பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்)
12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரை. பெண்களின் சுயமரியாதை என்பது எதில் அடங்கியிருக்கிறது என்பதில் இருந்துதான் தலைப்பை ஆராய வேண்டியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு அதன்மூலம் சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியில்தான் அவர்களின் சுயமரியாதை அடங்கியிருக்கிறது. பெண்கள் வளர்ச்சி இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி இல்லை. அதை திராவிடர் இயக்கம் நன்கு புரிந்து வைத்திருந்தது. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று இந்துமதம் நிறைய கட்டுபாடுகள் வைத்திருக்கிறது. இந்து மதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஜாதி கவுரவம் பெண்களிடத்தில்தான் இருக்கிறது. பெண்களுடைய கற்பில்தான் குடும்ப கவுரவம், ஜாதிப் புனிதம் இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகும்வரை...