31. சுயராஜ்ஜியத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?

சுய ஆட்சியா? இது வரி ஆட்சியா? திருவரங்க நகரமன்ற வரவேற்புக்கு பெரியார் பதில்

திருவரங்கம் மே.24 இன்று மாலை திருவரங்கம் நகர மன்றத்தின் சார்பில் திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்கு ஒரு வரவேற்பு வைபவம் பெருஞ் சிறப்புடன் நடைபெற்றது. நகர மன்றத் துணைத் தலைவர் தோழர் என். ராஜகோபாலன் நகரமன்றத்தின் சார்பில் ஒரு வரவேற்பிதழ் படித்துக் கொடுத்தார். பெரியாரவர்கள் வரவேற்புக்குப் பதிலளிக்கையில்.

ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர் களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகர மன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, இன்று சுயாட்சி என்பது சொல்லளவில்தான் என்று சொல்லப்பட வேண்டிய நிலையில் வந்துவிட்டது.

இந்தியா வெள்ளையரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது, ஒவ்வொரு நகரங்களிலும், ஜில்லாக்களிலும் அந்தந்த மக்களுக்குச் சுய ஆட்சிக்கான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட தென்றால், இன்று இந்தியாவுக்கே சுய ஆட்சி கொடுக்கப்பட்டு, நாடு முழுவதுமே சுயராஜ்ஜிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் சுயஆட்சி என்று கூறி, அதற்கான தனி ஸ்தாபனங்களை நீடித்துவைத்துக் கொண்டிருப்பது என்ன அர்த்தம்? நகர மன்றங்களையும் நாட்டாண்மைக் கழகங்களையும் (ஜில்லா போர்டுகளையும்) ஏன் சர்க்காரே ஏற்றுநடத்தக் கூடாது? மேலும் இந்த ஸ்தல ஸ்தாபனங்கள் மக்களுக்குள் கட்சிகளை உண்டுபண்ணு வதற்கும், மனஸ்தாபங்களைப் பெருக்குவதற்குமே காரணமாக இருந்து வருகிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்?

இப்போது நடைபெற்றுவரும் ஸ்தல சுய ஆட்சியைச் சுய ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? இது சுய ஆட்சி அல்ல, வரி ஆட்சிதானே இப்போது நடந்து வருகிறது. சுய ஆட்சி என்றால் அந்த ஆட்சி மக்களிடமிருந்து வரி வசூல் செய்யலாமா? வரி வசூல் இல்லாமலே நகர மன்றங்கள் நடக்க வழியிருக்கிறதென்றால் அந்த வழியை நகர மன்றங்கள் ஏன் பின்பற்றக்கூடாது? ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள சினிமாக் கொட்டகைகள், காபிஹோட்டல்கள், கடைகள், பஸ் சர்வீஸ்கள் முதலிய தொழில்களையெல்லாம் நகரமன்றத்தினரே ஏற்று நடத்தினால், இன்று தனி மனிதன் அடைந்துவரும் வருமானம் நகர மன்றத்தினருக்குக் கிடைத்து விடுமே. அந்த வருமானத்தைக்கொண்டு எவ்வளவோ சிறப்பாக நகர மன்றங்களை நடத்த முடியுமே.

நிற்க, இந்தமுறையைத்தான் எப்படி ஒரு பிரமாதம் என்று கூறிவிடமுடியும்? இப்போது சில தொழில்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச்சங்கங்களை இன்னும் விஸ்தரித்து, நகரத்திலுள்ள எல்லாத் தொழில்களையும் கூட்டுறவுச் சங்கங்களே மேற்கொள்ள என்று சட்டம் செய்வதோ அதை அமுலாக்குவதோ எப்படிப் பிரமாதமாகிவிடும்? என்கிற கருத்துப்பட பேசி முடித்தார்கள். தோழர் கே.கே.சீனிவாசன் நன்றி கூறப்பின் விழா இனிது முடிந்தது.

குடி அரசு, துணை தலையங்கம் 28.05.1949

 

 

You may also like...