57அ. என் கை கீழே, உன் கை மேலே

ஒருபார்ப்பன யாசகர் :- அய்யா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணிய முண்டு.

பிரபு : போம்வோய், போய் எங்காவது பாடுபடுமேன். மண்ணு வெட்டினாலும் தினம் 8-அணா சம்பாதிப்பீரே. கொட்டாப் புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்குவர்றீரே வெட்கமில்லையா?

யாசகக்காரன் : என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகிவிட்டது, என் கை கீழாகிவிட்டது என்னவேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும்.

பிரபு : மேலென்ன, கீழென்ன இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர். கடையில் 10-அணாபோட்டால் ஒரு நாட்டு (க்ஷவரக்) கத்தி கிடைக்கும் வாங்கிக்கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர் தலைக்கு மேல் உம்ம கை போகுதுபாரும் உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கிற பொறாமை.

யாசகக்காரன்  :  சரி நான் போய் வருகிறேன். பகவான் இப்படித் தங்களைச் சொல்லவைத் தான், நம்மளைக் கேட்கவைத்தான் தங்களை நொந்து என்ன பயன்.

பிரபு : அப்படியானால் அடியுமே அந்த பகவானை. போம் போம் சோம்பேறியே.

குடி அரசு 03.09.1949

 

 

You may also like...