50. கட்டாயக் கல்வியும் – ஆச்சாரியாரும்

மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றுவிடக்கூடாது என்பதில் ஆரிய முன்னோர்களைப் போல, உலகிலே வேறுஎவருமே நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. பார்ப்பனீயம் வகுத்த சமுதாய அமைப்பில் ? நாற்சாதி முறையில், என்றைக்கும் மேற்சாதியாகவே இருந்து வரும் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டத்தினரின் நன்மையையும் ? வாழ்வையும் ஒட்டியே வருணாச்சிரமம் வகுக்கப்பட்டது. நாம் சொல்ல வேண்டியதில்லை என்ன காரணத்திற்காக வருணாசிரமம் என்பதை அந்த ஆரிய முன்னோர்களே விளக்கிச் சென்றிருக்கிறார்கள்.

இந்த வருணாச்சிரம அமைப்பைக் காப்பாற்றினால்தான், மேற்சாதியினரான சிறு கும்பலுக்கு, சுகபோக வாழ்வு நிரந்தரமாக இருந்துவரும் என்பதை அறிந்த அவர்கள், வருணாச் சிரமத்தை விட்டு விலகிவிடத் தூண்டும் கல்வியறிவை, முக்கியமாகத் தாழ்ந்த சாதியினர் பெற்றுவிடக்கூடாது என்கிற போக்கை, மிரட்டியும், பயப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் கைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் சொல்லவேண்டியதில்லை. அவர்களுடைய மனுதர்மங்களே அதற்குச் சாட்சி.

இந்த நெடுங்கால அமைப்பு முறைக்கு ஒரு அளவு ஆட்டங் கொடுக்கவைத்தது வெள்ளையரின் நுழைவு அதாவது வருணாச்சிரம வழியைவிட்டு, அவனவன் அறிவுக்கும் ஆசைக்கும் தகுந்தபடி, எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்கிறதான ஒரு துணிச் சலை பார்ப்பனர்களால் பிரித்துவைக்கப்பட்டு அழுத்திவரப் பட்டவர்களுக்குள் ஒரு சிலரிடமாவது உண்டு பண்ணிவிட்டது வெள்ளைக்காரன் பங்காளியாயிருந்து நடத்திய ஆட்சி, இந்த ஆட்டத்தைத் தவிர்ப்பதற்காக.

அக்காலப் பார்ப்பனர்கள் கல்வித்துறையில் மற்றவர்கள் முன்னேறிவிடக்கூடாது என்கிற திட்டத்தோடு எவ்வளவு பெருந் தொந்தரவுகளைக் கொடுத்துத் தடுத்துவந்தார்கள் என்பதையும், தப்பித் தவறி இரண்டொருவர் முன்னேறினாலும் அவர்களை எப்படியெல்லாம் அழுத்திவந்தார்கள் என்பதையும் நாம் சொல்ல வேண்டியதில்லை, கல்வித்துறையில் அரசாங்கத்திலுள்ள பழைய ஆதாரங்களே கூறும்.

காலப்போக்கில் நால்வருணம் என்பது, பார்ப்பனர் ? அல்லாதார் என்று சொல்லப்படக்கூடிய இரண்டு பிரிவாகவே பார்ப்பனர்களால் கையாளப்பட்டுவந்த, ஒடுக்கப்பட்டுவந்த பார்ப்பனரல்லாதார் ஒரு இயக்கத்தையே தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இயக்கம் வளர்ச்சிபெற்ற, நடுநிலை மையிலுள்ள சில வெள்ளையர்களை நியாயம் என்று உணரவைத்த நிலையிலே, அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் முன்னேற்றத்திற்குத் தனிவேலிபோடப் படவேண்டியதுதான் என்கிற நிலைமை ஏற்பட்டது எப்போதோ, அப்போதிருந்தே பார்ப்பனர்கள் மிக மிகக் கடுமையாக, ஆனால் மறைவாக, இந்த வேலியைப்பிடுங்கி எறியும் நாசவேலையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதை எடுத்துக் காட்டியதால்தான் பார்ப்பனத் துவேஷிகள் என்று பட்டம் பெற்றோம்.

வெள்ளைக்காரர்களில் ஒருசிலரை, இங்குள்ள மக்களின் வேதனையை உணரவைத்தோ மென்றாலும், பார்ப்பனர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்ட வெள்ளை ஏகாதிபத்தியம் நாட்டு மக்கள் எல்லோருமே பெற்றிருக்க வேண்டிய கல்வியறிவைப்பற்றிக் கொஞ்சம் கவலைப் படவில்லை. இதற்குக்காரணம் கூட்டு ஒப்பந்தக்காரர்கள் இருவரும் என்று  நாம் குறிப்பிட்டோம். இந்த நாட்டு நலனில் அக்கரையே இல்லாத வெள்ளையன் வெளியேறிவிட்டால் இந்தநிலை இருக்கமாட்டாது என்றனர் நம் காங்கரஸ் தோழர்கள்.

வெள்ளையன் வெளியேறிவிட்டால், 100-க்கு 12பேர்தான் படித்தவர்கள் என்கிற நடப்பு எப்படி இந்த நாட்டில் இருந்துவிடும் என்று கேட்ட நம் காங்கிரஸ் தோழர்கள், வெள்ளையன் வெளியேறி விட்டான் என்று அவர்களாலேயே சொல்லப் பட்டுவிட்ட இந்த இரண்டு ஆண்டுகளில், எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன? இதை உண்ணும் உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் கேட்கவில்லை, கேட்க வகையும் தெரியாதவர்கள் வெள்ளையன் வெளியேறிவிட்டால், அறிவுப்பஞ்சம் என்பதே அகன்றுவிடும் என்பதாக அன்றுபேசினோமே;

அதைப்பற்றி உடனடியாக ஒன்றும் செய்வதற்கு நாம் வக்கற்றவர்கள் என்றாலும், மக்கள் முன் அப்படிக் காட்டிக்கொண்டு விடலாமா? ஆகவே அந்தப் பிரச்சனையைப்பற்றி ஏதாவது பேசிக் கொண்டாவது இருப்போம் என்று நினைத்து காங்கிரஸ் தோழர்களுக்குள்ளாகவே கட்டாயக்கல்வி பற்றி இப்போது பேசப்படுகிறது.

இன்னுமொரு 100, 200 வருஷங்கள் கழிந்தாலும், கட்டாயமாக அனைவரும் படித்தே ஆகவேண்டும் என்கிற நிலைமை எப்படியும், யாராலாவது, உண்டாக்கப்பட்டேவிடும் என்பதை உலகப் போக்கை யறிந்த நம் அருமைப் பார்ப்பனத் தோழர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த நிலைமை ஏற்படுவதற்கு, ? ஏற்படும் என்று எண்ணுவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் பொறுக்கும்? கட்டாயமாக அனைவரும் படித்துவிட்டால், சுய சிந்தனையற்ற ? அறியாமைக்குட்டையில் உழலும் ? தன்மானமற்றவர்களை நாட்டில் எப்படிக் காணமுடியும்? பார்ப்பனீயத்துக்குத் துதிபாடு பவர்கள் மறைந்து, பார்ப்பனீயமே பஞ்சாய்ப் பறந்து விடுமே? புரோகித வர்க்கத்தைப்புல் முளைக்கச் செய்யும், கட்டாயக் கல்வியைக் கனபாடிகள் எப்படி வரவேற்பார்கள்? என்றெல்லாம் எவருமே எண்ணத்தகுந்த வகையில்தான் இந்த மாதம் 8ம் தேதி பம்பாயில் பேசிய இந்துஸ்தான் கவர்னர் ? ஜெனரல் ஆச்சாரியாரவர்கள் பேசி இருக்கிறார்.

கட்டாயக் கல்வி என்கிற பேச்சையும், அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சிறு முயற்சிகளையும் தோழர் ஆச்சாரியார் அவர்களைப் போல உண்மையில் வெறுப்பவர்கள் யாருமே இல்லை என்பதுதான் நம் கருத்து. முன்பு அவர் சென்னைப் பிரதமராய் வீற்றிருந்த நேரத்தில், கட்டாயக் கல்வியைப் பரப்ப, அவர் கூறிய வினோதமான திட்டத்தை நாம் மறந்துவிட வில்லை. வாத்தியார் இல்லாமல் பள்ளிக்கூடம் இல்லாமல் எல்லோருக்குமே கல்வி, என்ற அவரின் அட்டைமாட்டும் கல்வித்திட்டத்தை யார்தான் மறந்து விடமுடியும்?

இப்படிப்பட்ட ஆச்சாரியார்தான் இன்று கவர்னர் ஜெனரலாய் இருக்கும் நேரத்தில் கட்டாயக் கல்வியைப்பற்றி பேசி இருக்கிறார்.  குழந்தைகளை அவர்களுடைய குடும்பக் கலைப் பயிற்சியி லிருந்து முற்றிலும் தனியாகப் பிரித்துக் கட்டாயமாகக் கல்வியைப் புகட்ட நிர்ப்பந்திக்கக் கூடாதாம். பெற்றோர்கள் செய்துவரும் தொழிலை மேற்கொள்ளத்தக்க விதமாக வாரத்தில் 3- நாள் மட்டும் படிப்புச் சொல்லிக் கொடுக்கவேண்டுமாம்.

இந்த நாட்டில் அதிர்ஷ்டவசமாக பண்டைத் தொழில்முறை (அதாவது குலத்தொழில்) பாதுகாக்கப்பட்டு வருவதனால்தான், இன்றைய அமைதியாவது காணப்படுகிறதாம். இந்த அமைப்பு மாறவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பைத்தியக் காரர்கள்தானாம்.

ஆச்சாரியாரவர்கள் வருணாச்சிரம தருமத்தைத்தான், குடும்பக்கலைப் பயிற்சி என்று கூறுகிறார். வெளுப்பவன் என்றைக்குமே பரம்பரையாக வெளுத்துவரவேண்டும். சிரைப்பன் பரம்பரையும் அப்படியே. தெருக் கூட்டுபவன், மாடு மேய்ப்பவன், கக்கூஸ் எடுப்பவன் பரம்பரையும் அப்படியே செய்துவரவேண்டும். இதுதான் அவர்களின் குடும்பக் கலைப் பயிற்சி! ஆரிய முன்னோர்கள் எழுதிவைத்த வருணாச்சிரமதர்மம்!

வாரத்தில் 3-நாள் சொல்லிக்கொடுக்கும் படிப்பு, எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதை அவர் அறியாதவரல்ல ஏதோ கட்டாயமாகப் படிப்புச் சொல்லிக் கொடுத்ததாகவுமிருக்க வேண்டும், அதே நேரத்தில் பலனைப் பார்த்தால் கல்லாதவர்களாகவும் ஆகியிருக்க வேண்டும். படிப்பிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கும்படியாய் செய்துவிட்டால், அப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட யார்தான், பிறகு அவரவர்கள் குலத்தொழிலை – இழிவு என்று மற்றவர்களால் கருதப்படுகிற தொழிலை – உடலை வருத்தி உழைத்தாக வேண்டிய தொழிலை செய்ய முன்வருவார்கள் என்கிற கவலையை தவிர இந்தத் திட்டத்தில் வேறு என்ன நியாயமிருக்கிறது என்று சொல்லமுடியும்?

அதிர்ஷ்டவசமாக பண்டைத்தொழில் முறை பாதுகாக்கப் படுகிறது, அதனால்தான் அமைதியைக் காண்கிறோம் என்கிறார் ஆச்சாரியார். இதனுடைய கருத்தென்ன? வெள்ளையர்களின் கூட்டுறவால், விஞ்ஞானக் கருத்துகள் கொள்ளை கொள்ளையாய்க் குடிபுகுந்தாலும், அவை யெல்லாவற்றையும் தடுத்து நிறுத்தக்கூடிய மூடப்பழக்க வழக்கங்களில் நம் நாட்டு மக்கள் மூழ்கிக்கிடக்கிறார்கள் மூடப்பழக்க வழக்கங்களுக்குக் காரணமான, மத?சாஸ்திர ? புராண கருத்துக்கள், பகுத்தறிவைத் தூண்டும் கல்வி என்கிற கருவியைக் கொடுத்து விட்டால் என்ன பாடுபடும்? ஒவ்வொரு உழைப்பாளியும், உழைப்பின் உயர்வையும், உழைப்பு வஞ்சிக்கப்படும் கொடுமையையும், தானாகவே உணர்ந்துவிட்டானனால், இந்த நாட்டில் உல்லாச வாழ்வினர்க்கு அமைதியிருக்க முடியும்? என்கிற கருத்தே தவிரவேறென்ன?

இந்த அமைப்பு (வருணாச்சிரமம்) மாறவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் பைத்தியக் காரர்கள். இது ஆச்சாரியாரின் முடிவு. ஆனால் வருணாச்சிரமக் கொடுமையால் வாழ்விழந்து, நடைப்பிணமாய் வாழும் மக்கள் இதை ஒப்புக் கொள்வார்களா? வருணாச்சிரமம் இருந்துவருவதால், வரிசை வரிசையாய், உல்லாசபுரியில் உலவுகிறவர்கள் வேண்டுமானால் இதை ஒப்புக்கொள்ள முடியுமே தவிர, வேறு யார் இந்த முடிவை ஒப்புக்கொள்ளமுடியும்?

ஆச்சாரியாரவர்களின் இந்தத் திட்டம் அநுபவம் சாத்தியமற்றது என்பதை, பொதுவாக எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும், ஆச்சாரியார் அவர்களின் அந்தரங்கம் எப்படி இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இன்று இதை எடுத்துக்காட்டினோம்.

இந்த உருப்படாத ? வக்கிரமான பிரச்சாரத்திற்கு அவர் காரணமும் கூறுகிறார். பெற்றோர்களின் பொருளாதாரக் கஷ்டமும் குறையும், சிறுவர்களின் இளம் மூளையில் குறிகளையும் வார்த்தை களையும் திணித்து சுமை ஏற்றுவதும் குறையும் இது அவர் கூறும் இரண்டு காரணம்.

வாரத்தில் 4 நாள் பெற்றோர்களுக்கு உதவியாய் உழைப்பதால் ஏழைகளின் பொருள் கஷ்டம் ஓரளவு குறையலாம். ஆனால் அந்த 3-நாள் கூட பள்ளிக்குச் செல்லாமல், எல்லா நாளுமே பெற்றோர்கள் இடும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தால் ? இப்போது செய்து கொண்டிருப்பதைப் போல ? பெற்றோர்களுக்கு இதைக் காட்டிலுமல்லவா பொருள் கஷ்டம் குறையும்? இது ஏனோ ஆச்சாரியார் அவர்களுக்கு விளங்கவில்லை!

குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்தருவது ? ஒரு மொழியைச் சொல்லிக்கொடுப்பதே ? பாவம் குழந்தைகளின் மூளையில், குறிகளையும் வார்த்தைகளையும் திணித்துச் சுமை ஏற்றுவதாகும் என்று சொல்லுகிற ஆச்சாரியார், குழந்தைகளுடைய மூளையில் 3-மொழிகளுக்கான வெவ்வேறு குறிகளையும் வெவ்வேறு வார்த்தைகளையும் திணிப்பது நியாயம் என்று மற்றொரு பக்கத்தில் திணித்த கொடுமையையும், இன்றும் அதற்கு ஆதரவாய் இருந்து வரும் அநீதியையும் பார்க்கிறோம்.

ஆகவே ஆச்சாரியார் கூறும் இந்த 2-காரணங்களும் எப்படிப்பட்ட ஏமாற்றம் நிறைந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை. இதிலிருந்து ஆச்சாரியாரவர்கள் எவ்வளவுதான் பொதுநலத் தியாகியாய் – உண்மை உழைப்பாளியாய் விளங்கினாலும்கூட, வருணாச்சிரம அமைப்பில் அவருக்குள்ள ஆசை எவ்வளவு என்பது தெரிகிறதா இல்லையா? என்று கேட்கிறோம்.

குடி அரசு 13.08.1949

ஜோசியத்தில் சித்திரபுத்திரன்

யாரால்?

ஆழ்வார்கள், அவதாரபுருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால்; அயோக்கியர்கள், பொய்யர்கள் திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள் ஊரார் உழைப்பில் வயிறுவளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள். யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

You may also like...