34 தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்

தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும், இதை தாழ்த்தப்பட்டோர், விடுதலை, அரசியல், உரிமை என நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கைப்பற்றித்தான் தனித்தனியாக விளக்க வேண்டியவனாக உள்ளேன். இவைகளை முறையே தனித் தனியாக விளக்கிய பிறகே, இவ்விஷயத்தைப் பற்றிப்பேச ஒருவாறு இயலும். முதலில் தாழ்த்தப்பட்டார் என்பவர் யார்? அவர்களுடைய நிலை என்ன? என்பதை எடுத்துக் கொள்வோம்.

தாழ்த்தப்பட்டார் யார்?

தாழ்த்தப்பட்டார் என்பது ஆதித்திராவிடர்கள் என்று சிலர் கருதுகின்றனர். சிலர் பஞ்சமர்கள் என்றும், புலையர்கள் என்றும் இன்னும் இவ்விதமாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தாழ்த்தப்பட்டார் யார்? என்றால், தங்களுக்கு மேல் உயர்ந்தவர்களில்லை என்று கருதுகிற ஒருசாரார் தவிர, ஒருவருக்கு மேல் ஒருவர் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவரேயாகும். என்பது எமது அபிப்பிராயம். சிலர் ஒரு சாராருக்குத் தாழ்த்தப் பட்டவராகவும், சிலர் இரண்டு பேருக்குத் தாழ்த்தப்பட்டாராகவும், சிலர் மூன்று, நான்கு, அய்ந்து முதலிய பேருக்குத் தாழ்த்தப்பட்டவராகவும் இருக்கின்றனர். பார்க்கின் இவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டாரேயாகும். இந்தியாவிலுள்ள 33-கோடி மக்களில் 100க்கு 2 அல்லது மூன்றுபேர் தவிர மற்ற யாவரும் தாழ்த்தப்பட்டோரே. தனக்குக் கீழ் ஒருவன் இருக்கின்றான் என்பதும், தனக்கு மேல் ஒருவன் இருக்கின்றானென்பதுமேதான் தாழ்த்தப்பட்டார் என்பதற்கு ஆதாரமாகும். உலகெங்கும் ஆராய்ச்சி, அறிவு நிறைந்திருக்கின்ற இந்நிலையில், நமது நாட்டில் மாத்திரம் பிறவியில் தாழ்த்தப்பட்டார் இருக்கின்றன ரென்றால் என்சொல்வது? இதற்கு இத்தாழ்த்தப்பட்டார் என்று சொல்லிக் கொள்ளுமிவர்களுக்கு உணர்ச்சியும் சுயமரியாதையும் இல்லாமலிருப்பதுதான் காரணம்?

எத்தகைய செல்வவந்தர்களாயும் அதிகாரம் பெற்றவர்களாயுமிருப்பினும் முடிவில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தானே. எத்தனையோ திராவிடர்களுக்கு செல்வமிருக்கிறது, கல்வி இருக்கிறது, அதிகாரமிருக்கிறது, அறிவு இருக்கிறது. என்ன இருந்தும் அவர்கள் சூத்திரன் என்கின்ற முறையில் மற்றவர்களுக்கு தாழ்த்தப் பட்டவர்கள்தானே ஏன்? இவர்களுக்குச் செல்வமில்லையா? அறிவில்லை யா? அதிகாரமில்லையா? ஜட்ஜுக்களாய், மந்திரிகளாய் இல்லையா? யாவுமிருந்தும் இவர்கள் ஏன் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருத்தல் வேண்டும்? இதைத்தான் நாம் அறிந்து கொள்ள முற்படவேண்டும். நமது தேசத்தில் தாழ்த்தப் பட்டாரிருப்பதற்குக் காரணங்களெவை? எந்தக் கோட்டையால் இந்த எண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது? இந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாய்ரிஷிகள், மகாத்மாக்கள், தீர்க்கதரிசிகள், அவதார புருடர்கள் பலர் எண்ணிறந்தவர் தோன்றிவந்திருக்கின்றனரே இவர்கள் உலகிற்கோ, சமூகத்திற்கோ செய்ததென்ன? ஏனிவர்களால் இதுவரை இதைப்போக்க முடியவில்லை.

ஆகவே ஒருவன் தாழ்த்தப்பட்டவனாய் இருப்பதற்குக் காரணத்தை அறியவேண்டுமானால் அவன் சுயமரியாதை வீரனாக இருக்கவேண்டும். பின்னர் அதைப் போக்க சூரனாக விளங்க வேண்டும். அதுதான் உண்மையான சுயமரியாதையாகும். அப்படிக்கு இல்லாமல் இப்பொழுது தென்ன செய்வது? அதில் பிறந்தாய்விட்டதே அடுத்த ஜென்மத்திற் பார்த்துக்கொள்வோம் என்று கூறினால் அதுதான் முட்டாள்தனம் என்கின்றோம்.

மற்றும் பகவான் அவனை அப்படிப் படைத்துவிட்டான் என்று கூறுவதை மேலும் மேலும் முட்டாள் தனம் என்பதோடு, அவ்வித உணர்ச்சிதோன்றுவதே கோழைத்தனத்தின் பயன் என்று சொல்லுவேன். இல்லையென்றால் இதுவெறும் பித்தலாட்டத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பேன். இந்து சமூகம் எவ்வளவு பரப்புடையது? எவ்வளவு அளவுடையது? இத்தகைய ஒருபெரும் சமூகம் வெறும் தேசபக்தி என்று சொல்லிக்கொண்டு மனிதனுடன் மனிதன் பேசப்படாது, பார்க்கப்படாது என்பதற்கு ஆதாரமான மதம், கடவுள் என்பதைப்பற்றிப் பேசக்கூடாது என்றால் எப்பொழுது இக் கஷ்டம் ஒழியும்.

விடுதலை என்றால் என்ன?

இனி நாம் விடுதலை என்ற விஷயத்தைப்பற்றி எடுத்துக் கொள்வோம். விடுதலை என்றால் என்ன? அது எவ்வகையில் மக்களுக்கு அனுகூலப்படும் என்பது இங்கு கவனிக்கவேண்டியதாகும். வயிற்றுக்காக வாழ்வது விடுதலையா? உத்தியோகம் பெறுவது விடுதலையா? மனிதன் சமூகப் பொருளாதார வாழ்வில் மற்றவனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்ற எண்ணம் உதித்து, அது கைகூடிவிட்டால் அதுவேதான் விடுதலையாகும். விடுதலை என்பதற்கு இதுவே தகுந்த பொருளாகும். உங்களுக்கு மேல் ? உயர்ந்த ஜாதியார், செல்வந்தன் ? அதிகாரி ஆகிய இவர்களிருந்தால் அது ஒருநாளும் விடுதலை என்பதாகாது.

அரசியல் உரிமைகள்

இன்றைய தினம் அரசியல் உரிமைகள் என்ற விஷயத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் மந்திரி முதலிய பதவிகள் பெறுவதும், சம்பளம் பெறுவதும் அரசியல் உரிமை என்று கருதப்படுகிறது. எப்படியாயினும் பதவிகள் அடைந்தோம் என்ற உணர்ச்சி அரசியலாய் இப்போது இருந்து வருகிறது. இது அரசியலாகாது. மக்களுக்குள் எவ்வகையிலும் பேதம் இருக்கக் கூடாத மாதிரி சட்டம் செய்து அமுல் நடத்த முடியும் படியான அரசியலே உண்மை அரசியலாகும். அப்படிப்பட்ட அரசியல் இருக்க வேண்டியதவசியம் என்பதைப்பற்றி எனக்கு ஆட்சேபமெதுவுமில்லை.

சைமன் கமிஷன்வந்த பொழுதுகூட தேசபக்தர்கள் அதை வேண்டா மென்றும் திரும்பிப்போ என்றும் கத்துகின்ற சமயத்தில், நான் ஒருவனேதான் முதல் முதலில் வேண்டும், வேண்டுமென்று கத்தினேன், அவர்களை வரவேற்க வேண்டு மென்றவர்கள் நமது கட்சியேயாகும். ஏனென்றால் அதுசமயம் சிலர்சென்று தாழ்த்தப்பட்டோருடைய நிலைமையை அவர்களுக்கு ? உலகத்திற்குத் தெரியப்படுத்தவே, அந்தப்படியே பலர் சென்று தெரிவித்தனர். அச்சமயம்தான் உங்களுடைய குறைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கும், உலகத்திற்கும் ஏற்பட்டது. உலக அபவாதத்திற்குப் பயந்தே இன்றைய சர்க்காரார் உங்களிடம் அன்பு காட்ட நேர்ந்தது. இதற்கு முன்னர் உங்களுடைய பிரதிநிதிகளெனக் கூறிக்கொண்டவர்கள், எல்லாம் மதத்தின் பேரால் கடவுள் பேரால் பழக்க வழக்கத்தின் பேரால் தங்களை மேல் ஜாதியார் என்று சொல்லிக்கொண்டு திரியும் சுயநலப் பிரதிநிதிகளாகவே இருந்து வந்தார்கள்.

இவர்களால் என்ன பயனடைந்தீர்கள்? பல எலிகள் கூடிய ஓர் சமூகத்தின் குறைபாடுகளைத் தீர்க்க, ஒரு பூனையைப் பிரதிநிதியாய் அனுப்பியது போலவே முடிந்து வந்தது. நாம் எவ்வுரிமை களுக்குப் போராடுகின்றோமோ அவைகளை ஏற்கனவே அனுபவித்து ஆதிக்கம் பெற்றுக்கொண்டு வாழும் ஒர் சமூகத்தார் இப்போது அதை இகழ்கின்றனர், வெறுக்கின்றனர். அவர்கள் அனுபவிக்கும் ஸ்தானத்தை மற்றொருவர் விரும்பியபிறகே அந்தஸ்தானம் இகழப்படுகிறது. தேசத்துரோகம் என்றும் கூறப்படுகிறது.

இங்ஙனம் நம்மைத் தேசத்துரோகிகள் என்று கூறுகின்றவர்களைப் பார்த்து நீங்கள் சிலவற்றைக் கேட்கவேண்டும். அதாவது நீங்கள் அனுபவித்து வந்த போகங்களை நாங்கள் சிறிது அனுபவிக்கின்றோம். அதன் மூலம் நாமிருவரும் சமத்துவமான பின்னர் மேற்கண்ட தேசத் துரோகத்தை ஒழிக்க இருவரும் முனைவோம். இப்போது நீங்கள் கூறும் தடைகளை, எதிர்ப்புகளை நாங்கள் ஒப்பமாட்டோம். நாங்கள் நீங்களிருந்த இடத்திற்கு வரும் பொழுது தேசத்தின் பேரால், தேசீயத்தின் பேரால் சுயராஜ்ஜியத்தின் பேரால் எங்களை ஏமாற்றித் தடை செய்யாதீர்கள் என்று கூறுதல் வேண்டும். இதுவரை அரசன் விஷ்ணு அம்சம் என்று சொல்லிச் சொல்லியே இவர்கள் சகல போகங்களையும் அனுபவித்து வந்தார்கள். நீங்கள் இப்பொழுது அவர்களை காப்பி அடிக்கிறீர்கள்.

இதைக் குற்றம் சொல்ல அவர்களுக்கு யோக்கியதையேது? அவர்கள் எந்த நிலைமையில் உங்களை அடக்கி தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்குகிறார்களோ அந்நிலைமைக்கு அவர்களைக் கொண்டுவர முயற்சி செய்வது குற்றமாகாது. ஆனால் நான் அப்படிச் சொல்வதில்லை. மற்றென்ன வென்றால் எதிர் காலத்தில், நாம் இருவரும் அடையப் போகும் அரசியலுரிமையில் எங்களுக்குப் பங்கெப்படி? என்று தான் கேட்கச் சொல்லுகிறேன். இதைச் சொன்னால் தேசத்துரோகி என்று வசை மொழி பாடுகின்றனர் நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப்புல் சுமப்பதுதான் கதி!! என்ற பழமொழிக் கேற்பதான் சுயராஜ்ஜியம். இந்த சுயராஜ்யம் வேண்டாம் அதாவது தோட்டியும், துரையும் இருக்கும் சுயராஜ்ஜியம் நமக்கு வேண்டாம். பல்லக்கு தூக்க ஒருவனும், சுமக்க ஒருவனுமிருக்க வேண்டு மென்பதே இப்பொழுது இவர்களுடைய சுயராஜ்ஜிய நோக்கமாகும். ஆனால் நாம் கோரும் சுயராஜ்ஜியத்தில் சங்கராச்சாரியிருக்க மாட்டார், தோட்டியுமிருக்க மாட்டார்யாரும் மனிதர்களே!

தனித்தொகுதியின் விசேடம்

பல காலம்கஷ்டப்பட்டு நீங்கள் தனித்தொகுதி முறையைப் பெற்றீர்கள். ஆனால் அது பல சூழ்ச்சிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. இது உங்களுக்கு ஏற்பட்ட மிக்க கஷ்டமான காரியமேயாகும். ஒரு கணப்பொழுதில் உங்களுடைய வெகு நாளைய லக்ஷியங்கள் தவிடுபொடி செய்யப்பட்டுவிட்டது. தேசீயத்தின் பேரால் நீங்கள் ஏமாந்து விட்டீர்களென்றே கூறுவேன். மற்றவர்களுடைய மேல்ஜாதி யாருடைய பந்தமிருந்தால் பயன் படாதெனக் கருதியே அவர்கள் நீங்கிய தனித்தொகுதியைக் கேட்டீர்கள். பெற்றீர்கள். இப்போது அது நசுங்கி நாசமாய் விட்டது.

ஆலயப்பிரவேஸம்

இதுமாத்திரமல்லாமல் இப்பொழுது தேவாலயப்பிரவேஸம் என்னும் பேரால் உங்களைப் படுகுழியில் தள்ள ஏற்பாடாகி விட்டது. அதுதான் இந்துமதப் பிரச்சாரம். உங்களை ஹரிஜனங்கள் என்றழைப்பது ஓர் அர்த்தமற்ற ஏமாற்றுவார்த்தை. நீங்கள் எனக்குக் கோவில் வேண்டாம், மதம் வேண்டாம் என்று சொன்னபிறகே கோவிலும் மதத்திலும் சம உரிமை கொடுப்பதாக ஏமாற்று கிறார்கள். இந்த ஏமாற்றத்தில் விழுந்தீர்களானால் இன்னும் வெகு காலத்திற்கு உங்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சம உரிமை இல்லை. தைரியமாய் மதத்தையும் கடவுள் பிரச்சாரத்தையும் உதறித்தள்ளுங்கள். உங்கள் விடுதலையும் சம உரிமையும் பொருளாதாரத்தில்தான் இருக்கின்றது. பொருளாதார சுதந்திரம் பெற வழிதேடுங்கள். அதற்கான அரசியல் உரிமை பெறுங்கள்.

குடி அரசு, தலையங்கம்  11.06.1949

You may also like...