30. வெங்கட்டராமனிஸம்
16 மாதங்களுக்கு முன்னால், கொலை வெறியர்கள் கூடிய மதவெறி ஸ்தாபனமான ராஷ்டீரியசுயம் சேவக்சங்கத்திற்கு, இந்திய யூனியன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சட்ட விரோதமான ஸ்தாபனம் என்கிற மரணப்படு குழியைத் தோண்டினோம் என்று கூறியது. ஆனால் மதவெறி கொல்லப்படவில்லை. கொல்லப்படாத மதவெறிக்குத்தான் புதைகுழி அந்தப் புதைகுழியும், மதவெறி என்பதினுடைய உடம்பில் எந்த முக்கிய பாகத்தையும் பாதித்து விடக்கூடாது என்கிற கவலையோடும் அக்கரையோடும் தோண்டப் பட்டது. என்றுதான் சொல்லப்பட்டது.
அதாவது இந்துமகா சபையின் ஒரு உட்பிரிவான சேவாசங்கத்திற்குத்தான் சட்டவிரோத ஸ்தாபனம் என்கிற பெயரேதவிர சேவாசங்கத்திற்குத் தாயும் தந்தையுமாயிருக்கிற இந்துமகா சபைக்கு அப்படி ஒரு பெயரில்லை என்று சொல்லியது.
இப்படி நோகாமல் அடிக்கிறேன், ஒயாமல் அழு என்பது போல தடை விதிக்கப்பட்டிருந்தும், இந்தத் தடைபோடப்பட்ட காலத்திலிருந்தே, இந்தத் தடையைத் தவிடுபொடியாக்கவேண்டும் என்று தீர்மானித்துச் சுமார் 15 மாத காலமாகவே, அதற்கு வேலை செய்துவருகிறது ஆரியம், ஒரு பரப்பிர்மத்தின் ரூபத்தில்.
ஆரியத்தின் மாபெரும் கோட்டை என்று பார்ப்பனர்கள் நினைத்துக்கொண்டிருப்பது இந்து மதம். இந்த இந்துமத்துக்கு, அது இந்த நாட்டில் புகுத்தப்பட்ட காலத்திலிருந்து, அடிக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு எதிர்ப்பையும், எப்படி நயவஞ்சகத்தாலும், தந்திரத்தாலும், தளுக்கு வேலைகளாலும் எப்பேர்ப்பட்ட கொலை பாதகங்களைச் செய்து, பிரித்து வைக்கும் முறைகளை மேற்கொண்டு, எதிர்ப்புகளைச் சர்வ நாசப்படுத்தி வந்திருக்கிறது என்பதைச் சரித்திரம் சொல்லும்.
அப்பேர்ப்பட்ட ஆரியம், இந்த விஞ்ஞான காலத்தில், காலத்திற் கேற்றவாறு தன் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ய ? ஆதிக்கத்தின் அழிவுச் சக்தியை யொடுக்க, தேகபலமிக்க கொலை வெறியர்களை வளர்க்க வேண்டும்.
அதுவும் தன்னினத்தவர்களுக்குள்ளாக, என்று திட்டம் போட்டுச் செய்த வேலைதான் இந்து மகாசபையும், அது பெற்றெடுத்த சேவா சங்கமும். இந்த உண்மையை மனித நெஞ்சம் படைத்த எவருமே நன்றாக உணர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், காந்தியார் கொலையின் காரணமாக பார்ப்பனீய வெறிக்குப் பெயரளவில் சட்ட பூர்வமாக வந்துவிட்ட தடையை எப்படிப் போக்குவது என்று எண்ணி எண்ணி, 15 மாதக்கடும் உழைப்புக்குப் பிறகு, தோழர் டி.ஆர்.வெங்கட்டராம சாஸ்திரியார், கொலைகாரக் கும்பலுக்குப் புத்துயிர் என்பதாகச் சில திட்டங்களைக்கூறி, தடையை விலக்கிவிட வேண்டுமென்று பட்டேல் பெருமானை வேண்டியிருக் கிறார். அவர் கூறியிருக்கும் மாற்றுத் திட்டத்தின் சாரம்சமாவது;
புத்துயிர் கொடுக்கப்படும் சேவாசங்கத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட இந்து ஆண்கள் எல்லாம் அங்கத்தினராகலாமாம். ஆனால் அங்கத்தினர்களுக்குள் 2 வகையுண்டு. ஒரு வகையினர் சாதாரண அங்கத்தினர்; மற்றொரு வகையினர் தீவிர அங்கத்தினர். இதற்குக் கொடி, இந்துக்கலாச் சாரத்தின் புராதனச் சின்னமான பக்வாதுவஜமாம்.
இச்சங்கத்தின் லட்சியம், இந்து மதத்திற்குள் உள்ள வெவ்வேறு போக்குகள் கொண்ட பல பிரிவுகளையும் ஒன்றுபடுத்தி, (?) இந்து சமுதாயத்தை, அதன் தார்மீக சமஸ்கிருதக் கலாசார அடிப்படையில், அதற்குப் புத்துயிர் அளித்து மீண்டும் தீவிரமானதாகச் செய்வதாம்.
சங்கத்தின் வேலைத் திட்டங்கள்,
- ஒவ்வொரு நாளும் சௌகர்யமான நேரத்தில் பயிற்சி களுக்கும் விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்வதின் மூலம் உடற் பயிற்சி அளிப்பது
- அறிவை வளர்க்கப் பயிற்சி
- இந்து தர்மம் கலாச்சாரம் ஆகியவற்றில் பற்று ஏற்படச் செய்யப் பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தல்.
- கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்தல்.
- மேற்கூறிய வேலைத் திட்டங்களுக்காக வேலை செய்ய எங்கும் இதன் ஸ்தாபனங்களை ஏற்படுத்துதல் என்பனவாம்.
இந்திய யூனியன் முழுவதிலும் பரப்பப்பட வேண்டிய இந்த சங்கத்திற்கு மத்திய நிர்வாகக் கமிட்டி என்பது ஒன்றுண்டு; அதற்குப் பெயர் கேந்திரிய கார்ய கரிமண்டல் என்பதாம். சங்கத்தின் கொள்கைகளை ? வேலைத் திட்டங்களை வகுக்கும் ஒரு கும்பலுக்கு அகில பாரதீய பிரதிநிதி சபை என்று பெயராம். இந்த ஸ்தாபனத்தின் தலைவருக்குப் பெயர் ஸார் சங்சலாக் என்பதாம்.
கிளை ஸ்தாபனத் தலைவர்களுக்குப் பெயர் சங்சலாக் என்பதாம். இந்த வெங்கட்டராமனிஸம், காமகோடி பீடத்திலிருந்து போப்பாண்டவர் வரையுள்ள மதஸ்தாபனங்களை மனதிலெண்ணி வகுப்பட்டதாயிருந்தாலும் சரி; இன்றைய அதிகார பீடத்திலுள்ளவர்களின் அங்கீhரத்தைப் பெற்று அதன் பிறகு இது வெளிப்படுத்தப் பட்டதாயிருந்தாலும் சரி, அல்லது அதிகாரப் பீடம் நாளைக்கு இதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் சரி, நம் மக்கள் இதன் உண்மை சொரூபத்தைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்று ஆசைப்படுகிறோம்.
பார்ப்பனர்களும் தமிழர்களே என்று வாய்கூசாது, மனம்கூசாது கூறும் நம் திராவிடக் தோழர்கள் இந்தத் திட்டத்தைச் சற்று எண்ணிப் பார்க்கட்டும். பார்ப்பனீயம், வர்ணாச்சிரம தருமப்படி (தார்மீக சமஸ்கிருதக் கலாச் சாரப்படி) மனு அதர்ம ஆட்சியை இந்நாட்டில் நிலை நாட்டிவிட ஒரு பலமான முயற்சியைச் செய்கிறது என்பதை இது விளக்க வில்லையா?
இந்து மதக் காட்டுமிராண்டித் தன்மையை, பல இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது நிலை நாட்டவேண்டும் மென்பதை இது விளக்கவில்லையா? இந்துக்களிலும் ஆடவர்கள் மட்டுமே ஏன் அங்கத்தினராகவேண்டும்? இமாலயத்திலுள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், இங்குள்ள கன்யாகுமரிப் பார்ப்பானுக்கு விஷம் ஏறும் என்கிற நியாயத்தை இது விளக்கவில்லையா?
பார்ப்பனர்கள் வட இந்தியத் தொடர்பிலிருந்து என்றைக்குமே விலகமாட்டார்கள் என்பதையும், திராவிடர்களோடு சேர்ந்து வாழமனம் ஒப்பார்கள் என்பதையும் இது விளக்கவில்லையா? மூளைப் பலத்தைமட்டும் நம்பாமல், உடற்பலத்தையும் ஆயுதபலத்தையும் நம்பவேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் பார்ப்பனர்கள் என்பதை இது விளக்கவில்லையா? எல்லாவாற்றுக்கும் மேலாக, 10, 20-வருஷங்களுக்குப் பின்னால் பிறக்கவேண்டிய கோட்ஸேக்கள் இப்பொழுதே பிறந்துவிட்டார்கள்; அது சரியில்லை.
முதலில் அதற்கான அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதை இது விளக்கவில்லையா? இன்னும் யோசியுங்கள்! இந்த வெங்கட்டராமனிஸத்தில் இன்னும் பல புதிர்கள் ? ஆனால் உண்மைகள் ? மறைந்திருப்பதை நீங்கள் காணமுடியும். இப்பேர்ப்பட்ட வெங்கட்டராமர்கள் கூட்டுறவு மக்களால் விரும்பப்படக்கூடியதா?
குடி அரசு, தலையங்கம் 28.05.1949