுக்காமல் இருப்பதற்காகத் தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள் பயத்தினாலும், நயத்தினாலும் என்னென்ன காரியங்களையெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியும் அந்த முயற்சிகள் ஒன்றும் பலன்தரவில்லை. நாளுக்குநாள் மக்கள் காங்கிரஸ் என்பதை மறந்து கொண்டுவருகிறார்கள் என்பதுகூட இல்லை, வெறுத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த உண்மையை, நாட்டில் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளே மெய்ப்படுத்தும். இருந்தும் தோழர்ரெட்டி அவர்கள் பலமாகத் தாங்குகிறார் காங்கிரசை. மற்ற கட்சிகளை நசுக்கவோ, அதிகார பலத்தைக் கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவோ காங்கிரஸ் ஆசைப்படவில்லை என்பது தோழர் ரெட்டி அவர்களின் கண்டு பிடிப்பு ? பாராட்டுரை.

இந்தியாவிற்கு வழி காட்டுவதற்கென்றே அவதரித்த நேரு, பட்டேல் போன்ற தலைவர்கள் ஜனநாயக தத்துவப்பிரகாரம் மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்கின்றனர் என்பது மேலும் அவர் கூறும் புகழுரை. இவற்றில், மற்ற கட்சிகளும் ? காங்கிரசும் என்கிறதான தொடர்பை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் மற்ற கட்சிகளை நசுக்குவதற்கு, ஆட்சியில் புகுவதற்கு முன்பு எந்தெந்த முறைகளைக் கையாண்டது, ஆட்சியில் ஏறி அமர்ந்தபின் என்னென்ன முறைகளைக்கைக் கொண்டு வருகிறது என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியத்தில் இல்லாமல் நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. எங்கு திரும்பினாலும், எப்பக்கம் பார்த்தாலும் 144. 144-தடை போடப்படாத ஊர் என்றாலே காங்கிரஸ் ஆட்சியில், மதவாதிகள் கருத்தின்படி, அது ஒரு பாவம் செய்த ஊர் என்பதான எண்ணம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த 144-கள் யாருக்கு?

ஆட்சியில் புகுவதற்கு முன்பு இந்த நாட்டில் காங்கிரஸ் என்பதாகத்தான் ஒருகட்சி இருக்கிறதே தவிர ? இருக்க முடியுமே தவிர முஸ்லீம்லீகோ ? கம்யூனிஸ்டோ ? சோஷியலிஸ்டோ ? என்பதாக வெல்லாம் கட்சிகளே கிடையாது. இருந்தாலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றே பச்சையாகப் பேசி வந்தது காங்கிரஸ், நடத்தையிலும் அந்தப் பிரச்சாரத்தை ஒட்டியே நடந்து கொண்டு வந்தது. இதனைத் தோழர் ரெட்டி அறியாதவரல்ல. ஆட்சியில் அமர்ந்த பிறகும் இந்தக் கருத்து வலுவாகி, மற்ற கட்சிகளை ஒடுக்கும் வகையில் மிக மிகத் தீவிரமாக அதிகாரங்களையும் துணைக்கழைக்கப் படுகிறது. அவற்றைப் பார்த்துக்கொண்டு வருகிற தோழர் ரெட்டிதான் கூறுகிறார், அதிகார பலத்தைக் கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க காங்கிரஸ் ஆசைப்படவில்லை என்பதாக.

நம் மாகாணத்தில் அண்மையில் நடந்து முடிந்திருக்கும் ஜில்லா போர்டு தேர்தலை எடுத்துக் கொண்டாலே போதும். வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் ஒரு பெரும் பொதுத் தேர்தலே நாடு முழுவதும் மிக விரைவாக நடத்தப் போகிறோம் என்று சொல்லி, அதற்கான பூர்வாங்க வேலைகளும் மற்றொரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, மிக மிக அவசரமாக, குப்பைக் கூடையில் போடும் தகுதியுடைய ஒட்டர் லிஸ்டை வைத்துக்கொண்டு ஜில்லா போர்டுகளுக்கு ஏன் இப்போது தேர்தல் நடத்த வேண்டும்?

நடத்தும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பேரால் மாகாணம் முழுவதிலும் ஏன் அபேட்சகர்களை நிறுத்த வேண்டும்?  ஸ்தலஸ்தாபனங்களின் வேலையில், எந்த வேலையையாவது கட்சியின் செல்வாக்கில் இருந்து கொண்டுதான் செய்து ஆகவேண்டியிருக்கிறது என்று ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியுமா?

கட்சியின் வலுவினால் ? மெஜாரிட்டியினால் சாதிக்க  வேண்டிய காரியம் என்பதாக ஒன்றுகூட இல்லாத ஸ்தலஸ்தாபனங்களுக்குப் பத்தாம் பசலி லிஸ்டை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தும்போது, காங்கிரஸ் மந்திரிகள் என்பவர்கள், காங்கரசுக்கே ஒட் செய்யுங்கள் என்பதாக சர்க்கார் செலவிலேயே சுற்றுப்பிரயாணமும் செய்து கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள் என்றால் இந்த நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகிற தென்று கேட்கிறோம்? 1951 அல்லது அதற்குப் பின்பு நடத்தப் போகிறோம் என்கிறபொதுத் தேர்தலுக்கு, ஜில்லா போர்டுகளின் ஆதிக்கம் தூண்களாக நின்று தாங்கவேண்டும் என்பதைத் தவிர இந்த ஜில்லாபோர்டுத் தேர்தலுக்கு வேறு அர்த்தமோ வேறு உண்மையோ இல்லவே இல்லை. அப்படியிருந்தும் தோழர் ரெட்டி கூறுகிறார் அதிகார பலத்தைக் கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க காங்கிரஸ் ஆசைப் படவில்லை என்று.

சரி, தேர்தல் நடந்து முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. காங்கிரசுக்குச் செய்யப்பட்ட பிரச்சாரத்தைப் போல ? செலவு செய்யப்பட்ட பணத்தைப் போல – ஒத்துழைத்த அதிகாரிகளைப் போல, தேர்தல் போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு வசதி இல்லை; செய்யவும் முடியாது. சுயேச்சையாக நின்ற ஒவ்வொருவரும் தேர்தலுக்காகச் செய்த முயற்சிகளை எடுத்துக்கொண்டால், அதைப் போல நூறு மடங்கு, ஆயிர மடங்கு என்று சொல்ல வண்டிய அளவிலேயே காங்கிரஸ் அபேட்சகர்களுக்கு முயற்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அப்படியெல்லா மிருந்தும் கூட இரண்டொரு ஜில்லாக்களில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி இல்லை. பல ஜில்லாக்களில் ஒண்ணுக்கு முக்கால் என்கிற அளவில்கூட வெற்றியில்லை. வெற்றி பெற்றவர் களில் பல சுமாரான ஒட்டுகளே  அதிகம் பெற்றிருக்கின்றனர். இதைக் காட்டிலும் காங்கிரசைத் தோற் கடித்த பலர் அதிகமான ஒட்டுகளால் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றெல்லாம் தேசீய ஏடுகளே கூறி அலறும்படியான நிலைமையைப் பார்க்கிறோம்.

இந்த நிலைமை எதைக் காட்டுகிறதென்றும் கேட்கிறோம். மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்ட, இந்த நடத்தையைக் காங்கிரசின் நடத்தையாக ஏற்கமுடியாது. மத்தியசர்க்கார் நடத்தையில் தான் ஜனநாயகம் வழிந்து ஒழுகுகிறது என்பதாக தோழர்ரெட்டி கூறலாம். அண்மையில் சட்டசபைக்கு நடந்துமுடிந்த கல்கத்தா உப தேர்தலையே எடுத்துக்கொள்ளலாமே. மாகாண சட்டசபை ஒன்றுக்கு காங்கிரஸ் கட்சியின் பேரால் நிற்கும் அபேட்சகரை ஆதரித்து, மத்திய சர்க்காரின் பிரதமரும் உதவிப் பிரதமரும் அறிக்கைகள் விடுத்து, காங்கிரஸ் அபேட்சகரைத் தேர்ந்தெடுக்கச்சொல்லி, மக்களைத் தூண்டினார்கள் என்றால் அது எந்த ஜனநாயகமாகும்? அப்படியிருந்தும் அந்த அபேட்சகர் படுதேல்வி அடைந்தது எதைக் காட்டுகிறது?

இந்தியாவிற்கு வழி காட்டுவதற்கென்றே அவதரித்தவர்களாம் நேருவும் பட்டேலும். இது ரெட்டியின் புகழுரை. இந்தப் புகழுரையைத் தரும்ரெட்டி, அன்றையப் பேச்சிலேயே, நம் நாட்டிலோ பிரதமர் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பாகவே இருக்கிறார் என்பதாக, பிரதமரின் வழிகாட்ட முடியாத நிலைமையையும் விளக்குகிறார். மேலும் சில மாகாணங்களில் மந்திரிசபை மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு, காங்கிரஸ் கட்சியே விசாரணை செய்வது என்கிற காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை எடுத்துக்காட்டி, இப்பேர்ப்பட்ட விசாரணை நாடகம் எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை; பகிரங்கமாக வல்லவா ஒரு நீதிபதியின் முன்னால் வழக்கை நடத்த வேண்டும் என்றும் அவரே அந்த வழிகாட்டிகளின் முடிவையும் கண்டிக்கிறார்.

இந்தக் கண்டனங்களுக்குப் பிறகே, அந்த அவதார புருஷர்களின் துதியைப் பாடுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? பாராட்டுரையோடு தோழர் ரெட்டி நிற்கவில்லை, பலமான மத்திய சர்க்கார் வேண்டும் என்கிற சரணத்தோடு முடித்திருக்கிறார் அவர். மாகாண சுயாட்சியின் ஆணிவேரை யெல்லாம் பறித்துவிட்ட ஏகாதிபத்தியம் மத்திய சர்க்கார் வேண்டும் என்கிற சரணத்தோடு முடித்திருக்கிறார் அவர். மாகாண சுயாட்சியின் ஆணிவேரை யெல்லாம் பறித்துவிட்ட ஏகாதிபத்திய மத்திய சர்க்கார் அமைப்பை அவர் மிக மிக அத்யாவசியம் என்கிறார்.

தோழர் ரெட்டி அவர்களின் இரண்டு நாள் பேச்சுகளையும் சேர்த்துப் பார்க்கும் எவருக்கும், அவர்மீது இரக்கம் உண்டாகாமல் இருக்க முடியாது. மாகாண சர்க்காரில் ஜனநாயகமே இல்லை என்பதை வருணிக்கும் அவர், அதற்குக் காரணமான மத்திய சர்க்காரை ஜனநாயகத்தின் அவதாரம் என்பதாகக் கூறுகிறார்.

அதே நேரத்தில் மத்திய சர்க்காரின் ? தலைமைப் பீடத்தின் நடத்தைகளையும் கண்டிக்க ஆசைப்படுகிறார். இது ஏன்? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தோழர் ரெட்டி அவர்கள் ஆந்திரா, மைசூர் என்கிற எல்லைகளை விட்டு விட்டு நீண்டதூரப் பிரயாணங்களை மேற்கொள்வார் என்பதாக ஏதேனும் செய்தி வருமாயின் அது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிஞர்கள் என்கிற பட்டியலில் இடம் பெற்ற சந்தர்ப்ப சூரர்களின் நடத்தைகளுக்கு இது ஒன்றும் மாறுபாடானது என்றும் சொல்ல முடியாது. பாவம்! எப்படியோ பிழைக்கட்டும்.

குடி அரசு 10.09.1949

 

You may also like...