69. மக்கள் ஒட்டகங்களல்ல!

சராசரி வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள், யுத்ததிற்கு முன்னால் 100 புள்ளி என்றால், யுத்தத்தின் பயனாக ஆலோசகர் சர்க்காரில் 300 புள்ளி ஆக உயர்ந்தது. இந்த நிலை இந்துஸ்தான் சுயராஜ்ஜிய சர்க்கார்தரும் விபரம். அதாவது மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு எடுத்த கணக்கு. கருப்புச் சந்தையின் விலை வாசியை வைத்துக் கொண்டால் இன்னும் எத்தனை 100கள் அதிகமாகுமோ?

வந்த சுயராஜ்ஜியத்தால் வாழ வேண்டிய மக்களுக்கு ஒன்றும் வாட்டம் தீர இல்லை யென்றாலும், நாட்டில் நடமாடும் பண்டங்களுக் கெல்லாம் விலையேற்றமா? என்கிற உணர்ச்சி ஊசி மருந்து ஏற்றப்படுவதைப்போல், இந்நாட்டில் சராசரி வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் ஏறும் படியான நிலைமை வளர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையை – உணர்ச்சி குடியேறுவதை, கண்டு சுயராஜ்ஜிய சர்க்கார் ? பிரச்சார விளம்பரங்களின் பலனாகவே காலந்தள்ளிவிட முடியும் என்கிற,  பெரும் நம்பிக்கையுடைய சர்க்கார், கலங்கவே செய்கிறார்கள். ஆனால் ஏற்படுங்கலக்கம், அதிகாரத்திற்கு ஆட்டங்கொடுத்து விடுமே என்கிற அடிப்படையில் தோன்றியதாகத்தான் காணப்படுகிறதே தவிர, நிலைமை நீடிப்பது ? வளர்வது நாட்டிற்கே நல்லதல்லவே என்கிற அடிப்படையில் தோன்றியதாய்க்காணோம்.

சென்ற மாதம் 28ந் தேதி இந்துஸ்தான் சர்க்கார் உடை – உணவு இரண்டிலும் விலையைக் குறைத்து விடப்போகிறோம் என்பதாக அறிவித்திருக்கும் அறிவிப்பு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒருகலக்கத்துக்கு அறிகுறி ஆனால் தோன்றிய கலக்கம், தற்காப்பின் அடிப்படையில் தான் என்பதை அவற்றின் விலை வெட்டு வீதாச்சாரம் மெய்ப்பிக்கிறது.

உடையின் விலைகளை 100க்கு 4 வீதம் குறைத்து விடுவார்களாம்! உணவுப் பொருள்களின் விலைகளை 100க்கு 3 வீதம் குறைத்து விடுவார்களாம்! முந்தியதை ரூபாய்க்கு அரையணாவுக்குச் சற்று அதிகமாகக் குறைத்துவிடப் போகிறார்களாம்.

இப்படி அரையணா, அரையே அரைக்காலணாக் குறைப்புங்கூட, எந்த அளவுக்கு உண்மை யான குறைப்பு என்றால், ஆலை அரசர்களுக்கு லாபத்தில் குறைந்துவிடக் கூடாது, பொதுமக்கள் தலையில் அந்தக் குறைப்பைச் சுமத்தாமலும் இருக்கக்கூடாது என்கிற திட்டத்தை மனதில்வைத்துக் கொண்டுதான் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குறைப்பை எண்ணும் போது, நமக்கு ஒட்டகத்தின் கதைதான் நினைவுக்கு வருகிறது. பாலைவனத்தில் பெரும் பெரும் பளுவான பொருள்களைச் சுமந்து செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், அவற்றின்மீது பளுவான சாமான்கள் ஏற்றப் பட்டிருக்கிறது என்பதை அறிந்தால், ஒரு அடிகூட எடுத்துவைக்கமாட்டாதாம். இதற்காக, ஒட்டகத்தின்மீது எவ்வளவு பொருள்களை ஏற்றவேண்டுமோ அவ்வளவையும் ஏற்றிவைத்தபின் ஒரு சிறு பாறாங்கல்லையும் ஒட்டகத்தினுடைய கழுத்தின் ஓரமாய், கீழே விழுந்தால் ஒட்டகத்தின் கண்ணுக்குத் தெரியும்படி, அந்த ஒட்டகஞ் செலுத்துவோர் வைத்துக் கொள்வார்களாம். ஒட்டகம் புறப்படமறுத்தவுடனே அந்தச் சிறிய பாறாங்கல்லை கீழே தள்ளுவார்களாம்! ஒகோ! நம்மீது ஏற்றிய சுமையைக் குறைத்து விட்டார்கள், நாமினிப் புறப்பட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டு வெகு வேகமாக ஒட்டகம் கிளம்பிச் செல்லுமாம். இந்த ஒட்டகங்களைப் போன்றவர்கள்தான் இந்தநாட்டுப் பொதுமக்கள் பாட்டாளிமக்கள் என்கிற எண்ணம் இல்லாதிருக்குமானால், நிச்சயமாக இந்தக் குறைப்பு என்கிற நாடகத்திற்கே இடமிருக்க முடியாது.

பண்டங்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பு உயர்ந்து காணப்படும் நாளில், அந்த மதிப்பைக் குறைப்பதற்கு, முதலில் உணவுப் பொருளும் உடைவகையும் விலை மதிப்பில் குறையவேண்டும் என்கிற தத்துவத்தை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்தத் தத்துவம் ஒரு ஷோவாகக் காட்டப்படாமல், படிப்படியே குறைந்துகொண்டு வருவதற்கான நிலையில் இருக்கவேண்டாமா என்றுதான் கேட்கிறோம். நூல் நூற்றுக் கொடுப்பவன் என்கிற மில் முதலாளிக்கு இந்தக் குறைப்பின்படி 100க்கு 11/2 ரூபாய் லாபம் இருக்கும். ஆடை ஆக்கும் ஆலை அரசருக்கு 100க்கு 14ரூ லாபம் இருக்கும்.

முதலாளிகளுக்கு இவ்வளவு லாபங் கொடுக்கப்பட்ட நிலையில்தான், ஆடைக்கு 4-சத வீதம் குறைவு என்கிற அறிவிப்பு! உணவுப் பொருளுக்குச் சர்க்காரால் இப்போது விதிக்கப்பட்டு வரும் வரியை ஓரளவுக்குக் குறைப் பதினால்தான் 100க்கு 3 சதவீதம் குறைவு என்கிற அறிவிப்பு! ஆடையை எடுத்துக்கொண்டால் தனிப்பட்ட ஒரு சில நபர்கள் மட்டும் 100க்கு 26 1/2ரூபாய் கொள்ளை யடிப்பதை ஒப்புக்கொண்டே இந்தக் குறைப்பு, அரங்கேற்றத்திற்கு வருகிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

உணவுப் பொருள்களிலோ, இப்போதுள்ள பயனற்ற ரேஷன் செலவையும் – விளைச்சலைத் தேவையான அந்த இடத்திலேயே விநியோகியாமல், வைக்கோல் கட்டைத் தண்ணீரிற் போட்டுச் சுமந்து காட்டுவதுபோல வேறு இடத்திற்குக் கொண்டுபோவதையும் – அங்குள்ள விளைவை மற்றோரிடத்திற்கு மாற்றுவதும் – அநுபவமற்ற நிர்வாகத்தினால் அபரிமிதமான உணவுப்பொருள் ஆண்டுதோறும் நாசமாவதும் நின்றுவிடுமானால், இன்னும் எத்தனையோ அளவு குறைய முடியுமே என்கிற கேள்வியை எவ்வளவு காலத்திற்குத்தான் மறைத்துவிட முடியும் என்று ஒமந்தூராரே கேட்கிறார்.

நிலத்தில் பாடுபடுபவனுக்கு உரிமையுமில்லை ? ஊதியமுமில்லை. வாழ்க்கையில் போராடி, வயிற்றுக்குக் கெஞ்சி, தயவை எதிர் பார்த்துத்தான் அவன் வாழ்ந்தாக வேண்டும். அவன் உழைப்பைப் பொருளாகக்  இடையே ஒரு தரகன், அவனுக்குப் பெரும் லாபம்! சர்க்கார் அங்கீகாரம்!! இதைப்போலவே ஆலைத் தொழிலாளியின் வாழ்வும். அங்கும் தரகர்கள் பிழைக்கத் தாராளமான – பரந்த திட்டம்!

இந்த நிலையில் தான் – 4 சதவீதமும் 3- சதவீதமும் குறைவு என்கிற அறிவிப்பு! இதை எண்ணும் போது தான் மக்கள் என்ன ஒட்டகங்களா? என்றைக்கும் ஒட்டகங்களாகவேதான் இருந்து விடுவார்களா? என்று நாம் கேட்கிறோம்.

குடி அரசு 05.11.1949

You may also like...